பிப்ரவரி 29, 2012


அமெரிக்க ஜனாதிபதி தேர்ததலில் 

ரோம்னி வெற்றி பெறும் வாய்ப்பு!

அதிக வேலைவாய்ப்பு குறைந்த கடன் சுமை சிறிய - சிக்கனமான அரசு'' ஆகிய தாரக மந்திரங்களை முழங்கிவரும் மிட் ரோம்னி குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் வாய்ப்பைப் பெறுவார் என்று தெரிகிறது.

மிச்சிகன், அரிசோனா மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நடந்த கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் அதிகமான உறுப் பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்த முடிவு இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் வாக்குக் கணிப்புகள் அதை உறுதி செய்கின்றன.

வரும் மார்ச் 6-ம் தேதி மேலும் 10 மாநிலங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. அவற்றிலும் ரோம்னி தேர்வு செய்யப்பட்டால் அவரே அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங் களில் ஏற்பட்டுள்ளது.

மசாசுசெட்ஸ் மாநிலத்தின் கவர்னராகப் பணியாற்றியுள்ள மிட் ரோம்னி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை அணுகி வருகிறார். இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நம்புகிறார்.

நியூஹேம்ப்ஷைர், புளோரிடா, நெவாடா, மைன், மிச்சிகன், அரிசோனா ஆகிய மாநிலங்களில் இதுவரை அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து செனட்டர் ரிக் சான்டோரம், நியூட் கிங்ரிச், ரான்பெüல் ஆகியோர் போட்டியிட்டாலும் ரிக் சான்டோரம்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்குகள் பெற்று 2-வது இடத்துக்கு வருகிறார். ஆனால் அவரே களத்திலிருந்து விலகினாலும் வியப்பதற்கில்லை.

"கடந்த வாரத்தில் துணிச்சலான பொருளாதாரக் கொள்கையை வெளியிட்டேன். அது அமெரிக்கப் பொருளாதாரத்தை துடிப்போடு இயங்க வைக்கும். மிச்சிகனிலும் அரிசோனாவிலும் உள்ளவர்கள் மீண்டும் முழு அளவில் வேலைக்குப் போக முடியும். அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பைத் தரும். நம்முடைய கடன் சுமைகள் கணிசமாகக் குறையும். எங்களுடைய அரசு மிகவும் சிறியதாக - அதே சமயம் - வலுவானதாக, திறமை மிக்கதாகச் செயல்படும். சொன்னதையெல்லாம் செயல்படுத்துவோம்.

நம் நாட்டு நிர்வாகத்தில் சரியான தலைமை பதவி நாற்காலியில் உட்கார இதுவே சரியான நேரம். இது நாட்டுக்கே மிகவும் சோதனையான நேரம்,நேர்மையும் துணிச்சலும் உள்ள தலைவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும். எதுவானாலும் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசும் நெஞ்சுரம் உள்ளவர்கள் நாங்கள் (குடியரசுக் கட்சிக்காரர்கள்).

நம்முடைய பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல எங்களால்தான் முடியும். ஒரு நல்ல தலைமை அப்படித்தான் இருக்க முடியும் தலைவர் என்பவர் அப்படித்தான் செயல்பட வேண்டும். நான் நல்ல தலைவராக இருந்து நல்ல முறையில் நாட்டை வழிநடத்திச் செல்வேன்.

நாட்டின் அதிபர் பதவியில் இப்போது இருப்பவரை (பராக் ஒபாமா) வெளியேற் றுவதற்காக மட்டும் அல்ல இந்தத் தேர்தல். அமெரிக்காவின் நம்பிக்கைக்கு வாழ்வு கொடுப்பதற்காகத்தான் இந்தப் போட்டி.

எதிர்காலம் மிகவும் பிரகாசமாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றே அமெரிக்கர்கள் எப்போதும் நம்பி வந்துள்ளனர். வாய்ப்புகளுக்கான பூமி என்றே அமெரிக்கா அறியப்பட்டிருக்கிறது. அவை உண்மை என்பது உணரப்பட வேண்டும்' என்றார் ரோம்னி.

மசாசுசெட்ஸ் மாநில கவர்னராகப் பதவி வகித்த ரோம்னி நிர்வாக அனுபவமும் உள்ளவர். எனவே கட்சிக்காரர்கள் மட்டும் அல்லாது மக்களாலும் விரும்பப் படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக