அக்டோபர் 16, 2012


சி.ஐ.ஏ. உளவு விமானத்தில் இருந்து குறி வைத்து கொல்வது: இதோ, இப்படிதான்!

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் புதிய இடமல்ல. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு தெரியாத சந்து பொந்தெல்லாம் சி.ஐ.ஏ.வுக்கு தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம்தான். சந்து பொந்து மாத்திரமல்ல அங்குள்ள சின்ன சின்ன நடமாட்டங்கள், செயற்பாடுகள் கூட தெரியும்.
காரணம், அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் குறிப்பிட்ட சதவீதம் பாகிஸ்தானுக்குள் வைத்தே திட்டமிடப்படுகின்றன என்ற விஷயம், சி.ஐ.ஏ.வுக்கு தெரியும்.
இதனால், சி.ஐ.ஏ.வின் ஆட்கள் ஏதோ வானத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்பதல்ல. சரியான டெக்னாலஜியை, சரியான இடத்தில் உபயோகிக்கிறர்கள். அவ்வளவு தான் விவகாரம்.
இன்றைய தேதியில், சி.ஐ.ஏ.வால் பாகிஸ்தான் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்பட்டிருக்கும் உளவு வலைப் பின்னலின் முக்கிய பொருள் என்ன தெரியுமா?  வேறு என்ன
– செல்போன்தான்.
சி.ஐ.ஏ. தற்போது பாகிஸ்தானில் உளவு விமான தாக்குதல்களை நடத்துகிறது அல்லவா? தீவிரவாத அமைப்பு தளபதிகளை குறிவைத்து உளவு விமானத்தில் இருந்து அடித்து வீழ்த்துகிறார்கள் அல்லவா? அதற்கு குறிப்பிட்ட தளபதி எங்கே உள்ளார் என்ற உளவுத் தகவல் திரட்டப்பட வேண்டும் அல்லவா?
அந்த உளவு பார்த்தலில் செல்போனுக்கு இருக்கும் செல்வாக்கே தனி.
என்ன செல்வாக்கு? “நாலு பேரை உளவு பார்த்து, கிடைத்த தகவல்களை செல்போன் மூலமாக மேலதிகாரிக்கு தெரிவிப்பது” என்று நினைத்தீர்கள் என்றால், உங்கள் நினைப்புக்கு பாஸ் மார்க் கூட கிடைக்காது. இது வேறு விவகாரம் – செல்போன்களின் சிக்னல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பது. அத்துடன் அதே தொழில் நுட்பத்தை வைத்து ஆளை அழிப்பது.
அமெரிக்கா இந்தத் தொழில் நுட்பத்தைப் பல நாடுகளில் – தங்கள் சொந்த நாடு உட்பட – பயன்படுத்துகிறது என்றாலும் முழு வீச்சுடன் பயன்படுத்தும் இடம், தற்போது பாகிஸ்தான்.
இதற்கு இரண்டு வசதியான காரணங்கள்.
முதலாவது, பாகிஸ்தானில் செல்போன் இணைப்பு வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் சி.ஐ.ஏ.-வால் ஊடுருவ முடியும்.
பாகிஸ்தான் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குள் செல்போன்கள் பிரபல்யமானபோது, பெரிய எழுச்சி ஏற்பட்டது. திடீர் வளர்ச்சிக்கு உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை அமெரிக்க தொழில்நுட்பங்கள். அந்த அமெரிக்க தொழில்நுட்பத்தை கொடுக்கும்போதே, சில ட்ரேசிங் எலிமென்ட்ஸ் அதனுடன் ஒட்டி வரும்.
வேண்டுமானால், அதை இப்படி சொல்லலாம். பாகிஸ்தானில் செல்போன் இணைப்பு வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான Mobilink, Telenor, Ufone, Zong (முன்னாள் Paktel), மற்றும் Warid ஆகிய நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர் தகவல்களை சி.ஐ.ஏ.வால் ஏதோ ஒரு வகையில் பெற முடியும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் செய்ய தொடங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து விட்டன. இருந்த போதிலும் பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது அமெரிக்கர்களிடம் அகப்படவில்லை.
என்ன காரணம்?
அமெரிக்கத் தரப்பிடம் வந்து சேர்ந்த உளவுத் தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை. அதற்கு பல காரணங்களுண்டு. அவற்றில் முக்கியமானது – சி.ஐ.ஏ.வுக்கு தற்போது பாகிஸ்தானில் கிடைத்திருக்கும் செல்போன் ட்ராக்கிங் வசதி அல்லது தொழில்நுட்பம் இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த காலத்தில் இருக்கவில்லை.
அப்போதிருந்த தொழில்நுட்பம் வேறு, இப்போது இருப்பது அதைவிட துல்லியமானது.
ஈராக்கை எடுத்துக் கொண்டால், சதாம் கைது செய்யப்படும் முன்னர் சதாமின் முக்கிய சகாக்கள், குடும்பத்தினர் என்று பலரது நகர்வுகளை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது அவர்கள் உபயோகித்த செல்போன்கள் தான். அதன் மூலம் சிலர் இருக்கும் இடத்தை சர்வ சாதாரணமாக கண்டுபிடித்து கைது செய்தது அமெரிக்க ராணுவம். வேறு சிலரை கண்டும் காணாமலும் விட்டனர் – அவர்கள் வேறு எங்கெல்லாம் நகர்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு!
உதவி: தொழில்நுட்பம்.
ஆப்கானிஸ்தானில் இது வேலை செய்யவில்லை.
பின்லேடனுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்கள் என்று இவர்கள் தெரிந்து வைத்திருந்த இலக்கங்கள் பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன என்று சர்வதேச உளவு வட்டாரத்தில் கூறப்பட்டது. சரி. இலக்கங்கள் தெரிந்திருந்தும் ஏன் பின்லேடனை ஆப்கானிஸ்தானுக்குள் மடக்க முடிந்திருக்கவில்லை?
அந்த நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்த சூழ்நிலை இப்போது பாகிஸ்தானில் இருப்பது போலவும் இருக்கவில்லை. இப்போது இவர்கள் கையில் இருக்கும் தொழில்நுட்பமும், அப்போது இருக்கவில்லை. பின்லேடனும் ஆப்கானிஸ்தானில் இவர்களிடம் அகப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் பின்லேடனை கொல்லும் முயற்சியில், தொழில்நுட்பத்தால் தோற்ற அமெரிக்கா, பின்நாட்களில் பாகிஸ்தானில் அதே பின்லேடனை கொன்றது, தொழில்நுட்பத்தால்தான்.
தொழில்நுட்பத்தால் அழிக்கப்பட்ட மற்றொரு இயக்கம், இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த விபரங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.
சரி. செல்போன்களை வைத்து ஆட்களை எப்படி ட்ராக் பண்ணுகிறார்கள். அதன்பின் எப்படி குறி வைத்து அடித்துக் கொல்கிறார்கள் என்று, ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக சொல்கிறோம்.
மேலே படிக்குமுன், ஒரு விஷயம். சி.ஐ.ஏ. உளவு விமானங்களில் இருந்து ஏவுகணை ஏவுதல் மூலம் ஆட்களை கொல்வது, ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் நடக்கிறது. அவற்றில் நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுவது, ஒரு விதம் மட்டுமே. அதாவது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை கொல்வது.
செல்போனில் பேசிக்கொண்டு இராத நபரை கொல்வதற்கு வேறு வித டெக்னிக்குகள் உள்ளன. அவற்றை பிறகு பார்க்கலாம். இப்போது, கையில் உள்ள செல்போனில் எமனை அழைப்பவர்களின் கதையை மட்டும் பார்க்கலாம்.
சட்டலைட் மூலமாக தொடர்பு கொடுக்கும் செல்போன்கள் ஒவ்வொன்றின் அழைப்புக்களுக்கும் ஒவ்வொரு இலக்கம் ஜெனரேட் பண்ணப்படும். அதை Identification Number (ஐடி நம்பர்) என்பார்கள். செல்போனின் போன் நம்பர் வேறு – இந்த Identification Number வேறு.
ஐடி நம்பரை சட்டலைட் மூலம் ட்ராக் பண்ணுவது சுலபம் – அதற்கு தொலைபேசி நிறுவனங்களின் உதவிகூட தேவையில்லை. ஆனால் இந்த ஐடி நம்பரை வைத்து எதுவும் செய்யமுடியாது. அது ஒரு வெத்து நம்பர்.
அதற்கு ஒரு முழு பரிமாணமும் எப்போது கிடைக்குமென்றால், சம்பந்தப்பட்ட ஐடி நம்பரை, அதை உருவாக்கிய போன் நம்பருடன் கொண்டுபோய் பொருத்த (அசோசியேட்) பண்ணவேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட ஐடி நம்பரில் பேசிக்கொண்டிருக்கும் செல்போனின் நிஜமான இலக்கம் எது என்று தெரியவரும்.
இதற்கு தொலைபேசி நிறுவனத்தின் டேட்டா பேஸில் உள்ள சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தேவை. அதன்பின், அதை உபயோகிக்கும் ஆள் யார் என்ற விபரம் (அல்லது, யாருடைய பெயரில் போன் உள்ளது என்ற விபரம்) தேவை.
உளவு பார்த்தலின் போது ஐடி நம்பரை கண்டுபிடிக்கும் வசதி ஓரிடத்திலும், போன் நம்பரின் விபரங்கள் வேறு ஓர் இடத்திலும் இருந்தால், தாமதமாகும் – பட்சி பறந்துவிடும்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே! போனில் பேசிக்கொண்டிருக்கும் செல்போன் ஏற்படுத்தியிருக்கும் ஐடி நம்பரை சட்டலைட்மூலம் அறிவது இலகு. ஐடி நம்பரை ஏற்படுத்திய போன் நம்பர் தொலைபேசி நிறுவனத்தின் டேட்டா பேஸில் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனம் நினைத்தால் இரண்டையும் பொருத்தி, செல்போனில் பேசும் ஆள், எந்த இடத்தில் நின்று பேசுகிறார் என்று அறியலாமே?
குத்துமதிப்பாக அறியலாம். ஆனால், அதற்கு தொலைபேசி நிறுவனங்களிடம் உள்ள தொழில்நுட்பம் போதாது.
தொலைபேசி நிறுவனங்களிடமிருக்கும் தொழில்நுட்பத்தின் பெயர் ALI (Actual Location Identifier). இந்த தொழில்நுட்பம், அதிகபட்சம் கூறக்கூடிய விபரம் என்ன தெரியுமா?
சாட்டலைட் ஐடி நம்பரையும், போன் நம்பரையும் பொருத்துவதன் மூலம், குறிப்பிட்ட நபர் இந்த இடத்தில் நின்று பேசுகிறார் என்று சுமார் 82 சதுர கி.மீ பரப்பளவுள்ள இடத்தைக் காட்டிவிட்டு, அவ்வளவுதான் என்றால் முடியுப்பா என்று ஒதுங்கிவிடும்.
செல்போன் நிறுவனங்களால் இவ்வளவுதான் முடியும்.
82 சதுர கி.மீ. சுற்று வட்டாரத்திற்குள் ஆள் எங்கே இருக்கிறார் என்று எப்படி பிடிப்பது? அந்த இடம் பொட்டல் வெளியாகவோ, காடாகவோ இருந்தால் முழுப் பிரதேசத்தையும் குண்டு வீசித் தாக்கலாம். அல்லது சுற்றி வளைத்துக் கொள்ளலாம். அது மக்கள் வசிக்கும் பகுதி என்றால் இந்த தகவலால் பலனில்லை!
இப்போது தொழில்நுட்பம் அடுத்த கட்டத்துக்குள் போகிறது. ஒரு சில தொலைபேசி நிறுவனங்களிடம் இதுவும் இருக்கிறது. இதன் பெயர்: GPT (Global Positioning Technology)
ஜி.பி.டி. இயங்குவது சட்டலைட்கள் உளவு நடவடிக்கைகளுக்கும் தகவல் கொடுக்கும் சாட்டலைட் மேப்பிங் சிஸ்டம் மூலமாக. இது ஓரளவுக்கு துல்லியமானது.எவ்வளவு துல்லியமானது என்றால் ஐடி நம்பரையும் போன் நம்பரையும் அசோசியேட் பண்ணிவிட்டால், பேசும் ஆள் இருக்குமிடத்தை துல்லியமாக, 100 மீட்டர் சுற்றளவுக்குள் எங்கே என்று காட்டும்.
82 சதுர கி.மீ ஏரியாவில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்கு புதிய தொழில்நுட்பம் கொண்டுவருகிறது.
சரி. இதில் ஏதாவது கேட்ச் இருக்கிறதா? ஆம். மிகப் கேட்ச் ஒன்று ஒன்று இருக்கிறது. …
அது, சர்வதேச அளவில் உபயோகிக்கப்படும் செல்போன்களில் ஜி.பி.எஸ் ஃபங்ஷன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது, எல்லா செல்போன்களிலும் ஆட்டோமேட்டிக் ஆக இயங்காது. செல்போனை வைத்திருப்பவரோ, விற்பவரோ ஆக்டிவேட் பண்ண வேண்டும். ஒரு ஆப்ஷனல் ஃபங்ஷன்.
GPT, 100 மீட்டா சுற்றளவுக்குள் ஆளைக் காட்ட எப்போது முடியமென்றால், இவர்கள் பிடிக்க நினைக்கும் நபர் பேசும் செல்போனில் ஜி.பி.எஸ் ஃபங்ஷன் ஆக்டிவேட் பண்ணப்பட்டு இருந்தால்தான்! இல்லாவிட்டால் பழைய குருடி கதையாக பழைய 82 சதுர கி.மீ. அளவுள்ள பிரதேசத்தை காட்டிவிடும்!
செல்போன் உபயோகிப்பவர் சாமர்த்தியசாலியாக இருந்தால், இந்த எல்லைவரை தப்பித்துக் கொள்ளலாம்.
தொழில் நுட்பம் இவ்வளவுதானா? இல்லை. இன்னமும் இருக்கிறது – அடுத்த கட்டம், கொஞ்சம் ஜாஸ்தி செலவாகும். உங்களாலும் என்னாலும் முடியாது. சி.ஐ.ஏ. போன்ற ஜமீன்தார்களாலோ, அட்லீஸ்ட் மொசாத் போன்ற சின்ன ஜமீனாலோதான் முடியும். ஆனால் துல்லியமானது – அட்டகாசமாக வேலைசெய்யும்!
அந்த நடைமுறை: SIGNAL TRIANGULATION PROCESS. பெயரைப் பார்த்தாலே, ஏதோ மீண்டும் பிஸிக்ஸ் வகுப்பறைக்குள் போய் மாட்டிக் கொண்டது போல கிறுகிறுக்கிறதா? பயப்படாதீர்கள் விஷயம் சிம்பிள். ஒரு உதாரணத்துடன் விளக்கலாம்.
அமெரிக்கா ஒருவரை தேடுகிறது. ஒன்று ஆளைப் பிடிக்கவேண்டும் – அல்லது அட்லீஸ்ட் கதையை முடிக்கவேண்டும் என்ற கட்டத்துக்கு வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபரின் போதாத காலம், அவர் செல்போன் ஒன்றை பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியத்துவம் உடைய நபர்கள் உபயோகிக்கும் செல்போன் இலக்கங்களை அறிந்து கொள்வது சி.ஐ.ஏ.வு போன்ற அமைப்புக்களுக்கு மிக இலகு. கால் ஃபுளோ பட்டர்ன் மூலம் பிடித்து விடலாம். (இதற்காக சி.ஐ.ஏ.வில் தனியாக ஒரு இலாகாவே இருக்கிறது!)
இப்போது இணைப்பில் பேசிக் கொண்டிருக்கும் ஆள் உருவாக்கியிருக்கும் ஐடி நம்பரும் சி.ஐ.ஏ.வின் கையிலிருக்கும் செல்போன் நம்பரும் மேட்ச் ஆகி விட்டால் அதை ஒரு ட்ராக்கிங் புரோகிராம் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு அறிவிக்கும். அடுத்த விநாடியே கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் முதல் காரியமாக செய்யும் வேலை, GPT மூலம் ஆள் இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுதான்.
இவர்களது நல்லகாலமோ, அவருடைய கெட்டகாலமோ, அவர் பயன்படுத்தும் செல்போனில் ஜி.பி.எஸ் ஃபங்ஷன் ஏற்கனவே ஆக்டிவேட் ஆகியிருந்தால், போனில் பேசுபவர் காலி! ஒரு வேளை, அவர் இவர்களுக்கே நூல் கொடுக்கக் கூடிய ஆசாமியாக இருந்தால், தாம் பயன்படுத்தும் செல்போனின் ஜி.பி.எஸ் ஃபங்ஷனை ஆக்டிவேட் பண்ணியிருக்க மாட்டார்.
அப்போதுதான் காட்சிக்குள் நுழைகிறது SIGNAL TRIANGULATION PROCESS.
இதற்கு தேவை, மூன்று அசையக்கூடிய மானிட்டர்கள். மிகவும் விருப்பத்துக்குரிய அசையக்கூடிய மானிட்டர்கள் எவை தெரியுமா?
மூன்று விமானங்கள்! அதுவும், சடுதியாக திசை மாற்றக்கூடிய உளவு விமானங்கள் என்றால் சூப்பர் சாய்ஸ்.
மூன்று உளவு விமானங்களும் வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு பகுதிகளில் பறக்கட்டும். கொல்லப்பட வேண்டிய ஆள் செல்போனில் பேசத் தொடங்கியவுடன் ஐடி நம்பரும் போன் நம்பரும் அசோசியேட் பண்ணப்பட்டு, அந்தத் தரவு விமானங்களில் இருக்கும் SNSக்கு (Space Navigation system) அனுப்பப்படும்.
விமானி இல்லாமல் பறக்கும் உளவு விமானத்தில் இருந்து ட்ரான்ஸ்மிட் செய்யப்பட்டு, தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ராடார் திரையில் சுமார் 82 கி.மீ சுற்றளவுள்ள வட்டம் ஒன்றைக் காட்டி, ‘இலக்கு’ இதற்குள் இருக்கிறது என்று சொல்லும்.
இப்போது மூன்று உளவு விமானங்களிலுள்ள SNSகளும் ஒன்றாக, ஒரு மைய சாட்டலைட் உதவியுடன், அந்த 82 சதுர கி.மீ. வட்டத்தில், ஒரு நடுப்புள்ளியை (சென்ட்ரல் பாயின்ட்) உருவாக்கும். இந்த மூன்று வேறுவேறு திசையிலும், இடத்திலும் இருக்கும் விமானங்களை ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் இருக்கும்படியாக தரையில் இருந்து பிளைட் பாத் அமைத்து கொடுக்கப்படும். அந்த பொசிஷன்களுக்கு நகர்த்தப்படும்.
இவ்வளவும் நடந்து முடிய, சுமார் 230 செக்கன்டுகள் எடுக்கும் (கிட்டத்தட்ட 4 நிமிடத்தைவிட குறைவு)
இனி அடுத்த கட்டம்.
இவ்வளவும் சரியாக நடந்து, மூன்று விமானங்களும் சரியான பொசிஷன்களுக்கு வந்து விட்டால், அதன்பிறகு அவர்களுக்கு தேவையெல்லாம் வெறும் 2 நிமிடங்களுக்கு குறைவான நேரம்தான். குறிப்பிட்ட சென்ட்ரல் பாயின்ட் தாமே ஆட்டோமேட்டிக்காக மூவ் ஆகி, செல்போன் பேசப்படும் இடத்தை நோக்கி செல்வதுதான், SIGNAL TRIANGULATION PROCESS.
சென்ட்ரல் பாயின்டும், போன் பேசும் ஆள் நிற்கும் இடமும், (அவர் நகர்ந்து கொண்டிருந்தால், சென்ட்ரல் பாயின்டும் கூடவே பின்தொடரும்) கிளிக் ஆனவுடன், உளவு விமானத்தின் SNS மூலம், தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ராடார் திரையில், செல்போன் பேசுபவர் இருக்குமிடம் துல்லியமாக 6 அடி சுற்றளவில் ஒரு புள்ளியாக காண்பிக்கப்பட்டு, கூடவே ஒரு அறிவித்தல் பிளிங்க் பண்ணும் -
“இதோ இலக்கு!”
கதை இதோடு முடிந்து விடவில்லை.
சம்பந்தப்பட்ட மூன்று உளவு விமானங்களிலும் தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் (air to ground missiles) ஆட்டோ ரிலீஸில் செட் பண்ணப்பட்டு இருந்தால், ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் பறக்கும் விமானங்கள் மூன்றிலும் இருந்தும், அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் இருந்து ஏவுகணைகயை இயக்க, தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பவர், ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் போதும்.
அடுத்த சில விநாடிகளில், இவர்கள் தொழில்நுட்பம் மூலம் ட்ராக் பண்ணிய செல்போனை தூள் தூளாகத்தான் பார்க்க முடியும்!
செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபரையும் தான்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக