ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்!
ஜெருசலேம்: 4 அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு பேராபத்து எழுந்திருப்பதாகவும் அது அச்சம் வெளியிட்டுள்ளது.
தற்போதைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கண் பார்வை ஈரான் மீது தீவிரமாக படிந்துள்ளது. எந்த வகையில் ஈரானை முடக்கலாம் என்று இரு நாடுகளும் ‘ரூம்’ போடாத குறையாக யோசித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஜெருசலேத்தில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய இஸ்ரேல் நாட்டு ராணுவ புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜெனரல் அவிவ் கொச்சாவி கூறுகையில்,
நான்கு அணுகுண்டுகளைத் தயாரிக்கத் தேவையான கதிர்வீச்சுப் பொருட்களை ஈரான் தன் வசம் வைத்துள்ளது. ஈரானிடம் தற்போது கிட்டத்தட்ட 100 கிலோ யுரேனியம் உள்ளது. இதில் 20சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். இதை வைத்து 4 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.
தனது அணு ஆயுத தயாரிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது ஈரான். அதன் அணு ஆயுத இருப்பை பலப்படுத்தி வருகிறது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
உத்தரவிடப்பட்ட ஒரு வருடத்தில் ஒரு அணு ஆயுதத்தை அவர்களால் தயாரிக்க முடியும். அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளனர்.
ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து இஸ்ரேலும் சர்வதேச நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற போதிலும் இதுவரை ஈரானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.
ஈரான் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம் என்றார்.
ஈரானிடம் நான்கு குண்டுகள் இருப்பதாக பீதி அடையும் இஸ்ரேல், மத்திய கிழக்கு ஆசியாவிலேயே அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ஒரே நாடாக திகழ்கிறது. இந்த நாட்டிடம் 100 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து இஸ்ரேல் இதுவரை வாயைத் திறந்ததே இல்லை. அதன் ஆதரவு கரமான அமெரிக்காவும் கூட இதுகுறித்துக் கவலைப்பட்டதே இல்லை.
கொச்சாவி மேலும் பேசுகையில், ஈரானின் தற்போது திட்டமாக இஸ்ரேல் மீது அணு ஆயுத்த தாக்குதல் நடத்துவதுதான்.தனது தாக்குதலை சிரியா, லெபனான் வழியாக நடத்த அது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ஈரானிலிருந்து கூட தாக்குதல் நடத்த அது திட்டமிட்டுவருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் பல முக்கிய நகரங்கள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் இருக்கிறது.இது எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக