செப்டம்பர் 13, 2011

சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

கலையரசன்  

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளோ, நூல்களோ பண்டாரநாயக்கவின் அரசியற் செயற்பாடுகளை அதிகமாகவே விமர்சிப்பதுண்டு. ஒரு வகையில், சிங்களவர்கள், தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்கியதில் பண்டாரநாயக்கவின் பங்களிப்பு பெருமளவு இருந்துள்ளது. இன முரண்பாடு என்ற வித்து, ஆலமரமாக வளர்ந்து இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட போரில் முடியும் என்று, அன்றைய நாட்களில் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானதும் கொண்டு வரப்பட்ட, "சிங்களம் மட்டும்" சட்டம் தான், இனப்பிரச்சினையின் மூலகாரணம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக மொழியை அடிப்படையாக கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது ஒருதலைப் பட்சமான பார்வை மட்டுமே. இலங்கையில் (தமிழ்) மொழி மீதான அடக்குமுறை தான் பிரச்சினைக்கு காரணம் என்று நிறுவுவதற்கு, அந்த வரலாற்றுத் தகவல் பயன்படுகின்றது.

இருப்பினும், முதலில் கொண்டு வரப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டம், பின்னர் தமிழ்க் கட்சிகளின் அழுத்தம் காரணமாக "சிங்களமும், தமிழும்" சட்டமாக மாற்றப்பட்டது. இந்த உண்மை இலங்கைக்கு வெளியே பரவலாக அறியப் படவில்லை. அதாவது பண்டாரநாயக்க ஆட்சிக்கு வரும் வரையில், இலங்கையில் ஆங்கிலம் மட்டுமே கல்வி, நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்களத்தை தேசிய மொழியாக்கும் சட்டமூலம், தமிழர் அபிலாஷைகளை மதிக்காமல் கொண்டு வரப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், "சிங்களத்தோடு, தமிழையும்" அரச கரும மொழியாக்கினார்கள். அதாவது இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் தமிழும், நாட்டின் பிற பாகங்களில் சிங்களமும் நிர்வாக மொழியாகியது. இலங்கை முழுவதும் ஆங்கிலத்தில் கல்வி கற்ற காலம் மாறி, தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலும், சிங்களப் பிள்ளைகள் சிங்களத்திலும் கல்வி கற்றனர். இவ்வாறு தாய் மொழியில் கல்வி கற்ற குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களானதும் நீண்டதொரு இனக்குரோதப் போரில் ஈடுபட்டார்கள்.


பொதுவாக அரசியல்வாதிகள் தமது குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிவார்கள். இத்தாலியின் அரசியல் சாணக்கியனாக போற்றப்படும் மாக்கியவல்லி, "அரசன் எத்தகைய பாதகச் செயலையும் தனது இருப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்." என்று தத்துவங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். நிறவெறி, இனவெறி, மதவெறி எல்லாமே உலக நாடுகளின் அரசுகளின் ஸ்திரத் தன்மைக்கு பயன்பட்டுள்ளன. ஒரு அரசு தான் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறுபான்மை இனத்தை பகைத்துக் கொள்கின்றது. இதன் மூலம், நாகரிக சமூகம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வரும் சமமற்ற பொருளாதார பங்கீட்டை மறைக்க முடிகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையை, இத்தகைய பின்னணியுடன் புரிந்து கொள்ளா விட்டால், இனவாத சகதிக்குள் மாட்டிக் கொள்ள நேரிடும். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகள் கூட இன முரண்பாடுகளை பிரதிபலிப்பதை வெளிநாட்டவரும் அவதானித்துள்ளனர். குறிப்பாக பண்டாரநாயக்க பற்றிய பார்வை, அறிவுஜீவி சமூகத்தை கூறு போட்டுள்ளது. சிங்கள அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை முற்போக்காளராக கருதுகின்றனர். அதே நேரம், தமிழ் அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை பேரினவாதியாக கருதுகின்றனர். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடு
"A 9 Highway" என்ற சிங்கள-தமிழ் திரைப்படத்தில் தத்ரூபமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில், பொதுவாக தமிழ் அறிவுஜீவிகளின் எழுத்துக்களையே படிப்பது வழக்கம். அவர்கள் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் எழுதினாலும், இனப்பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்னர் ஆரம்பமானதாகவே குறிப்பிடுவார்கள். தீவிர தமிழ் தேசியவாதிகள் என்றால், மகாவம்சம், எல்லாளன் காலத்திற்கு சென்று, இனப்பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். இலங்கையின் மத்திய பகுதியான கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட காலத்தில் (1815) இருந்து, நாட்டில் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம் தோன்றியுள்ளது. கடைசி கண்டி மன்னன், தென்னிந்திய நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழன். சிங்கள மக்களை மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழ வைப்பதற்காக, "கண்டி தமிழ் மன்னனின் கொடுங்கோன்மை" பற்றி பிரச்சாரம் செய்தனர். இந்திய மரபின் படி, இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர். மதம் அல்லது சாதி ஆதிக்கம் செலுத்திய பண்டைய இலங்கைச் சமூகத்தினுள், ஆங்கிலேயர்கள் மொழித் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள். 


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரையோரச் சிங்களவர்களுக்கும், கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவியது. ஒரே மொழியை பேசிய இரண்டு சமூகங்களும், வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டிருந்தனர். நீண்ட கால காலனிய ஆட்சி காரணமாக, கரையோர சிங்களவர்கள் கிறிஸ்தவர்களாகவும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவோராகவும் மாறியிருந்தனர். அதற்கு மாறாக, கண்டிச் சிங்களவர்கள் பௌத்தர்களாகவும், பாரம்பரிய கலாச்சாரத்தை பேணுவோராக காணப்பட்டனர். இதை விட, அன்று யாரும் தம்மை சிங்களவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழ்ப் பிராமணர்கள் என்ற கதை ஒன்றுண்டு. பண்டாரநாயக்கவின் உறவினர்கள் பலர், தமிழர்களுடன் கலப்பு மணம் புரிந்துள்ளனர். இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர், சிங்கள தேசியவாதத்தை உருவாக்கியதும், சிங்கள பேரினவாதத்தின் தந்தையாக மாறியதும் வரலாற்று முரண்நகையாகும்.


பண்டாரநாயக்க, சிங்கள தேசியத்தின் உருவாக்கத்தை, அன்றைய காலவோட்டத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்ட முனைந்தார். அதே நேரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்பை பேணி வந்தார். காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவை தலைமை தாங்கும் சக்தி உள்ளதெனக் காட்டுவதற்காக, இந்திய (ஹிந்தி) தேசியத்தை உருவாக்க அரும்பாடுபட்டது. இலங்கையில் அதே போன்றதொரு முயற்சியில் பண்டாரநாயக்க ஈடுபட்டார். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவும் தன்னை அரசமைக்கும் தகமை பெற்ற தலைவராக காட்டிக் கொள்ள விரும்பினார். ஆனால், அவரது காலம் முழுவதும் இலங்கை போல்ஷேவிக்குகளை (மார்க்சியர்கள்) எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே செலவிட்டார். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தை ஒன்று சேர்த்த கட்சி ஒன்றை ஸ்தாபித்தார். "ஐக்கிய தேசியக் கட்சி" என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான கட்சி ஒன்றை ஸ்தாபித்து விட்டு, சுதந்திரத்திற்கு தயாராக காத்திருப்பதாக ஆங்கிலேயருக்கு அறிவித்தார்.


இவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. ஆங்கிலேயர்கள் தமக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஏற்ற நபர்களை தேடிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பிரதிநிதிகள், ஏதோ ஒரு வகையில், பெரும்பான்மை இலங்கையரைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். டி.எஸ். சேனநாயக்க ஒரு விதமாகவும், பண்டாரநாயக்க வேறொரு விதமாகவும் தமது "ஆளும் தகமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இரண்டு வேறு பட்ட சமூகங்களான கரையோரச் சிங்களவர்களையும், கண்டிச் சிங்களவர்களையும், பண்டாரநாயக்க சிங்களவர்கள் என்ற பெயரில் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயருக்கும் அஃது உவப்பான சங்கதி தான். "காலனியாதிக்க எதிர்ப்பாளர்களான கண்டிச் சிங்களவர்களை, காலனிய விசுவாசிகளான கரையோரச் சிங்களவர்கள் ஆளப்போகின்றனர். இதனால் காலனிய எதிர்ப்புணர்வு மழுங்கடிக்கப்படும்." பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இதை விட நல்ல செய்தி வேறென்ன கிடைக்க முடியும்?

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக