நவம்பர் 03, 2011

கிழடு தட்டிய முதலாளித்துவம்!


முதலாளித்துவத்தின் கொடூரம்.


வட்டியும்,  ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.

எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?

தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.

அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.

மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.

முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.

முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.

ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.

இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.

செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.

தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.

வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.

ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.

செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.

இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
அமெரிக்காவின் வறுமை விகிதம் அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 46.2 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

செப்டம்பர் 13 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 15.1 சதவீதமாக வளர்ந்து விட்டது. 4 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 49445 டாலராகச் சுருங்கி விட்டது. 

இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.

இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.

'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன.

முத்தாய்ப்பாக, அனிதா சொல்லியுள்ள கருத்து தான் சரியான பஞ்ச். 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.
 
அமெரிக்காவின் வருமானப் பரம்பல்.

இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா மௌதூதி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் முராத்பூரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்'என்று சொல்லி இருந்தார்.
இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.

அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா? என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.
அமெரிக்காவின் இன்றைய நிலைமை

நன்றி 

முஃப்தி தகி உஸ்மானீ அவர்கள் உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை
ஐயமும் தெளிவும் - முஹம்மது குதுப்
சமரசம் 
CNN MONEY
WWW.CENSUS.GOV
WWW.HERITAGE.ORG

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக