ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா; அலுத்துப்போன கர்சாய் .
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு தசாப்தகாலமாக அமெரிக்கத் துருப்புக்கள் சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காபூலுக்கு வந்திருந்த போது அமெரிக்கத் துருப்புக்கள் தனக்காகச் சண்டையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கர்சாய் கேட்டிருக்கிறார். சகல பாதுகாப்புப் பொறுப்புக்களையும் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் இப்பொழுது தயாராகியிருக்கிறது என்றும் அவர் அறிக்கைவிடுத்திருக்கிறார்.
கர்சாய் கூறுவதைப் போன்று ஆப்கானிஸ்தான் அதன்
முழுப் பாதுகாப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை என்ற போதிலும் அவ்வாறு கூறுவதற்கு அவர் ஏன் முன்வந்தார்? அமெரிக்க இராணுவத்தினர் இழைக்கின்ற தவறுகளினால் ஆத்திரமடைந்த நிலையிலேயே அவரிடமிருந்து இத்தகைய ஆத்திரக் குறிப்பொன்று வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.பத்து நாட்களுக்கு முன்னர் அமெரிக்க இராணுவ சார்ஜன்ட் ஒருவர் ஆப்கான் குடிமக்கள் 16 பேரை கொடூரமாகக் கொலை செய்த நிகழ்வுக்குப் பிறகு ஆப்கான் ஜனாதிபதி பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டார். இதை அவர் வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார். அந்தக் குடிமக்கள் படுகொலைச் சம்பவத்தை அமெரிக்க இராணுவம் கையாளுகின்ற முறையினால் கர்சாய் மேலும் கொதிப்படைந்துவிட்டார்.
ஆனால், அவர் அமெரிக்கர்களைக் கர்ணகடூரமாகத் தாக்கிப் பேசவில்லை. அமெரிக்கர்களது நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதில் தனக்கிருக்கும் இயலாமையினால் அவர் விரக்தியடைந்திருக்கிறார். கர்சாயின் அரசியல் அதிகார இருப்புக்கு அமெரிக்கர்களது பணமும் இராணுவ பலமும் அத்தியாவசியமானவை என்பதில் சந்தேகமில்லை. சுமார் ஒரு தசாப்த காலமாக நாட்டை ஆட்சி செய்து வரும் ஒரு தலைவர் வளர்த்துக்கொண்டிருக்கும் பக்குவத்தினதும் முதிர்ச்சியினதும் வெளிப்பாடுகளாகவே அவரின் பிரதிபலிப்புக்களை நோக்க வேண்டியிருக்கிறது.
எனவே உண்மையில், கர்சாய் என்ன நினைக்கிறார்? எப்போது பேசுகிறார்? அவர் சொல்வதில் எதை அமெரிக்கா கேட்க வேண்டும்?
எனவே உண்மையில், கர்சாய் என்ன நினைக்கிறார்? எப்போது பேசுகிறார்? அவர் சொல்வதில் எதை அமெரிக்கா கேட்க வேண்டும்?
கடந்த ஒரு மாதகமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பிரசன்னம் தொடர்பில் கர்சாயின் தற்போதைய பல உதவியாளர்களிடமும் முன்னாள் உதவியாளர்களிடமும் கருத்துக்களை அறிவதற்காக பேச்சுக்கொடுத்தேன். அமெரிக்காவின் அணுகுமுறைக்கு அடிப்படையில் எதிர்ப்பை வெளிக்காட்டுகின்ற அரசியல் நம்பிக்கைகளையும் ஆளுமையையும் கொண்ட ஒரு ஜனாதிபதியாக கார்சாயை அவர்கள் வர்ணிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆப்கான் பொதுமக்களை சாந்தப்படுத்துவதற்கான ஒரு பகட்டு வித்தையாக கர்சாயின் பிரதிபலிப்புகளையும் பேச்சுக்களையும் நோக்க முடியாது. தான் ஒரு பொம்மை ஜனாதிபதியாக இல்லை என்று காட்டுவதற்காக அவர் அவ்வாறு கடுமையாகப் பேசுவதாகவும் நினைக்கக்கூடாது.
அவரை அவ்வாறானதொரு பொம்மை ஜனாதிபதியென்று அமெரிக்க அதிகாரிகள் சில சமயங்களில் வர்ணித்திருக்கிறார்கள். தீவிரமடைந்திருக்கும் வன்முறைகள் மீதான தனது ஆழ்ந்த வெறுப்பையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றிய தனது அசைக்க முடியாத சந்தேகங்களையும் வெளிக்காட்டுவதற்கே அண்மைக்காலமாக கர்சாய் அமெரிக்கர்களின் நடவடிக்கைகள் குறித்து சினந்து விழுகிறார். அவரது உதவியாளர்களின் அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது என்னால் இத்தகைய முடிவுக்கே வரக்கூடியதாக இருக்கிறது.
கர்சாய் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கத் துருப்புகள் குறித்து மிகவும் தெளிவான எண்ணத்தைக் கொண்டவராக இருக்கிறார். தலிபான்களுக்கு எதிரான போருக்கு அமெரிக்கத் துருப்புக்கள் தீர்வைத் தருபவையாக இல்லை. அத்துருப்புக்கள் மேலும் பிரச்சினைகளையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்ற அபிப்பிராயத்தை கர்சாய்கொண்டிருக்கிறார்.
ஆப்கானியர்களின் சடலங்கள் மீது அமெரிக்கக் கடற்படையினர் சிறுநீர் கழிப்பதைக் காண்பிக்கும் வீடியோக் காட்சிகள், அமெரிக்கப் படையினர் குர்ஆன் பிரதிகளைப் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம், கண்டகார் மாகாணத்தில் குடிமக்கள் படுகொலை போன்ற அண்மைய கொடூரமான சம்பவங்கள் தலிபான்களின் ஆயுதக் கிளர்ச்சிக்கெதிரான அமெரிக்காவின் தந்திரோபாயங்கள் பயனளிக்கப்போவதில்லை என்ற கர்சாயின் நிலைப்பாட்டையே உறுதி செய்வதாக அமைகின்றன.
வட அந்திலாந்திக் ஒப்பந்த நாடுகளின் படைகளை (நேட்டோ) ஆப்கான் கிராமங்களிலிருந்து வெளியேறி பெரிய முகாம்களுக்குச் சென்றுவிடுமாறு அவர் கேட்டிருக்கிறார். இதற்கு முன்னரும் இத்தகைய பல உத்தரவுகளை அவர் பிறப்பித்திருக்கிறார். நேட்டோ படைகள் ஆகாயமார்க்கத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இரவு வேளைகளில் விசேட தேடுதல் முற்றுகைகள் நடத்துவதை நிறுத்த வேண்டும். தனியார் பாதுகாப்புக் கம்பனிகளை ஒழிக்க வேண்டும். அமெரிக்கர்களினால் நடத்தப்படும் சிறைக்கூடங்கள், நேட்டோவின் மாகாண புனர்நிர்மாணக் குழுக்களை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பனவே அவர் விடுத்து வந்திருக்கும் முக்கியமான கோரிக்கைகளாகும்.
கர்சாயின் இத்தகைய நிலைப்பாட்டிற்கான காரணிகள் போரைப் போன்றே நீண்டநாள் வரலாற்றைக்கொண்டவை. ஆனால், அமெரிக்காவுடன் முறுகலுக்கு செல்லும் அளவுக்கு தன்னை அவர் 2009 தேர்தல் பிரசாரங்களின் போதே தயார் செய்து கொண்டார். அந்தத் தேர்தல் பிரசார காலத்தை கார்சாயின் உதவியாளர் ஒருவர் “ஒருபோதுமே குணப்படுத்தப்படாத புண்‘ என்று வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
தன்னைத் தோற்கடிப்பதற்கான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஒபாமா நிர்வாகம் தீவிரமாக நாட்டம்காட்டியது என்று கர்சாய் உறுதியாக நம்பத் தொடங்கினார். ஆனால், அவரைத் தோற்கடிக்க முடியாமற்போகவே அவரை மேலும் அவமதிக்கும் நோக்குடன் ஆப்கான் அரசாங்கத்தில் தலைவிரித்தாடும் ஊழலுக்கெதிராக நடவடிக்கையெடுப்பதில் கவனத்தைச் செலுத்தும் பாணியில் அமெரிக்காவின் தந்திரோபாயம் மாறியது என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் கூறுகிறார்கள்.கூடுதலான அளவுக்கு அமெரிக்க ஆதரவுடையவராக கர்சாய் இருக்கிறார் என்று பேசப்படுவதாக அதிகாரிகள் அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்த போது அதை அவர் ‘மஞ்சள் கட்டிடத்தின்’ வஞ்சக வேலை என்று வர்ணித்தார்.தலைநகர் காபூலிலிருக்கும் அமெரிக்கத் தூதரகக் கட்டிடம் மஞ்சள் நிறத்திலானது.அமெரிக்கர்கள் தனக்குத் தொல்லை கொடுத்ததைப் போன்றே அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி கர்சாய் தீர்மானித்திருக்கிறார் என்று ஜனாதிபதி மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்கர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக்கூடிய மூன்று, நான்கு முக்கியமான பிரச்சினைகளை ஜனாதிபதி மனதில் கொண்டிருக்கிறார். குடிமக்கள் படுகொலைகள், தடுப்புக் காவல் நிலையங்கள், தனியார் பாதுகாப்புக் கம்பனிகள், இரவு நேர தேடுதல்கள், முற்றுகைகள் இவையே அந்தப் பிரச்சினைகளாகும்.
அமெரிக்க படையினரின் அதிஉச்ச மனிதாபிமான நடவடிக்கைகளை பாருங்கள்
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் பாகிஸ்தானில் புகலிடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்வதற்கு பல வருடங்கள் முன்னதாகவே கர்சாய்க்கும் அவரது அரசாங்கத்திற்கும் தலிபான்களின் பாகிஸ்தான் புகலிடம் பற்றிய உண்மைகள் நன்கு தெரிந்திருந்தன.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் பாகிஸ்தானில் புகலிடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்வதற்கு பல வருடங்கள் முன்னதாகவே கர்சாய்க்கும் அவரது அரசாங்கத்திற்கும் தலிபான்களின் பாகிஸ்தான் புகலிடம் பற்றிய உண்மைகள் நன்கு தெரிந்திருந்தன.
பயங்கரவாதத்தை அதன் அடிப்படைக் காரணிகளிலிருந்தே ஒழித்துக்கட்டுவதற்கு மறுக்கின்ற அமெரிக்காவின் போக்கு ஜனாதிபதி உட்பட பல ஆப்கான் அதிகாரிகளுக்கு வாஷிங்டனுக்கு இருக்கக்கூடிய உள்நோக்கங்கள் பற்றி பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின. குழப்பநிலையை மேலும் தூண்டிவிட்டு அதன் மூலம் ஆப்கானிஸ்தானில் நிரந்தர இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதே அந்த சந்தேகங்களில் முக்கியமானதாகும். கர்சாயுடன் நெருக்கமாக பணியாற்றிய அமெரிக்க அதிகாரிகளே இதைக் கூறுகிறார்கள்.
கர்சாய் ஒருபோதுமே ஒரு உற்சாகமான பிரதம தளபதியாக விளங்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு 30 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்களை மேலதிகமாக அனுப்புவதற்கு 2009 டிசம்பரில் ஜனாதிபதி ஒபாமா எடுத்த தீர்மானம் தொடர்பில் பலத்த அவ நம்பிக்கையை கர்சாய் வெளிக்காட்டியிருந்தார். கர்சாய் அமைதி, சமாதானத்தை விரும்புகின்ற மனப்பாங்கு கொண்டவர்.
அன்றாட இராணுவ நடவடிக்கைகளில் அவருக்கு பெரிய அக்கறை இல்லை. இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான பிந்திய நிலைவரங்களை ஆராயும் வாராந்த தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் இடைநடுவிலேயே அங்கிருந்து வெளியேறி புவிசார் அரசியல் நிலைவரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்கச் செல்வதுண்டு என்று கர்சாயின் உதவியாளர்கள் கூறுகிறார்கள்.
மரண தண்டனைகளை அங்கீகரிப்பதற்கான உத்தரவுப் பத்திரங்கள் கர்சாயின் கையெழுத்துக்காக பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மாளிகையில் காத்திருக்கின்றன. தினமும் கொல்லப்படுகின்ற கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை, ஆப்கான் குடிமக்களின் எண்ணிக்கை, தலிபான்களுக்கு எதிராகப் போராடும் கூட்டுப் படைகளின் எண்ணிக்கை தொடர்பில் தினமும் மாலையில் அவருக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். அவற்றைப் பெற்று உண்மை நிலைவரங்களை அறிந்துகொள்வதில் பெருமளவுக்கு அவர் அக்கறை காட்டுகிறார்.
கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை விபரங்களை பார்வையிடும் போது கர்சாய் பெரும் வெறுப்படைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறினார். இந்தக் கொலைகளைப் பற்றி ஒரு ஜெனரல் அல்லது ஒரு பாதுகாப்பு அமைச்சர் கொண்டிருக்கக்கூடிய உணர்வை விடவும் வித்தியாசமான உணர்வையே கர்சாய் கொண்டிருக்கிறார். எவராவது கொல்லப்படுவது பற்றிக் கேள்விபட அவர் விரும்புவதில்லை.
தலிபான்கள் கொல்லப்படுவதைக் கூட அவர் விரும்பவில்லை. தலிபான்களும் ஆப்கானியர்களே, அவர்களும் ஆப்கான் குடும்பங்களிலிருந்து வந்தவர்களே என்பதே அவரது சிந்தனையாகும். வன்முறை, கொலைகளை அவரது சுபாவம் எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ளக்கூடியதல்ல என்று உதவியாளர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானுக்குள் ஆளில்லா அமெரிக்க விமானங்களின் தாக்குதல்கள் பற்றி 2010 ஆம் ஆண்டு கர்சாயிடம் வாஷிங்டன் போஸ்டுடனான ஒரு நேர்காணலின் போது அபிப்பிராயம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இராணுவச் செயற்பாடுகளை விரும்பி ஏற்றுக்கொள்கின்ற சுபாவம் தனக்கில்லை என்று பதிலளித்திருந்தார்.
நான் துப்பாக்கிகளை விரும்புபவன் அல்ல. நான் போர் விமானங்களை விரும்புபவன் அல்ல. மக்களை சுட்டுக்கொல்லுகின்ற துப்பாக்கிகளையோ அல்லது குண்டு வீசிக் கொல்லுகின்ற போர் விமானங்களையோ நான் விரும்புகிறவன் அல்ல. அவற்றுக்கு சாதகமாக கருத்துச் சொல்லுபவனும் அல்ல. கடும் போக்குடைய ஒருவரிடம் போய் இத்தகைய கேள்விகளைக் கேளுங்கள். நான் மென்போக்குடைய ஒரு பேர்வழி என்றே கார்சாயின் பதில் நீண்டது.
ஜனாதிபதி என்ற வகையில் கர்சாயின் அன்றாட செயற்பாடுகள் ஒரு நவீன யுக அரசாங்கத்தின் தலைவரினுடைய செயற்பாடுகளுக்கு ஒப்பானவையாகக் காணப்படுவதில்லை. பழங்குடி இனக்குழுக்களின் தலைவரின் செயற்பாடுகள் போன்றே அவை காணப்படும். கிராம மக்களுடன் அடிக்கடி சந்திப்புகளை நடத்துவார். பழங்குடி மக்கள் குழுக்களைச் சேர்ந்த மூத்த பிரஜைகளுடன் கலந்துரையாடி அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கேட்டறிவார்.
வெளிநாட்டுப் படைகள் இழைக்கின்ற கொடூரங்கள், பொதுமக்கள் படுகொலைகள், கைதுகள், தடுப்புக்காவல்கள் பற்றிய அனுபவங்களை மக்களிடமிருந்து கேட்டறியும் போது கார்சாயின் கண்கள் குளமாகும். இத்தகைய வேதனைமிகு அனுபவங்களே அவரது சிந்தனையை உருவகிக்கின்றன. அமெரிக்கர்கள் வந்து எமது பிள்ளைகளைக் கொலை செய்கிறார்கள். அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று மக்கள் வந்து கர்சாயிடம் கூறும்பொழுது அவர் பெரும் வேதனையடைகிறார் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.
சர்வதேச சமூகத்திற்கும் தனது மக்களுக்குமிடையே கார்சாய் அகப்பட்டுப் போகியிருக்கிறார் என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.
கார்சாயின் ஆத்திர வெளிப்பாடுகள் பலவற்றை அமெரிக்கா சமாளித்துவந்திருக்கிறது. ஆனால், எவ்வளவு தான் சக்தியற்றவராக அவர் இருந்தாலும் அமெரிக்கர்களிடமிருந்து பல பிரதான அரசியல் சலுகைகளை படிப்படியாக வென்றெடுக்கக்கூடியதாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கிறார். அமெரிக்கர்களினால் நடத்தப்படும் பாக்ராம் சிறைக்கூடத்தை ஆப்கான் அரசாங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்கு அவரால் இயலுமாக இருந்தது. வெளிநாட்டு தனியார் பாதுகாப்புக் கம்பனிகளின் செயற்பாடுகளை பெருமளவுக்கு மாற்றியமைத்திருக்கிறார்.
இரவு முற்றுகைகளையும் விமானத் தாக்குதல்களையும் நடத்தும் பொழுது நிதானமாக செயற்பட வேண்டிய அவசியத்தை வெளிநாட்டுப் படைகள் உணரக்கூடியதாக கர்சாய் தனது விசனங்களை அடிக்கடி வெளிக்காட்டி வந்திருக்கிறார். அமெரிக்க இராணுவம் முற்றுமுழுதாக வெளியேறுவதை கர்சாய் விரும்புவதாகத் தோன்றவில்லை. ஆனால், அமெரிக்கப் படைகள் தற்போது கையாளுகின்ற தந்திரோபாயத்திற்கு கர்சாய் காட்டுகின்ற கடுமையான எதிர்ப்பு அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை விரைவுபடுத்திவிடக்கூடும். அதற்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாராகிவிட்டது என்ற கர்சாயின் கூற்று பரிசோதனைக்குட்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக