ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
(பகுதி : ஐந்து)
இனம் என்ற சொல்லாடலின் போதாமைகள் :
இன்று
பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, "இனம்" என்று புரிந்து
கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி
அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின்
ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள்,
நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல்,
பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை
முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை
மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச
அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப்
பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய
மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி
மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.
இலங்கை
இடதுசாரிகளால், நாடு தழுவிய பாட்டாளி மக்களின் எழுச்சியை உருவாக்க
முதலாவது தடையாக இருந்தது, மொழி தான். இங்கிலாந்தில் கல்வி கற்ற,
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூட, உழைக்கும் மக்களுக்கு புரியாத
ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினார்கள். பழமைவாதத்தில் ஊறிய உள்நாட்டு மக்கள்,
மார்க்சியத்தை மேலைத்தேய இறக்குமதியாக பார்த்தார்கள். இதனால், சிங்கள
பேரினவாதத் தலைவர்கள், இலகுவாக இடதுசாரிகளைத் தாக்க முடிந்தது.
"இடதுசாரிகள் நாஸ்திகர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கோயில்களை,
விகாரைகளை இடித்து தள்ளி விடுவார்கள்." இவ்வாறான பிரச்சாரம் மத நம்பிக்கை
கொண்ட மக்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இடதுசாரிகளை தாக்கிய சிங்களத்
தலைவர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர். "கடவுள் நம்பிக்கையற்ற
இடதுசாரிகளை" கண்டு பயந்த பெரும்பான்மை மக்கள், சிங்கள இனவாதம் பேசிய உதிரி
அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார்கள். 1947 பொதுத் தேர்தலில், சுயேச்சை
வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள்
பலர், சிங்கள-பௌத்த இனவாதிகள். அவர்களின் நோக்கம்: "சிங்கள மொழியை
உத்தியோகபூர்வ மொழியாக்குவது. பௌத்த மதத்தின் கடந்த கால மேன்மையை
மீட்டெடுப்பது." சுருக்கமாக, சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல் மூலம்,
சாமானியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற
அரசியல், தமிழ் பேசும் வடபகுதியில் நடந்து கொண்டிருந்தது. "ஆண்ட பரம்பரை
மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு?" என்பன போன்ற கோஷங்கள், சிங்கள
இனவாதிகளை நகல் எடுத்தது போன்று அமைந்திருந்தன.
தேசத்தில்,
"சிங்களத்தை, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமா?" என்ற விவாதம் கூட ஆங்கில
மொழியில் தான் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள்,
ஆங்கிலத்தில் தமது உரையை நிகழ்த்த வேண்டியிருந்தது. விவாதங்களை
மொழிபெயர்க்கும் வசதி இல்லை என்ற குறைபாடு காரணமாக கூறப்பட்டது.
பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்பது, சாமானிய
மக்களுக்கு புரியவில்லை. இனவாத அரசியல்வாதிகள், மக்களுக்கு கொழும்பு
அரசியலை திரித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால், ஆங்கிலம் தெரியாத பாமர
மக்கள் மத்தியில், இனவாதக் கருத்துக்கள், சாதாரண அரசியல் கருத்துகளைப்
போன்று பதிந்து விட்டன. இலங்கைப் பாராளுமன்றம் மட்டும், காலனியவாதிகளின்
எச்சமாக விளங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும், பல அரச அலுவலகங்களில்
பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்த வரையில்,
சுதந்திரத்தால் ஏற்பட்ட மாற்றம் எதையும் கண்கூடாக காணவிலை. இலங்கை
இன்னமும் பிரிட்டிஷ்காரர்கள் ஆள்கின்றார்களா, என்ற ஐயம் உண்டாகும் வகையில்,
எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர், கறுப்பு -
ஆங்கிலேயர்கள் போன்று நடந்து கொண்டனர். பௌத்த-இந்து பண்பாட்டுக்கு மாறாக,
மது பான விருந்துகளும், குதிரைப் பந்தயங்களும், அரசியல் தலைவர்களின்
விருப்பமான பொழுதுபோக்குகளாக இருந்தன.
இலங்கையின்
அரசியல் யாப்பு தயாரித்த, டொனமூர் குழுவும், சோல்பரி குழுவும், "இனம்"
என்பதை, மொழி அடிப்படையில் வரையறுக்கவில்லை. இந்திய மரபுவழி சார்ந்த
சொல்லான "ஜாதி", இனம் என்று மொழிபெயர்க்கப் பட்டது. குறிப்பாக, பிறப்பு
அத்தாட்சிப் பத்திரத்தில், ஜாதி என்றொரு பிரிவு உண்டு. இந்தியாவில், அந்த
இடத்தில் சாதிப் பெயரை எழுதுவார்கள். ஆனால், இலங்கை நிர்வாகத்தில்,
சாதிக்கு பதிலாக, "சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச்
சோனகர், இந்தியச் சோனகர், பறங்கியர், ஐரோப்பியர்...." இவ்வாறான பெயர்களை
குறித்துக் கொள்வார்கள். இலங்கையர் சமூகத்தை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில்
உள்ளடக்கும் செயல்முறை, டொனமூர் யாப்பு காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது.
பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் தான்
அமைத்திருந்தனர். அன்று ஆங்கிலேயர்கள், இலங்கை மக்களை எவ்வாறு பிரித்து
வைத்தார்களோ, இன்றைக்கும் அதே பிரிவினை தொடர்வதைப் பார்க்கலாம். இன்று
முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனமாக கருதிக்
கொள்கிறார்கள் என்றால், அதற்கான எண்ணக்கரு ஆங்கிலேயர் காலத்திலேயே
விதைக்கப் பட்டு விட்டது.
இந்திய
வம்சாவழித் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க
ஒற்றுமை இருக்கவில்லை. இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப் படுத்திய யாழ் -
வேளாள மையவாதிகள், மலையகத் தமிழர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதி
ஒதுக்கினார்கள். தமிழர்களுக்கு மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினையை,
சிங்களப் பேரினவாதம் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கையின்
மொத்த சனத்தொகையில், இன்றுள்ள மலையகத் தமிழரின் விகிதாசாரத்தை விட,
அன்றிருந்த விகிதாசாரம் அதிகமாக இருந்தது. இந்திய தோட்டத் தொழிலாளரை
நாடற்றவராக்கிய, பிரஜாவுரிமை சட்டம் காரணமாக, மலையகத் தமிழரின் எண்ணிக்கை
அரைவாசியாக குறைந்தது. பிரஜாவுரிமை இழந்த தமிழர்களை, இந்தியாவுக்கு நாடு
கடத்தி விட்டனர். இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற
தூர நோக்கோடு செயல்பட்டது. வரப்போகும் ஆபத்தை உணர முடியாதவாறு, இலங்கைத்
தமிழ்த் தலைவர்களின் கண்களை சாதி வெறி மறைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற
தமிழ்த் தேசியத் தலைவர்கள், இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமை பறித்த
சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிங்களப் பேரினவாதத்தின்
சூழ்ச்சிக்கு துணை போன சாதி அபிமானிகள், எதிர்காலத்தில் ஈழத்தமிழர் மீதான
இனவெறி அடக்குமுறைக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தனர்.
1943
ம் ஆண்டு, வட இலங்கையில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின்
அமைப்பொன்று உருவாகி இருந்தது. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற
அமைப்பானது, தாழ்த்தப்பட்ட தமிழர்களை தனி இனமாக அங்கீகரிக்குமாறு கோரி
வந்தது. அரசியல் யாப்பு எழுதுவதற்கு முன்னர், சோல்பரி குழுவினர் இலங்கை
முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபை
பிரதிநிதிகள், சோல்பரி குழுவினரை யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் நிலைமையை
பார்வையிட வருமாறு அழைத்தனர். உயர்சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி,
தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை நேரில் கூட்டிச் சென்று காட்டினார்கள்.
இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் யாப்பில் எழுதப் படுவதை,
கொழும்பு ஆளும்வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால்
தடுக்க முடிந்தது. பொன்னம்பலம் போன்ற சாதிமான்கள் பிரேரித்த, பழமைவாத
தேசவழமை சட்டம் சோல்பரி யாப்புக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த
அறுபதாண்டுகளாக, மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள்
கூட தேச வழமை சட்டத்தில் கை வைக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு, "தாலிபான்
சட்டம்" என்றால் இலகுவில் புரியக் கூடிய தேச வழமை சட்டம், உயர்சாதி
நிலவுடமையாளர்களை பாதுகாக்கின்றது. பெண்களின் உரிமைகளை
கட்டுப்படுத்துகின்றது. இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த
விசேட சட்டம் உள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆங்கிலேயரின்
இறுதிக் காலத்தில், தெற்கில் பௌத்த மத மறுமலர்ச்சியும், வடக்கில் சைவ மத
மறுமலர்ச்சியும் தோன்றியது. பௌத்த மத மறுமலர்ச்சிக்கு, ஒல்கொட் போன்ற
ஆங்கிலேயர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட
மகாவம்சத்தை, சிங்களத்தில் மொழிபெயர்த்தது மட்டுமல்ல, பண்டைய
சரித்திரத்தில் "சிங்களவர்-தமிழர் பிரச்சினையை" இடைச்செருகல் செய்தனர்.
சிங்கள-பௌத்த கருத்தியலை உருவாக்கிய அநகாரிக தர்மபால, பிற்காலத்தில் சிங்கள
மகாசபை போன்ற அரசியல் கட்சிகளுக்கு குருவாக திகழ்ந்தார். அதே போல,
சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர், தமிழ் பழமைவாதிகளின்
குருவானார். தெற்கில் "பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி" சிங்கள இனவாதத்தின்
அத்திவாரமாக விளங்கியது. அதனைப் பின்பற்றி, வடக்கில் "சைவத்-தமிழ்
மறுமலர்ச்சி" தமிழ் இனவாதத்திற்கு அடிக்கல் நாட்டியது.
பௌத்த
மதம், சிங்களவர்களை நிறுவனமயப் படுத்த சிறந்ததாக விளங்கியது. இந்து மதம்,
(அல்லது சைவ மதம்) இன்று வரை சாதியமைப்பை நிராகரித்த மதமல்ல. அதற்கு மாறாக,
பிராமணீயத்தை எதிர்த்து உருவான பௌத்த மதம், மேலெழுந்தவாரியாக சாதி
அமைப்புக்கு எதிரானது. இருப்பினும், சிங்கள- பௌத்த மடாலயங்கள்,
சாதிவாரியாக பிரிந்துள்ளன. இந்த வேறுபாடு வெளித்தெரியா வண்ணம், பௌத்த மதம்,
சாதி கடந்து மக்களை ஒன்றிணைத்தது. இதே நேரம், வடக்கில் தமிழர்கள், தந்தை
செல்வாவின் தமிழரசுக் கட்சி தோன்றும் வரையில் காத்திருக்க நேர்ந்தது.
ஐம்பதுகளில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தின் எதிர்வினையாக,
தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுப்பெற்றது. அது வரையில், தமிழர்கள் தம்மை
தனியான இனமாக அடையாள படுத்துவதை விட, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக
அடையாள படுத்திக் கொள்ளவே விரும்பினார்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக்
கட்சியும், தமிழகத்து திராவிட அரசியலை முன் மாதிரியாகக் கொண்டு தான்
உருவாக்கப் பட்டது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் தோன்றும் வரையில், அண்ணாதுரை,
கருணாநிதி போன்றோரின் உரைகள் ஈழத் தமிழ் மக்களை கவர்ந்திழுத்தன.
இஸ்லாமிய
மதராசாக்களில், அரபி மொழியும், திருக் குர் ஆனும், கற்பிக்கப் படுவதைப்
போன்று, பௌத்த சங்கங்கள் நடத்திய கிராமிய பாடசாலைகளில், சிங்களமும், பௌத்த
மதக் கல்வியும், போதிக்கப் பட்டன. ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகள்
நடத்திய பாடசாலைகளில், முழுக்க முழுக்க ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது.
சுதேசி மொழிகளான சிங்களமும், தமிழும் புறக்கணிக்கப் பட்டன. சில பணக்கார
பௌத்த சங்கங்கள், ஆனந்தா கல்லூரி போன்ற தனியார் பாடசாலைகளை உருவாக்கின. இதே
போன்ற தோற்றப்பாட்டை, தமிழர் பகுதிகளிலும் காண முடியும். குறிப்பாக, யாழ்.
இந்துக்கல்லூரி, "சைவத்தையும், தமிழையும்" வளர்ப்பதற்காக கட்டப்பட்டது.
உயர்சாதி வேளாளர்களின் அமைப்பு அந்த பள்ளிக்கூடத்தை நிர்வகித்ததால்,
தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை. பிற்காலத்தில்,
பாடசாலைகள் எல்லாம் அரசுடமையாக்கப் பட்டன. அதற்குப் பிறகு தான், இந்துக்
கல்லூரியில் அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்
பட்டனர். இன்றைக்கும் கூட, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிங்கள தேசியத்தின்
கோட்டையாக விளங்குவது போல, யாழ் இந்துக் கல்லூரி தமிழ் தேசியத்தின்
கோட்டையாக உள்ளது.
பௌத்த
சங்கங்கள் நடத்திய, கிராமியப் பாடசாலைகளில் சிங்களம் கற்பித்த
ஆசிரியர்கள், காலனிய அடிவருடிகளின் ஆட்சி மாற வேண்டும் என விரும்பினார்கள்.
இவர்களோடு, ஆயுர்வேத மருத்துவர்களும் சிங்கள தேசியவாத கருத்தியலோடு
உடன்பட்டார்கள். உண்மையில், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியை, மகாவம்ச
பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக காட்டுவது மோசடியாகும். சிங்கள பேரினவாதிகள்
நிறுவத் துடிக்கும் தவறான கருத்தை, தமிழ் தேசியவாதிகளும் பரப்பி வருவது
விசனத்திற்குரியது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களை, சிங்கள
ஆசிரியர்களும், ஆங்கில மருத்துவர்களை, ஆயுர்வேத மருத்துவர்களும் போட்டியாக
கருதியமை, ஒரு பொருளாதாரப் பிரச்சனை. காலனிய ஆட்சியின் பலனாக உள்நாட்டு
உற்பத்திகள் நலிவடைந்தன. சிங்கள மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த
ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் போன்ற பிரிவினர், தமது வர்க்க நலன்கள்
பாதுகாக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
இலங்கையின்
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக சோஷலிசப் பொருளாதாரத்தை முன்
மொழிந்த மார்க்சியர்களை யாருக்கும் பிடிக்கவில்லை. "கடவுள் மறுப்பாளர்கள்"
என்று பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். "போல்ஷெவிக் படுகொலையாளர்கள்"
என்று ஆங்கிலேயர்கள் வெறுத்தார்கள். அத்தகைய பின்னணியில், பண்டாரநாயக்க
போன்றோர் நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
பண்டாரநாயக்கவுக்கு பதிலாக, இலங்கை கம்யூனிசக் கட்சி ஆட்சி
அமைத்திருந்தால், பிரிட்டன் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்திருக்கும்.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஏற்பட்ட இரத்தக்களரி இலங்கையில்
ஏற்பட்டிருக்கும். பிரிட்டனைப் பொறுத்த வரையில், சிங்களவர்களும்
தமிழர்களும் இன்னும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும் பரவாயில்லை.
ஆனால், அடுத்த நூறாண்டுகளுக்காவது மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வர
விடக்கூடாது. இன்றைக்கும், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள், சிங்கள
பேரினவாதிகள், தமிழ் தேசியவாதிகள், "கம்யூனிச எதிர்ப்பாளர்கள்" என்ற
பதாகையின் கீழ் ஒன்றிணைவதைக் காணலாம்.
கலையரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக