ஜூலை 15, 2011

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன?   (ஆக்கம்-1)

ஆக்கம்: முஹம்மது ஃபெரோஸ்கான்
சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல.

ஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். ஊடகத்தின் அடிப்படை நியதிகளை விட்டு விலகி, செய்திகளைத் திரித்தும் மறைத்தும் கூறும் சமகால ஊடகத்தைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி
ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர். அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில், ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம். சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.

அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு, தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும் நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு, 18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப் படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.

ஊடகங்களின் பணி
பத்திரிகையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொன்மையான அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள Society of Professional Journalistயின் கூற்றுப்படி, ஒரு செய்தி என்பது 5 W’s கொண்டதாக இருக்க வேண்டும் (Who, What, When, Where & Why - யாரைக் குறித்து?, எதைக் குறித்து?, எப்போது?, எங்கே?, ஏன்?). அதுபோல செய்தியாளர் என்பவர், "எந்தப் பக்கச் சார்புமில்லாமல், தன் மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாக, உள்ளது உள்ளபடி கொடுப்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி" எனக் குறிப்பிடுகிறது. இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று கூறுகிறது. "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை
Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன. அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism). குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே. முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!

எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு, குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை. விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.

டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை, அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்! பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை. அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..

இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை, நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன. அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம். எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள், முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.
தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை
அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன. புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம். அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது, அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது, எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது, போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள், "தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு. அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது, அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல், இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம். இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

தீர்வு - ஊடகங்களில் புகுதல்
வேண்டும், வேண்டும், ஊடகங்கள் வேண்டும்!ஊடகங்களின் திரித்தலும் மறைத்தலும் ஒழிய வேண்டுமெனில், முதல்படியாக அந்த ஊடகங்களில் புகுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலை, அதிகச் சம்பளம் இவற்றையெல்லாம் தியாகம் செய்து விட்டு, பத்திரிகையியலைப் படிக்க முன்வர வேண்டும். ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தஞ்சாவூரில் RDB கல்லூரியில் பத்திரிகையியல் பட்டப்படிப்பை ஆரம்பித்தபோது மாணவர்களின் பதிவின்மையால் அதே ஆண்டு அந்தத்துறை நீக்கப் பட்டது.

உண்மையிலேயே நாம் பொதுவான செய்தி ஊடகங்களில் புகும்போது நம்மால் ஓரளவாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுபோல் இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை அகற்றும் பொருட்டு, முன்னர் தினமணி முதல் பக்கத்தில் IFT அக்கால சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வியலுக்கு ஏற்ற குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை வெளியிட்டதுபோல் வெளியிட மீள்முயற்சி எடுக்கலாம். காவிரிப் பிரச்சினை, பொருளாதர நெருக்கடி, வகுப்புக் கலவரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஊடகங்களில் அப்பிரச்னை குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்கலாம். தொலைக்காட்சிகளில் அனைவரையும் சென்றடையும் வகையில் விஜய் டி.வியின் "நீயா? நானா?" போன்று பொதுவான தலைப்புகளில் விவாத அரங்குகளை அனைத்து மதச் சகோதரர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயத்தில் எக்காரணம் கொண்டும் தற்போது நடப்பில் உள்ளது போன்று தொலைக்காட்சிகளில் சகோதர முஸ்லிம் அமைப்புகளைக் குறித்தும் தலைவர்களைக் குறித்தும் வசைபாட ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சிகளில் ஓரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சேனல்களில் நம் நிகழ்ச்சிகள் வராமல் நமக்குள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப முயற்சி செய்ய வேண்டும்.

நம் செய்திகள் எல்லோருக்கும் சேரல்
இஸ்லாமியப் பத்திரிகைகள் கிட்டத்தட்ட 40க்கும் மேல் வெளிவருகின்றன. ஆனால் சென்னையில்கூட மண்ணடி போன்ற ஒரு சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் அவை கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிறு நகரங்களில் அந்த அமைப்பின் சார்பாளர் ஒருவர் வீட்டில் மட்டுமே அந்தப் பத்திரிகை கிடைக்கும். சாதாரணமாக, குறைந்த அளவில் வெளியாகும் 'புதிய ஜனநாயகம்' போன்ற கொள்கை இதழ்கள்கூட அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். அதன் பிரதிநிதிகள் பேருந்துகளில்கூட அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால்கூட வெட்கப்படாமல் அதை விற்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் சமூகத்திற்கே நம் பத்திரிகைகள் சேர்வதில்லை. லேபிள் ஓட்டாமல் மருந்து விற்பது என்பதுபோல் கலர் காட்டாமல் நமக்குப் பத்திரிகை நடத்தத் தெரியவில்லை. ஒரு சில இதழ்களைத் தவிர வேறு எதையும் நாம் பிறமதச் சகோதரர்களுக்கு வாங்கிக் கொடுக்க இயலாது. நம்மிடத்தில் இல்லாத, நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய Professionalism அதற்கான பெருங்குறை எனலாம். தமிழ் இஸ்லாமிய இதழ்களில் ஒன்றைத் தவிர வேறு எப்பத்திரிகையிலும் இதழியல் படித்தவர்கள் பொறுப்பில் இல்லாதது இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

செய்தி நிறுவனங்களை உருவாக்கல்
நாம் நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்த வேண்டிய திட்டம் செய்தி நிறுவனங்கள் உருவாக்கம் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், செய்தி நிறுவனங்கள்தாம் ஊடகங்களின் செய்திகளுக்குக் கருவாக இருக்கின்றன. இது கடினமான பணி என்றாலும் அடிப்படையான பணி என்பதை மறுக்க முடியாது. AP, PTI போன்ற செய்தி நிறுவனங்கள்தாம் ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரே நாளில் 3000க்கும் அதிகமானோர் பலியான செய்தி, உலகத்தின் பட்டி-தொட்டி எங்கும் பரவி, இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள்வரை நினைவில் பதிக்கப் பட்டதற்கு அடிப்படையாகத் திகழ்பவை செய்தி நிறுவனங்களாகும். ஆனால், ஆப்பிரிக்காவில் தினந்தோறும் கொள்ளை நோய்களின் மூலம் 3000 பேர்கள் கொல்லப்படும் தகவல், அதே செய்தி நிறுவனங்களால் அலட்சியப் படுத்தப் படுவதால், ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. இப்படியாக ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில் செய்தி நிறுவனத்தின் பணி முக்கியமானது.

நடுநிலை ஊடகங்களை ஏற்படுத்தல்
இன்று முஸ்லிம் சமுதாயத்தின் கட்டாயத் தேவைகளுள் தலையாயது நமக்கென்று நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள். ஆனால் அவை ஒரு முஸ்லிம் பத்திரிகையாக அல்லாமல், மற்ற பத்திரிகைகளைப் போலல்லாமல் கேரளாவின் மாத்யமம் போன்று பொதுவான நடுநிலை நாளிதழாக நடத்த முயற்சி செய்ய வேண்டும். நடுநிலையோடு செய்திகளை வெளியிடும்போது அனைத்துத் தரப்பினரையும் சென்று செய்திகள் சேரும். அதுபோல் தெஹல்கா போன்ற வார இதழ்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் உள்ள செல்வந்தர்கள்கூட தெஹல்கா போன்ற இதழ்களை அவர்களைக் கொண்டே தமிழில் வெளியிட முயற்சி செய்யலாம். சத்தியத்திற்காகப் போராடக் கூடிய, குஜராத் உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொணர்ந்த தெஹல்கா போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, அவர்களுக்குக் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக உதவலாம். ஒரு அல்-ஜஸீராவும் அல்-அரபியாவும் PEACEம் தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம். நம்மால் உடனடியாகத் தொலைக்காட்சி கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சிரமம் என்றாலும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து அல்லது பிறமத நடுநிலையாளர்களோடு இணைந்து ஒன்றை ஏற்படுத்தலாம். வெறுமனே பிராசாரம் என்றில்லாமல் செய்திகள், விவாதங்கள், குறும்படங்கள் என இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நடத்தினால் வெற்றி பெறுவது சாத்தியமானதே.

முடிவுரை
முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு, பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல், தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல், செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல், பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும். சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.

நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.


வாருங்கள் இளைஞர்களே!  ஓரணியில் ஒன்று திரள்வோம்

சத்தியத்தை உணர்ந்தால்  தியாகங்கள் எளிதாகும்

உணர்ந்த சத்தியத்தை பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்

அநீதிகளை, அக்கிரமங்களை  வேரோடு அழித்தொழிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக