அரசு & கூட்டமைப்பு பேச்சுவார்த்தை : பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் இல்லாத அரசியல் அதிகார பரவாலாக்கத்துக்கு கூட்டமைப்பினர் சம்மதம்!
சஜின்.டி. வாஸ் குணவர்த்ன எம்.பி
அரசாங்கத் தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது ஒற்றையாட்சி என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. சஜின்.டி. வாஸ் குணவர்த்ன எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுவரை இருதரப்பினருக்குமிடையில் கருத்து மோதல்களை தோற்றுவிக்கக் கூடிய எவ்வித பிரச்சினைகளும் எழவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத் தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஒன்றிணைக்கும் குழுவின் செயலாளருமான சஜின்.டி.வாஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
அரசியல் சாசனத்துக்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை
பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கே பெற்றுக்கொடுப்பதில் பிரச்சினை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அரசாங்கத்தரப்பினர் உடனடியாக எழுநூறு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை நியமிப்பதற்கும் தயாராக இருக்கின்றது என்ற தனது நிலைப்பாட்டை இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எடுத்துரைத்தது.
அவசியமாயின் 10 ஆயிரம் தமிழ் பொலிஸ் காரர்களைக் கூட அரசாங்கம் நியமிக்க தயாராக இருக்கிறது என்ற நற்செய்தியும் அங்கு அரசாங்கத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டதாக சஜின்.டி.வாஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரங்கள் மற்றும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் செயற்பாடுகளுக்கும் கூடியவரையில் இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் தயாராகவிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கலின் முதல் நடவடிக்கையாக அரசாங்கத் தரப்பினர் செனட் சபை ஒன்றை அதாவது, இரண்டாவது சபையொன்றை இலங்கை அரசியல் சாசனத்தின்கீழ் அமைப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த யோசனையின் படி செனட் சபையை எந்த நடைமுறையின் கீழ் உருவாக்குவது என்பதில் இதுவரையில் இறுக்கமான கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லையென்று தெரிவித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, செனட் சபையை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளிலிருந்து தெரிவு செய்வதா அல்லது உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் தெரிவுசெய்வதா அல்லது வேறு ஒருவகையில் தேர்தல் மூலம் தெரிவுசெய் வதா என்பது பற்றி இதுவரையில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில் லையென்றும் கூறினார்.
எவ்வாறாயினும், செனட்சபையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்குக் கூடுதலாக சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் வகிப்பார்கள் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தம் பற்றி விளக்கமளித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப்பெற்றுள்ள 13வது திருத்தச்சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இப்போது இருப்பதைவிட மாகாணசபைகளுக்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்றும், ஆகவே சில தினங்களில் நடை பெறவுள்ள 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நல்ல வெற்றியளிக்குமென்று தமக்கு நம்பிக்கையிருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது 880 தமிழ் கைதிகளே சிறையில் இருக்கிறார்கள் என்றும், அவர்களும் விரைவில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள். இந்தக் கைதிகள் ஒவ்வொருவருடைய வழக்கு விபரங்களைக்கொண்ட கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த பின்னர் அவர்களை விடுதலை செய்வதா அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை தீர்மானிப்பார் என்றும் கூறினார்.
லாயுத்தம் முடிவடைந்தவுடன் அரசாங்கத் தரப்புக்கு தப்பியோடிவந்து அகதிமுகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 85 ஆயிரம் முதல் 4 இலட் சம் வரையின உள்ளூரில் இடம்பெயர்ந்த வர்களில் இப்போது 11 ஆயிரம் பேர் மாத்திரமே முகாம்களில் இருக்கிறார்கள். அவர்கள் தடுத்துவைக்கப்படவில்லை. தங்கள் விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி யிருக்கிறார்கள்.
காலையில் வெளியில் சென்று தொழில்புரிந்து மாலையில் முகாம்களுக்கு வந்து தங்கும் இவர்களுக்கு அரசாங்கம் இப்போதும் உலர் உணவுகளை இலவசமாக விநியோகித்து வருகிறது என்று சஜின்.டி.வாஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் இந்த முகாங்களுக்குச் சென்று பார்த்து அங்கு மக்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் பற்றி மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
சஜின்.டி.வாஸ் குணவர்த்தன தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் தருஸ்மன் அறிக்கை தொடர்பான விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை பகிரங்கமாக கண்டித்து வருவதை ரஷ்யாவும், சீனாவும் விரும்ப வில்லையென்று வாரஇறுதியில் வெளிவரும் ஆங்கில பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி ஆதாரமற்றது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்தரப்பினர் இப்போது மேற் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இதுவரையில் எதிர்ப்பைத் தெரிவிக்காதிருப்பது இனப்பிரச்சினைக்கு சமரசத்தீர்வை ஏற்படுத்துவதில் அவற்றுக் கிருக்கும் விருப்பத்தை பறைசாற்றுகிறது என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று தெரிவித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, அவர்கள் விடுக்கும் கோரிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்குக் கூட அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்ற உணர்வு தனது மனதில் வலுப் பெற்றுவருவதாகக் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத் தரப்பினரின் பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்ற பின்னர் அரசாங்கம் ஏனைய சிறிய அரசியல் கட்சிகளுடன் இதுபற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும். முஸ்லிம் கட்சிகளுடனும் இது விடயத்தில் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்றும் கூறினார்.
ஜே.வி.பி.யினருக்கு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்து பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ள விரும்பாத நிலையில் அவர்கள் அதிகாரப் பரவலாக்கலை எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதுபற்றி ஏதோவொரு மறைமுக காரணத்துக்காக எதுவும் பேசாமல் மெளனம் சாதிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ அறிக்கைகளின் படி இலங்கை வங்கியும், மக்கள் வங்கியும் வடபகுதி மக்களுக்கு 80 பில்லியன் ரூபாய்களை கடனாக வழங்கியிருக்கின்றன என்று தெரிவித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, இதிலிருந்து வடபகுதியின் பொருளாதாரம் துரிதவேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியுமென்றார்.
வடபகுதியில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதற்கு தயக்கம்காட்டி வருகின்ற காரணத்தினால் இப்போது வடபகுதியில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஒரு வெற் றிடம் இருந்துவருகிறது என்று கூறினார்.
விரைவில் வடபகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடியும்போது நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிக்கு வரும்போது அவர்களுக்கு மாகாணசபைகளின் அதிகாரங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை ஆதரிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விதம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் சங்கமிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் சஜின்.டி.வாஸ் குணவர்த்ன மேலும் தெரிவித்தார்
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக