ஜெனிவா பொறியில் இருந்து மீள்கிறதா இலங்கை?
கே. சஞ்சயன்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டுள்ளது. என்னதான், அரசாங்கம் மேற்குலக நாடுகளையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளையும் காட்டமாக விமர்சித்து வந்தாலும், அவற்றின் அழுத்தங்களைத் தட்டிக்கழிக்க முடியவில்லை என்பதை இந்த செயற்திட்டம் உறுதிசெய்கிறது.
மேற்குலக மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு
அரசாங்கம் உள்ளாகியுள்ளது. அதனால் தான் இந்த செயற்திட்டம் வெளியாகியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதைத் தடுக்க தன்னால் இயன்றளவுக்கு அரசாங்கம் முயன்றது.
அத்துடன் அந்தத் தீர்மானத்தை தாம் ஏற்று நடக்கப் போவதில்லை என்று இலங்கையில் மட்டுமன்றி ஐ.நாவில் கூடத் துணிச்சலோடு கூறியது. ஆனால் அந்தத் துணிச்சலும் முடிவும் நீண்டநாட்களுக்கு நின்று பிடிக்கவில்லை.
ஜெனிவா தீர்மானத்தை ஏற்று செயற்பட மாட்டோம் என்று கூறிய அதே அரசாங்கம் தான், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை தயாரித்து வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, அதை ஐ.நாவிடம் கொடுக்கப் போவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த செயற்திட்டத்தை தயாரித்து தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாகவே அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஒரு செயற்திட்டத்துடன் தான் வோஷிங்டனுக்கு வரவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கண்டிப்பாகவும் கூறப்பட்டது.
இந்த செயற்திட்டத்தை அவர் கடந்த மே மாதம் வோஷிங்டன் சென்றபோது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனிடம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படியான செயற்திட்டம் எதையும் ஆவணமாக கொடுக்கவில்லை, வாய்மொழியாகவே விளக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால், அமெரிக்காவோ, இந்த செயற்திட்டத்தை முதலில் இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. அமெரிக்கா சொன்னதைப் போலவே அரசாங்கம் செய்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வகுத்து அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது. இது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது, சரியானது என்ற விவகாரங்கள் அடுத்த கட்டம்.
முதற்கட்டம் என்னவென்றால், மேற்குலகின், ஐ.நாவின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது, அதைத் தவிர்த்து ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது என்பது தான்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கவில்லை – நிராகரித்தது. ஆனால், ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அதை தட்டிக்கழிக்க முடியாதநிலை ஏற்பட்டது.
முன்னதாக போரின்போது எந்த விதிமீறல்களும் இடம்பெறவில்லை என்ற அரசாங்கம் – போரின் போது ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை என்று கூறிய அரசாங்கம்- இப்போது அதற்கு முரணான வகையில் கருத்துகளை முன்வைக்கிறது.
பொதுமக்களுக்கு உயிரிழப்பு இல்லாமல் எப்படி போரை நடத்த முடியும் என்று பதில் கேள்வி எழுப்புகிறது. போர்க்குற்றங்கள் தனிப்பட்ட ரீதியாக இடம்பெற்றிருக்கலாம் என்கிறது.
இவைபற்றி விசாரிக்க புதிய செயற்திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு ஆண்டும், அதில் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் திரட்ட இரண்டு ஆண்டுகளும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இரண்டு ஆண்டுகளுமாக மொத்தம் 5 ஆண்டுகள் தேவை என்று மதிப்பிட்டுள்ளது அரசாங்கம்.
அதாவது போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அது உண்மையென்றால், சம்பந்தப்பட்ட படையினருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுக்க 5 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது அரசாங்கம்.
இது காலத்தை இழுத்தடித்து சர்வதேச கவனிப்பில் இருந்து இந்த விவகாரத்தை மறக்கச் செய்வதற்கான தந்திரம் என்று குற்றம்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
அவரைப் போலவே, இந்த செயற்திட்டத்தையோ, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறையையோ ஒரேயடியாக சர்வதேச சமூகத்தினால் நிராகரித்து விடமுடியாது என்பதே உண்மை.
சர்வதேச சமூகம் போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு, இலங்கை அரசு மீது பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தது. அரசாங்கம் அவற்றையெல்லாம் மறுப்பது போலவே காட்டிக் கொண்டாலும், சர்வதேசத்தின் விருப்பங்களை முற்றாகப் புறக்கணித்து ஒதுக்கிவிடவில்லை.
இப்போதைக்கு அரசாங்கத்தின் முன்பாக இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதலாவது, வரும் நவம்பர் முதலாம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பாக பூகோள கால மீளாய்வுக் கூட்டம்.
இரண்டாவது- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடர். மீளாய்வுக் கூட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வலியுறுத்தும்.
எனவே, இந்தக் கூட்டத்தில் ஏதாவது பொறிகளில் சிக்காதிருப்பதை உறுதிசெய்து கொள்ள அரசாங்கம் விரும்புகிறது.
அடுத்து, கடந்த மார்ச்மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை அரசாங்கம் செயற்பட்டுள்ளதா என்பது பற்றிய அறிக்கை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குறிப்பிடப்பட்டால், அடுத்த கட்டமாக மற்றொரு கடுமையான தீர்மானத்தை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது.
எனவே, இந்த நெருக்கடிகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்தாக வேண்டும். இல்லையேல் இந்த இரண்டு கூட்டத்தொடர்களிலும் அரசாங்கம் பலத்த சவால்களையும், அழுத்தங்களையும் சந்திக்க நேரிடலாம். கடந்தமுறை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வலுவான ஆதரவைக் கொடுத்த சீனாவும் ரஸ்யாவும் – சுழற்சி முறைப்பதவி முறையினால் இப்போது வெளியேறியுள்ளன.
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சவூதி அரேபியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக் காலமும் முடிந்து விட்டது.
இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சாதகமற்ற சூழலே உருவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் சர்வதேச தீர்மானங்களை மதிக்காமல், அடங்காமல் செயற்படுகின்றது என்ற கருத்து உருவாவது ஆபத்தானது. இதனால் தான் அரசாங்கம் ஒரு வழிக்கு வந்தாக வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் இலங்கை அரசின் இந்த செயற்திட்டத்தை ஒரேயடியாக நிராகரித்து விட முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் நியமித்த போது சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகள் அதில் நம்பிக்கையில்லை என்று நிராகரித்தன.
அதுபோல ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையோ, அல்லது அமெரிக்காவோ வேறு எந்த நாடோ, அமைப்போ இந்த செயற்திட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது.
அமெரிக்கா கூட சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமே விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் அமெரிக்கா கூறிவந்தது. அதற்கேற்றவாறு ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக கூறியுள்ளது.
அதற்காக கோரப்பட்டுள்ள காலஅவகாசம் குறித்து சந்தேகங்கள் இருந்தாலும், சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் பொறுத்திருந்து பார்த்தே முடிவுகளை எடுக்க முற்படும். எனவே அரசாங்கம் வரும் நவம்பரிலோ அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதமோ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிக்கல்களை எதிர்கொள்வதில் இருந்து ஓரளவுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவே தோன்றுகிறது.
ஆனால் ஒன்று, இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் செயற்திட்டம் தான். இதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தாக வேண்டும். அதையும் செய்வதற்கே அரசாங்கம் முற்படும்.
இந்தநிலையில் இந்தச் செயற்திட்டத்தின் மூலம் அரசாங்கம் தன் மீது வீசப்பட்ட பந்தை சர்வதேச சமூகத்தை நோக்கித் திருப்பி அடித்துள்ளது. இதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக