வீடொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு 5 மாத காலமாக சுரங்கம் தோண்டப்பட்டு தப்பித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரிலுள்ள சர்போஸா சிறைச்சாலையிலிருந்து வெளியிலிருந்து இரகசியமாக தோண்டப்பட்ட சுரங்கப் பாதையினூடாக 476 கைதிகள் தப்பிச் சென்றதையடுத்து, அந்நாட் டின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
வீடொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு 5 மாத காலமாக
சுரங்கம் தோண்டப்பட்டு தப்பித்த தலிபான்கள் மேற்படி சிறைச்சாலையிலுள்ள போராளிகள் அனைவரும் சுரங்கப் பாதையின் ஊடாக தப்பிச் சென்ற பின் தலிபான் போராளிகள் அது தொடர்பில் அறிவிக்கும் வரை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிறைக்கைதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாதிருந்துள்ளது.
அதன் பின் நடத்தப்பட்ட தேடுதலையடுத்து திங்கட்கிழமை மாலை மேற்படி சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் தலிபான் பேச்சாளரான சபியுல்லாஹ் ஜாஹித் விடுத்த செய்தியில், மேற்படி சுரங்கப் பாதையை நிர்மாணிப்பதற்கு 5 மாதங்கள் சென்றதாக கூறினார்.
சிறைச்சாலையின் வடகிழக்கே தலிபான் போராளி குழு உறுப்பினர்களால் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றிலிருந்து சிறைச்சாலையிலுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சிறைக்கூடமொன்றை இலக்கு வைத்து 5 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறைக்கூடத்தின் கொங்கிறீட் தளத்தில் துளை ஏற்படுத்திதையடுத்து நிறைவு பெற்றதாக சபியுல்லாஹ் தெரிவித்தார்.
சுமார் 1200 சிறைக்கைதிகள் இந்த சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் தலிபான் அரசியல் கைதிகளாவர். தப்பிச் சென்றவர்களில் சுமார் 100 தலிபான் கட்டளைத் தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.
தப்பிச் சென்ற கைதிகளில் 26 பேர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சரணடைய மறுத்து ஓடிய இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயின் பேச்சாளரொருவர் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றமையானது ஒரு போதும் இடம்பெற்றிராத மிக மோசமான அனர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தப்பிச் சென்ற கைதிகளை கண்டு பிடிக்கும் பணியில் அந் நாட்டு பொலிஸார் மும்ரமாக ஈடுபட்டு ள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்று கைது செய்யப்பட்ட கைதியான மொஹமட் அப்துல் லாஹ் விபரிக்கையில், ‘எமது நண்பர்கள் (தலிபான் போராளிகள்) சுரங்கப் பாதையொன்றை தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை, கடைசி நிமிடம் வரை சிறையிலிருந்த எமது குழுவினரில் 4 அல்லது 5 பேருக்கே தெரிந்த இரகசியமாக இருந்தது’ என்று கூறினார்.
‘எமது நண்பர்களில் சிலர் ஏனைய சிறைக்கூடங்களின் சாவிகளின் மாதிரி சாவிகளை ஏற்கனவே எம்மிடம் கையளித்திருந்தனர். இரவு வந்ததும் நாங்கள் ஒருவாறாக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியேறி ஏனைய சிறைக் கூடங்களின் கதவுகளை திறந்து அங்கிருந்த எமது நண்பர்களை சுரங்கப் பாதையினூடாக வெளியேற்றினோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த சுரங்கப் பாதையை கடக்க சுமார் 30 நிமிட நேரம் சென்றதாக அவர் கூறினார்.
இந்த சுரங்கப் பாதை மூலம் சிறைச் சாலையை சுற்றியிருந்த பாரிய கொங்கிறீட் சுவர்கள், தடுப்பு வேலிகள் மற்றும் சோதனைச் சாவடிகள் என்பன போன்ற தடைகளை எதிர்கொள்ளாமல் இலகுவாக தப்பிச் செல்லக்கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேற்படி கைதிகள் தப்பிக்கும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க சிறைச்சாலை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டோ அல்லது அரசியல் ரீதியாக அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டோ இருக்கலாம் என சந்தேகிக்கப்பதடுகிறது.
இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு பராஹ் மாகாணத்திலுள்ள சிறைச்சாலை யொன்றிலிருந்து தோண்டப்பட்ட சுரங்கப் பாதையொன்றினூடாக 12 கைதிகள் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக