செனகல்: தேர்தலும் மக்களின் உணர்வலைகளும்
செனகல் குடியரசு
பரப்பு: 197,000 சதுர கி.மீ.
தலைநகர்: தக்கார்
உத்தியோகபூர்வ மொழி: பிரெஞ்சு
சனத்தொகை: முஸ்லிம்கள் 95%
பிரதான கட்சிகள்: சோசலிஸத்துக்கும் ஜனநாயகத்திற்குமான ஆபிரிக்கக் கட்சி, செனகல் ஜனநாயகக் கட்சி
எல்லைகள்: மேற்கில் அத்திலாந்திக் சமுத்திரம், கிழக்கில் மாலி, வடக்கில் மொரிட்டானி, தெற்கில் கினியா, கினியா பெஸோ
சமீபத்தில் செனகலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கிசால் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹி வாதி தோல்வியடைந்துள்ளார். மக்கியின் ஜனாதிபதிப் பிரவேசம் செனகல் மக்களிடையே பாரிய நம்பிக்கை அலைகளை எழுப்பியுள்ளது.
முன்னாள் ஆட்சியாளர் வாதி மூன்றாம் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி தோல்வி கண்டுள்ளார். இரண்டு முறை பதவி வகித்துள்ள அவர், மூன்றாம் முறை தேர்தலில் குதித்தமை அந்நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என அவதானிகள் கருதுகின்றனர். தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறைகளும் அசம்பாவிதங்களும் தேர்தலின் வெளிப்படைத் தன்மை மற்றும் தேர்தலுக்குப் பிந்திய நிலமைகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன.
எவ்வாறாயினும், தேர்தலுக்குப் பிந்திய மக்களின் உணர்வலைகள் ஜனநாயக மாற்றங்களுக்குச் சார்பானதாக அமைந்துள்ளது. வாதி தோல்வியடையும் பட்சத்தில் அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற மாட்டார் என்றே மக்கள் கருதினர். எனினும், மக்கி சாலுக்கு தொலைபேசி வழியாக அவர் வாழ்த்துத் தெரிவித்தமை செனகலின் எதிர்கால அரசியல் ஸ்திரப்பாட்டுக்கான அடையாளமாக மக்களால் பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற நெருக்கடிகளை மக்கிசால் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதே பலரதும் கேள்வியாக உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் செனகலில் ஜனநாயக நிறுவனங்கள் வலுவாக தொழிற்படுவதாக அறியப்படுகின்றது.
மேற்கு ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளுள் ஒன்றான செனகலின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் உல்லாசத் துறையிலேயே தங்கியுள்ளது. வெளிநாட்டில் வாழும் செனகல் மக்கள் அனுப்பும் தொகை அந்நாட்டின் அந்நியச் செலாவணியில் முக்கிய இடம் வகிக்கின்றது. தெற்கில் ஒரு சிறு பிரிவினைவாதக் குழு செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இரு அவைகளைக் கொண்ட செனகல் பாராளுமன்றத்தில் 120 ஆசனங்கள் உள்ளன. 80 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் செயற்படும் அந்நாட்டில், அரசியல் பன்மைத்துவமும் ஜனநாயக விழுமியங்களும் ஓரளவு பேணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
தெற்கில் கஸாமென்ஸ் பகுதி யில் ஒரு குறிப்பிட்ட கோத்திரம் நாட்டின் பெரும்பான்மை மக் களை உள்ளடக்கிய வொலொப் கோத்திரத்தாரால் புறக்கணிக்கப் பட்டு வருவதாக தெரிவித்து பிரி வினைவாதப் போரில் இறங்கி யுள்ளபோதும் அதனுடனான சமாதான முயற்சிகள் வெற்றி யளித்துள்ளதாக அரசாங்கம் கூறு கின்றது.
8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுகளில் பேபர்கள் மூலம் செனகலில் இஸ்லாம் அறிமுகமானது. அப்பாஸியர் ஆட்சிக் காலத்தில் முராபிதூன்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. செனகலிலும் பிற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் இஸ்லாம் பரவுவதற்கு முராபிதூன்கள் பெரும் பங்களித்துள்ளனர். செனகலின் பிரதான கோத்திரமான வொலொப் 9 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்குள் இஸ்லாத்தைத் தழுவினர். அதனால் செனகலின் பெரும் பகுதி மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
9 ஆம் நூற்றாண்டில் செனகல் தக்ரூம் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவும் 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் ஜோலை சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவும் விளங்கிய செனகல், 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. பின்னர் நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆபிரிக்க-ஐரோப்பிய அடிமை வியாபாரத்தின் கேந்திரத் தளமாக செனகலைப் பயன்படுத்தி வந்தன.
19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த செனகல், 1960 இல் அரசியல் சுதந்திரம் பெற்றது. முத்து, தங்கம் என்பவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கிய செனகல்,காலனித்துவத்தின் முடிவில் அவ்வளங்களை முற்றாக இழந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னர் லியபோல்ட் செங்கோர் ஜனாதிபதியானார். 1980 இல் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தான் அதிகாரத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், ஜனாதிபதிப் பதவியை அப்து துயூபிடம் கையளித்தார். 1960 முதல் 2000 வரை 40 ஆண்டு காலம் சோசலிஸ கட்சியே செனகலில் ஆட்சியில் இருந்தது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, நான்கு தசாப்த சோசலிஸ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனநாயகமும் நடைமுறைக்கு வந்தது.
2000 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அப்துல்லாஹி வாதி, தனது 85 ஆவது வயதில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில் பிரிவினைவாத இயக்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்தன. எனினும்,வன்முறைகளுக்கு முடிவு கட்டிய வாதி, பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணவில்லை என்ற குற்றச்சாட்டு செனகல் மக்களிடையே எழுந்தது.
ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான பொம்மை ஒன்று அதிகாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், செனகலின் முன்னாள் காலனித்துவ நாடான பிரான்ஸின் ஜனாதிபதி சார்கோஸி உள்ளிட்ட பிரிட்டன், அமெரிக்கத் தலைவர்கள் மக்கியை ஜனநாயகத் தலைவர் என்று வர்ணித்துள்ளதோடு, செனகலின் ஜனநாயக ஆட்சிக்குத் தாம் ஆதரவளிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
ஏகாதிபத்திய அரசுகள் இவ்வாறு ஜனநாயகம் என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சர்வதிகாரிகளை வளர்த்து விட்டுள்ளனர். அதுபோன்ற அனுபவம் செனகலில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதே செனகல் மக்களின் எதிர்பார்ப்பாகும். 95 வீத முஸ்லிம்களைக் கொண்ட செனகலில் சூபித் தரீக்காக்களும் சமூக செல்வாக்குடன் செயல்படுகின்றன. அவற்றுக்கென்று சில அரசியல் கட்சிகளும் உள்ளன.
தற்போது வெற்றி பெற்றுள்ள மக்கி நாட்டை எவ்வாறு முன் கொண்டு செல்லப் போகின்றார் என்பதையே மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் புதிய ஜனாதிபதி நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் என அலி பாரி எனும் அரசியல் அவதானி கூறுகின்றார். செனகல் மக்களுக்கு பயனுள்ள கொள்கைகளை வகுத்துச் செயற்படுத்துவதே அவருக்கு முன்னாலுள்ள சவால் எனவும் அவர் கூறுகின்றார்.
நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கலாச்சார செழுமையையும் கொண்ட செனகல், அதன் இஸ்லாமிய தனித்துவத்தோடு, பொருளாதார அபிவிருத்தியையும் அரசியல் ஸ்திரப்பாட்டையும் நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக அந்நாட்டின் இஸ்லாமிய துறைசார்ந்தோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக