தாய்ப்பால் தான் குழந்தையின் முதல் உணவு. அல்லாஹ்வின் படைப்பில் இது இவ்வாறு அமைந்தது மிக முக்கியமானது. தாயின் மார்புக் காம்பு ஈரிப்பாக நுண் கிருமிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இந்த நுண்கிருமிகள் ஒரு வித மணத்தை ஏற்படுத்தி பிறந்த குழந்தையின் இதழ்களை அதைநோக்கி ஈர்க்கின்றன. கண்களைக்கூட திறக்காத குழந்தை தாய்ப்பால் சுரக்கும் இடத்தை அறியும் விந்தை இதுதான். மேலும் பெரியவர்களுக்கு உள்ளதைவிட கைக்குழந்தைப் பருவத்தில் குரல்வலையானது சற்றுமேலே தள்ளியே இருக்கும். இதன் காரணமாத்தான் தாயிடம் பாலமுது பருகும்போது அவைகளுக்கு மூச்சு முட்டு வதில்லை, மூச்சிக்குழலிலும் நுரையீரலுக்குள்ளும் பால் வடிந்துவிடுவதுமில்லை.
குழந்தைப்பருவத்தில் கிருமிகள் வாயின் வழியாகவும் சுவாசக் குழாயின் வழியாகவும் நுரையீரலையும் வயிற்றையும் சென்றடைகின்றன. இதன் மூலம் கிருமிகளை எதிர்த்த முதல் கட்டப் போராட்டம் குழந்தையின் உடலுக்குள் துவங்குகிறது.
இவ்வகை கிருமிகளை எதிர்க்கத்தக்க சக்தி சிசுவின் உடலுக்குள் குறைவாக இருக்கும். எனவே தான் குழந்தையின் முதல் உணவான தாய்ப்பால், நோய் எதிப்புச் சக்தியை குழந்தைக்கு கொடுக்கக்கூடியதாக அல்லாஹ்வினால் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு ஜீரணம் என்பது பல்வேறு சுரப்புநீர்களின் மூலம் நடைபெறுகிறது. ஆனால் குழந்தைகளின் முதல் ஜீரணம் அவ்வாறு நடைபெறுவதில்லை. எந்த ஒரு உணவு அதன் இயற்கைத் தன்மையோடு வயிற்றுக்குள் செல்கிறதோ அந்த உணவை நொதிக்க வைப்பதற்கான நொதிப்பான்கள் அந்த உணவிலேயே இருக்கும். அதனால்தான் இயற்கையான தன்மையிலுள்ள தாய்பாலானது குழந்தையின் முதல் உணவாக அல்லாஹ்வினால் அமைக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலானது குழந்தையின் அன்றாட வளர்ச்சிக்கான சத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது.
தாய்ப்பால் எப்படி சுரக்கிறது?
தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்திய பின்பு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு எப்படியிருக்க வேண்டும் என்பதை தாய்ப்பாலின் தன்மை மற்றும் அதன் மேம்பட்ட செயல்முறைகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்து அதன் இதழ்கள் மார்புக் காம்புகளைக் கவ்வியவுடன் பால் சுரக்கத் துவங்குகிற செயல் விந்தையானது. அல்லாஹ்வின் படைப்பின் இரகசியம் இது.
உடலின் பிற திசுக்களைப்போலவே பால் சுரப்பிகளுக்கும் இரத்தத்தின் மூலமே சத்துக்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு சத்துக்களைப் பெற்ற பால் சுரப்பிகள் பாலைச் சுரக்கத் துவங்குகின்றன. தாய் உண்ணும் உணவு உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் ஜீரணிக்கப்பட்டு பால் சுரப்பியை வந்தடைந்து குழந்தைக்கான தயார் நிலை உணவாக மாறுகிறது.
உடல் உறுப்புகளுக்கான அடிப்படைச் சத்துக்கள் ஜீரணத்தின் மூலம் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று இராசயன மாற்றங்களுக்கு உட்பட்டு உடலுக்கு சக்தியளிக்கும் ஆற்றலாக மாறுகிறது. பிறகு குடல் உறிஞ்சிகளின் வாயிலாகஇரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு போய்ச் சேர்க்கப்படுகிறது.
பறவைகள் குஞ்சுகளுக்கு தனது வாயில் உள்ள உணவை ஊட்டுவது போல் நமது தாய் நமக்கு உணவை ஊட்டவில்லை. பறவைக் குஞ்சின் ஜீரண மண்டலம் கடுமையான உணவுகளையும் ஜீரணிக்கத் தக்கது. பிறந்த குஞ்சுக்கு பூச்சி புழுக்களை நேரடியாகவே உணவாக வழங்குகிறது தாய்ப்பறவை. ஆனால் ஒரு பெண் தான் உண்ணும் உணவு குழந்தைக்கும் பொருத்தமானதுதானே என்று நேரடியாக வழங்கிவிடுவதில்லை. அதை தான் உண்டு தனது உடலுறுப்புகளின் மூலம் ஜீரணித்து சக்தியாக மாற்றி இரத்தத்தின் மூலம் மார்பகங்களுக்கு அனுப்பி பாலாக மாற்றித்தான் உலகில் ஈடுஇணையற்ற தரத்தில் குழந்தைக்கு அமுதாக வழங்குகிறாள்.
உருவத்தில் குழந்தையை விட நூறு மடங்கு சின்னஞ்சிறிய பறவைக்குஞ்சுக்கு அதனது தாய்ப்பறவை நேரடியாக வழங்கும் உணவுகளே ஜீரணம் ஆகும் போது நமது குழந்தைக்கு ஜீரண சக்தி ஏன் குறைவாக உள்ளது என்று கேள்வி எழுவது நியாயமே.
குழந்தை உடலின் தசைகளும் உடல் உறுப்புகளும் குழந்தையின் உடல் வெப்பமும் சேர்ந்து அந்த குழந்தையின் உடலைப் பல்வேறு கிருமிகள் வந்து தங்குவதற்கான புகழிடமாக திகழச் செய்கின்றன.
மற்ற உயிரினங்களுக்கு இல்லாத தொல்லை குழந்தைக்கு உள்ளது. மனித உயிரின் ஜீரண சுரப்புகள் உள்ளிட்ட அனைத்து சுரப்புகளது முதல் கடமை தீமைதரும் கிருமிகளை அழிக்கும் தன்மையுடைய சத்துக்களை உயிரணுக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யும் வகையில் தங்களது சுரப்பு திரவத்தின் இராசயனத் தன்மைகளை அமைப்பதேயாகும்.
அதற்கு அடுத்துதான் உடலுறுப்புகளின் வழக்கமான செயல்பாட்டிற்கான ஊட்டச்சத்துக்களை வழங்கும் கடமை. பிறந்த குழந்தையின் உயிரணுக்கள் குழந்தைக்குள் நுழையும் நோய்கிருமிகளைப் பற்றிய அறிவு அற்றவையாகவே முதலில் இருக்கும். நோய் கிருமிகள் உள்ளே வந்தபின்னர்தான் அவற்றின் தன்மையை அனுபவம் மூலமாக பெற்று எதிர்காலத்தில் அவ்வாறான கிருமிகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு அழிக்கிறது. இவ்வாறு அடையாளம் காணும் நினைவுகளை உயிரணுக்களுக்குள் பதிப்பதற்கான இரசாயனத்தன்மை பிறந்த குழந்தையின் சுரப்புகளுக்கு இருக்காது. எனவே உணவின் மூலம் உள்ளே செல்லும் கிருமிகளை அழிக்கும் திறன் உயிரணுக்களுக்கு இல்லாதிருக்கும். அதனால் தான் தனது இரத்தமும் சதையுமாக வளர்ந்த குழந்தைக்கு தனது உடலில் பக்குவப்படுத்தப்பட்ட சக்தியை, அதாவது நோய்கிருமிகளை அழிக்கத்தக்க வகையில் குழந்தையின் உயிரணுக்களை செயல்படச் செய்கிற இரசாயனத் தன்மையோடு கூடிய அந்த உயிரணுக்களுக்கான உணவாக தனது பாலமுது மூலம் வழங்குகிறாள்.
தாய்பாலானது வெற்றுத் திவரம் அல்ல. கூர்மையான அறிவு படைத்தது. குழந்தையின் உடற்திறனை முன்கூட்டியே யூகித்து அதற்கேற்ப சத்துக்களை அளந்து வழங்கும் திறன் பெற்றவை தாய்ப்பால் சுரப்பிகள்.
தாய்மார்கள் சிலருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு பிறந்த குழந்தைகள் போதுமான பலம் இன்றி காணப்படும். எனவே அவற்றிற்கு கூடுதல் சத்துக்கள் தேவைப்படும். எனவே அந்த குழந்தையின் தாய்ப்பால் நோய் எதிர்ப்புத் தன்மை வழங்கக்கூடியதாக மட்டும் அல்லாமல் உடல் வளர்ச்சிக்கு போதுமான சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். எனவே அந்த தாய்மார்களின் பாலில் கொழுப்பு, புரதம், சோடியம், குளோரைடு, இரும்பு போன்ற சத்துக்கள் கூடுதலாக இருக்கும். இவ்வாறான கூடுதல் சத்துக்கள் தான் அந்தக் குழந்தைகளை பார்வை இழப்பு போன்ற அபாயங்களில் இருந்து விடுவிக்கிறது. அதன் கண்களின் பார்வைத் திறனை சிறப்பாக அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை தரக்கூடியதாக அமைகிறது.
தனது வயிற்றிலிருந்து வெளிவந்துவிட்ட குழந்தைக்கு எப்படிப்பட்ட சத்துள்ள பாலை சுரக்கவேண்டும் என்று முடிவு செய்வது
தாயின் மார்பில் உள்ள சில உயிரணுக்களேயாகும். தனது உடலுக்கு வெளியில் உள்ள ஒரு உயிருக்கு தேவையானவை எவை என்று ஒரு தாயின் பால் சுரப்பிகள் உணர்வது விந்தையிலும் விந்தையல்லவோ!
பால் சுரப்பும் – கட்டுப்பாடும்
குழந்தைக்கு எப்போதும் என்னவகையான பால் எவ்வளவு தேவை என்ற கட்டுப்பாடு மிக்க செயல்முறை அல்லாஹ்வின் படைப்பின் இரகசியம். உடலில் உள்ள ஹார்மோன்கள் எனப்படும் உட்சுரப்பிகளின் செயல்பாடுகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் மூலம் உடலுறுப்புகள் தங்களுக்குள் பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் மேற்கண்டவாறு பால் சுரப்பு நடைபெறுகிறது.
தாயின் மார்பகங்களில் பால் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவது அவரது உடலில் உள்ள ‘புரோலேக்டின்’ என்ற சுரப்பு திரவம் ஆகும். மூளையின் அடிப்பகுதியில் உள்ள ‘பிட்யூட்டரி’ என்ற சுரப்பியில் இது சுரக்கிறது.
ஒரு பெண் கருவுறத் துவங்கிய சில நாட்களிலேயே சில காரணிகள் புரோலேக்டின் சுரக்காமல் தடுத்துவிடுகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. “தாய் இப்போதுதான் கருவுற்றிருக்கிறது. பிறக்க பல மாதங்கள் உள்ளன. இப்போதைக்கு பால் வேண்டியதில்லை. எனவே இப்போதைக்கு பாலைச் சுரக்கவேண்டியதில்லை.” என்பதுதான் புரோலேக்டின்
சுரப்பு நிறுத்தத்தின் பொருள். இவ்வாறான தடை எப்படி செயல்முறைக்கு வந்தது?
நமது மூளையில் ‘ஹைபோதெலம்ஸ்’ என்ற சுரப்பி உள்ளது. இதிலிருந்து சுரக்கும் திரவம் தான் நமது தினசரி காலைக்கடன்களான ‘சிறுநீர் கழித்தல்’, ‘மலம் கழித்தல்’ போன்ற கடமைகளை நிறைவேற்றும் உணர்வைத் தூண்டுகிறது. இந்த திரவம் தான் ‘புரோலேக்டின்’ உற்பத்தியையும் தடைசெய்கிறது. எனவே இதை ‘புரோலேக்டின் தடுப்பு சுரப்பி’ என்று அழைக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் ‘புரோலேக்டின் தடுப்பு சுரப்பி’க்கு தடுப்பு ஆணையை அனுப்புவது எது? ஈஸ்ட்ரோஜின் என்ற கர்ப்பிணிதான் தனது சுரப்பு திரவம் மூலம் இந்த ஆணையை அமலாக்குகிறது. குழந்தை பிறந்தவுடன் ஈஸ்ட்ரோஜன் தனது முடிவை மாற்றிக் கொள்கிறது. அதாவது ‘ஈஸ்ட்ரோஜின்’ தனது திரவச்சுரப்பைக் குறைத்துக்கொள்கிறது. இதை உணர்ந்த ‘புரோலேக்டின்’ தனது சுரப்பை மெல்ல மெல்ல அதிகரித்து பால் உற்பத்திச் சுரப்பிகளைத் தூண்டி தாய்ப்பால் உற்பத்தியை துவங்கச் செய்கிறது.
குழந்தையின் முதல் அமுது
பிறந்த குழந்தை முதன் முதலில் தாயின் மார்புக் காம்புகளை கவ்வத் தொடங்கியதும் தாயின் மார்பகங்களில் உள்ள நரம்புகளின் உயிரணுக்கள் செயல்பட்டு நரம்புத் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. இந்த தூண்டல்சமிக்கைகள் ’ஹைபோத்தலத்தை’ எட்டுகின்றன. “தாய்பால் உற்பத்திக்கு காரணமாக உள்ள ‘புரோலேக்டின்’க்கு இது வரை நீங்கள் விதித்திருந்த தடைகளை விலக்கிக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்துவிட்டது. அதற்கு பால் வேண்டும். எனவே ‘புரோலேக்டின்’ தனது திரவத்தை அதிகமாகச் சுரக்கச் சொல்லுங்கள்” என்பதுதான் இந்த தூண்டலின் பொருள்.
பிறந்த குழந்தையின் பூவினும் மெல்லிய இதழ்களின் உறிஞ்சுதலை உணர்வதற்கான தனிவகைப்பட்ட உணரிகள் தாயின் மார்பகங்களில் அமைந்துள்ளன. குழந்தை உறிஞ்சத் துவங்கிவிட்டது என்பதை ‘ஹைபோத்தலம்ஸ்’க்கு உணர்த்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விந்தைமிகு இந்த கட்டளைகள் எலும்பும் சதையுமாக திகழும் உடலின் பரந்து விரிந்து கிடக்கிற நரம்பு மண்டலத்தில் தான் நடைபெறுகிறது.
மூளையின் ‘உணர் மையம்’, வயிறு, குடல்கள் இவைகளுக்கு இடையே மிகத்துல்லியமான முறையில் நரம்புத் தொடர்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப் போன்றே ‘ஹைபோத்தலம்ஸ்’ உடனும் இணைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
மேற்கண்டவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் சுரப்பிகளுடன் இணைப்புள்ள மற்றொரு சுரப்பி ‘ஆக்சிடோசின்’.
மாடுகளில் பால் கறப்பவர்கள் மாட்டின் மடியில் உள்ள காம்புகளை தங்களது விரல்களால் இறுக்கிப்பிடித்து மேலிருந்து கீழ்நோக்கி வலிந்து இழுத்து பாத்திரத்தில் பீச்சுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பச்சிளம் இதழ்கள் அப்படி காம்புகளை இழுத்து பாலை உறிஞ்சும் திறன் கொண்டவை அல்ல. எனவே தான் அல்லாஹ் அதற்கான ஒரு ஏற்பாடாக ‘ஆக்ஸிடோசின்’ சுரப்பியை படைத்துள்ளான்.
“தாயின் பால் பருக தாயின் மார்புக் காம்பில் தனது இதழ்களை பொறுத்துகிறது குழந்தை. எனவே பால்சுரப்புகளைச் சுற்றியுள்ள
தசைகளே உங்களை நீங்களே இறுக்கிக் கொண்டு காம்புகளை நோக்கி பாலை வடியச் செய்யுங்கள்.” என்று சம்பந்தப்பட்ட தசைக ளுக்கு ‘ஆக்ஸிடோக்சின்’ தனது சுரப்பு திரவம் மூலம் வேண்டுகோள் விடுக்கிறது. குழந்தையின் வாயில் சுலபமாக இறங்குகிறது பால். அல்லாஹ்வின் படைப்பை என்னவென்று புகழ்வது?
எவ்வளவு கூரிய அறிவுத் திறனோடு குழந்தைக்கு ஆரம்பகால உணவு அல்லாஹ்வினால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்கள் தினம் தினம் வியந்து நோக்கினால் தாங்கள் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய உணவு மற்றும் அதற்கான வழிகாட்டல்களின் மேல் அக்கறை செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர முடிவதோடு அல்லாஹ்வின் படைப்பாற்றலையும் அவனது கருணையையும் உணர முடியும்..