சிரிய வெடிமருந்து கிடங்கிற்கு நெருப்புவைத்தல்
சிரியாவில் குருதி கொட்டுதல் பெருகுவதைத் தடுக்கும் கடைசி வாய்ப்புத் தலையீடு எனக் கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் கோபி அன்னான் ஜெனிவாவில் சனிக்கிழமை கூட்டும் வெளியுறவு மந்திரிகள் கூட்டம், வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆட்சி மாற்றத்திற்காக கோரிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான அரங்கைத்தான் அமைக்கும்.
கூட்டத்திற்கு முன்னதாகவே, அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனும் பிற மேற்கின் அதிகாரிகளும் அன்னானுடைய முயற்சிகள் பலனளிக்கும் என்று பரந்த நம்பிக்கை கூடிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்; இதுவரை சிரியாவில் வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்த்த ரஷ்யா பகிரங்கமாக அதன் எதிர்ப்பை மாற்றிக் கொண்டுள்ளது, இப்பொழுது நாட்டின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அகற்றப்படுவதற்கு ஆதரவு கொடுக்கிறது எனக் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், இக்கூற்றுக்களை துனிசியாவில் வியாழன் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் மறுத்தார். “எந்தவித வெளித்தலையீட்டையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆதரிக்கவும் மாட்டோம்” என்றார் அவர்; “இது பஷர் அல்-அசாத்தின் தலைவிதிக்கும் பொருந்தும்.” என்று சேர்த்துக் கொண்டார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, வாஷிங்டன் இங்கு ஓர் இரட்டை விளையாட்டை மேற்கொண்டுள்ளது. ஒருபுறம் அது சிரியா ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு ஒப்புக் கொள்ள இயன்ற அளவு அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளது. மறுபுறம் மற்றொரு பிரச்சார நடவடிக்கைக்குத் தளம் அமைக்கிறது. அது ரஷ்யாவை“சமாதானத்திற்கு” ஒரு தடை எனச் சித்தரிக்கிறது; அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பாரியளவில் தங்கள் பகிரங்கமான போர்த்தயாரிப்புக்களை பெருக்கியுள்ளன.
சிரியாவிற்குள் இப்போர் இன்னும் கொடூர வடிவமைப்பில் உள்ளது. தலைநகர் டமாஸ்கஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலையெனப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. வியாழன் அன்று சக்தி வாய்ந்த கார்க் குண்டுகள் நீதி அரண்மனைக்கு அருகே டமஸ்கஸ் நகர மையத்திலும், உள்ளூர் பொலிஸ் நிலையம் ஒன்றையும் தாக்கின.
அதற்கு முதல் நாள், “எழுச்சியாளர்கள்” டமாஸ்கஸ் புறநகரில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்கினர். நிலையத்தின் அலுவலகங்கள், படம் எடுக்கும் பகுதிகளைத் தாக்கி பின்னர் அவற்றை வெடிமருந்துகளினால் தகர்த்து, ஏழு செய்தியாளர்களையும் பாதுகாப்புப் பிரிவினரையும் சுட்டுவீழ்த்தினர். அவர்கள் கை கால்கள் கட்டப்பட்டு, முழந்தாளிட்டு நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டு ஈவிரக்கிமின்றிச் சுடப்பட்டனர்.
ஐ.நா. அதிகாரிகள் சிரியாவில் உள்ள வன்முறை, அன்னான் தரகினால் ஏற்பட்ட ஏப்ரல் 12 போர்நிறுத்த உடன்பாடு வருவதற்கு முன் இருந்த அளவுகளை “அடைந்துவிட்டது அல்லது கடந்துகூட விட்டது எனலாம்”எனக்கூறியுள்ளனர். மேலும் கொலைகள் இப்பொழுது அரசாங்க சார்பு, அரசாங்க எதிர்ப்பு என்று காணப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். மாறாக, “பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையை ஒட்டி இலக்கு வைக்கப்படுவது போல் தோன்றுகிறது.”
“ஜனநாயகம்”, “மனித உரிமைகள்”, “மனிதாபிமானம்” என்பவற்றின் பெயரில், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவை ஒரு குறுங்குழுவாத உள்நாட்டுப் போரில் தள்ளிவிட்டன. அன்னானுடைய போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தருவது போல் காட்டிக் கொண்டு, வாஷிங்டன்“எழுச்சியாளர்கள்” எனக்கூறப்படுபவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. அவர்கள் கூடுதலாக சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாதக் பிரிவினராவர். அல் குவேடாவுடன் தொடர்புடையவர்களும் இதில் அடங்குவர். இச்சக்திகளுக்கு அதிக ஆபத்து இல்லாத உதவிகளைத்தான் —தொடர்புச் சாதனங்கள், ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு பயன்படும் உளவுத்துறைத் தகவல்கள் என— கொடுப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது துருக்கிய-சிரிய எல்லைக்கு வாஷிங்டனின் பிராந்திய வாடிக்கை நாடுகளான சவுதி அரேபியா, கட்டார் முடியாட்சி சர்வாதிகாரங்களின் பணத்தில் ஆயுதங்களையும் வழங்குவதை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு CIAமுகவர்கள் குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்கக் கொள்கையின் குற்றம் சார்ந்த பொறுப்பற்ற தன்மை ஒவ்வொரு நாளும் கடக்கப்படுகையில் இன்னும் வெளிப்படையாகிறது. பிராந்திய, இனவழி, சமய அழுத்தங்கள் என்று ஏகாதிபத்திய தலையீட்டினால் சிரியாவில் தூண்டிவிடப்படும் அழுத்தங்கள் அந்நாட்டில் குருதிக் களறிக்கு சூழலைத் தோற்றுவிப்பதுடன் முழு பிராந்தியத்தையும் போரில் இழுக்கும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது.
வியாழன் அன்று துருக்கிய செய்தி ஊடகத்தில் ஏராளமான இராணுவ வாகனங்கள், டாங்குகள், ராக்கெட்டை ஏவும் கருவிகள், பீரங்கிகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு சிரிய எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளன என அறிவித்தது. இது ஒரு துருக்கிய போர் விமானத்தை கடந்த வாரம் சிரியா சுட்டுவீழ்த்தியதற்கு விடையிறுப்பு எனக் கூறப்படுகிறது. சுட்டுவீழ்த்தப்பட்ட யுத்தவிமானம் சிரியாவின் வான் பாதுகாப்பு எல்லைகளை ஆராய்ந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை.
துருக்கியின் பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகான், “துருக்கி அதன் வலிமையைச் பரிசோதிக்கத் தைரியம் கொண்டு தாக்குபவர்களுக்கு படிப்பினை கற்பிக்கும்” என்று உறுதியளித்துள்ளார். அங்காராவில் அதிகாரிகள் போர் விதிகள் எல்லையில் மாற்றப்பட்டுள்ளன என்றும், சிரியப் படைகள் ஏதேனும் எல்லையை அணுகினால் அவை விரோதிப் படைகள் என நடத்தப்படும் என்றனர். இது ஒரு வெளிப்படையான போருக்கு அரங்கை அமைக்கலாம். மற்ற நேட்டோ சக்திகளும் துருக்கிக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.
இதற்கிடையில் சிரியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள குறுங்குழுவாத மோதல் நாட்டின் லெபானானுடைய எல்லைகளுக்கு அருகேயும் படர்ந்துள்ளன என்பதற்கான அதிகரித்துவரும் அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்நாடோ அதனுடைய நீடித்த உள்நாடுப்போரையே இதேபோன்ற முறையில்தான் நடத்தியிருந்தது. ஷியைட் புனிதப் பயணிகள், தலங்களில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இது 2006-07 அமெரிக்க ஆக்கிரமிப்பினால் தூண்டிவிடப்பட்ட குறுங்குழுவாத இரத்தக் களரியை மீண்டும் கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
வாஷிங்டனின் உண்மையான நோக்கங்களின் தெளிவான அடையாளங்களில் ஒன்று ஒபாமா நிர்வாகம் சனிக்கிழமை நடக்கும் ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் ஈரானைத் தடுப்பது ஆகும். அன்னான் முன்வைக்கப்பட்டதன்படி ஈரான் பங்கு பெறுவது அமெரிக்கா அதைப் புறக்கணிப்பதற்கான “சிவப்புக் கோட்டிற்கு” ஒப்பாகும் என்று வெளிவிவகாரத்துறை அறிவித்தது.
பேச்சுவார்த்தைள் மூலம் வரும் சமாதான உடன்பாடு நோக்கம் என்றால், சிரியாவின் பிராந்திய முக்கிய நட்பு நாடான ஈரான் கலந்து கொள்ளுவது தவிர்க்க முடியாதது எனத்தோன்றும். ஆனால் அமெரிக்கா இதை கருத்தில் கொள்ளவில்லை. எத்தனை சிரியர்களுடைய உயிர்கள் போனாலும் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது. மேலும் சிரியாவில் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுதல் ஈரானிய அரசாங்கத்தை அகற்றுவதற்கான குருதிகொட்டும் நடவடிக்கை என்னும் இன்னும் பரந்த, செயற்பாட்டிற்கு ஒரு முன்னோக்கிய அடி என்றும் அது கருதுகிறது. சிரியா மற்றும் ஈரானில் ஆட்சிகளை மாற்றுவதற்கான முயற்சிகள் தவிர்க்க முடியாமல் ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதலுக்கு வழிவகுக்கும். அவை இந்நாடுகளைத் தங்கள் மூலோபாயப் பங்காளிகள் எனக் காண்கின்றன.
கடந்த தசாப்தத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் இரு முக்கிய போர்களை நடத்தியபின், லிபியாவில் இருந்து யேமன், சோமாலியா, பாக்கிஸ்தான் மற்றும் சிரியா என அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவில்லாதது போல்தோன்றும் இராணுவத் தலையீடுகளில் நுழைந்துள்ளது. இவை அமெரிக்க மேலாதிக்கத்தை மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா ஆகிய எரிசக்தி வளங்கள் உள்ள பிராந்தியங்களில் நிலைநிறுத்தும் நோக்கம் உடையவை ஆகும்.
இந்த ஆக்கிரோஷப் பிரச்சாரம் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டும் முயற்சி ஆகும். 2008ம் ஆண்டு நிதியக் கரைப்பு கட்டவிழ்க்கப்பட்டதை அடுத்து இது தீவிரமாகியுள்ளதுடன், தன்னிடத்தில் எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையை அமெரிக்கா அதற்கு பயன்படுத்துகிறது.
20ம் நூற்றாண்டின் கசப்பான அனுபவங்கள் நிரூபித்துள்ளதுபோல், ஏகாதிபத்திய சக்திகள் உலகை தங்கள் போட்டி நாடுகளின் இழப்பில் மீண்டும் பங்கிட்டுக் கொள்ளுவது என்பது தவிர்க்க முடியாமல் உலகப் போருக்கு வழிவகுக்கும்.
இவைதான் சிரியாவில் உண்மையாக நிகழ்கின்றன. அமெரிக்க தலைமையிலான தலையீட்டை எதிர்ப்பது என்பது அசாத் ஆட்சியுடன் கணக்குத்தீர்த்துக்கொள்வது தொழிலாள வர்க்கத்தின் பணியே தவிர குறுங்குழுவாத போரை ஏற்படுத்த முயன்று, இதனால் முழுப் பிராந்தியத்திலும் காலனித்துவ வகையிலான கட்டுப்பாடு நிறுவமுயலும் கொள்ளைக்கார ஏகாதிபத்திய சக்திகளுடையது அல்ல என்ற கொள்கை அடித்தளத்தில் இருக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக