ஏப்ரல் 05, 2012


இந்தியா, பிரபாகரனை ஏன் கொல்லவோ, சிறைப்படுத்தவோ இல்லை


முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி எழுதி வெளியிட்டுள்ள புத்தகம், இந்திய – இலங்கை விவகாரத்தில்    வித்தியாசமாக இரு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.   இந்தியா, இலங்கையில் இருந்து சீனாவை  வெளியேற்றுவது  மிக அவசியமானதும், அவசரமானதுமான  காரியம் என்று குறிப்பிடுவது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
ராஜிவ்  காந்தி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது மற்றொரு புறமாக சர்ச்சையை கிளப்புகிறது.
ராஜீவ் காந்தி விவகாரத்தில் இந்தியா என்ன செய்திருக்கலாம் என்று சொல்கிறார்?

“ராஜிவ் காந்தி ஒரு வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தால் கொல்லப்பட்டது இந்தியாவின் மதிப்பை வெகுவாக குறைத்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின் இந்திய படைகள் மீண்டும் இலங்கைக்குச் சென்று, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். அல்லது அங்கேயே கொன்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார் இந்த முன்னாள் ராஜதந்திரி.
வில்லியம் அவெரி என்ற இந்த முன்னாள் ராஜதந்திரி, 1990-களில் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், சென்னைக்கு அருகே வைத்து ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.
“இவர் குறிப்பிடுவது, நடந்திருக்க கூடிய விஷயம்தானா?” என்று சிலர் யோசிக்கலாம். 1990களில் இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் பிரபாகரன் இருந்தார். அவரை எப்படி இந்தியப் படைகளால் அணுகியிருக்க முடியும் என்றுகூட யோசிக்கலாம்.
ஆனால், அப்படியொரு திட்டம் அந்த நாட்களில், இந்திய ராஜதந்திர சர்க்கிளில் ஒரு பகுதியினரிடம் நிஜமாகவே இருந்தது என்பது பலருக்கு தெரியாது.
ராஜிவ் காந்தி கொலையை அடுத்து, வெளியே பெரிதாக அறியப்படாத சில ராஜதந்திர நிகழ்வுகள் நடந்தன. அதில் ஒன்று, இந்தியப் படைகளை அங்கே மீண்டும் அனுப்புவது. புதுடில்லியில் உள்ள ஒரு குரூப் இதற்காக பலமாக லாபி செய்தது. அதற்கு அமெரிக்க ஆதரவும் இருந்தது என்று அப்போது ஒரு பேச்சு அடிபட்டது.
ஆனால், அப்போதைய மத்திய அரசு, அந்த திட்டத்தில் இறங்க விரும்பியிருக்கவில்லை. ஆச்சரியகரமாக, அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சிதான்.
இந்த பின்னணியில்தான், அந்தக் காலகட்டத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த வில்லியம் அவெரி, பிரபாகரனை இந்தியா கொன்றிருக்க வேண்டும், அல்லது கைது செய்திருக்க வேண்டும் என்று இப்போது எழுதியிருக்க வேண்டும்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பிரபாகரன், பொட்டு அம்மான் (விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவின் தலைவராக இருந்தவர்) ஆகிய இருவருக்கும் அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது, அது ஏதோ ஒரு  பார்மாலிடி என்று நினைத்தவர்களே அதிகம். ஆனால், அப்படியொரு வாரன்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக டில்லியில் ஒரு குரூப் தீவிரமாக வேலை செய்தது.
அந்த சட்டரீதியான டாக்குமென்டை வைத்து,    சர்வதேச கோர்ட் மூலம் இந்தியா இலங்கைக்குள் வருவது என்ற ரீதியில் அந்த குரூப்பின் முயற்சி இருந்தது. இதற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் என்றுகூட உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்தத திட்டம் பாதியில் இழுத்து நிறுத்தப்பட்டது. அதை நிறுத்திய மத்திய அரசு, இலங்கை விவகாரத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது என்ற முடிவை எடுத்தது.
காங்கிரஸ் அரசில் செல்வாக்காக இருந்த தமிழக எம்.பி. (காங்கிரஸ்) ஒருவர், இலங்கை விவகாரத்தில் இருந்து இந்தியா ஒதுங்கி நிற்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இந்த விவகாரத்தின் என்ஸ்டென்ஷன்தான், தற்போது வில்லியம் அவெரியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கருத்து. இவர் இப்போது எழுதியுள்ள அதே கருத்தைதான், 1990-களில் இந்திய பாலிஸி மேக்கிங்கில் இருந்த ஒரு குரூப் சொல்லி லாபி பண்ணிக் கொண்டிருந்தது.
வில்லியம் அவெரியின் புத்தகத்தில் (China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power என்பது புத்தகத்தின் பெயர்) எழுதப்பட்டுள்ளதை பாருங்கள்:
“ராஜிவ் காந்தியின் கொலை, இந்தியாவின் ரீஜனல் பவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். ராஜிவ் கொல்லப்பட்டபின், இந்தியா பிரபாகரனை தேடிச்சென்று கொன்றிருந்தாலோ, கைது செய்திருந்தாலோ, அதன் மூலம் தெளிவான மெசேஜ் ஒன்றை இந்தியா கொடுத்திருக்கும். இந்தியா, தமது தலைவர்களை கொன்றவர்களை சும்மா விட்டுவிடாது என்ற மெசேஜ், தென் ஆசியாவுக்கும், ஏன், உலகத்துக்குமே கொடுக்கப்பட்டிருக்கும். அது, தென் ஆசியாவின் அசைக்க முடியாத சக்தி இந்தியாதான் என்ற இமேஜை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பயந்துபோன இந்தியா, அந்த முயற்சியில் இறங்கவில்லை”
இப்போது விடுதலைப் புலிகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டார்கள். இந்தியா செய்ய வேண்டியது, சீனாவின் செல்வாக்கை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார் இந்த முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி.
சீனா, இலங்கையில் நன்றாகவே கால் பதித்து விட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனா அமைப்பதை இந்தியா ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது என்றும் அவரது புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
“தமது நாட்டு தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை இந்தியா ஏன் கொல்லவோ, கைது செய்யவோ இல்லை?” என்ற கேள்விக்கு, இந்த முன்னாள் அமெரிக்க ராஜதந்திரியின் புத்தகத்தில் உள்ள பதில், “A frightened India became content with being a passive regional power, rather than active global power!”
ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனையோ, அவரது இயக்கத்தையோ இந்தியா உடனடியாக ஏதும் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் பல ஆண்டுகளின் பின், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதி யுத்தத்தில், இந்தியா இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தது. பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் அழிக்கப்படுவதை உறுதி செய்து கொண்டது.
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். 18 ஆண்டுகளின்பின் அதே மே மாதத்தில், ராஜிவ் காந்தியின் நினைவு தினத்துக்கு 2 நாட்களுக்கு முன், விடுதலைப்புலிகள் இயக்கத்தை யுத்தத்தில் வெற்றி கொண்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்போ, புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற அறிவிப்போ, ராஜிவ் காந்தியின் நினைவு தினமான 2009, மே 21-ம் தேதி வெளியாக வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இன்றும் சொல்கிறார்கள். அந்த நாள் கணக்கு, சில தினங்களால் தவறிப் போனது.
இந்தியா தனது கணக்கை தீர்த்துக் கொண்டதா? ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு பதில் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக