மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்
ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். இலங்கை அரசு, சிம்பாம்வே நாட்டு ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இருந்து தொன் கணக்கில் ஷெல்களை வாங்கியிருந்தது. நெடுந்தூரம் வீசக் கூடிய ஆர்ட்டிலெறி ஷெல்கள், நடந்து கொண்டிருந்த போருக்கு இன்றியமையாததாக இருந்தது. சிம்பாப்வேக்கு கடல் எல்லை கிடையாது. அதனால் அருகில் உள்ளக் மொசாம்பிக் நாட்டு துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டன. ஆயுதங்களுடன் புறப்பட்ட கப்பல் சில நாட்களின் பின்னர் மாயமாக மறைந்தது. "பெர்முடா மர்மம்" போல உலகை வியப்பில் ஆழ்த்திய "மாயக் கப்பல்" உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என்ற தகவல், சில நாட்களுக்கு பின்னர் தெரிய வந்தது. சிறி லங்கா அரசு ஆயுதம் வாங்க பணம் கொடுத்த இஸ்ரேலிய ஆயுத வியாபாரி, பின்னர் புலிகளிடம் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு விற்பனை விபரங்களை கொடுத்திருக்கிறான். மிகக் கச்சிதமாக நடந்து முடிந்த அந்த ஆயுதக் கடத்தல் நாடகம் ஒரு உண்மையை தெளிவு படுத்தியது. ஆயுதங்கள் யார் கைக்கு போகின்றது என்பது ஆயுத வியாபாரிகளுக்கு தேவையில்லாத சமாச்சாரம். அவர்களைப் பொறுத்த வரை, ஆயுதம் என்பது ஒரு விற்பனைப் பண்டம். சரக்கை விற்று லாபம் சம்பாதிப்பது மட்டுமே அவர்கள் நோக்கம். நாய் விற்ற காசு குரைக்கவா போகின்றது?


உலகப்போருக்கு பின்னர் தோன்றிய "பனிப்போர்" என்ற கெடுபிடிப்போர் அமெரிக்க ஆயுத விற்பனையை மேலும் அதிகரிக்கவே செய்தது. மாஷல் உதவி என்ற பெயரில் கோடிக்கணக்கான டாலர்கள் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகித்த நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் ஒரு தொகை மாஷல் நிதி அமெரிக்காவுக்கே திரும்பிச் சென்றது. இதைவிட புதிதாக தோன்றிய ஐரோப்பிய ஆயுதத் தொழிற்சாலைகள் அமெரிக்க ஆயுதங்களுக்கான பகுதிகளை உற்பத்தி செய்து வழங்கின. அவ்வாறு ஆரம்பித்த அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய கொள்கை, அண்மைய நிதி நெருக்கடிக்குள்ளும் இழுத்து விட்டது.



ஆப்பிரிக்காவை காலனிப்படுத்த ஆயுதங்கள் பெரிதும் உதவின. ஐரோப்பாவில் இருந்து சென்ற கப்பல்களில் ஆயுதங்கள் சரக்குகளாக ஏற்றப்பட்டன. ஐரோப்பியருடன் நட்புறவு கொண்ட ஆப்பிரிக்க இனக்குழுக்களுடன் பண்டமாற்று செய்து, அவர்கள் பிடித்துக் கொடுத்த அடிமைகளை வாங்கிச் சென்றார்கள். இவ்வாறு ஐரோப்பியரிடம் ஆயுதம் வாங்கி, பிற இனத்தவர்களை அடிமைகளாக பிடித்துக் கொடுத்தவர்களின் பேரப்பிள்ளைகள் இன்று பல ஆப்பிரிக்க அரசாங்கங்களில் வீற்றிருக்கின்றனர். காலனிய நாடுகள் "விடுதலை" பெற்ற போது, புதிய ஆட்சியாளர்கள் ஐரோப்பியர் விட்டுச் சென்ற ஆயுதங்களையும் வரதட்சணையாக பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் எல்லாம் காலனிய எஜமானனுக்கு பிடித்தமான ஆட்சியாளர்கள். விரும்பத்தகாத சக்திகள் ஆட்சியை கைப்பற்றிய போது மாத்திரம், கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. சுருக்கமாக, முன்னாள் காலனிய நாடுகளில் ஆயுதங்கள் யார் கைகளில் இருக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.
ஏகாதிபத்திய விசுவாசிகளாக ஞானஸ்நானம் பெற்ற உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஒரு வேளை தேசாபிமானம் காரணமாக முரண்பட்டால் என்ன செய்வது? அதற்கும் இருக்கிறது வழி. ஆட்சியாளருடன் விரோதம் கொண்ட எதிராளியை தேடிப்பிடித்து, வேண்டியளவு ஆயுதங்களை இலவசமாகவோ, கடனாகவோ கொடுத்து விட வேண்டும். திடீர் சதிப்புரட்சிகள், அல்லது ஆயுதப்போராட்டம் மூலம் எதிராளிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள். ஐவரி கோஸ்ட், சியாரா லியோன், லைபீரியா போர்கள் அண்மைய உதாரணங்கள். அநேகமாக எல்லா பிரெஞ்சு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகள் எங்கும், பிரான்ஸ் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளை ஊக்குவித்தது. உள்ளூர் யுத்த பிரபுக்கள், வாங்கிய ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, தம்நாட்டு இயற்கை வளங்களை விலை பேசுவார்கள். மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் போர் என்றால் ஆயுத சந்தைக் காட்டில் மழை தான். சில வேளை, மனித உரிமை மீறல் காரணம் காட்டி ஐ.நா. மன்றம் ஆயுதம் விற்கத்தடை போடலாம். அப்போதெல்லாம் இடைத்தரகர்கள் களத்தில் தோன்றுவார்கள்.
ஆயுதங்கள் விற்கும் இடைத் தரகர்கள் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட கம்பனிகளின் தலைமை நிர்வாகிகள். கவர்ச்சிகரமான பெயர்களுடன் சர்வதேச நகரங்களின் வணிக மையங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளனர். சாதாரண வர்த்தக ஸ்தாபனம் போல காட்சி தரும் கட்டிடங்களில் கொலைக்கருவிகளை விற்பதற்கான பேரம் பேசப்படும். வாடிக்கையாளர்கள் ஆப்பிரிக்காவில் இருந்தாலும், ஆசியாவில் இருந்தாலும், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள தலைமையகம் தான் சரக்கை அனுப்புவதற்கு இறுதி முடிவை எடுக்கும். அதன் அர்த்தம் சரக்கு(ஆயுதங்கள்) அமெரிக்க தயாரிப்பு என்பதல்ல. வாடிக்கையாளர்கள் கேட்கும் விலைக்கேற்ப ஆயுதங்கள் கையிருப்பில் உண்டு. மலிவு விலை கலாஷ்னிகோவ் துப்பாக்கி தேவைப்படுவோருக்கு, உக்ரையினில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் எதுவும் சாத்தியம்.

ஆயுத உற்பத்தி ஜாம்பவானான அமெரிக்காவும் இலகுரக ஆயுதங்களை தயாரித்துள்ளது. M-16 என்ற ரைபிள், ஏ.கே.47 வகையை சேர்ந்தது. இருப்பினும் அவை குளிர் வலைய நாடுகளுக்கே உகந்தது என்று கூறி, அமெரிக்காவின் கூட்டாளிகளே நிராகரித்து விட்டனர். மேற்குலகம் தடைசெய்ய விரும்பும் சிறு ஆயுதங்களில் இன்னொன்று ஆர்.பி.ஜி. ரொக்கட் லோஞ்சர்கள். வாகனங்களை, கட்டிடங்களை தகர்க்கக் கூடிய இலகுரக ஆயுதம். நோஞ்சானான ஒருவர் கூட சுலபமாக காவிச் சென்று இயக்கலாம். அது கூட ரஷ்ய கண்டுபிடிப்பு தான். புஜபலமுள்ள இரண்டு பேர் தூக்க வேண்டிய அமெரிக்காவின் பசூக்கா ரக ஆயுதத்தை விட சிறந்தது என்பதால் சந்தை சூடு பிடித்தது. மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் எல்லாம் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அறுபது வருடங்களைக் கடந்த பின்னரும் சந்தையில் அவற்றிக்கு கேள்வி அதிகம்.
ஆர்.பி.ஜி. மேற்குலகில் "தாங்கி எதிர்ப்பு ஆயுதம்" என்றும் அழைக்கப்படுகின்றது. நிலக்கண்ணி வெடியிலும் அசையாத தாங்கிகளை தூரத்தில் இருந்து ஏவப்படும் ஆர்.பி.ஜி. ராக்கெட்கள் தகர்த்து விடுகின்றன. சமீபத்திய ரஷ்ய தயாரிப்பான ஆர்.பி.ஜி. 29 , ஈராக்கிய போராளிகளால் வெற்றிகரமாக பாவிக்கப்பட்டன. பாதுகாப்பானது என கருதப்பட்ட அமெரிக்க நவீன கவச வாகனங்களை ஆர்.பி.ஜி. குண்டுகள் தகர்த்தன. லெபனானில் ஹிஸ்புல்லா என்ற கெரில்லா இயக்கம், மாட்சிமை தங்கிய இஸ்ரேலிய இராணுவத்தை ஆர்.பி.ஜி. துணையுடன் அடித்து விரட்டியது. இதனால் உலகில் அதி நவீன ஆயுதங்களை வைத்திருப்பதால், எவராலும் எதிர்க்க முடியாது என இறுமாப்புக் கொண்டிருந்த அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிப்போயின. ரஷ்யாவில் ஆர்.பி.ஜி. உற்ப்பத்தி செய்யும் நிறுவனம் மீது மறைமுக அழுத்தங்களைக் கொடுத்தன. ரஷ்ய மொழியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்கள் இதற்கென அனுப்பி வைக்கப்பட்டனர். ரஷ்ய ஜனாதிபதி மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதில் பல தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல வளர்ந்த நாடுகளிலேயே இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்துறைப் புரட்சியின் பக்க விளைவு அது. நவீன ஆயுதங்களை வடிவமைக்க பல விஞ்ஞானிகளின் மூளை பயன்படுகின்றது. அதிக தாக்குதிறன் வாய்ந்த கருவிகள் பல புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு மெருகூட்டப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வகை ஆயுதத்தை ஒரே நிறுவனம் தயாரிப்பதாக நினைப்பது தவறு. உதாரணமாக ஏவுகணையில் பொருத்தப்படும் ராடார் கருவி வேறொரு நட்பு நாட்டில் உள்ள "அப்பாவி" நிறுவனத்தால் தயாரிக்கப்படலாம். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சர்வதேச பங்குச்சந்தைகளில் சூடான பங்குகளை விற்றுக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய மேற்கத்திய வங்கிகள் பொது மக்களின் ஓய்வூதியக் கட்டுப் பணத்தை ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. எங்கோ ஒரு ஆப்பிரிக்க, ஆசிய நாட்டில் ஒன்றுமறியா மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடன் எந்தவித சம்பந்தமில்லாதது போல மேற்கத்திய வயோதிபர்கள் உல்லாசமாக வாழ வழி சமைத்துக் கொடுக்கப்படுகின்றது. ஆமாம், ஒருவர் துன்பத்தில் இன்னொருவர் இன்பம் காணும் விசித்திரமான உலகம் இது.
நிச்சயமாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஆயுத சந்தையில் குதித்துள்ளமை எதிர்பார்க்கக் கூடியது தான். பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், செக் குடியரசு, நோர்வே, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தான். எல்லோரும் அதிக லாபம் தரும் பண்டத்தை சந்தையில் விற்பதற்கு போட்டி போடுகின்றனர். ஆயுதங்களை விற்பது மேற்குறிப்பிட்ட தேசங்களின் அரசுகள் என அர்த்தப் படுத்திக் கொள்வது தவறானது. தாராளவாத பொருளாதாரக் கொள்கை அரச தலையீடற்ற வர்த்தகத்தை வேண்டி நிற்கின்றது. ஐ.நா. மன்றம் தடைச் சட்டம் போடும் போதெல்லாம், ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தடையை நீக்க சொல்லி தாம் சார்ந்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. வர்த்தக நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த நிறுவனங்கள், எந்த அரசியல் சார்புக் கொண்டனவல்ல. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் சீன நிறுவனமொன்று அரசுக்கும், புலிகளுக்கும் ஆயுதங்களை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
யுத்தங்களற்ற, ஆயுதங்களற்ற உலகத்தை கனவு காணும் சமாதான விரும்பிகள், மக்கள் மனதை மாற்றுவதன் மூலம் புதியதோர் உலகம் படைக்க எண்ணுகின்றனர். இத்தகைய சமாதான இயக்கங்களை அரசுகளும் நிதி கொடுத்து ஆதரிக்கின்றன. இவற்றிற்கு அரசு அளிக்கும் நிதியை விட, ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்கும் மானியம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சமாதான ஆர்வலர்கள் பின்பற்றும், இயேசுவின் தத்துவமான: "ஆட்சியாளர்கள், ஆளப்படுவோர் அனைவர் மனதிலும் அன்பை விதைத்து சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது" இன்று வரை தோல்வியை தான் தழுவியுள்ளது. அதற்கு காரணம் சர்வதேச மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் சிக்கலான பொருளாதாரம். நிச்சயமாக அதிக லாபம் தரும் ஆயுத உற்பத்தியில் முதலைப் போட்டு பணத்தை பெருக்க எந்த முதலீட்டாளர் தான் விரும்பமாட்டார்? வழக்கமாக தொழிலாளரின் உழைப்பை சுரண்டி, உபரி மதிப்பில் லாபம் காணுவது வணிக நிறுவனங்களின் வாடிக்கை. ஆயுத தொழிற்சாலைகள் அதற்கும் ஒரு படி மேலே சென்று, போரில் மக்களைக் கொல்வதின் மூலம் லாபம் பார்க்கின்றன. மனிதர்கள் மரணிப்பதால் தான் சவப்பெட்டி செய்பவனின் பிழைப்பு நடக்கின்றது. அதே போல உயிர்களைக் கொல்லும் ஆயுதங்களை விற்பதால், உலகின் ஒரு பகுதி சனத்தொகை வசதியாக வாழ்கின்றது. ஆயுதங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் மூலதனத் திரட்சி, உலகெங்கும் உள்ள நடுத்தர வர்க்கத்தினரது ஊதியத்தை உயர்த்தி வைத்துள்ளது. வெறும் அன்பினால் உலகை மாற்றலாம் எனக் கருதும் எத்தனை பேர் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தயாராக இருக்கிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக