செப்டம்பர் 26, 2011


மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி


[சிங்களப் பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்] (பகுதி : நான்கு)

"மார்க்சியர்கள் வன்முறை பிரயோகிக்க கிளம்பினால், எமது ஐக்கிய தேசியக் கட்சி, ஒரு உதைக்கு இரண்டு உதை, ஒரு அறைக்கு இரண்டு அறை என்ற ரீதியில் பதிலடி கொடுக்கும்." - ஜே.ஆர். ஜெயவர்த்தன. (1948, நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிய கட்சிகளின் வெற்றி குறித்து தெரிவித்த கருத்துக்கள்.)
இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், தீவிர வலதுசாரி இளைஞராக காட்டிக் கொண்ட ஜெயவர்த்தன, வயது முதிர்ந்து ஜனாதிபதியான பின்னரும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அன்று அவர் பெரிதும் எதிர்பார்த்த "மார்க்சியவாதிகளின் வன்முறைக்கு" பதிலாக, முப்பது வருடங்களுக்கு பிறகு "தமிழர்களின் வன்முறையை" எதிர்நோக்கி காத்திருந்தார். "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்." என்று தமிழரை நோக்கி கர்ஜித்த வாசகம் இன்றும் பலரால் நினைவுகூரப் படுகின்றது. இருப்பினும், ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் ஆட்சி மாறிய காலத்தில், தமிழ் தேசியவாத இயக்கம் முளை விடவில்லை. அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் மனங்களில், அவ்வாறான சிந்தனை இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அன்றிருந்த நிலையில், சிங்கள பேரினவாதத்தின் முதன்மையான எதிரி மார்க்சியமாக இருந்தது.

நாடு எதிர்நோக்கியிருக்கும் மார்க்சிய அபாயத்தை தடுப்பதற்காக, சேர். ஜோன் கொத்தலாவல தலைமையில் ஒரு பாஸிச துணைப்படை அமைக்கப்பட்டது. இந்தியாவில் இந்துவெறி ஆர்எஸ்எஸ் உருவாக்கிய தொண்டரணி போன்று, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணி மாற்றப்பட்டது. கட்சியின் வர்ணமான பச்சை நிற சீருடை அணிந்த வாலிபர்கள், தேசத்திற்கும், கட்சிக்கும் விசுவாசமாக இருப்பத்தாக உறுதிமொழி எடுத்தனர். இராணுவ நெறிமுறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட இளைஞர் அணியின் நோக்கம், "கம்யூனிச புரட்சியாளர்களை எதிர்த்து போராடுவது" என்ற உண்மையை ஐதேக தலைவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். சிங்கள மேட்டுக்குடியில் பிறந்த சேர் ஜோன் கொத்தலாவல, கம்யூனிச எதிர்ப்பாளரும், மேலைத்தேய விசுவாசியுமாவார். இந்தோனேசியாவில் நடந்த பாண்டுங் மகாநாட்டில், "காலனியத்தை எதிர்க்கும் மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகளின் படுகொலைகளை எதிர்ப்பதில்லை." என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் கைமாற்றிய ஆட்சியுரிமையை பெற்றுக் கொண்ட இலங்கையருக்கு பொதுவான அம்சம் ஒன்றிருந்தது. தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூறுவது போல, ஆங்கிலேயர்கள், "தமிழரை புறக்கணித்து விட்டு சிங்களவர்களிடம்" ஆட்சியை ஒப்படைக்கவில்லை. சொத்துடைய, ஆங்கிலேய கல்வி கற்ற, உயர்குடிப் பிறப்பாளர்களிடம், இலங்கையின் "சுதந்திரம்" கையளிக்கப் பட்டது. இதற்கு ஆதாரம் தேடி வெகு தூரம் அலையத் தேவையில்லை. இலங்கைக்கான யாப்பு எழுதிய டொனமூர் குழுவினர், அத்தகைய பிரிவினரை தான் ஆளுவதற்காக தெரிந்தெடுத்தார்கள். சுதேசி ஆளும் வர்க்கத்தில், சிங்களவர்களோடு, தமிழர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, படித்த, நிலவுடமை சமூகத்தில் இருந்து வந்தவர்கள். ஆளும் வர்க்கத்தின் உள்ளே தோன்றிய "சிங்கள-தமிழ் பாகுபாடு" மொழி அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. மாறாக அது இனப் பாரம்பரியம் சார்ந்தது. ஆயினும், நாட்டுப்புற மக்கள் சிங்களம், அல்லது தமிழ் மட்டுமே பேசினார்கள். தேர்தல் ஜனநாயகத்தில், மொழி அடிப்படையில் வெகுஜன அரசியல் செய்வது தவிர்க்க முடியாமல் போனது.

இலங்கை ஆட்சியாளர்களின் "மார்க்சிய வெறுப்புக்கு" காரணம், 1947 ல் நடந்த, இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் ஆகும். சோல்பரி யாப்பு, இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் சர்வசன வாக்குரிமை அளித்தது. பெருந்தோட்ட பயிர்ச் செய்கை காரணமாக கொண்டு வரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளருக்கும், வதிவிட உரிமையைக் காட்டி பிரஜாவுரிமை கிடைத்தது. அவர்கள் மத்தியில் மார்க்சியக் கட்சிகள் வேலை செய்திருந்த படியால், பெருமளவு தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டன. 1947 ல் நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் பொழுது, ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அரச ஊழியர் கொல்லப்பட்டார். இதன் பிறகு, வட மாகாணத்திலும் ஆதாரவாளர்கள் பெருகினர். இவற்றை விட, ஆட்சியாளர்களை அதிகம் கிலி கொள்ள வைத்த விடயம், சனத்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள மாகாணங்களில் வாழும் வாக்காளர்களின் தெரிவு. நாட்டிலேயே அதிக சனத்தொகை கொண்ட, கொழும்பை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், மார்க்சிய கட்சிகளுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. பல்லின மக்கள் வாழும், தொழிற்துறை வளர்ச்சியடைந்த கொழும்பு நகர தொழிலாளர் வர்க்கம் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் இலகுவில் ஈடுபட்டன. மேலும், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் வந்த காலப்பகுதியில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. அத்தகைய சூழ்நிலையில், மார்க்சிய வர்க்கப் போராட்டத்தின் அவசியம் உணரப்பட்டது.

1948 ம் ஆண்டு, இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது . ஆனால், 1947 லிலேயே, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 95 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தது 80 ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்த்தார்கள். ஆயினும், தேர்தல் முடிவுகள் ஆளும் வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது. ஐதேக வுக்கு 42 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. மார்க்சியக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சிக்கு 10, கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, போல்ஷெவிக் லெனினிஸ்ட் கட்சிக்கு 5, என்ற அடிப்படையில் ஆசனங்கள் கிடைத்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத, டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசு, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசியது. குறிப்பாக வட மாகாணத்தில் 7 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டது. அதன் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு தொழிற்துறை, மீன்வள அமைச்சு வழங்கப் பட்டது. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், சிங்கள பேரினவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் கூட்டுச் சேர்ந்து அரசமைக்கும் அளவிற்கு, இரண்டு சக்திகளுக்கும் மார்க்ஸியம் பொது எதிரியாக இருந்துள்ளது.

சிங்களப் பேரினவாதிகள் மட்டுமல்ல, தமிழ் குறுந் தேசியவாதிகளும் மார்க்சியத்தை வெறுப்பதற்கு வலுவான சமூகக் காரணம் உண்டு. அன்றைய தமிழ்த் தலைவர்கள், "தமிழ் இனவுணர்வின்" அடிப்படையில் கட்சி கட்டவில்லை. மாறாக, தமிழ் காங்கிரஸ் காரர்கள் மத்தியில் சாதிய உணர்வே மேலோங்கியிருந்தது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தருகிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான குமாரசாமியை, ஒரு தடவை மாட்டுச் சவாரி போட்டிக்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். போட்டியில் வென்றது, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன். சம்பிரதாயப் படி, வென்றவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய குமாரசாமி, மாட்டுக்கு மாலை அணிவித்தார். அன்றைய தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், தமிழ் பேசும் தலித் மக்களை, மாடுகளை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். தீண்டாமை நிலவிய சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தோர் "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற அமைப்பை ஸ்தாபித்தார்கள். அந்த அமைப்பை சேர்ந்த பலர் "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" உறுப்பினர்களாக இருந்தனர். தமிழ்க் காங்கிரசில் இருந்து, செல்வநாயகம் தலைமையில் பிரிந்த குழுவினர் உருவாக்கிய "தமிழரசுக் கட்சி" யில் தான், நடுத்தர வர்க்க தலித் பிரதிநிதிகள் உள்வாங்கப் பட்டனர். தந்தை செல்வா "அரசியல் தீர்க்கதரிசனத்துடன்" எடுத்த முன் முயற்சியால், தமிழ் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டப் பாதை, தமிழ் தேசியத்தை நோக்கி திசை மாற்றப் பட்டது.

"இலங்கை சர்வதேச கம்யூனிச பூதத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது." இந்த செய்தியை, அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். முன்னாள் காலனிய ஆட்சியாளர்களும், "இன முரண்பாடுகளை விட, கம்யூனிச பூதம் ஆபத்தானது" என்று நம்புகிறவர்கள் அல்லவா? அதனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் அதிகாரப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டது. அன்றைக்கு ஏற்பட்ட இலங்கை தொடர்பான நிலைப்பாடு, இன்றைக்கு மேற்கத்திய நாடுகளின் வெளிவிவகார கொள்கையாக நீட்சி பெற்றுள்ளது. 1953 ம் ஆண்டு, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களின் நாடளாவிய ஹர்த்தால் வெற்றிகரமாக நடந்தது. தொழிலாளர் போராட்டத்தை, புரட்சியை நோக்கி வழிநடாத்த தவறியிருந்தாலும், மார்க்சியக் கட்சிகளின் வலிமையை அரசு உணர்ந்து கொண்டது. அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கிய மானியம் நிறுத்தப் பட்டதால், மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அடுத்து வந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வியது. மார்க்சியக் கட்சிகள் ஹர்த்தாலின் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள தவறியிருந்தன. சிங்கள தேசியவாதத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி, அந்த வெற்றிடத்தை நிரப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக