செப்டம்பர் 15, 2011


பாலஸ்தீன் - சுதந்திரமும் அரபு எழுச்சிகளும்.


    முழு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அண்மைய நிகழ்வான அரபுநாடுகளின் சுதந்திர எழுச்சி நிச்சயம் இந்த நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய ஒரு மாபெரும் நிகழ்வாகும்.இந்த சுதந்திர எழுச்சி மத்திய கிழக்கின் நீண்ட கால பிரச்சனையான பலஸ்தீன பிரச்சினையிலும் ஒரு திருப்பத்தை உண்டாக்கியிருப்பது இன்னுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.நாம் இப்போது அந்த திருப்பங்களின் ஆரம்பத்தில் இருக்கிறோம்.

     அரபு நாடுகளின் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி விடுதலைக்காக போராடும் அரபு இளைஞர்கள் ஒன்றை புரிந்து கொண்டுள்ளனர்,பாலஸ்தீன்  தொடர்பான உண்மையான பிரச்சனை இஸ்ரேல் மட்டுமல்ல,பலஸ்தீனை சூழ்ந்துள்ள அராபிய நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று.முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எதிர்ப்பை வெறும் வாயளவில் சொல்லிவிட்டு அவர்களுடன் மிக நெருக்கமாக கொஞ்சிக் குலாவி வருவது வேதனைக்குரியது.(அண்மைய லிப்ய நிகழ்வில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத முஸ்லிம் பற்றி நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.)

 அராபிய-இஸ்ரேல் பிரச்சனையில் அதாவது பலஸ்தீன பிரச்சனையில்(மஸ்ஜிதுல் அக்சாவை மீட்பது முழு முஸ்லிம் உம்மாவினதும் கடமையாகும் ஆனால் அது அராபிய-இஸ்ரேல் பிரச்சனையாக மாறி தற்போது வெறும் பலஸ்தீன பிரச்சனை என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.).அரபுகள் நீண்ட காலமாக மிகப்பெரிய விலையை கொடுத்துவந்துள்ளனர்.

 அராபிய முஸ்லிம் அரசாங்கங்கள் தம் நாட்டு இராணுவம் சம்பந்தமாக பல பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகிறது,இதனூடாக தம் நாட்டு மக்களை ஒரு இராணுவமயமாக்கலின் கீழ் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.இதன் காரணமாக அரபு நாட்டு மக்களின் சிறந்த சிந்தனை அதனை ஒட்டிய செயல்பாடுகள் என்பன திட்டமிட்ட வகையில் தடுக்கப்படுகிறது.இதன் விளைவே அரபு நாடுகளில் அறிவு வீதம் குறைவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தில் பின்னடைவு போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் மேடையேறுகிறது.இப்படிப்பட்ட பல கோணங்களில் எலும்புகள் உடைக்கப்பட்ட அராபிய சமூகம் பாலஸ்தீனிய பிரச்சனையை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.


 பாலஸ்தீன் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்ட உண்மையான முஸ்லிம் ராஜ்ஜியங்களால் சூழப்பட்டு இருந்தால்,நிச்சயம் மத்திய கிழக்கு தற்போதுள்ள நிலையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புண்ணிய பூமியாக காட்சி தந்திருக்கும்.அரபு நாட்டு அரசாங்கங்கள் தமது நாட்டு மக்களின் எண்ணத்தைப் பொறுத்து நடக்கவேண்டும்.அண்மையில் இடம்பெற்ற இரு நிகழ்வுகள் பலஸ்தீன பிரச்சனையை மீண்டும் சர்வதேச அரசியலில் அழுத்தமாக பேசவைத்துள்ளது.ஒன்று காஸாவுக்கான அத்த்யாவசிய  பொருட்களை ஏற்றிச்சென்ற துருக்கிய கப்பலான மாவிமர்மாரா கப்பலுக்கான தாக்குதல்.மற்றது இஸ்ரேல் - எகிப்து எல்லையில் இஸ்ரேல் படையினரால் எகிப்து இராணுவ வீரர்கள் மீதான துப்பாகித் தாக்குதல்.


 மாவிமர்மாரா தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஆதாரவான ஆய்வை வெளியிட்டவுடன் துருக்கி இஸ்ரேலுடனான அனைத்துவிதமான இராஜதந்திர உறவுகளையும் துண்டித்துக்கொண்டது.இதற்காக இஸ்ரேல் மன்னிப்பும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் எகிப்து விடயத்தில் இஸ்ரேல் தம்மால் நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்புக்கேட்டது.ஆனால் நாட்டின் மக்கள் இதை மன்னிப்பதாக இல்லை.

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போட்டுள்ள இருஅராபிய நாடுகளில் எகிப்தும் ஒன்று.எகிப்தில் இஸ்ரேல் தொடர்பான கோபங்கள் எழுந்தால் அதை முபாரக் தனித்து வந்தார்.ஆனால் தற்போது முபாரக் இல்லை,அதனால் இந்த கோபம் தனிய நீண்ட நாள் எடுக்கும்.கடந்த வெள்ளி(09-09  முதல் கைரோவில் உள்ள
இஸ்ரேல்ய தூதரகத்தை முற்றுகை இட்ட எகிப்து இளைஞ்சர்கள் சனிக்கிழமை காலையுடன் இஸ்ரேல் தூதரகத்துக்கு தாக்குதல் நடத்தினர்.இதன்காரணமாக இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எகிப்தில் இடம்பெற்ற
இந்நிகழ்வு இஸ்ரேலுக்கு நிச்சயம் ஒரு பலமான தகவல் ஒன்றை தெரிவித்திருக்கும்.

 அரபு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் விளைவாக,அந்நாட்டு இளைஞ்சர்கள் தம் நாடுகளை உண்மையான ஜனநாயகத்தின்பால் வருமாறு கோசம் எழுப்பிவருகின்றனர்,இதன் மூலம் தம் சகோதர நாடான பாலஸ்தீனுக்கும் அங்குள்ள மக்களுக்கும் ஏதாவது செய்ய முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.தற்போது பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உலகம் முழுவதும் பலஸ்தீனுக்கு ஆதரவு திரட்ட பயணம் மேட்கொன்டுள்ளார்,இவரின் மிக முக்கிய நோக்கம் இம்மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனுக்கான வாக்கேடுப்பெயாகும்.(இன்ஷா அல்லாஹ் ஒரு மாற்றம் ஏற்படட்டும்)


 இம்மாதம் 14 (நேற்று) ஆம் திகதி பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய நாட்டுக்கான அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளார்.இந்த புதிய நாட்டுக்கான வரைபடத்தில் காசா,மேற்கு கரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் என்பன அடங்கியுள்ளன,இவை உண்மையான பலஸ்தீன பூமியின் வெறும் 22 % வீதமேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக 1947 இல் இம்மாதிரியான பிரேரணை வந்தபோது,ஐக்கிய நாடுகள் சபை இரு நாட்டுத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது,அப்போது அராபியர்கள்"“Either all of Palestine, or nothing!”என்று கர்ஜித்தனர்.

இதன்பிறகு அராபியகள் இஸ்ரேலுடன் போருக்குச் சென்றனர்.ஆனால் கடைசியில் அது இன்றுவரை 63 வருடங்களாக நீண்டு எதுவித பலனைடும் தராமல் வெறும் இழப்புக்களையே பலஸ்தீன மக்களுக்கு தந்தது.இன்றைய தேதிவரை உலகில் 120 நாடுகள் பாலஸ்தீனுக்கான ஆதரவை கொடுத்துள்ளது.இந்த நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் உட்பட 2011 வரை பலஸ்தீனை அங்கீகரிக்காத சிரியாவும் அடங்கும்.சிரியா ஐக்கிய நாடுகள் சபையால் நிரனயித்த பலஸ்தீனை ஏற்காமல் இருந்து வந்தது.சிரியாவின் கோசமும் “Either all of Palestine, or nothing!”ஆகவே இருந்தது.

 இந்த பலஸ்தீன ராஜ்ஜியத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதல் படியாக,தமக்குள்ள இருந்த வேறுபாட்டை ஒடுக்கித்தள்ளியது பாதாவும் ஹமாசும்.இதன் விளைவாக 2007 முதல் பிரிந்திருந்த காசாவும் மேற்குக் கரையும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன.பாலஸ்தீனுக்கான ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்தால் பாலஸ்தீனின் வழக்குகளை அனைத்துலக நீதிக்கான நீதி மன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் என்பவற்றிக்கு எடுத்துச் செல்ல முடியும்.மேலும் பலஸ்தீனிலிருந்து அதிகார்வபூர்வ தொலைக்காட்சிச் சேனல்களை இயக்கவும் முடியும்.


 இஸ்ரேல் தமக்கு வரவிருக்கும் சவால் பற்றி நன்கு விழிப்புடனே உள்ளது.இது பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பின்வருமாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்,"செப்டெம்பர் மாதம் உச்சத்தை அடையவுள்ள இராஜதந்திர-அரசியல் சுனாமி பற்றி நம் மக்களில் பல பேர் தெளிவற்றுள்ளனர்,நாம் ஒரு நாடென்ற அடிப்படையில் பாரிய சிக்கலோன்ருக்கு முகம் கொடுக்கவுள்ளோம்,அந்த சிக்கலுக்கு முகம் கொடுக்காமல் செயலற்று இருந்தால் நாம் உலக அரங்கில் நிச்சயம் தனிமை படுத்தப்படுவோம்."என்றார்.

1967 இல் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் ஒரு பலஸ்தீன பலஸ்தீன அரசு உருவாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு இருந்தாலும் ஐக்கிய அமெரிக்காவின்  நிர்வாக அலகுகள் மற்றும் சட்டக்கிளைகள்  சுதந்திர பலஸ்தீன தேசம் உருவாக தமது எதிர்ப்பை காட்டியவண்ணம் உள்ளன,சுதந்திர பலஸ்தீன தேசம் உருவாகினால் உலக அரங்கில் இஸ்ரேலின் மதிப்பு பாதிக்கும் என்பதே இவர்களின் கவலையாகும்.


   ஒரு பலஸ்தீன அரசு வெறுமனே அங்கீகரித்தால் போதுமா ? இதுவே இன்று பலரின் கேள்வியாகும்,ஏனெனில் பலஸ்தீன அகதிகள் பிரச்சனை தீர்க்கப்படாமல்,இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீன விமான  நிலையம்,துறைமுகம் என்பன விடுவிக்கப்படாமல் ஒரு சுதந்திர நாடு சாத்தியமா ???.பலஸ்தீன சட்டமியற்றுபவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் ஒருவேளை தமக்கு சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை தந்தால் அந்த காலம்கடந்த வாய்ப்பினை மிகவும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.

 பலஸ்தீன விமான நிலையம்.


பல பேர் ஹமாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 1967 இன் எல்லைகளுக்கு தமது ஆதரவைத் தரமாட்டார்கள் என்று நினைத்தனர்.ஆனால் ஹாமாஸ் எகிப்திலிருந்தும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலிருந்தும் கிடைத்த உத்தரவாதங்களின் அடிப்படையில் 1967 இன் எல்லைகளை ஏற்றுக்கொண்டது.

 அராபிய எழுச்சிகளிளிருந்து ஒரு உண்மை புலனாகிறது,அது தான் ஒரு நாளும் நாட்டு மக்களின் நியாயமான அபிலாசைகளை நிரந்தரமாக புறக்கணிக்க முடியாது என்று.எப்படி அறுபது வருடங்களாக பலஸ்தீன மக்கள் தங்களை சட்டரீதியற்ற முறையில் ஆக்கிரமித்துள்ள கொடிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடினார்களோ அதை போலவே மற்ற அரபு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி தங்களை ஆளும் சர்வாதிகாரிகளை எதிர்த்து போர் கொடி தூக்கினார்கள்.அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்.பலஸ்தீனுக்கு தற்போது அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஆயுதப்போரட்டங்களினால் பலன் ஏதும் வரப்போவதில்லை.எனினும் இதுவும் ஒரு வகை இன்திபாதவாக கருத முடியும்,ஒரு வித்தியாசம் ஆயுதங்கள் ஏந்தாத இராஜதந்திர இந்திபாதா.இந்த ராஜதந்திர நகர்வு ஒருவேளை 60 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி பெற்ற வெற்றியை விட பல மடங்கு பெரிய வெற்றியை தந்தால் (இன்ஷா அல்லாஹ்)  அது நிச்சயம் மத்திய கிழக்கில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை நிச்சயம் உண்டாக்கும்.(இன்ஷா அல்லாஹ்).

ஒரு பலஸ்தீன தேசத்தின் உருவாக்கம் அரபுலகின் ஜனநாயக எழுச்சியின் ஒரு பாகமாக இருக்குமா ???


Special Thanks 
- AL-Jazeera
- Middle East Views.


தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.

உங்கள் நண்பன் 
முஹம்மத் ஹிமாஸ் நிலார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக