நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக
...ஆமீன்.
ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து
எதிர்க்கப்பட்டதின்
வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு
மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த
மார்க்கம் இஸ்லாம்.
விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள்
எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று
நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை.
ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர்
செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு
உண்மை என்னவென்றால், ஒன்றிற்காக போராடப்பட வேண்டியது
அவசியம் என்றால், விளம்பரமாகிவிடும் என்று அமைதியாக இருந்திட
முடியாது. அப்படி இருந்தால், அது, பல நேரங்களில் நம் நோக்கத்திற்கு
எதிர்மறையான விளைவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். நம் மவுனமும்
வீணாகிப்போகும். போராட வேண்டியதற்கு போராடாமல் மவுனமாக
இருந்ததற்கான வலியை மிக அதிகமாகவே வரலாறு பதிவு செய்திருக்கின்றது.
சரி விடுங்க நாம் பதிவிற்குள் செல்வோம். இரு தினங்களுக்கு முன்பாக
(3rd Feb 2013), நியூயார்க் டைம்ஸ் தினசரியில் பிரெஞ்சு முஸ்லிம்கள்
குறித்து வெளியான கட்டுரை, நான் முதல் பத்தியில் சொன்ன
கருத்தை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றது. எம்மாதிரியான
எதிர்மறை எண்ணங்களும் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பையும்
தரவில்லை. அவை தந்ததெல்லாம் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே.
பிரான்சில் இஸ்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தை, அதன் காரணிகளை
அலசும் இந்த கட்டுரையோடு சில இடங்களில் ஒத்துப்போக
முடியாவிட்டாலும், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய
கட்டுரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை
எகிற வைக்காமல் அந்த கட்டுரையின் தமிழாக்கத்திற்கு செல்கின்றேன்.
"பாரிஸ்சின் புறநகர் பகுதியில் (CRÉTEIL) அமைந்துள்ள இந்த விசாலமான,
நேர்த்தியான நவீன கட்டிடம் 'இஸ்லாமை தழுவியவர்களின் மசூதி' என்று
அறியப்படுகின்றது.
சஹாபா பள்ளிவாசல் என்றழைக்கப்படும் இந்த மசூதியில், ஒவ்வொரு
வருடமும், சுமார் 150 பேர் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக
தேர்ந்தெடுக்கின்றனர். அதிசயவைக்கும் 81 அடி மினாரட்டுடன், 2008-ஆம்
ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், பிரான்சில்
வளர்ந்துவரும் இஸ்லாமின் அடையாளமாக திகழ்கின்றது. வெள்ளிக்கிழமை
தொழுகையில் பங்கேற்பவர்களில் எண்ணற்றவர்கள் ரோமன்
கத்தோலிக்கவர்களாக முன்பிருந்த இளைஞர்கள்.
CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி
இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே
இருந்தபோதும், கடந்த 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக
அதிகரித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மற்றும்
பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுடன் இஸ்லாம்
அணுகப்படும் இந்த சூழலில், பிரஞ்சு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்து
வருவது அரசிற்கு கடும் சவாலாக திகழ்கின்றது.
தங்கள் குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் விளையும் சிக்கல்களை
நெடுங்காலமாகவே பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்
. சென்ற அக்டோபர் மாதம், தீவிரவாத போக்குடைய பனிரெண்டு நபர்களை
பிரஞ்சு அரசாங்கம் கைது செய்தது. இதில் மூன்று பேர், சமீபமாக இஸ்லாமை
ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர்.
பிரெஞ்சு செய்தியறிக்கைகளை பொருத்தமட்டில், இஸ்லாமிய
அடிப்படைவாத(?) போக்கிற்கு சிறைச்சாலைகள் காரணமாக
இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சிறைச்சாலைகளில் உள்ள
முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாமை கடைபிடிக்கும்
மக்களாவர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முஸ்லிம்கள், தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக
அணுகப்படுவதாக கூறுகின்றனர். பிரெஞ்சு குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால்
அதிகரித்துவரும் பிரச்சனைகள், சகிப்புதன்மையற்றதாக பிரெஞ்சு சமூகம்
மாறிவருவதை பிரதிபலிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்.
எது எப்படியாகினும், இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்திருப்பது
சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வாக மாறிவிட்டது. 'ஆச்சர்யமூட்டும்
வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன, குறிப்பாக 2000-ஆம்
ஆண்டிற்கு பிறகு" என்கின்றார் பிரெஞ்சு உள்துறை அதிகாரியான பெர்னார்ட்.
ஆறு மில்லியன் மக்கட்தொகையை கொண்ட பிரெஞ்சு முஸ்லிம்
சமூகத்தில், சுமார் ஒரு லட்சம் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
பிரெஞ்சு குடிமக்களாவர். இது 1986-ஆம் ஆண்டு ஐம்பதாயிரமாக
இருந்ததாக பெர்னார்ட் தெரிவிக்கின்றார். முஸ்லிம் இயக்கங்களோ
இந்த எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கின்றன.
திருமணத்திற்காக மதம் மாறுவது நீண்ட காலமாகவே பிரெஞ்சு சமூகத்தில்
நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வென்றாலும், தற்போது இந்த நிலை
மாறியுள்ளது. இஸ்லாமை ஏற்கும் பல இளைஞர்கள் முஸ்லிம்கள் அதிகம்
வாழும் பகுதிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள விரும்பி இஸ்லாமை
ஏற்கின்றனர்.
21 வயதான சார்லி, இளம் வயதிலேயே நிறைய வேதனைகளை
சந்தித்தவர். ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்த இவருக்கு பள்ளியில்
நிறைய முஸ்லிம் நண்பர்கள் கிடைத்தனர். தன்னுடைய 19-ஆம்
வயதில் இஸ்லாத்தை தழுவிய சார்லி, 'இஸ்லாமை ஏற்பதென்பது ஒரு
சமூக நிகழ்வாகவே மாறிவிட்டது' என்கின்றார். சிலர் ஆர்வத்தில்
இஸ்லாமை ஏற்பதாகவும் அவர் கூறுகின்றார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் சில பகுதிகளில், அங்கு வசிக்கும்
முஸ்லிமல்லாதவர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர்.
ஒரு குழுவாக இப்படி செயல்படுவதை அவர்கள் பெரிதும்
விரும்புவதாக சமூகவியல் வல்லுனரான ஆம்கார் தெரிவிக்கின்றார்.
புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில், இஸ்லாம் என்னும் மார்க்கம்
சமூகரீதியான மாற்றத்தை மட்டும் கொண்டுவரவில்லை, ஒரு
அடைக்கலத்தையும் அது கொண்டுவந்துள்ளது. நவீனயுகத்தின்
பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் புகலிடமாக இஸ்லாம்
திகழ்வதாக ஆய்வாளர்களும், இஸ்லாமை தழுவியவர்களும்
கூறுகின்றனர்.
கட்டமைப்பையும், ஒழுக்கத்தையும் வேறெந்த மார்க்கத்தை விடவும்
இஸ்லாம் அதிகமாக கொடுப்பதாக கூறும் ஆம்கார், குடும்ப அமைப்பின்
முக்கியத்துவதிற்கும், ஆண் பெண்ணுக்கான தெளிவான பொறுப்பிற்கும்
திரும்ப இஸ்லாம் உதவுவதாக கூறுகின்றார். 'இஸ்லாமை
ஏற்றவர்கள் தங்களுக்குள் அமைதியை உணர்கின்றனர். இஸ்லாமை
தழுவியவுடன், உலகம் தெளிவான ஒன்றாக அவர்களுக்கு
மாறிவிடுகின்றது' என்று மேலும் தெரிவிக்கின்றார் ஆம்கார்.
தென் கடற்கரை பகுதியான மர்சேவை பொருத்தமட்டில் 'கடந்த
மூன்றாண்டுகளில், வியக்கத்தக்க வகையில் இஸ்லாமிய தழுவல்கள்
அதிகரித்துள்ளன" என்கின்றார் இந்த பகுதியின் முக்கிய மசூதியின்
இமாமான அப்துர் ரஹ்மான் கவுல். மர்சேவின் பிரெஞ்சு கவுன்சில்
தலைவரான இவர், 2012-ஆம் ஆண்டு மட்டும், சுமார் 130 இஸ்லாமிய
தழுவல்களுக்கான சான்றிதழ்களில் கையொப்பமிட்டுள்ளார்.
பிரான்சின் மதசார்பின்மை கொள்கை ஆன்மீகரீதினான வெற்றிடத்தை
அதன் குடிமக்களிடம் உருவாக்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால்
மதசார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது.
இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி இஸ்லாமை மக்கள்
கண்டெடுக்க வழிவகை செய்துவிட்டது.
பிரபலங்கள், குறிப்பாக கால்பந்து நட்சத்திரங்கள் இஸ்லாமை ஏற்பது
குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக இஸ்லாம்
மேலும் வளருவதற்கு வழிவகை செய்வதாக வல்லுனர்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஆனால், வளர்ந்து வரும் இஸ்லாமின் செல்வாக்கு
ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கியுள்ளது, குறிப்பாக
வலதுசாரிகளிடம். பிரான்சின் எதிர்காலம் குறித்து பேசும் போதெல்லாம்
அங்கே இஸ்லாமின் பங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு, பாரிஸ் மேட்ச் இதழில், ராப் இசை பாடகியாக இருந்து
இஸ்லாமை தழுவிய டையமின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் வெளிவாகி
மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த
டையம் தன்னை விமர்சித்தவர்களின் கருத்தை நிராகரித்தார். ஹிஜாப்
அணிந்திருப்பதால் தான் அடிப்படைவாத(?) முஸ்லிமாகி விட மாட்டேன்
என்றும், இஸ்லாமை ஏற்றது தன் தனிப்பட்ட விருப்பம் என்றும்,
மனச்சோர்வில் சிக்கியிருந்த தனக்கு அதிலிருந்து விடுபட
இஸ்லாம் உதவியதாகவும் குறிப்பிட்டார்.
ரபெல்லோ, CRÉTEIL பகுதியில் புத்தகக்கடை வைத்திருக்கும் இவர்,
தன்னை போன்றவர்களே பிரெஞ்சு முஸ்லிம்களை பிரதிபலிப்பதாக
கூறுகின்றார். திசைக்காட்டியுடன் கூடிய விரிப்புகளையும் விற்கும்
ரபெல்லோ, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை
சுட்டிக்காட்டும்போது, 'இஸ்லாம் என்றால் இதுதான் என்ற
கற்பனையான மனநிலையில் இருந்து வெளிவரவேண்டும்.
பிரெஞ்சு குடிமகனாகவும், முஸ்லிமாகவும் ஒருவர் அமைதியுடன்
வாழ முடியும்' என்கின்றார்"
இதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை...
இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...
ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
Please Note:
முழுமையான, வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல.
நீளம் கருதி சில வரிகள் விடப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன.
முழுமையாக படிக்க கீழ்காணும் லிங்க்கை சுட்டவும்.
Reference:
1. More in France Are Turning to Islam, Challenging a Nation’s Idea of Itself - New york times,
3rd Feb 2013. link
வஸ்ஸலாம்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக