மே 09, 2012


அகழ்வாய்வுகளும் தொல்பொருட்களும்- அல்குர்ஆன் அடிப்படையிலான ஆய்வை நோக்கிய ஒரு முன்வைப்பு

ஆ.வ.முஹ்சீன் 

1
“பூமியில் இவர்கள் பிரயாணம் செய்து, இவர்களுக்கு முன்னிருந்தார்களே அத்தகையோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? சக்தியாலும் பூமியில் (விட்டுச் சென்ற) அடையாளச் சின்னங்களாலும் இவர்களை விட மிக உயர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள்.  – (பிறகு) அல்லாஹ் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாகப் பிடித்தான் – அல்லாஹ்வை விட்டும் பாதுகாப்பவர் எவரும் அவர்களுக்கு இருக்கவில்லை.’ (அல்குர்ஆன்: 40:21)”
19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்து, அகழ்வாய்வுகளும் தொல்பொருட்கள் குறித்த கற்கைகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இந்நிகழ்வானது, இங்கிலாந்தும் பிற ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலுள்ள பெரும்பாலான நாடுகளை ஆக்கிரமித்ததன் பின்னரான விளைவுகளில் ஒன்றாக அமைந்தது. கிட்டத்தட்ட 100 வீதமும் வெள்ளை – கிறிஸ்தவ ஆய்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இத்துறைகள் சார்ந்த எடுகோள்கள், வாசிப்புக்கள், அர்த்தப்படுத்தல்கள், மொழிபெயர்ப்புக்கள், ஊகங்கள்…. போன்ற அனைத்தும் வெள்ளை – கிறிஸ்தவ சிந்தனைமயப்பட்டனவாக உருவாகின.

வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டைய நதிக்கரை நாகரீகங்களான எகிப்திய, மெசப்பெதேமிய ( இன்றைய ஈராக் ), சீன, மற்றும் ஹரப்பா – மொகஞ்சதரோ ( இந்திய – பாகிஸ்தானிய எல்லைகள் சார்ந்தவை) நாகரீகங்களும் மாயா நாகரீகம் (அமெரிக்கா), அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் நாகரீகம் போன்றவையும் ஐரோப்பாவிற்கு வெளியே உருவானவை. இந்நாகரீகங்களை உருவாக்கிய மக்களின் சிந்தனைமுறை, கலாச்சாரம், பண்பாடு. மதம், மொழி… போன்ற அனைத்தும் ஐரோப்பிய முறைமைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளாக இருந்தன. எனினும் இந்த நாகரீகங்கள் குறித்த ஆய்வுகளும், மதிப்பீடுகளும், கொள்கைகளும் அந்தந்த நாகரீகங்களைச் சேர்ந்த மக்களினால் முன்னெடுக்கப்படாமல், அவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஐரோப்பியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற ஒரு விசித்திர நிலை உருவாகியிருக்கின்றது. இது விசித்திரமானது மட்டுமல்ல, துரதிஸ்டவசமானதும் கூட.
துரதிஸ்டவசமானது என்பதன் மூலம், இந்த நாகரீகங்களின் உண்மையான ஆன்மா, மேற்கத்தைய சிந்தனைகளினாலும் முறைமைகளினாலும் மூடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலமாக மனித வரலாறானது ஒரு சார்புத் தன்மையுள்ளதாக விளக்கப்பட்டு வந்திருக்கின்றது என்றும் அர்த்தம் கொள்ள முடியும். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக மேற்கத்தைய ஆய்வுச் சட்டகங்களுக்குள்ளும், சிந்தனை முறைமைகளுக்குள்ளும் சிக்குண்டுள்ள மனித வரலாறு, இவற்றிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
இறைவன் அல்குர்ஆனில், ஆத், தமூத், மத்;யன்…. போன்ற சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை உதாரணங்களாகக் கூறி, அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள பூமியெங்கும் சென்று பார்க்கும்படி மனிதர்களிடம் கேட்கிறான். அல்குர்ஆனின் இந்த வசனங்கள், தெளிவாகவே அகழ்வாய்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இத்தகைய வலியுறுத்தல் இருந்தும் கூட, முஸ்லிம் சமூகங்களில் எதுவும் அல்லது முஸ்லிம் தனிநபர்கள் யாரும் இன்றுவரை அகழ்வாய்வுகளில் அக்கறை செலுத்தவில்லை. தங்களது பாதங்களுக்குக் கீழே புதைந்து கிடந்த, இன்னமும் புதைந்து கிடக்கின்ற மனித வரலாற்றின் சான்றுகள் தொடர்பாக, முஸ்லிம் சமூகங்கள் வியப்புக்குரிய வகையில் சலனமற்றவர்களாக இருந்து வந்திருக்கின்றார்கள்.
அகழ்வாய்வுகளுக்கான கூலியாட்களாகவும், சில சந்தர்ப்பங்களில் அத்தகைய இடங்களை அடையாளம் காட்டுபவர்களாகவும் மட்டுமே, அகழ்வாய்வுகள் மீதான தமது பங்களிப்பை முஸ்லிம்கள் வழங்கி வந்திருக்கின்றார்கள்.
அல்குர்ஆனிலுள்ள எந்தவொரு வசனமும், சொல்லும் தேவையில்லாமலும் அவசியமற்றவிதத்திலும் அல்லாஹ்வினால் குறிப்பிடப்படவில்லை. இவற்றின் அர்த்தங்களும், முக்கியத்துவங்களும் இன்னமும் புரிந்து கொள்ளப்படவில்லை என்றால், அது நமது அறியாமையையும் அக்கறையின்மையையுமே குறிப்பதாக அமையும். அழிக்கப்பட்ட மனித சமூகங்களை பூமியெங்கும் சென்று பார்க்கும்படி, அல்குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில்  வலியுறுத்தியிருப்பதன் மூலமாக மனித வரலாறு, நாகரீக வளர்ச்சி, பண்பாட்டு முறைமைகள் போன்றவை மீதான அக்கறைகளும், அகழ்வாய்வுகள் மீதான உணர்வுபூர்வமான ஈடுபாடுகளும் மனித சமூகங்களுக்கு – குறிப்பாக முஸ்லிம்களுக்கு அவசியம் என்பது துல்லியமாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
2
” (ஜின்களாகிய) அவை அவருக்காக அவர் விரும்பியவாறு உயரமான மாளிகைகளையும், உருவச்சிலைகளையும், பெரும் தடாகங்களைப் போன்றுள்ள உணவுத் தாம்பாளங்களையும், நிலையாக இருக்கின்ற பெரும் செம்புச் சட்டிகளையும் செய்யும்…….’     (அல்குர்ஆன்: 34:13) “
பூமிக்குள்ளும், கடலினடியிலும், ஆற்றுப்படுக்கைகளிலும், பூமிக்கு மேலும் எண்ணற்ற தொல்பொருட்கள் கிடக்கின்றன. இவை உயிரின வரலாறு, மனித வரலாறு, நாகரீகங்கள், வாழ்க்கைமுறைகள்…. போன்றவற்றின் சுட்டிகளாகவும், சான்றுகளாகவும் விளங்குகின்றன. இவற்றின் கண்டெடுப்புக்கள், வாசிப்புக்கள், மற்றும் அர்த்தப்படுத்தல்கள் ஒருபுறம் புதிர்களை விடுவிக்கின்ற அதேநேரத்தில், மறுபுறம் இவை மேற்கத்தைய கருத்தியல் வலையினால் மூடப்பட்டவையாகவும் அமைந்திருக்கின்றன. அறிவும் அறிதலும் மேற்கத்தையமயமாக்கப்பட்டிருப்பதாலும், மேற்கின் அதிகாரத்திற்குட்பட்டிருப்பதாலும் தொல்பொருட்கள் என அடையாளப்படுத்தப்படுகின்ற அனைத்தும் மேற்கத்தைய அர்த்தப்படுத்தல்களுக்குள்ளாகியிருக்கின்றன.
பண்டைய வணக்கத்தலங்களிலும், வழிபாட்டிடங்களிலும் காணப்படுகின்ற தூண்கள், கோபுரங்கள், அகழ்ந்தெடுக்கப்படுகின்ற சிலைகள் மற்றும் சின்னங்கள் போன்றவை எப்போதும் வணக்க முறைகளுடன் மட்டுமே இனங்காணப்பட்டு வந்திருக்கின்றன. தூண்கள் சூரியன், சந்திரன் மற்றும் லிங்க வழிபாடுகளுடனும், சிலைகளும் உடல் அங்கங்களும் வௌ;வேறு கடவுள்களுடனும், சின்னங்கள் நெருப்பு, காற்று, நீர், விலங்குகள்… போன்றவை சார்ந்த வழிபாடுகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டு, விளக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இணைவைத்தல் குறித்தும், சிலைவணக்கங்கள் பற்றியும், பிற வணக்க முறைகள் பற்றியும் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு, அவற்றுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே மனித வரலாற்றின் மிக ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய வணக்க முறைகள் நிலவி வந்திருக்கின்றன என்பதையும் இவற்றுக்கான குறியீடுகளாக கற்கள், சிலைகள், சின்னங்கள்… போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வினால் சிறப்பான முறையில் ஞானம் வழங்கப்பட்ட சுலைமான் நபியவர்கள், அல்லாஹ்வைத் தொழுவதற்காக கட்டிய புனிதமான அல் – அக்சா மஜ்லிஸின் முன்னால் எழுப்பிய தூண்களுக்கும், ஜின்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய சிலைகளுக்கும் என்ன விளக்கம் கொடுப்பது? நடைமுறையிலுள்ள அர்த்தப்படுத்தல்கள், இவற்றை லிங்க அல்லது சூரிய வழிபாடுகளுடனும், சிலை வணக்கங்களுடனும் தொடர்புபடுத்துகின்றன. இதேபோன்ற அர்த்தப்படுத்தல், கஃபதுல்லாவிலுள்ள புனிதமான கல்லுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லை, லிங்க வழிபாட்டின் குறியீடாக இவை காண்கின்றன.
இங்கு வணக்கமுறை சார்ந்த பிரச்சினைகளை மட்டும் நாம் எதிர்கொள்ளவில்லை. கூடவே, தொல்பொருட்கள் மீதான அர்த்தப்படுத்தல்களினால் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களையும் நாம் முகம்கொடுத்துள்ளோம். தொல்லியல் துறையிலிருந்து முஸ்லிம் சமூகங்கள் முற்றாக விலகி நிற்பதால் ஏற்பட்டிருக்கின்ற பெரும் சவாலாக இவை அமைந்திருக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்வது?
3
“(நபியே) ஆதமுடைய புதல்வர் இருவரின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு நீர் ஓதிக் காண்பிப்பீராக! குர்பானியை அவ்விருவரும் (அல்லாஹ்வின்பால்) நெருக்கமாக்கி வைத்த நேரத்தில், அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றொருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை……..’ (அல்குர்ஆன்: 5:27)”
‘வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம்’ (அல்குர்ஆன்: 37:107).
அல்லாஹ்வுக்காக நேர்த்திப் பொருட்களை வழங்குவது ஆகுமானது என்பதையும் மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இது இடம்பெற்று வந்திருக்கின்றது என்பதையும் மேலுள்ள அல்குர்ஆன் வசனங்கள் எமக்கு உணர்த்துகின்றன. ஆதம் (அலை) அவர்களின் முதல் பிள்ளைகளான காபில், ஹாபில் ஆகியோர் அல்லாஹ்வுக்காக நேர்த்திப் பொருட்களை வழங்கியிருக்கின்றார்கள் என்ற உண்மையின் மூலம், இந்த வழக்கத்தின் தொன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
இப்றாஹீம் (அலை) அவர்கள் தமது மகனான இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காக பலியிட முன்வந்தபோது, அல்லாஹ் அதற்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிடுகின்றான். இங்கு ஒரு மனித உயிருக்குப் பகரமாக முற்றிலும் வேறான இன்னொன்று – ஒரு ஆடு – வழங்கப்படலாம் என்ற பொருள் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
அல்லாஹ்வுக்காக நேர்த்திப் பொருட்களை வழங்குதல், ஒன்றுக்குப் பகரமாக வேறொன்றை வழங்குதல் என்ற இந்த நிகழ்வுகள், தொல்பொருட்கள் தொடர்பாக புதிய அர்த்தப்படுத்தல்களை முன்வைப்பதற்கான வெளிச்சங்களாக அமைந்திருக்கின்றன. இறைவனின் பெயரால் நேர்த்தி வைப்பதும், அது நிறைவேறியதும் அதற்கான நேர்த்திப் பொருட்களை வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் என்பதும் உலகிலுள்ள அனைத்து சமூகங்கள் மத்தியிலும் காணப்படுகின்றன.
நேர்த்திப் பொருட்கள் இருவகைகளாக அமைந்திருக்கின்றன. ஒன்று, எந்த பொருட்களை வழங்குவதாக நேர்த்தி வைக்கப்படுகின்றதோ, அதேபொருளையே வழங்குதல். இரண்டாவது, நேர்த்தி வைக்கப்பட்ட பொருளுக்குப் பதிலாக, (பகரமாக) வேறு ஒரு பொருளை வழங்குதல். உதாரணமாக, ஒருவரது கையில் அல்லது காலில் கடுமையான நோய் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், அந்த நோய் குணமாகும்போது, கையை அல்லது காலை நேர்த்திப் பொருளாக (காணிக்கையாக) செலுத்துவதாக நேர்த்தி வைக்கப்படுகின்றது. பின்னர் நோய் குணமாகும்போது, நேர்த்தி வைக்கப்பட்ட உடல் உறுப்புக்களுக்குப் பகரமாக வேறு பொருட்கள் மூலமாக (மண், மரம், உலோகம்…) உருவாக்கப்பட்ட குறிப்பிட் உறுப்புக்கள் வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த வழக்கம் இலங்கை சோனகர்கள் மத்தியிலும் காணப்பட்டிருக்கின்றது.
இவ்வழக்கத்தின்படி, ஒருவரது உடல் முழுவதும் நோயினால் பீடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், அந்த உடலே காணிக்கைப் பொருளாக முன்னிறுத்தப்பட்டு, நோய் குணமடைகின்றபோது, வேறு பொருட்களினால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான மனித உருவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று பேய், பிசாசு, nஷய்தான்… போன்ற கெட்ட சக்திகளினால் ஏற்படக் கூடிய தீங்குகளினின்றும் இறைவனிடம் பாதுகாவல் தேடி, அதற்காக அத்தகைய கொடிய சக்திகளைக் குறிக்கும்வகையில், கோர உருவங்களை உருவாக்கி அவற்றை மண்ணில் புதைக்கின்ற வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கின்றது.
இத்தகைய பின்புலத்தில் பரிசீலிக்கும்போது, அகழ்வுகளின்போது கிடைக்கப் பெறுகின்ற மனித உருவங்களும், மனித அங்க வடிவங்களும், பிற உருவங்களும் எப்போதுமே வணக்க, வழிபாட்டிற்குரியனவாக விளங்கியவை என்று அர்த்தப்படுத்துவது தவறு என்றாகின்றது. மாறாக, இவை நேர்த்திப் பொருட்களாகவும் அல்லது பலி பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற புரிதல், மனித வரலாறு குறித்த புதிய விசாரிப்புக்களுக்கு எம்மை இட்டுச் செல்லக் கூடியது.
மனித வரலாற்றின் தொடக்கத்தில், மனிதர்கள் இயற்கைச் சக்திகளையும், இயற்கைப் பொருட்களையும் மட்டுமே வணங்கி வந்திருக்கின்றார்கள் என்பதே ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் ஊகங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த ஊகங்களுக்கு வலுச் சேர்ப்பதாக, அகழ்வுகளில் கிடைக்கப் பெற்ற சிலைகள், உருவங்கள், பூமியில் காணப்படுகின்ற தூண்கள், பாறைகள் மற்றும் பிற சின்னங்கள் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டு வந்திருக்கின்ற அர்த்தப்படுத்தல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் இவை வணக்க, வழிபாடுகளுக்காக அல்லாது,  நேர்த்திப் பொருட்களாகவும் அமைந்திருக்கின்றன என்னும்போது, மனித வரலாற்றின் தொடக்கத்தில் இவற்றை வணங்குவதைத் தவிர, வேறு வகையான வணக்கமுறையும் நிலவியிருக்கின்றது என்ற ஊகத்திற்கு இட்டுச் செல்கின்றது. இந்த வேறுவகையான வணக்கமுறையானது உருவ வழிபாட்டின் எதிர்நிலையாகவே இருந்திருக்க வேண்டும். அதாவது புராதன சமூகங்களில் உருவ வழிபாட்டுக்க அருகே உருவமற்ற இறைவனை வணங்குகின்ற முறைமையும் நிலவியிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
புலனுணர்வுக்குட்பட்ட இயற்கைப் பொருட்கள் மற்றும் சக்திகள் மீதான பிரமிப்பும் புரியாமையும்தான் அவற்றை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் புராதன மனிதர்களை இட்டுச் சென்றிருக்கின்றன என்று இதுவரை விளக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் இந்த வாதமானது, மறுபுறத்தே புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்குதல் என்பது, நேரடித் தரிசனம், அல்லது தெளிவான வழிகாட்டல் இன்றி சாத்தியப்பட்டிருக்க மாட்டாது என்பதைச் சுட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு சமூகத்திற்கும் வழிகாட்டிகளை அனுப்பியிருப்பதாக அல்லாஹ் கூறியிருப்பதானது, முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களே, மனித சமூகத்தின் முதலாவது வழிகாட்டியாகவும் அமைந்திருந்தார்கள் என்பதை தர்க்கப்படுத்துகின்றது. இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதனாகவும், இறைவனுடன் நேரடியாக உரையாடியவராகவும் முதல் மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும் அமைந்த ஆதம் (அலை) அவர்கள், அந்த மனித சமூகத்தை உருவமற்ற இறைவணக்கத்தை நோக்கியே வழிகாட்டியிருப்பார்கள். எனவே மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே உருவமற்ற இறைவழிபாடு நிலவியிருக்கின்றது என்றும், இத்தகைய உருவமற்ற வணக்கமுறை பிற வணக்கமுறைகள் அனைத்திற்கும் முதன்மையானது என்றும் வாதிடுவது தர்க்கப் பொருத்தமுள்ளதாக இருக்கின்றது.
உருவமற்ற இறைவணக்கமே முதன்மையானது என்ற நிரூபணமானது, பரிணாமக் கோட்பாட்டிற்குப் பதிலாக, படைப்பின் முதன்மை நிலையை வலியுறுத்துவதாக அமைகின்றது. விஞ்ஞானம் மட்டுமின்றி, அறிவின் அனைத்து வகைகளுமே ஏதோவகையில் பரிணாமக் கோட்பாட்டின் ஆதிக்கத்திற்குட்பட்டவைகளாகவே இருக்கின்றன. படைப்பை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படுகின்ற எந்த ஒரு கருத்தையும் விஞ்ஞானத்தன்மையற்றது என்று நிராகரிக்கின்ற அதிகாரத்தன்மை வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அதிகாரப் போக்கு அனைத்து அறிவியல்துறைகளையும் ஒருபக்கச் சார்பானதாகவும் பரிணாமக் குறுக்கம் கொண்டவையாகவும் மாற்றியுள்ளது.
ஆனால் தொல்பொருட்களை படைப்பு சார்ந்து அர்த்தப்படுத்தும்போது, நம் கண்ணெதிரே, உலக, உயிரின, மற்றும் மனித வரலாறுகள் பற்றிய புதிய விளக்கங்கள் விரிந்தெழுவதைக் காணலாம். விசேட ஆற்றல்கள் கொண்ட மனிதர்கள் இன்றும் கூட, கடவுள்களாக்கப்படுவதை அவதானிக்கும்போது, மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே, இயற்கைப் பொருட்கள், சக்திகள், அவற்றுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ள மலக்குகள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள், மற்றும் சிறந்த நபர்கள் போன்றவர்களோடு, சில விலங்குகள், பறவைகள் போன்றவைகளும் வணக்கங்களுக்கும் வழிபாடுகளுக்கும் உரியவைகளாக்கப்பட்டு வந்திருப்பதன் சாத்தியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய புரிதல், முழுமையான உலக வரலாறானது தற்செயல் நிகழ்வுகளின் விளைவுகளினால் உருவானது என்ற பரிணாம விளக்கத்திலிருந்து விடுபட்டு, இது திட்டவட்டமான ஒழுங்குகளுக்கும் விதிகளுக்கும் ஏற்ப படைக்கப்பட்ட பொருண்மைகளின் தொகுப்பு என்ற முடிவை நோக்கி ஆய்வுகளை முன்னகர்த்த வழிகாட்டும்.
ஒரு உதாரணம்: புகழ்பெற்ற பாபிலோனிய மன்னன் ஹமுராபி என்பவர் கி.மு. 18ம் நூற்றாண்டில் (கி.மு. 1792 – 1750) வாழ்ந்ததாக சரித்திரக் குறிப்புக்கள் கூறுகின்றன. இவர் இறைவனிடம் இருந்து ஆட்சியுரிமை பெற்று, இறைவனின் கட்டளைப்படி மக்களை வழிநடத்தினார் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகின்றது. ஹமுராபி மன்னன் இறைவனிடம் இருந்து ஆட்சியுரிமை பெறுவது போன்ற சிற்பம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹமுராபி சட்டக்கோவை என அழைக்கப்படுகின்ற சட்டக்குறிப்புக்கள் செதுக்கப்பட்டுள்ள கற்பாலம் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது அது பாரிசில் வைக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள சட்டங்கள் இன்றும் கூட செல்லுபடியாகக் கூடியனவாக இருப்பதோடு, ஏறக்குறைய அவற்றை ஒத்த சட்டவிதிகள் அல்குர்ஆனிலும் குறிக்கப்பட்டிருப்பதை காணலாம். வரலாற்று அறிஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஹமுராபி மன்னன் இறைவனிடம் இருந்து ஆட்சியுரிமையையும், சட்டங்களையும் பெற்றார் என்பதை விஞ்ஞானத்தன்மையற்றதாகவும், புனைவாகவுமே கருதுகின்றார்கள். மன்னர்கள் தமது அதிகாரத்தை மக்கள் மேல் நிலைநாட்டுவதற்காக, தம்மை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லி வந்திருக்கின்ற ஒரு திட்டமிட்ட ஆதிக்கச் செயலின் விளைவுகளில் ஒன்றாகவே ஹமுராபி விடயத்தையும் அவர்கள் கருதுகின்றார்கள்.
ஆனால் படைப்பு சார்ந்து சிந்திக்கின்ற ஒருவர், ஹமுராபியின் வரலாற்றை உண்மையானது என்று நம்புவார். ஏனெனில், இறைவன் சமூகங்களை சரியான முறையில் வழிநடத்துவதற்காக காலத்திற்குக் காலம் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒரு பகுதியினருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியிருக்கின்றான் என மதங்கள் கூறுகின்றன. இவ்வகையில், ஹமுராபியும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தகைய ஒரு சிறந்த நபராக இருந்திருக்க முடியும் என்பதும், இவரது சந்ததியினர், இவரின் வரலாற்றை நினைவு கூர்ந்தும்  சிற்பமாக்கியும் வந்திருக்கின்றார்கள் என்றும் நம்புவார்கள்.
The Code of Hammurabi contains no laws concerning religion. The basis of criminal law is that of equal retaliation, comparable to the Semitic law of “an eye for an eye”. Protection is offered to all classes of Babylonian society; the law seeks to protect the “weak and the poor”, including women, children, and slaves, against injustice at the hands of the rich and powerful.
Microsoft ® Encarta ® 2006.
(ஹமுராபி சட்டக்கோவையானது மதரீதியான சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. குற்றவியல் சட்டமானது, ‘கண்ணுக்குக் கண்’ போன்ற செமிடிக் சட்டத்துடன் ஒப்பிடக் கூடியதான சமமான பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. பாபிலோனியாவில் இருந்த அனைத்து வகுப்பினருக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது, சட்டமானது, செல்வந்தர்களினதும்;, அதிகாரம் பெற்றவர்களினதும் அநீதிக்கு எதிராக, பெண்கள், சிறுவர்கள், அடிமைகள் அடங்கலாக ‘பலவீனமானவர்களையும், ஏழைகளையும்’ பாதுகாப்பதை நோக்காகக் கொண்டிருந்தது.)
ஹமுராபி மன்னனுக்கு இறைவன் வழங்கியதாகக் கூறப்படுகின்ற சட்டத்தொகுப்பும், அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள சட்டங்களுக்குமிடையே ஒற்றுமை காணப்படுவதால், அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபியுடன் அல்லது ஒரு சிறந்த நபருடன் ஹமுராபியை இனங்காண முடியுமா?
இப்றாஹீம் நபியவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் யூதர்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு இறைதூதராக இருக்கின்றார்கள். இவர்கள் கிறிஸ்துவுக்கு முன் 2000 தொடக்கம் 1500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்கள் பாபிலோனில் பிறந்து, பின்னர் இறைவனின் கட்டளைப்படி அங்கிருந்து வெளியேறி, பாலஸ்தீனம், எகிப்து, சவூதி ஆரேபியா… போன்ற பரந்த பிரதேசங்களை உள்ளடக்கிய வாழ்க்கை வரலாற்றை கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள்.   இவர்களுக்கு இறைவன் ஸூஹூபுகள் எனப்படும் கட்டளைகளை எழுத்து வடிவில் வழங்கினான் என்றும் இந்தக் கட்டளைகளின் அடிப்படையில் இவர்கள் மிகச் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள் என்றும் குறிப்பாக முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். அல்குர்ஆனில் பல இடங்களில் இப்றாஹீம் (அலை) அவர்களைப் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளைகள் மற்றும் ஆட்சியைப் பற்றியும் அல்லாஹ் குறிப்பிட்டு பேசியிருப்பது அவர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இந்தவகையில்,  இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நம்புவதில் முஸ்லிம்களுக்கு எள்ளளவு தயக்கமும் ஏற்படுவதில்லை.
Abraham or Abram, biblical patriarch and, according to the Book of Genesis (see 11:27-25:10), progenitor of the Hebrews, who probably lived in the period between 2000 and 1500 bc. Abraham is regarded by Muslims, who call him Ibrahim, as an ancestor of the Arabs through Ishmael. He was once considered a contemporary of Hammurabi, king of Babylonia. Because the biblical account of his life is based on traditions preserved by oral transmission rather than by historical records, no biography in the present sense can be written.
Microsoft ® Encarta ® 2006.
(பைபிள் குறிப்பிடுகின்ற தலைவரும் படைப்புப் புத்தகத்தின்படி (பார்க்க: 11:27 – 25:10) ஹீப்ரு சமூகத்தினரை தோற்றுவித்தவருமான ஆப்ரஹாம் அல்லது ஆப்ரம், கிட்டத்தட்ட கிறிஸ்துவுக்கு முன் 2000 தொடக்கம் 1500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுpயில் வாழ்ந்திருக்கிறார். ஆப்ரஹாமை இப்றாஹிம் என்று அழைக்கின்ற முஸ்லிம்கள் அவரை இஸ்மாயிலினுடாக அராபியர்களின் மூதாதை என கருதுகிறார்கள். அவர் முன்னர், பாபிலோனிய மன்னனான ஹமுராபியின் சமகாலத்தவர் எனக் கருதப்பட்டார். ஏனெனில், அவருடைய வாழ்க்கை பற்றி பைபிள் தருகின்ற குறிப்புக்கள், வரலாற்றுப் பதிவுகளாக இல்லாமல் பெரிதும் வாய்மொழி மூலமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்ற மரபுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. தற்கால முறையிலான வாழ்க்கை வரலாறு எதுவும், அவரைப் பற்றி எழுதப்படவில்லை.)
தொல்லியல் சான்றுகள் குறிப்பிடுகின்ற ஹமுராபியும் மதங்கள் குறிப்பிடுகின்ற இப்றாஹிமும் ஒரே நபராக இருக்க முடியுமா? வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி, ஹமுராபியும் இப்றாஹிமும் சமகாலத்தவர்களாக இருக்கின்றார்கள். மேலும், ஹமுராபி என்பது ஆங்கிலத்தில் Hammurabi (Hamurabi) என எழுதப்படுகின்றது. இதை வலமிருந்து இடமாக வாசித்தால் கிட்டத்தட்ட Ibrahim என அமைவதைக் காணலாம். செமிட்டிக் மொழிகளில் மாத்திரமின்றி, பண்டைத் தமிழ் கல்வெட்டுக்களிலும் பல சந்தர்ப்பங்களில் எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது, வலமிருந்து இடமாக (அல்லது இடமிருந்து வலமாக) எழுதப்பட்ட இப்றாஹிம் என்பதுதான் ஹமுராபி என வாசிக்கப்பட்டிருக்கின்றது எனக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. இது தெளிவாக நிரூபிக்கப்படுகின்றபோது, அல்குர்ஆனின் கூற்றுக்களும், தொல்லியல் சான்றுகளும் ஒன்றுடன் ஒன்று பூரணமாக ஒத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் புரிதலானது, இதுவரை நம்பிக்கைக்குரியதாக மட்டுமே கருதப்பட்டு வந்த வரலாறானது, பொருண்மைத்தன்மையான சான்றுகளுடன் இணைகின்ற ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்ற சூழலைத் தோற்றுவிப்பதாக அமைகின்றது. இவ்வகையில் வரலாறானது, மனித அறிவு, சான்றுகள், ஊகங்கள் … போன்றவற்றுக்கும் அப்பால், இறைவார்த்தைகளுடன் இணைந்ததாக மாறுவதும் அர்த்தப்படுத்தப்படுவதும் சாத்தியமாகின்றது.
4
இத்தகைய புதிய கண்ணோட்டங்களும் விளக்கங்களும் இலங்கைச் சோனகர்களின் பூர்வீகத்தின் மீதும், வரலாற்றின் மீதும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் எவை? மனிதத் தோற்றம், வரலாறு என்பவை, தொல்லியல் பொருட்களையும் அவற்றுக்கான அர்த்தப்படுத்தல்களையும் அடிப்படைகளாகக் கொண்டு மட்டுமே இன்றுவரை விளக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய தொல்லியல் சான்றுகளைக் கொண்டு, தமது பூர்வீகத்தையும், வரலாற்றையும் விளக்குவதில், இலங்கைச் சோனகர்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் பின்தங்கியவர்களாகவும், செயலற்றவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.
ஆனால், இலங்கையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான இடங்களும், கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களும் இலங்கைச் சோனகர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்திருக்கின்ற பிரதேசங்களிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, பொம்பரிப்பு (பொன்பரப்பி), பலாங்கொட, நிலாவெளி…. எனினும் இவற்றில் எதையுமே தமது பூர்வீகத்துடனும் வரலாற்றுடனும் இணைக்க முடியாதவர்களாகவே இலங்கைச் சோனகர்கள் இருந்து வருகின்றார்கள். இத்தகைய இணைப்புக்கு இரண்டு கருதுகோள்கள் அல்லது ஊகங்கள் தடைகளாக இருந்து வருகின்றன.
(1) இலங்கை முஸ்லிம்கள் அரேபியரின் வழித்தோன்றல்கள் என்ற ஊகம். இந்த ஊகத்தின் காரணமாக 8ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதும், பெரிதும் அரபு மொழியில் அமைந்ததுமான சான்றுகளுடன் மட்டும் தம்மை எல்லைப்படுத்திக் கொள்கின்ற போக்கு இலங்கைச் சோனக ஆய்வாளர்களிடையே இடம்பெற்று வந்திருக்கின்றது.
(2) இலங்கைச் சோனகர்கள் மத்தியில் நிலவுகின்ற இறைநம்பிக்கை. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒன்றையும் வணக்கத்திற்குரியதாக நினைக்க முடியாத ஆழ்ந்த இறைநம்பிக்கையின் காரணமாக, இணை வைத்தலுடன் தொடர்புபட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற தொல்பொருட்கள் குறித்து அவர்கள் மத்தியில் எத்தகைய ஆர்வமும், ஈடுபாடும் வெளிப்படாத நிலை காணப்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால், சிலைகள், சின்னங்கள்… போன்ற தொல்பொருட்கள் வணக்கத்திற்குரியவைகளாக மட்டுமன்றி, வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு, வெகுஜனப்படுத்தப்படும்போது, இவை குறித்த இலங்கை சோனகர்களின் கண்ணோட்டம் முற்றாக மாற்றமடையும். தமது காலடிகளின் கீழும், தமக்கருகேயும் காணப்படுகின்ற தொல்பொருட்கள் தமது பூர்வீகத்தையும் வரலாற்றையும் சொல்வதற்கும் நிரூபிப்பதற்குமான சான்றுகளாக அமையும் என்ற புரிதல், இவற்றின் மீதான அக்கறையையும் ஆர்வத்தையும் அறிதலையும் தூண்டும். தம்மால் விளக்கம் சொல்ல முடியாது என்ற பலவீனத்தாலும், தமது வாழிடங்களை பிற சமூகங்கள் உரிமை கொண்டாடி விடும் என்ற அச்சத்தாலும் தமது பாரம்பரிய வாழிடங்களில் சில சந்தர்ப்பங்களில் தம்மால் கண்டெடுக்கப்படுகின்ற தொல்பொருட்களை அழித்தும், மறைத்தும் விடுகின்ற செயலை செய்ய வேண்டிய துரதிஸ்ட நிலை இலங்கைச் சோனகர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இத்தகைய தொல்பொருட்களுக்கு புதிய விளக்கங்களையும் அர்த்தப்படுத்தல்களையும் கொடுக்கக் கூடிய ஒரு அறிவியல் சூழல் உருவாக்கப்படும்போது, இவற்றைத் தமது பூர்வீகத்திற்கும் வரலாற்றுக்குமான உறுதியான சான்றுகளாக இவர்கள் முன்வைப்பது சாத்தியமாகும்.
இவை அனைத்திற்குமான முன்நிபந்தனையாக, அக்கறையற்ற நிலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்களாகவும் உணர்வுபூர்வமான செயற்பாடுகளின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவும் அமைந்த ஒரு அறிவார்ந்த பரம்பரை இலங்கைச் சோனகர்கள் மத்தியில் உருவாக வேண்டும். இன்ஷாஅல்லாஹ்!
நன்றி : சோனகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக