இஸ்லாமியர்கள் பாபரின் பேரன்கள் அல்ல: சீமான் !
தென்காசி: தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பாபரின் பேரன்கள் இல்லை அவர்களும் தமிழர்கள் தான் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கூறியுள்ளார். தென்காசியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக, கேரளா, மும்பை, டெல்லி, மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் சேர்த்து 12 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் தமிழர்களுக்கு இன உணர்வு குறைவாக இருக்கிறது. இன உணர்வு
இருந்திருந்தால் இலங்கையில் இனப் படுகொலை நிகழ்ந்திருக்காது. தமிழர்களின் இனமும், மானமும் அடமானம் வைக்கப்பட்டு விட்டது.
இருந்திருந்தால் இலங்கையில் இனப் படுகொலை நிகழ்ந்திருக்காது. தமிழர்களின் இனமும், மானமும் அடமானம் வைக்கப்பட்டு விட்டது.
தமிழர் என்று சொன்னாலே இன வெறி, மொழி வெறி என்று கூறுகின்றனர். தமிழர்களாக பிறந்தால் போதாது. தமிழர்களாக வாழ வேண்டும். இறுதி வரை வாழ வேண்டும். பேச்சு, மூச்சு, ரத்தத்திலும் தமிழனாக வாழ வேண்டும். தமிழன் என்பதாலும், பிரபாகரனின் தம்பி என்பதாலும் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்கின்றனர்
இங்கு தமிழர்கள் சாதி – மதம் – கட்சி ரீதியாக பிரிந்து இருக்கின்றனர். ஈழத்தில் போராட்டம் நடைபெற்ற போது கட்சி தமிழன் யாரும் குரல் கொடுக்கவில்லை. தமிழர்களில் இந்த நிலைக்கு காரணம் சாதி, மதம் தான். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் கட்சி உள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்ட போது அப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் முல்லை பெரியாறு, காவிரி நீர், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகிய பிரச்னைகளுக்கும், இலங்கை இனப் படுகொலைக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லையே?
விஸ்வரூபம் படம் வெளிவரவில்லை என்றால் தீக்குளிப்பேன், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பேன் என்கிறான் ஒருவன். கேவலமாக இல்லையா? தமிழனுக்காக தீக்குளித்த முத்துக்குமார், செங்கொடி போன்றவர்கள் எங்கே? இவர்கள் எங்கே?
கமல் வெளிநாடு போகிறேன் என்கிறார். அப்படி என்றால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நான் இந்த உலகத்தை விட்டே போயிருக்க வேண்டும்.
எந்த மதத்தில் தீவிரவாதம் இல்லை? மகாத்மா காந்தியை சுட்டு கொன்றது, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் இது இந்து மத தீவிரவாதம் இல்லையா? அமெரிக்காவில் ஒசாமா பின்லேடன் 2 கட்டிடங்களை இடித்ததற்கு? ஆப்கானிஸ்தான் மக்களை அமெரிக்கா தாக்கியது கிறிஸ்தவ மத தீவிரவாதம் இல்லையா? இலங்கையில் சிங்களன் நம் இனத்தை அழித்தது புத்த மத தீவிரவாதம் இல்லையா?
இந்து, கிறிஸ்தவம் புத்த மதம் உள்ளிட்ட எல்லா மதங்களிலும் தீவிரவாதம் இருக்கும் போது இஸ்லாம் மதத்தில் மட்டும் தீவிரவாதம் உள்ளது என்று எப்படி கூற முடியும். எங்களது இயக்கத்திற்கு மதமும் கிடையாது. சாதியும் கிடையாது. மனிதனுக்கும், யானைக்கும் மதம் பிடித்துவிட்டால் அழிவு தான் முடிவு. இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் பாபரின் பேரன்கள் அல்ல. அவர்களும் தமிழர்கள் தான்.
விஸ்வரூபம் பட பிரச்சினையில் இனி யாரும் இது போன்று படம் எடுக்க மாட்டார்கள். 100 கோடி செலவானது. இதனை ஆளுக்கு ரூ.1 கோடி கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும். ஆனால் இஸ்லாமிய சமூகம் பாதிக்கப்பட்டால் அதனை யார் களைவது?
இவ்வாறு சீமான் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக