அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!
அரபு உலகத்திலும், வட ஆப்பிரிக்க நாடுகளான துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நடந்த வண்ணப் புரட்சிகளைத் தொடர்ந்து லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோன்மைக்கு ஒரு முடிவு கட்டப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்ட ஒரு கிளர்ச்சிப் படை, கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் பெங்காஸி, அல் பாய்டா, தார்னா மற்றும் பானி வாலித் போன்ற கிழக்கு லிபிய நகரங்களில் சிறிய அளவில் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். பிப்ரவரி 15 வாக்கில் ஒரு முறைப்படுத்தப்பட்ட கொரில்லா குழுவாக தம்மை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களை ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’ என்று அழைத்துக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கு எகிப்தின் நவீன ஆயுதங்களும் போர்த் தளவாடங்களும் கிடைக்கிறது.
கிளர்ச்சியாளார்கள் கட்டுப்படுத்திய சிர்ட்டே வளைகுடா மற்றும் கிழக்குப் பகுதியை உடனடியாக அங்கீகரிக்கும் மேற்கு நாடுகள், உடனடியாக தமது இராணுவ ஆலோசகர்களையும், தூதரக அதிகாரிகளையும் இரகசியமாக அனுப்புகிறார்கள். லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ம் தேதி அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் லிபிய போரில் ஜனநாயகத்தைக் ‘காப்பதற்கும்’ ‘மனிதாபிமான அடிப்படையிலும்’ அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் பங்கேற்கின்றன.
சுமார் 8000 முறைகளுக்கு மேல் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறியரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.
இப்படி வான், கடல், நிலம் என்று திரும்பிய பக்கமெல்லாம் லட்சக்கணக்கான லிபியர்கள் செத்து விழுந்தார்கள். கடந்த 23-ம் தேதி தரை மார்க்கமாக லிபிய தலைநகரம் திரிபோலியை நோக்கிய முன்னேறிய கூலிப்பட்டாளத்திற்கு வான் மார்க்கமாக விமானத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா உதவி புரிந்துள்ளது. அதே நேரம், பெங்காஸியில் இருந்து கடல் மார்க்கமாகவும் அழைத்து வரப்பட்ட கூலிப்படைகள் திரிபோலி நகரைச் சுற்றி வளைக்கின்றன. இதில் கடந்த 23-ம் தேதி, லிபிய அதிபர் முவாம்மர் கடாஃபி தலைமறைவாகி விட்டதாகவும், தலைநகர் திரிபோலியின் கட்டுப்பாடு தம்மிடம் இருப்பதாகவும் கூலிப்படையினர் அறிவித்துக் கொண்டனர்.
ஈராக் மற்றும் ஆப்கானில் காலை விட்டு மாட்டிக் கொண்டதைப் போல் அல்லாமல் உள்நாட்டிலேயே கூலிப்படையினரை உருவாக்கி லிபியாவை மறைமுகமாக ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈராக் ஆப்கான் போல் அல்லாமல், பிறருடைய பங்கேற்புடனும் செலவிலும் தனது போரை நடத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே, நேட்டோ நாடுகளின் படைகள், போர்த் தளாவாடங்கள் மற்றும் படைத் தளங்களைத் தவிர்த்து ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், சுவீடன், சவூதி போன்ற நாடுகளின் படைகளும் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போரில் பிரிட்டன் மட்டுமே குறைந்தபட்சம் 4 பில்லியன் யூரோக்களை செலவிட நேரிடும் என்று மால்கம் சாமர்ஸ் என்கிற பாதுகாப்புத் துறை வல்லுனர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவின் ‘விடுதலை’ என்பது உலக அளவில் உள்ள எண்ணை ரிசர்வில் 60% அமெரிக்காவின் கையில் கொண்டு வந்து சேர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமெரிக்கக் கைத்தடிகளுக்கு லிபியா போன்ற ஒரு சில நாடுகள் தான் இன்னமும் அடிபணியாமல் உள்ளன. இந்தப் போரின் துவக்கத்திலேயே ‘இடைக்கட்ட அரசு’ ஒன்றை அமைத்த கிளர்ச்சியாளர்கள், தமது வங்கிகளைத் திறந்து விடுவது குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கிளர்ச்சியாளர்கள் பெங்காஸி பிராந்தியத்தை மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஆரம்ப வாரங்களிலேயே(மார்ச் 19ல்), பெங்காஸி மத்திய வங்கியை லிபியாவின் இடைக்கால மத்திய வங்கியாக அறிவித்தனர். தேசத்தின் பணக் கொள்கைகளை இவ்வங்கியே தீர்மானிக்கும் என்றும் அறிவித்தனர். மேலும், லிபியாவின் எண்ணைக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் லிபிய ஆயில் நிறுவனத்தையும் மார்ச் 19-ம் தேதியே ஆரம்பித்து அறிவித்துக் கொண்டனர்.
லிபியாவின் எண்ணை வர்த்தகத்தில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும் இதுவரையில் அது முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. லிபிய நிறுவனங்களோடு கூட்டாக எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மேற்குநாடுகள் அதன் லாபத்திலிருந்து 35 சதவீதத்தை லிபியாவிலேயே விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. மேலும், லிபியாவோடான எண்ணை வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடத்தப்படாமல் லிபிய தினாரிலேயே நடந்து வந்தது.
ஆக, ஏகாதிபத்தியத்தின் சர்வதேச நிதிமூலதன ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் அதற்கு வெளியே லிபியாவின் வங்கித்துறை தனித்துச் செயல்பட்டு வந்ததும், அதன் எண்ணை வளங்கள் முழுமையாகத் திறந்து விடப்படாததும் தான் இன்றைக்கு அமெரிக்கா லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கான அடிப்படையான முகாந்திரம்.
வங்கி மற்றும் எண்ணை வளம் மட்டுமல்லாமல், யுரேனியம், தங்கம் என்று அள்ள அள்ளக் குறையாத லிபியாவின் இயற்கை வளங்கள் ஏகாதிபத்தியங்களின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. முவாம்மர் கடாபியின் லிபியா இன்று விழுந்து விட்டது. மேற்கத்திய ஊடகங்கள் மனிதாபிமானத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், லிபியர்களின் லிபியா இன்னமும் விழுந்து விடவில்லை.
தாலிபான்களுக்குப் பிந்தைய ஆப்கானையும், சதாமுக்குப் பிந்தைய ஈராக்கையும் கேட்பார் யாருமின்றி சுரண்டிக் கொழுக்கலாம் என்ற பேராசையில் அங்கே காலை விட்ட அமெரிக்காவிற்கு இன்று தான் கால் வைத்ததுள்ளது புதை குழி என்பதைக் ஆப்கானியர்களும் ஈராக்கியர்களும் உணர்த்தி வருகிறார்கள். இதோ இன்று லிபியர்களின் முன்னேயும் ஒரு பெரும் சவால் காத்துக் கிடக்கிறது. தமது இரத்தத்தில் இயல்பான அமெரிக்க எதிர்ப்பையும் அவ்வாறான ஒரு வரலாற்று மரபையும் கொண்டுள்ள அவர்கள் அமெரிக்காவுக்குக் கற்றுக் கொடுக்கப் போகும் பாடங்களை இனிமேல் தான் உலகம் காணப் போகிறது.
அடக்குமுறை என்றுமே வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அடக்கியாளும் மேலாதிக்க வெறி கொண்டவர்களெல்லாம் இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அதே வரலாற்றின் குப்பைத் தொட்டி அமெரிக்காவின் வரவுக்காகக் காத்துக் கிடக்கிறது.