ஏப்ரல் 19, 2012


திடுக் என்று வெளியானது, உளவுத்துறை மறைத்து வைத்த ரகசியம்!

  
உளவுத்துறையில் பணிபுரிந்த ஒருவருக்கு எதிராக நடாத்தப்பட்ட வழக்கு ரகசியமாக நடத்தப்பட்டதன் காரணங்கள், தற்போது அம்பலமாகியுள்ளன. முதல் காரணம், வழக்கில் சம்மந்தப்பட்ட ஆவணம் ஒன்று, உளவுத்துறையின் அதி ரகசியமானது. இரண்டாவது காரணம், அந்த ‘அதி ரகசியம்’ வெளியானால், அமெரிக்க-இஸ்ரேலிய ராஜதந்திர உறவு சிக்கலுக்கு உள்ளாகும்.
தற்போது வழக்கு ஒரு திருப்பத்தைச் சந்தித்துள்ளது. ‘அதி ரகசியம்’ போட்டு உடைக்கப்பட்டு விட்டது!
இந்த வழக்கு கடந்த வருடம் நீதிமன்றத்துக்கு வந்தது.  அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் பணிபுரிந்த ஷாமை லெய்போவிட்வோஸ், முக்கிய ஆவணம் ஒன்றை ஊடகம் ஒன்றுக்கு லீக் செய்தார் என்பதே வழக்கு.
விசாரணை முடிந்து அவருக்கு 20 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணை, சாதாரண விசாரணையாக நடைபெறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அதில் ஒரு ரகசியம் காக்கப்பட்டது. ரகசியம் என்ன? வழக்கில் சம்மந்தப்பட்ட ஆவணம் என்ன என்பதை நீதிபதிக்கே தெரிவிக்க முடியாது என்றது உளவுத்துறை.
அதை நீதிபதியும் ஒப்புக்கொண்ட பின்னரே வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அதாவது, முக்கிய ஆவணம் ஒன்று லீக் செய்யப்பட்டது என்பதை மாத்திரம், வழக்கு தொடுத்த எஃப்.பி.ஐ. தெரிவிக்கும். ஆனால், அந்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிவிக்காது.
வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சான்டர் வில்லியம்ஸ், “இது ஒரு முக்கியமான விவகாரம் என்பது மாத்திரம் எனக்குப் புரிந்தது. ஆனால், குற்றவாளி லீக் செய்ததாக குறிப்பிடும் ஆவணத்தில் என்ன உள்ளது என்பது எனக்கு கூறப்படவில்லை. அதில் உள்ளது ஏதோ முக்கிய சமாச்சாரம் என்பதை வைத்துக்கொண்டு தீர்ப்பு அளித்தேன்” என்று கூறியிருந்தார்.
      ஷாமைலெய் போவிட்வோஸ்
எல்லாமே ஒழுங்காக முடிந்து விட்டது என்று எஃப்.பி.ஐ. நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது வழக்கில் ஏற்பட்டுள்ளது ஒரு முக்கிய ட்டுவிஸ்ட்.
ஷாமை லெய்போவிட்வோஸ், எஃப்.பி.ஐ.யின் ரகசிய ஆவணத்தை ஒரு ஊடகத்துக்கு கொடுத்தார் என்று சொன்னோமல்லவா? அந்த ஊடகம் ஒரு இணையத்தளம். அதை நடாத்துபவர், ரிச்சார்ட் சில்வர்ஸ்டேயின். அவர் தற்போது தானாகவே முன்வந்து, குறிப்பிட்ட ரகசிய ஆவணத்தில் இருந்த ‘அதி ரகசியம்’ என்ன என்பதை போட்டு உடைத்துள்ளார்.
லீக் செய்யப்பட்டது, 200 பக்கங்கள் அடங்கிய ஆவணம். அதில், சில தொலைபேசி உரையாடல்களின் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்து வடிவம் இருந்தது. தொலைபேசி உரையாடல் யாருடையது என்பதுதான் வில்லங்கம்! அவை, வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் இருந்து, மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை!.
அதாவது, அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ., தமது நாட்டில் இயங்கிய இஸ்ரேலிய தூதரகத்தின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற விஷயம் இப்போது அம்பலமாகி விட்டது. நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர புரிந்துணர்வில், இப்படி ஒட்டுக் கேட்பது, மோசமான குற்றம்.
ரிச்சார்ட் சில்வர்ஸ்டேயின் கொழுத்திப் போட்டுள்ள இந்த வெடி, அமெரிக்காவை கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆத்திரமுற்ற இஸ்ரேலிய அரசு, தமது நாட்டிலுள்ள அமைரிக்க தூதரை அழைத்து, “எமது போன்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டதற்கான காரணத்தை, நேர்மையாக தெரியப்படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளது. “15 நாட்கள் அவகாரம் கொடுக்கிறோம். அதற்குள் இது பற்றிய காரணம் எமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், நாமும் ராஜதந்திர ரீதியான சில எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்” என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசும், எஃப்.பி.ஐ.யும் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. (இஸ்ரேல் கோரும் போர் விமானங்கள் சிலவற்றை, அமெரிக்கா இலவசமாகக் கொடுக்க நேரிடலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக