ஆர்மேனிய நாட்டு கார்கோ விமானம் ஒன்று, நேற்று (திங்கட்கிழமை) துருக்கி விமானப்படை போர் விமானங்களால் வானில் இடைமறிக்கப்பட்டு, துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து சிரியா சென்ற பயணிகள் விமானம் ஒன்று, கிட்டத்தட்ட இதே பாணியில் துருக்கியில் தரையிறக்கப்பட்ட சில நாட்களில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று தரையிறக்கப்பட்ட ஆர்மேனிய நாட்டு விமானமும், சிரியா நோக்கியே சென்று கொண்டிருந்தது.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலிபோ நோக்கி இந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. அலிபோவில் தற்போது சிரியா நாட்டு ராணுவத்துக்கும் போராளிகள் அமைப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறப்பட்டது.
ஆர்மேனிய விமானம் துருக்கி வான் எல்லையில் பறக்க அனுமதி கோரியது. “சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அனுமதி வழங்கப்படும்” என்று கூறிய துருக்கி, தமது விமானப்படை போர் விமானங்கள் இரண்டை வானுக்கு அனுப்பியது. ஆர்மேனிய விமானத்தின் இரு பக்கத்திலும் பறந்த போர் விமானங்கள், ஆர்மேனிய விமானத்தை அங்காரா விமான நிலையத்தில் லேன்ட் செய்யும்படி உத்தரவிட்டன.
தற்போது, அங்காரா விமான நிலையத்தில் வைத்து, ஆர்மேனிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள சரக்ககள் சோதனையிடப்படுகின்றன. அவற்றில் ராணுவ சப்ளை ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து பறக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் இதேபோல பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விமானம் தற்போது, தொடர்ந்து பறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. அதன் கார்கோ பகுதியில் இருந்த சிறிய உபகரணம் ஒன்றை மட்டும் துருக்கி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட உபகரணம், மருத்துவ உபகரணம் என்ற போதிலும், மேலதிக ஆயுவுகள் செய்ய வேண்டும் என துருக்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.