செப்டம்பர் 10, 2012



கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்


ராஜ் சிவா 



“குட் மார்னிங் சார்! கீதா. காலிங் ஃப்ரம்... பாங்க்.
சார் ஃப்ரியா இருந்தா ஒரு 2 நிமிசம் பேசிக்கலாமா?
எங்க பாங்க்ல ஒரு புது பர்சனல் லோன் ஆஃபர் பண்ணி இருக்கோம்.
நீங்க எங்க ஒர்க் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்.
உங்க சம்பளம் எவ்ளோன்னு சொல்ல முடியுமா சார்?”
நீங்கள் மொபைல் ஃபோன் வாங்கிய நாளிலிருந்து இந்த வகையிலோ அல்லது இது போன்ற வேறு ஒரு வகையிலோ, ஐஸ்கிரீம் தடவிய கீதாக்களின், பிரியாக்களின் குரல்களை வாரத்துக்கு ஒருமுறையாவது கேட்கத் தவறியிருக்க மாட்டீர்கள். நிதி மந்திரியாக நீங்கள் இருந்தாலும், இந்தக் குரல்கள் உங்களைத் துரத்துவதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது. இந்தக் குரல்களின் பின்புலத்தில் இருக்கும் மெல்லிய மர்மத்தையும், சதியையும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதே உண்மை. சாதாரணமாகப் பார்க்கும் போது, ஒரு வங்கி தனது வாடிக்கையாளனுக்குக் கடன் கொடுத்து, அதனால் வரும் வட்டியைப் பெற்றுக் கொள்வதற்காக இப்படித் துரத்துகிறது என்றுதான் தோன்றும். ஆனால் இங்கு அதைவிட மிகப் பெரிய விசயம் ஒன்று மறைந்திருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

இயற்கை தன்னைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, தனக்கெனப் பல சுழற்சி வட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு காட்டில் உள்ள செடிகளை மான்கள் உண்ணும். மான்களைப் புலிகள் உண்ணும், அந்தப் புலிகள் இறந்து செடிகளுக்கு உரமாகும். இது காட்டில் இருக்கும் மிகச் சாதாரணமான ஒரு சுழற்சி வட்டம். இந்த வட்டத்தில் உள்ள ஏதாவது ஒன்று இல்லாமல் போனால், அந்தக் காடே அழிந்துவிடும் சாத்தியம் உண்டு. இயற்கையே உருவாக்கிய ஒரு எளிய வட்டம் இது. இது போலச் செயற்கையாக, தன் சுய லாபத்துக்காக மனிதனும் பல வட்டங்களை உருவாக்கியிருக்கிறான்.
தொழிலாளிகள் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, ஏசி, குளிர்பதனப் பெட்டி, மொபைல் ஃபோன் போன்ற பொருட்கள் தொழிலாளர்களுக்கும் பாவனைக்குத் தேவைப்படுகின்றன. இவையும் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளிலேயே உற்பத்தியும் செய்யப்படுகின்றன. இந்தப் பொருட்களை ஒரு வாடிக்கையாளனாக வாங்குவதற்கு, தொழிலாளர்களின் மாத வருமானம் போதாமையாகவே இருக்கும். இந்த நேரத்தில் வலிய வந்து கடன் தரும் வங்கிகளிடம் எந்தச் சிந்தனையுமில்லாமல் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்போது பெற்ற கடன் பணத்தை மாதாமாதம் செலுத்துவது பிரச்சினையாகின்றது. அதனால் ஓவர்டைமுடன் தங்கள் தொழிலை மேலும் முனைப்பாகச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தி மேலும் பெருக ஆரம்பிக்கிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகப் பெருக, சந்தையில் மேலும் மேலும் பலவித புதிய உபகரணங்கள் விற்பனைக்கு வர ஆரம்பிக்கின்றன. அவற்றை வாங்க வேண்டும் என்னும் ஆசை தொடர்ந்து தொழிலாளிகளைத் துரத்த, மீண்டும் வங்கிக் கடன்... மீண்டும் தொழிற்சாலை....  மீண்டும் ஓவர்டைம்....... மீண்டும் பொருட்கள்......  என ஒரு வட்டமாக இது இப்படியே சுற்றிக் கொண்டு இருக்கும்.
இந்த வட்டத்தைச் சரியாக நாம் கூர்ந்து பார்த்தால், இதில் பண ரீதியாக இலாபம் அடைவது இரண்டு பெரிய ஸ்தாபனங்கள் மட்டும்தான். தொழிற்சாலையின் பெருமுதலாளிகளும், வங்கிகளுமே இந்த வட்டத்தில் அதிக இலாபம் அடைபவர்களாக இருப்பார்கள். வங்கிகளும்  பெருமுதலாளிகளும் தமக்குள் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் மூலம் இந்த வட்டத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மேலே சென்று பார்க்கும் போது, இந்தப் பெருமுதலாளிகளே வங்கிகளின் பங்குதாரர்களாகவும், வங்கிகளே பெரிய தொழிற்சாலைகளை நடத்துபவர்களாகவும் இருப்பது தெரியவரும். ஆனால், தொழிலாளிகள் வாழ் நாள் முழுவதும் இயந்திரங்களோடு இயந்திரமாகத் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஆகிவிடுகிறார்கள். இதுவே அவர்கள் விதியாகவும் அமைந்துவிடுகிறது.
கலிஃபோர்னியாவில் லிவ்மோர் என்னுமிடத்தில் (Livemore, California) 2011ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி ஒரு பிறந்த தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. விசேஷமாக அமைந்த 110வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டம் அது. அந்தப் பிறந்த தினத்துக்கு உரியவர் யார் எனக் கேட்டால், மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அத்துடன் வாயடைத்தும் போவீர்கள். பிறந்த தினம் வேறு யாருக்கும் அல்ல, ஒரு சாதாரண மின்விளக்குக்குத்தான். நாம் ‘குண்டு பல்ப்’ என்று சொல்லும் ஒரு மின்விளக்கு அது. ஒரு சாதாரண குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், அதற்கு இந்தப் பிறந்த தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. “ஒரு குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் எரிந்ததா?” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வீடுகளில் பாவனையில் இருக்கும் குண்டு பல்புகள் எல்லாம் சில மாதங்களிலேயே பழுதடைந்து போவதுதான், நாம் இதுவரை கண்டு வந்த உண்மை. அதிக பட்சம் ஒரு வருடம் பாவித்தாலே அது பெரிய விசயம். ஆனால் இந்த லிவ்மோர் மின்விளக்கு மட்டும் எப்படி நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்திருக்க முடியும்? அந்தக் குண்டு பல்ப் நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்தது என்பது மட்டுமில்லாமல், ஒருநாளும் அணைக்கப்படாமல் தொடர்ச்சியாக எரிந்திருக்கின்றது. அதுதான் யாரும் நினைக்கவே முடியாத ஆச்சரியம்.
அமெரிக்கா, ஓஹையோவில் (Ohio) அமைந்த, ‘ஷெல்பி எலெக்ட்ரிக் கம்பெனியால்’ (Shelby Electric Company) 1895 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மின்விளக்கு. 1991 இல் லிவ்மோரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அது பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒருமுறை மட்டும், அந்த தீயணைப்பு நிலையம் திருத்தியமைக்கப்பட்ட போது, ஒரு வார காலம் அது எரியவில்லை. ஒரு மின்விளக்கு இவ்வளவு காலம் எரிவது சாத்தியமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறித்த சில நபர்களிடம் எப்படி எமாந்தோம் என்னும் தகவல்கலைச் சுமந்த சுவாரஷ்யம் அது.
கலிஃபோர்னியா குண்டு பல்ப் நூற்றுப் பத்து வருடங்கள் தாண்டியும் எரிந்து கொண்டிருப்பது தற்செயலாக இருக்குமோ என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கிறது. ‘ஷெல்பி’ கம்பெனியால் உருவாக்கப்பட்ட அந்த ஒரு மின்விளக்கு மட்டுமல்ல, அனைத்து மின்விளக்குகளுமே நூறு ஆண்டுகள் தாண்டியும், பழுதடையாமல் பாவிக்கக் கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்னும் தகவல் நமக்குக் கிடைக்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மின்விளக்குகள் நீண்ட காலம் பாவிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானத்தில் எட்ட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட இன்றைய நிலையில், ஏன் குண்டு பல்புகள் சில மாதங்களிலேயே பழுதடைகின்றன? அப்போதே நூறு ஆண்டுகள் பாவிக்கும்படி மின்விளக்குகளை உருவாக்கலாம் என்றால், இப்போது அதைவிட அதிக காலம் பாவிக்கும் படியாக அல்லவா உற்பத்தி செய்ய வேண்டும்? விஞ்ஞானம் எப்போதும் முன்னோக்கி நகருமேயல்லாமல், பின்னோக்கி நகர முடியாதே! இப்படியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிர்ச்சி தரும் பதிலை ஒன்றைப் போட்டு உடைத்தார் ஹெல்முட் ஹோகெ (Helmut Hoege) என்பவர்.  ஹெல்முட் ஹோகே ஒரு ஜெர்மனிய வரலாற்று ஆய்வாளர். 1982 இல் இவர் பேர்லினில் கண்டெடுத்த கோப்புகள் மூலமாக, மறைந்திருந்த மிகப்பெரிய உண்மைகள் வெளியே வந்தன.
 
1924 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி ஜெனீவாவில் இரகசியமாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கோர்ட், டை அணிந்த கணவான்கள் அந்தக் கூட்டமைப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே பணக்காரப் பெருமுதலாளிகள். உலகில் உள்ள மின்விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்புக்கு ‘ஃபோபுஸ்’ (Phoebus Cartel) என்று பெயரிடப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இதுதான். “உலகில் மின்விளக்குகளைத் தயாரிக்கும் அனைத்துக் கம்பெனிகளும், மின்விளக்குகளின் பாவனைக் காலங்கள் பற்றி எந்தவிதக் கவனமுமில்லாமல் செயல்படுகின்றனர். அதிக காலம் பாவிக்கும் மின்விளக்குகளால் கம்பெனிகளுக்கு நஷ்டமே ஏற்படுகின்றன. இதுவரை நீண்ட காலம் எரியக் கூடிய மின்விளக்குகளைத் தயாரித்த அனைத்து கம்பெனிகளும், இனி மின்விளக்குகளின் பாவனைக் காலத்தை 1000 மணித்தியாளங்களாகக் குறைக்க வேண்டும்“.
இந்தத் தீர்மானம் அந்தக் கூட்டமைப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் மின்விளக்குத் தயாரிப்பின் ஜாம்பவான்களான, ஹாலந்தின்  பிலிப்ஸ், ஜேர்மனியின் ஒஸ்ராம், பிரான்ஸின் லாம்ப் கம்பெனி என, அனைத்துக் கம்பெனிகளும் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது இதுவரை தரமாக இருந்த ஒரு பொருளை, மிகவும் மோசமான தரத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டமைப்பு எடுத்த முடிவு. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்துக் கம்பெனிகளும் இந்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்திற்கு பணிய வேண்டும். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இந்த கூட்டமைப்பின் சட்டத்தை மீறும் கம்பெனிகள் அபராதம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை உருவாக்கப்பட்டதுதான். அதுபோல அபராதப் பணமும் பல கம்பெனிகளிடமிருந்து அறவிடப்பட்டிருக்கின்றன.
1000 மணித்தியாளங்கள் என்பது மிகவும் குறைந்த பாவனைக் காலம். இரவுகளில் மட்டும் மின்விளக்குகளைப் பாவித்தாலும், ஒரு வருடத்திற்குள் பழுதடைந்து விடும் காலம். முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் இது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தம் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள், பழுதடைய வேண்டும் என்றே தயாரிக்கப்பட்ட மின் விளக்குகளையே இப்போதும் பாவித்து வருகின்றனர். வளர்ந்த விஞ்ஞானம் மக்களுக்கு எதிரான ஒரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கொடுமை இது. உலகப் பெருமுதலாளிகளிடம் நாம் ஏமாந்த கதை இது. இந்தக் கதை குண்டு பல்புடன் முடிவடைந்து விட்டது என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. தொடர்ந்தது. வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
1940ம் ஆண்டு ‘நைலான்’ (Nylon) என்னும் சிந்தட்டிக் ஃபைபர் இழை ஒன்று, ஆடைகள் உற்பத்தியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மிக வலிமையான இழையாக அது இருந்தது. அந்த இழையின் மூலம் பெண்களுக்கான ஸ்டாக்கிங்ஸை (Stockings) உருவாக்கினார்கள். குளிர் பிரதேசங்களான அமெரிக்கா, ஐரோப்பாவில் ஸ்டாக்கிங்ஸ் மிகவும் வரவேற்பைப் பெற்றது. எங்கு பார்த்தாலும் ஸ்டாக்கிங்ஸ் வாங்குவதற்குப் பெண்கள் வரிசையாக நின்று போட்டி போடத் தொடங்கினர். இன்றுவரை பெண்களுக்கு மிக அவசியமான பொருளாக ஸ்டாக்கிங்ஸ் இருக்கிறது. ஸ்டாக்கிங்ஸ் தயாரிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பெண்கள் அனைவருமே மகிழ்ச்சியில் இருந்தனர். இப்படி ஒரு ஆடைக் கண்டுபிடிப்பு அவர்களை உற்சாகத்தில் வைத்திருந்தது. ஆனால் நீண்ட காலம் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
நைலானினால் செய்யப்பட்ட ஸ்டாக்கிங்ஸ்கள் நீண்ட காலம் பாவிக்கக் கூடியதாக இருந்தது. எப்படி உபயோகித்தாலும் அதில் எந்தக் கிழிசலும் ஏற்படவில்லை. ஒரு ஸ்டாக்கிங்ஸ் பல ஆண்டுகள் பாவிக்கும் வண்ணம் வலுவானதாக இருந்தது. நைலான் என்னும் இழை அந்த அளவுக்கு வலுவான தரத்தைத் தன்னிடம் வைத்திருந்தது. நைலானினால் செய்யப்பட்ட ஸ்டாக்கிங்ஸ்களின் தரத்தை விளம்பரப்படுத்த, ஒரு காரை இன்னுமொரு காரால், இடையில் ஸ்டாக்கிங்ஸைக் கட்டியபடி இழுத்துக் காட்டினார்கள். அவ்வளவு வலுவானதாக அது இருந்தது. ஆனால் அந்த வலுவே ஸ்டாக்கிங்ஸ்கள் தயாரிப்பிலிருந்து நைலானைத் துரத்தியடிக்கவும் காரணமாயிற்று. நீண்ட காலங்களுக்கு ஸ்டாக்கிங்ஸ்கள் பழுதடையாமல் இருக்க, அதைத் தயாரிக்கும் கம்பெனிகளின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. ஒரு பெண் ஒரு முறை ஸ்டாக்கிங்ஸ் வாங்கினாலே போதும், அடுத்த தடவை வாங்கவே தேவையில்லை என்னும் நிலை ஏற்பட்டது. குண்டு பல்புக்கு என்ன ஆயிற்றோ அதுவே இங்கும் நடந்தது. கம்பெனிகளின் முதலாளிகள் சேர்ந்து நைலானினால் ஸ்டாக்கிங்ஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்குப் பதில், குறைந்த காலத்தில் பழுதடையக் கூடிய ஸ்டாக்கிங்ஸ்களை உருவாக்கினார்கள். தரமான பொருளைத் தூக்கியெறிந்து விட்டு, தரமில்லாத பொருள்கள் தயாரிக்கப்பட்டன. நைலான், ஆடை உற்பத்தியிலிருந்து காணாமல் போயிற்று. நம்மை அறியாமலே, நாம் ஆடை உற்பத்தியாளர்களிடம் அன்று ஏமாந்து போனோம். நாம் ஏமாந்த கதைகள் எல்லாம் பழைய கதைகள் என்று நினைத்து விட வேண்டாம். இப்போதும் கூட பல விதங்களில் ஏமாந்து கொண்டே இருக்கிறோம்.
கணினியை அனைவருமே இப்போது பாவித்துக் கொண்டு இருக்கிறோம். கணணி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதனுடன் கூடவே வைத்திருக்கும் கருவி, பிரிண்டர் (Printer). புதிய தொழில்நுட்பமான ‘இங்க்ஜெட்’ (Inkjet) பிரிண்டர்களைத்தான் நாம் தற்சமயம் கூடுதலாகப் பாவனையில் வைத்திருக்கிறோம். இந்தப் பிரிண்டர்களை நாம் பாவித்த சில காலங்களிலேயே, அவை திடீரெனப் பாவிக்க முடியாத நிலைக்கு உள்ளாகின்றன. திருத்துவதற்காக அதைக் கொண்டு சென்றாலும், அங்கு சொல்லப்படுவது ‘இதைத் திருத்த முடியாது. புதிய பிரிண்டர் வாங்குங்கள்’ என்பதுதான். நம் மனதில், “எலக்ட்ரானிக் பொருட்கள் என்றால் அப்படித்தான். திடீர் திடீரெனப் பழுதாகி விடும்“ என்ற நினைப்பு உருவாகியிருக்கும். ஆனால் உண்மையோ வேறு வடிவில் அங்கே பதுங்கியிருக்கும். அந்தப் பிரிண்டர் உண்மையில் பழுதடைந்ததா? அல்லது பழுதடைந்தது போன்ற தோற்றத்தை யாராவது நமக்குத் தோற்றுவிக்கிறார்களா?

பிரிண்டர்களை கழட்டி உள்ளே உள்ளே பார்க்கும் போது, ஒரு சிறிய சிப் (Chip) ஒன்று தேவையே இல்லாமல் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வரும். நாம் எவ்வளவு காகிதங்களைப் பிரிண்ட் பண்ணுகிறோம் என்பதை அந்தச் சிப் கணக்கெடுக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன், பிரிண்டர் தானாகவே பழுதடையும் வண்ணம் அந்தச் சிப் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிக்கையை ஒருவர் எவ்வளவு காலத்தில் அடைகிறார் என்பதைப் பொறுத்து அந்தப் பிரிண்டர் செயலிழக்கும். சிலருக்கு ஆறு மாதம் சிலருக்கு ஒரு வருடம். பழுதடைந்த அந்தப் பிரிண்டரைத் திருத்த முடியாமல், புதிய பிரிண்டரை நாம் வாங்குவோம். “இப்படியெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் யோசிக்கலாம். நான் இல்லாததையெல்லாம் கற்பனையாகச் சொல்கிறேனோ என்றும் நினைக்கலாம். அதனால் சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை உதாரணமாகச் சொல்கிறேன்.
சோனியின் வாக்மேன் (Sony Walkman) கலாச்சாரத்தை உடைத்தெறிய, ஆப்பிள் கம்பெனி (Apple Inc) ஒரு புது வகையான கண்டுபிடிப்பை வெளியிட்டது. அதன் பெயர் ‘ஐபாட்’ (IPod). இசை கேட்கும் இளைஞர்கள் உலகில் ‘பிக் பாங்க்‘ போல, மாபெரும் பிரளயத்தையே இந்த ஐபாட் உருவாக்கியது. ஐபாட் சந்தைக்கு வந்த காலங்களில் அதன் விலை 400 டாலர்களிலிருந்து 500 டாலர்கள் வரையிருந்தன. எந்த இளைஞனின் காதுகளிலும் ஐபாட்தான். ஆப்பிள் கம்பெனியின் விற்பனை இதனால் உச்சத்தை எட்டியது. ஆனால் ஐபாட்களை வாங்கியவர்களுக்கு பிரச்சினை பாட்டரி வடிவத்தில் வந்தது. ஐபாட்களின் பாட்டரி 8 மாதங்களிலிருந்து ஒரு வருடத்துக்குள்ளாக பழுதடைய ஆரம்பித்தது. ஐபாட்கள் பழுதடையாமல், பாட்டரி மட்டுமே பழுதடைந்தன. பாட்டரிகளை மாற்றுவதற்கென கொண்டு சென்றால், பாட்டரியைத் தனியாக மாற்ற முடியாது, புது ஐபாட்கள்தான் வாங்க வேண்டும் எனப் பதில் வந்தது. ஐபாட்களின் பாட்டரிகளைத் தனியாகக் கழற்றி மாற்றவே முடியாது. ஐபாட்கள் பாவித்தவர்களுக்கு அதன் போதையிலிருந்து மீள்வது ரொம்பக் கடினம். அந்த அளவு தரமான இசையை அது கொடுக்கும். அதனால் பணத்தைப் பற்றிக்  கவலைப்படாமல் புதிய ஐபாட்கள் வாங்குபவர்களே அதிகமாக இருந்தனர்.
இதை அவதானித்த இரண்டு இளைஞர்கள், ஐபாட்களின் பாட்டரிகளில் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தார்கள். பாட்டரிகள் பழுதடைவதில்லை. அவை சீக்கிரம் பழுதடைய வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்படுவது தெரிந்தது. உடன் அவர்கள் இணையத்தின் மூலமாக ஒரு விளம்பரம் கொடுத்தார்கள். ஐபாட்கள் பழுதடைந்தால் மிகக் குறைந்த விலையில் புதிய பாட்டரி மாற்றித் தருவதாக அந்த விளம்பரம் இருந்தது. குறுகிய காலத்தில் இலட்சக்கணக்கானோர் அந்த இணையத்தைப் பார்வையிட்டனர். இதை அறிந்த ஆப்பிள் கம்பெனி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இதைக் கேள்விப்பட்ட சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான எலிசபெத் பிரிட்ஸ்கெர் (Elizabeth Pritzker) அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாட வந்தார். வழக்கின் இறுதியில் 2003ம் ஆண்டு ஆப்பிள் ஐபாட்களின் பாட்டரிகளை மாற்றித் தருவதற்கு உடன்பட்டது. அத்துடன் ஆப்பிளின் உபகரணங்களின் காரண்டி காலத்தை இரண்டு வருடங்களாகவும் ஆக்கியது.
நம்மை முட்டாளாக்கி ஏமாற்றும் இது போன்ற தந்திரங்களைப் பெருமுதலாளிகள் காலம் காலமாகக் கடைப்பிடித்துக் கொண்டே வருகிறார்கள். தரமான பொருள்களின் உற்பத்திகளை மந்தமாக்கி, தரமற்று நமக்கு விற்பனை செய்யும் உத்திகளை கடைப்பிடித்து வரும் போதுதான், இதை விடப் பெரிய இலாபகரமான உத்தியொன்று அவர்களுக்கு உருவாகியது. அந்த உத்தியின் மூலம் அவர்கள் எதையும் தரமற்றுத் தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இதுவரை மக்களை அவர்கள் ஏமாற்றியது போக, மக்களே தானாக முன்வந்து ஏமாறும் உத்தியாக அது விரிவடைந்தது. அந்த உத்தியைத்தான் ‘டிசைன் அண்ட் பிராண்டிங்க்‘ (Design and Branding) என்பார்கள்.
ஆடைகள் உற்பத்தியிலோ, ஆபரணங்களிலோ, அன்றாடம் உபயோகிக்கும் பாவனைப் பொருள்களிலோ அடிக்கடி மாற்றங்களைக் கொண்டு வருவதே டிசைன் என்பதாகும். இன்று உடுக்கும் உடை பழுதாகினாலோ, பழுதாகாவிட்டாலோ நாளை அதைப் பாவிக்காமல் நாமே தூக்கியெறிந்துவிட்டுப் புது ஆடைகளை வாங்க முன்னுக்கு நிற்பதைத்தான் இந்த உத்தி செயல்படுத்துகிறது. சினிமா, தொலைக்காட்சிகளின் ஊடாக நாம் விரும்பும் ஒரு சினிமா நட்சத்திரமோ, விளையாட்டு வீரரோ, மாடல்களோ, பிரபலங்களோ தினம் தினம் மாறும் டிசைன்களை வாங்கும்படி, மறைமுகமாக நம்மை வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். நேற்று அணிந்த பழைய டிசைன் ஆடை, ஆபரணங்களை இன்று அணிந்தால் மிகவும் கேவலமானது என்னும் தாழ்வு மனப்பான்மையை நம்முள் ஆழமாக விதைப்பார்கள். நாமே இலகுவாக மாட்டிக் கொள்ளும்படி நேர்த்தியாக அவர்களின் வலைகள் விரிக்கப்படும். இது போலவே, ஒரு குறித்த பெயருடைய கம்பெனியின் பொருட்களை (Brand) வாங்குவது என்பது மரியாதைக் குரியது என்னும் மனநிலையை உருவாக்குவார்கள். அந்த பிராண்ட் வாங்கினாலே தரமாகத்தான் இருக்கும் என்னும் தவறான எண்ணமும் நம்முள் விதைக்கப்படும்.
இதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கென்றே பெருமுதலாளிகளால் ஒரு மிகப்பெரிய உலகமே உருவாக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்கள், டி.வி. ஷோக்கள், மாடல்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கும் அந்த உலகம். அந்த உலகம் தீர்மானிக்கும் ஒவ்வொன்றையும் பிரபலங்களில் உள்ள மயக்கத்தின் காரணமாக ஏற்றுக் கொண்டு ஏமாற நாம் தயாராகக் காத்துக் கொண்டிருப்போம். நாம் பாவிக்கும் எலக்ட்ரானிக் பாவனைப் பொருட்களில் கூட, புது மாடல் வந்துவிட்டால், பழைய மாடல்களைத் தூக்கியெறிந்து விட்டு புது மாடல்களை வாங்கத் துடிக்கிறோம். இதைச் சரியாகக் கவனத்தில் எடுத்து, வருடத்துக்கு ஒரு புது மாடலென அவர்களும் தயாரித்தபடி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெருமுதலாளி களுக்கு ஒரு கருவியைத் தானாகப் பழுதடைய வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் நம்மை ஏமாற்றியது போக நாமே அவர்களிடம் ஏமாறத் தயாராக இருக்கிறோம்.
ஒரு மொபைல் ஃபோனின் பயன்பாடு என்ன? ஒருவருடன் மற்றவர் தொடர்பு கொள்வதுதானே! ஆனால் அதை எல்லாம் தாண்டி ஒரு மொபைல் ஃபோனில் இருக்கவே தேவையில்லாத அனைத்துப் பயன்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புது மாடல்களிலும் ஒவ்வொரு புதுப் பயன்பாடுகளை இணைத்து அதன் வடிவத்தில் சிறிது மாற்றம் செய்து விற்பனைக்கு வந்து கொண்டே இருக்கும். நாமும் அவற்றை வாங்கியபடி இருப்போம். இந்த டிசைன், பிராண்ட் கலாச்சாரம் புகுந்து கொள்ளாமல் சில ஆடைகளை வாழ்நாள் முழுவதும் பாவனைக்கு வைத்திருக்கும் மக்கள் இன்னும் நம் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழகு என்பதன் அர்த்தங்கள் வேறு. ஆனால் நகர்ப்புறவாசிகளான நமக்கு, அழகென்பதை எங்கேயோ இருக்கும் நான்கு பேர்களே தீர்மானிக்கிறார்கள். இதுதான் ஸ்டைல், இதுதான் இன்றுள்ள நாகரீகம் என்று யாரோ தீர்மானிக்கும் பாதையில் செல்கிறோம். இதுதான் அழகு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது யார்? அல்லது அவர்கள் சொல்வதுதானா உண்மையில் அழகு? நேற்று இறுக்கமான உடை அழகென்று சொன்ன அதே நபர்கள் இன்று ‘தொள தொள’ உடைதான் அழகென்று சொல்லும் போது, நாம் ஏன் சிந்திக்கத் தவறுகிறோம். ஒரே நபர் நேற்று இறுகிய உடையுடனும், இன்று தொள தொள உடையுடனும் எப்படி அழகாக இருக்க முடியுமா? இப்படி ஏமாற நமக்கு யார் கற்றுக் கொடுத்தது?
மொத்தமாகப் பார்க்கும் போது நாம் ஏமாறுவதால் அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்களா? இல்லை அவர்கள் ஏமாற்றுவதால் நாம் அவர்களிடம் ஏமாறுகிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக