ஈரான் மீதான பொருளாதாரப் போரை அமெரிக்கா முன்னெடுக்கிறது
Peter Symonds
ஒபாமா நிர்வாகம் ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை தொடர்கையில், அதன் வெளியுறவுக் கொள்கையின் குற்றத் தன்மை அந்நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள சமூகப் பேரழிவின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஏற்கனவே ஈரான் மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தி வருகின்றன; அதன் பெரும் பணவீக்கம் மற்றும் விரைவில் பெருகும் வேலையின்மை மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் இடர்களைக் கொடுத்துள்ளது.
ஈரானுடைய நாணயமான ரியாலின் மதிப்பு கடந்த வாரம் 40% குறைந்து; உணவுப் பொருட்களின் விலைகள்
உட்பட பெரும் அதிகரிப்பை அடைந்தன. இரண்டே நாட்களில் – அக்டோபர் 1, 2 இல்– நாணயம் பற்றிய பீதி பரவுகையில், ரியால் அமெரிக்க டாலருக்கு எதிராக 25%க்கும் அதிகமான மதிப்பை இழந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நாணயத்தின் மதிப்பு 80%க்கும் மேல் குறைந்துவிட்டது.
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூன் நேற்று கடுமையான பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தியுள்ள “பொதுமக்களின் மீதான கணிசமான விளைவுகளை”சுட்டிக்காட்டினார். இதையோ அவர் ஆதரித்துள்ளார். இவற்றுள், “பொருட்கள், விலைச் செலவுகளில் அதிகரிப்பு, வேலையின்மை விகிதத்தில் அதிகரிப்பு, மருந்துகள் உட்படத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.” புற்றுநோய், இதயநோய்கள், சுவாசக் கோளாறுகளுக்குத் தேவையான மருந்துகள் இல்லாத நிலைமை தவிர்க்க முடியாத கஷ்டங்களையும் இறப்புக்களையும் விளைவாக்கும்.
அடிப்படை உணவுப் பொருட்களான பால், ரொட்டி, அரிசி, யோகர்ட் மற்றும் கறிகாய்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்தப்பட்சம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இரண்டு மடங்காகப் பெருகிவிட்டன. பல தொழிலாளர்கள் குடும்பங்களின் வாங்கும் திறனுக்கு அப்பால் கறியின் விலை போய்விட்டது. “உணவு, போக்குவரத்து, அனைத்துமே விலை உயர்ந்துவிட்டன, மக்கள் இன்றைய நிலமையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை, நாளையைப் பற்றியும் கவலைப்படுகின்றனர். பொருளாதாரம் பற்றி மக்கள் மிகவும் தீவிரமான பீதியைக் கொண்டுள்ளனர்” என்று Washington Institute for Near East Policy யைச் சேர்ந்த மெஹ்தி கலாஜி செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.
இத்தகவல் குறித்து அதிகம் மறைப்பில்லாத களிப்புடன் ஒபாமா நிர்வாகம் எதிர்கொண்டுள்ளதுடன் உள் எதிர்ப்பிற்கு எரியூட்டும் வகையில் தெஹ்ரானை இந்த பேரழிவு தரும் பொருளாதார நிலைமைக்குக் குற்றம் சாட்டியுள்ளது.“ஈரானிய அரசாங்கம் அதன் உள்நாட்டு நிலைமையின் அனைத்துக் கூறுபாடுகளையும் கொடூரமாக நிர்வகிக்கிறது.” என்று வெளியுறவுச் செயலக பேச்சாளர் விக்டோரியா நியூலாந்த் நிருபர்களிடம் கூறினார்.
ஆனால் ஒபாமா நிர்வாகம் ஈரானிய பொருளாதாரத்தை நசுக்க முற்பட்டுள்ளது என்ற உண்மை மறைக்கப்பட முடியாதது ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ள ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் இந்த ஆண்டு ஈரானுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் 80% எண்ணெய் ஏற்றுமதி வருவாய்களை பாதியாக்கிவிட்டன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரவிருக்கும் மாதங்களில் இன்னும் கூடுதலான அபராதங்கள் விதிக்கத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளன; இவை ஈரானின் எரிசக்தி ஏற்றுமதிகளை இன்னும் பாதிக்கும்; சர்வதேச நிதியை அணுகுதல், அரசாங்க வருமானம் இவற்றை அது பெறுவதைக் குறைக்கும்; சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகும்.
அமெரிக்க கொள்ளைக் கும்பலின் குரல்தான் தன் பங்கு என்று செய்தி ஊடகமும் தன் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சமீபத்திய பொருளாதாரத் தகவல்களை ஈரானிய மக்களின் இடர்கள் குறித்து முற்றிலும் பொருட்படுத்தா தன்மையுடன் எதிர்கொண்டுள்ளது. முடக்கிவிடும் பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானை வாஷிங்டனின் கோரிக்கையான நாட்டின் அணுசக்தித் திட்டங்களை மூட வேண்டும் என்பதற்குக் கட்டாயம் இணங்க வைத்தலை வெளியுறவு கொள்கையின் ஒரு நியாயமான கருவியாக கருதப்படுகின்றது. பல பண்டிதர்களுக்கு ஒரே பிரச்சினை அமெரிக்காவின் நோக்கங்கள் ஈரான்மீது போர் தொடுத்து குறுகிய காலத்தில் சாதிக்கப்பட்டுவிடுமா அல்லது இல்லையா என்பதுதான்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஒபாமா நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்கள் பாசாங்குத்தனமும் இழிந்த தன்மையையும் நிறையக் கொண்டுள்ளன. ஈரான் கட்டமைக்கிறது அல்லது அணுவாயுதத் தயாரிப்பைக் கட்ட முற்படுகிறது என்பதற்கு அமெரிக்கா எந்தச் சான்றையும் முன்வைக்கவில்லை. உண்மையில் தெஹ்ரான் அணு பரவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடு ஆகும்; அந்த உடன்படிக்கை அதன் அணு ஆலைகள் சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட அனுமதிக்கிறது. ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான இஸ்ரேல் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை, அதனிடம் மிக நயமான அணுவாயுதக் கிடங்குகளும் உள்ளன.
மேலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் பலமுறை ஆக்கிரமிப்பு போர்களை நடத்தியுள்ளன; ஈரானைத் தாக்குதவது குறித்து வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நோக்கம், இப்பெருகும் மோதலில், விசைச் செழிப்பு மிக்க மத்திய கிழக்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களில் தன் மூலோபாய மேலாதிக்கத்தை ஒருங்கிணைத்தல் என்பதுதான்.
ஒபாமா நிர்வாகத்தின் போர்த் திட்டங்களை எதிர்க்கையில் உலக சோசலிச வலைத் தளம் தெஹ்ரானில் இருக்கும் பிற்போக்குத்தன மத சார்பு ஆட்சிக்கோ ஈரானிய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவிற்குமோ அரசியல் ஆதரவைக் கொடுக்கவில்லை. சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுக்கு ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதின்ஜட் உடைய விடையிறுப்பு தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீது அதன் முழுச்சுமையையும் சுமத்துதல் என்றுதான் உள்ளது. அவருடைய அரசாங்கம் அடிப்படைப் பொருட்கள் மீதான விலைகளுக்கு உதவி நிதியளித்தலை அகற்றுதலும், அதற்குப் பதிலாக விரைவில் ஆவியாகிவிடும் அற்ப உதவியளித்தல் என்றும்தான் உள்ளது.
உத்தியோகபூர்வமாக வேலையின்மை விகிதம் 12% என உள்ளது; ஆனால் பல பகுப்பாய்வாளர்கள் உண்மையான எண்ணிக்கையை இதைப்போல் இரண்டு அல்லது மூன்று மடங்குக்கும் அதிகமாக வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 500,000 முதல் 800,000 ஈரானியர்கள் வரை கடந்த ஆண்டு தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஈரானிய கார்த்தயாரிப்புத் தொழிலில் உற்பத்தி கடந்த ஆறு மாதங்களில் 30%க்கும் மேல் சரிந்துவிட்டது.
10,000 தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கையெழுத்திட்ட மனு ஒன்று, ஒரு பக்கத்தில், “விலைகளின் பாரிய ஏற்றம் தொழிலாளர்களின் ஊதியம் இந்த ஆண்டு 13% மட்டுமே உயர்ந்த நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது... மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மாத வீட்டுச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் உள்ளனர்” என்று கூறியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
ஆளும் உயரடுக்கின் பல போட்டிப் பிரிவுகளும் இந்தப் பரந்த அதிருப்தியைத் தாங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முற்பட்டுள்ளன; தெஹ்ரானின் கடைவீதிகளில் இந்த வாரம் எதிர்ப்புக்கள் வெடித்தன. 2009ல் அது செய்ததைப் போல்தான் வாஷிங்டன் இப்பொழுதும் செய்ய முற்படும்; அப்பொழுது அது பசுமை இயக்கம் என்று கூறப்பட்டதை, தெஹ்ரானின் மத்தியதரவர்க்க உயரடுக்கைப் பெரிதும் தளம் கொண்ட இயக்கத்தை ஆட்சி மாற்றத்திற்கு ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தியது.
இவை எதுவும் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போருக்குத் தயார் செய்வதை நிறுத்திவிடவில்லை. முடக்கும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அனுபவித்த ஈராக்கை போலவே, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தாக்குதலுக்கு முன்னதாக அரசியல், பொருளாதார அளவில் வலுவற்றுப் போகச் செய்யும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அமெரிக்கா இப்பொழுதுதான் மிகப் பெரிய சர்வதேச அளவிலான கண்ணிகளை அகற்றும் பயிற்சியில் பேர்சிய வளைகுடாவில் ஈடுபட்டது; இம்மாதம் பின்னர் அது கூட்டுப் போர்ப் பயிற்சிகளை இஸ்ரேலுடன் மேற்கொள்ளும்; அதன் நோக்கம் ஏவுகணை எதிர்ப்பு முறைகளைச் சோதனை செய்வதாகும். இப்பயிற்சிகள் “தற்காப்பிற்கு”அல்ல; அமெரிக்கா மற்றும் அதன் இராணுவ அளவிலான நட்பு நாடுகள் அமெரிக்கத் தாக்குதலில் இருந்து விளையும் ஈரானியப் பதிலடியை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதற்குத்தான்.
ஈரான் மீதான போர், ஈரானில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமல்லாமல், பிராந்தியம் முழுவதும், உலகம் முழுவதுமே கூட பேரழிவு தரும் விளைவுகளைக் கொடுக்கும். இந்தப் போர் உந்துதலை நிறுத்தக்கூடிய திறன் உடைய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுந்தான். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச சோசலிச போராட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்க உலகெங்கிலும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக