ஜனவரி 16, 2012

 

அரசியல் 

மாற்றங்களும் 

இஸ்லாமியவாதிகளும் 

புரட்சிக்குப் 

பிந்திய உணர்வலைகள்!


1924 இல் துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தலைமைத்துவமற்ற சமூகமாகமாறியது. ஏனெனில், றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவில் நிலவிய இஸ்லாமிய கிலாபத் 1924 ஆம் ஆண்டு வரை ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.
மதச்சார்பற்ற, சியோனிஸ ஏஜன்ட் முஸ்தபா கமால் இஸ்லாமிய கிலாபத்தை இரத்துச் செய்து, துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தினான். இதன் எதிரொலியாக ஈமானிய உள்ளங்கள் வெகுண்டெழுந்தன. உலகின்
நாலா பக்கங்களிலும் முஸ்லிம்கள் தனிநபர்களாகவும் இயக்கங்களாகவும் செயற்படத்துவங்கினர். தாம் இழந்த கிலாபத்தை, கௌரவத்தை, தனித்துவ அடையாளத்தை மீளப் பெற்றுக் கொள்வதில் முனைப்பாக செயற்பட்டனர்.Islamic World
அந்த வகையில் இந்திய உபகண்டத்தில் ஜமாஅதே இஸ்லாமி, ஜமாஅத் தப்லீக் மற்றும் அறபுலகில் எகிப்தைத் தளமாகக் கொண்ட அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் போன்ற இயக்கங்கள் செயற்படத் துவங்கின. இவை முஸ்லிம்களின் ஈமானிய உணர்வைப் பாதுகாப்பதிலும், இழந்துபோன இஸ்லாமிய தலைமைத்துவத்தை மீளப் பெறுவதிலும் உழைத்தன. ஜாஹிலிய்ய, மதச்சார்பற்ற மேற்கத்திய சக்திகளுடன் தொடர்ந்தும் போராடின.
இவற்றுள் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு குறிப்பிடத்தக்கது. இவர்களின் பணியை மழுங்கடிக்கச் செய்யவும், தடுத்து நிறுத்தவும் இஸ்லாமிய விரோத சக்திகள் கைகோர்த்து செயற்பட்டன. நடுநிலைமையான, சீர்திருத்த சிந்தனைகளைக் கொண்ட இந்த இஸ்லாமியவாதிகள் பலர் தூக்கிலிடப்பட்டனர். பல்லாயிரம் பேர் சிறைவாசம் சென்றனர். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டனர். அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் ஸ்தாபகர் இமாம் ஹஸனுல் பன்னா கெய்ரோ வீதியில் ஆட்சியிலிருந்த அரசாங்க ஏஜன்டுகளால் 1949 இல் படுகொலை செய்யப்பட்டமை இதற்கு நல்ல உதாரணமாகும்.
மாபெரும் சிந்தனையாளர் ஷஹீத் செய்யித் குத்ப் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர். அஷ்ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி, தூனிஸிய இஹ்வானிய (நஹ்ழா) தலைவர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி, லிபிய இஹ்வானிய தலைவர் Dr. அப்துல் காதர் ஸுலைமான் எனப் பலர் நாடு கடத்தப்பட்டனர். அல்லது அரச கெடுபிடியிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தனர்.
எகிப்து, சிரியா, ஜோர்தான், லிபியா மற்றும் பல அறபு நாட்டுச் சிறைகளில் அதிகம் அடைக்கப்பட்டவர்கள் இஹ்வானிய உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும்தான். இவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு இவர்கள் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், இஸ்லாத்தை அரசியல்மயப்படுத்தி அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்பதுதான். மேற்கத்திய உலகும் இவர்கள் ஆட்சிக்கு வருவதனைத் தடுத்து வந்தது.
பொதுமக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இவ் இஸ்லாமியவாதிகள் ஜனநாயக வழியில் மக்களின் சுதந்திரம், உரிமைகள் என்பவற்றைப் பேணி, களத்திற்கு வந்தபோது அவர்களை ஓரங்கட்டும் பணியில் மேற்குலகும், அதன் மீடியாக்களும் அந்நாடுகளின் அரசாங்கங்களுடன் கைகோர்த்து செயற்பட்டன. மேற்கத்திய சார்பு மீடியாக்கள் இவர்களை கொச்சைப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டன. இந்த இஸ்லா மியவாதிகளை அடிப்படைவாதிகள் (Fundamentalist) தீவிரவாதிகள் (Terrorist) என்று முத்திரை குத்தி, பொது மக்களின் உள்ளங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்த முனைந்தன.
இதற்கு சிறந்த உதாரணம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இயங்கும் ABC 24 தொலைக்காட்சி கூட்டுத்தாபனம். 28.11.2011இல் அல்-ஜஸீராவின் முன்னை நாள் நிறைவேற்று அதிகாரி வழ்ழாஹ் கான்பரை அறபுலகில் நடக்கும் மாற்றங்கள் சம்பந்தமாக பேட்டி கண்டிருந்தது. அதில் எகிப்தில் இஹ்வான்களின் தேர்தல் வெற்றி சம்பந்தமாக கேட்கப்பட்டபோது அல்-காயிதா தலைவர் அய்மன் அல்- ஸவாஹிரியை இஹ்வானிய உறுப்பினர் என்றும் எனவே, இவர்களும் தீவிர சிந்தனைப் பாரம்பரியத்தை கொண்ட தீவிரவாதிகள் என்ற கருத்தில் ABC நிரூபர் மார்க் கொல்வின் கேள்வியை கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வழ்ழாஹ், அய்மன் இஹ்வானிய தஃவாவின் ஆரம்பத்தில், மாணவப் பருவத்தில் இணைந்தவர். இஹ்வான்கள் மிகவும் நடுநிலையான போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் எனக் கூறிய அய்மன், பின்னர் இஹ்வான்களை விட்டும் விலகி, எகிப்தில் காணப்படும் தீவிர சிந்தனை கொண்ட ஜமாஆ அல்-இஸ்லாமியாவுடன் இணைந்தார். பின்பு ஆப்கானிய போரில் உஸாமா பின் லாதினுடன் தொடர்புபட்டார். அரசியல் பிரவேசத்தில் ஜனநாயக வழிமுறைகளால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியாது, ஆயுதம் ஏந்தி போராடுவதுதான் ஒரே வழி என்ற சிந்தனை கொண்டவர். அச்சிந்தனை கொண்ட நபர்களுக்கும் இஹ்வான்களுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. இஹ்வான்கள் மிகவும் கட்டுப்பாடுள்ள நடுநிலை சிந்தனை கொண்ட, வன்முறைக்கு (Violence) எதிரான சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்” என பேட்டியில் குறிப்பிட்டார். (ABC 24, 28.11.2011)
தூனிஸிய அந்நஹ்ழா (இஹ்வானுல் முஸ்லிமூன் தூனிஸிய கிளை) தலைவர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி 22 வருடங்களுக்குப் பின் அவரது நாட்டுக்கு இவ்வருடம் வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் பல்லாயிரம் பேர் கூடி அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் மேற்கத்தேய ஊடகவியலாளர் ஒருவர் “உங்களது அந்-நஹ்ழா கட்சி ஆட்சிக்கு வந்தால், நீங்கள் ஈரானிய அரசியலமைப்பு முறையில்தான் ஆட்சி நடத்தப் போகின்றீர்களா?” எனக் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அஷ்ஷெய்க் ராஷித், “எங்களிடத்தில் ஆயத்துல்லாக்கள் இல்லை. நாம் வெற்றி பெற்றால் துருக்கிய பாணியிலான (AKP Government) அரசியல் முறையை கடைப்பிடிப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது ஈரானிய அடிப்படையிலான தீவிர அரசியல் அமைப்பின்றி துருக்கிய முறையிலான அனைத்து பிரிவினரையும் சமூகத்தையும் தழுவிய நடுநிலை மையிலான அரசியலாக இருக்கும் என புத்திசாதுர்யமாக பதிலளித்தார்.
மேற்கத்திய அரசுகள் ஜனநாயகம், மனித உரிமை, பெண்களின் உரிமை, சமஉரிமை போன்ற சுலோகங்களை தூக்கிப்பிடித்து, இஸ்லாமியவாதிகள் இவற்றுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணக் கருவை மக்களுக்கு மத்தியில் பதிக்க முயற்சிக்கின்றன. ஜனநாயக காவலராக தம்மை அறிமுகப்படுத்தும் பராக் ஒபாமா ஜூன் 04.2009 இல் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் முஸ்லிம் உலகை நோக்கிய தனது உரையில்,
“அரசுகள் வெளிப்படைத் தன்மை கொண்ட (Transparancy) தாகவும், மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும் இருக்க வேண்டும். மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் திருடக் கூடாது. சுதந்திரமாக வாழும் உரிமை அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை வெறுமனே அமெரிக்காவின் சிந்தனையல்ல. இவைதான் மனித உரிமைகள். சுதந்திரம், பாகுபாடற்ற நிருவாகம், சமஉரிமை வழங்கும் நபர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்கின்றோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசுகளின் இருப்புகள் மிகவும் உறுதியானதாக இருக்கும். ஆனால், மக்களை அடக்கியாள எத்தனிக்கும் அரசுகளின் இருப்புகள் நிச்சயமாக ஆட்டம் கண்டு அழிந்து போகும். ஐக்கிய அமெரிக்கா சட்டத்துக்குக் கட்டுப்பட்டு அமைதியை விரும்பும் நபர்களின் அழைப்பை மதிக்கின்றது. அவர்களுடன் (கருத்துகள்) நாம் ஒன்றுபடாவிட்டாலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட, அவர்களின் உரிமைகளை மதித்து, ஆட்சி நடாத்தும் அரசுகளை நாம் வரவேற்கிறோம்.” (The New York Times 4th of June, 2009)
அதிபர் ஒபாமா இவ்வுரையை நிகழ்த்தும்போது அதற்கு தலைமை தாங்கியவர் அதிபரின் மிகவும் நேசத்திற்குரிய முன்னாள் எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஆவார்.
இஸ்லாமியவாதிகள் அரசியலில் ஈடுபடுவது புதிய ஒரு புதிய விடயமல்ல. 1920 களிலேயே அவர்கள் அரசியல் களத்தில் குதித்து விட்டனர். பெரும்பாலும் எதிர்க்கட்சியாக இருந்து செயற்பட்டதுதான் அதிகம். ஆனால் 1940 களுக்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் மதச்சார்பற்ற சிந்தனைகள், சோசலிஸ கட்சிகள் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து சூடான், ஜோர்தான், யெமன், அல் ஜீரியா போன்ற நாடுகளில் ஆட்சிக்கு வந்தது. இதற்கு சிறந்த உதாரணம் 1977 இல் சூடானில் மதச்சார்பற்ற நிமைரியின் அரசுடன் ஒன்றுபட்ட தனைக் குறிப்பிடலாம்.
இஸ்லாமியவாதிகள் ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சிக்கு வருகின்றபோதெல்லாம் இஸ்லாத்தின் எதிர் சக்திகள் பல முட்டுக் கட்டைகளைப் போட்டு வந்தன. கடந்த கால வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் காணப்படுகின்றன. அல் ஜீரியாவில் 1991 இல் ஜப்ஹதுல் இன்காத் அல் இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பு அஷ்ஷெய்க் அப்பாஸ் மதனியின் தலைமையில் பெருவாரியான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டாலும், இராணுவம் அக்கட்சிக்கு ஆட்சியை நடத்த விடவில்லை.
மாறாக அப்பாஸ் மதனி உட்பட பலர் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். 2006 இல் ஹமாஸ் பலஸ்தீன தேர்தலில் பதாஹ் கட்சியை தோல்வியுறச் செய்து பெரு வெற்றியீட்டியது. இவ்வெற்றிக்குப் பரிசாக காஸா மீது பொருளாதாரத் தடை விதித்து திறந்த சிறையில் பொதுமக்கள் அடைக்கப்பட்டனர். ஆனால், 2002 இல் துருக்கியில் ரஜப் தையிப் அர்தூகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. அவ்வரசை கவிழ்க்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதன் ஸ்திரத்தன்மையும் தம்மை இஸ்லாமியவாதிகளாக பிரகடனப்படுத்தாமையும் அவர்களின் இருப்பை அசைக்க முடியாதுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பெரு வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டில் Great Turkey ஐ நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இவ்வருட பொருளாதார வளர்ச்சி 9% ஆக அதிகரித்துள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியைச் சேர்த்துக் கொள்வதில் ஜேர்மன், பிரான்ஸ் அதிபர்கள் முட்டுக் கட்டையாக உள்ளதாக பிரதமர் அர்தூகான் ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
28.10.2011 இல் நடந்து முடிந்த தூனிஸிய தேர்தலில் அந்நஹ்ழா இயக்கம் 217 ஆசனங்களில் 90 ஆசனங்களை, அதாவது 49.44% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 10 மில்லியன் மக்களைக் கொண்ட தூனிஸியாவில் ஏறத்தாழ 90% பொது மக்கள் வாக்களித்திருந்தனர். எனினும், தம்முடன் போட்டியிட்டு 2 ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்ற மதச்சார்பற்ற கட்சிகளை தம்முடன் பங்காளர்களாக சேர்த்து ஆட்சியினை அமைத்துள்ளனர்.
அறபுகளின் வசந்தம் மொரோக்கோ நாட்டிலும் வீசத் துவங்கியது. ஆயுதங்களற்ற இரத்தம் சிந்தா புரட்சியாக அது கணிக்கப்படுகிறது. இவ்வெழுச்சியின் எதிரொலியாக மொரோக்கோ நாட்டின் மன்னர் 6 ஆம் முஹம்மத் அந்நாட்டின் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டார். பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
கடந்த 25.11.2011 இல் இடம்பெற்ற தேர்தலில் மொரோக்கோ இஹ்வானுல் முஸ்லிமூன் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வரலாறு காணாத பெருவெற்றியைப் பெற்றது. 13.5 மில்லியன் வாக்களர்களில் 45% வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. 395 ஆசனங்களுக்கான தேர்தலில் இஸ்லாமியக் கட்சி 107 ஆசனங்ளைப் பெற்றது. 2 ஆம் இடத்தைப் பெற்ற இஸ்திக்லால் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி பெற்ற 60 ஆசனங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் அப்துல் இலாஹிற்கு மன்னர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
28.11.2011 இல் எகிப்தில் நடந்த தேர்தலிலும் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு முன்னணியில் திகழ்கின்றது. நேர்மையான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் இஸ்லாமியவாதிகள் பெரும் வெற்றியை பெறுவர் என்ற அரசியல் ஆய்வாளர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி (FJP) வெற்றி பெற்றால் ஜன நாயக கூட்டணியுடன் (Democratic Alliance) கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைக்கும் என இஹ்வான் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
அவ்வாறே யெமனில் நீதியான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அத்தஜம்முஉ அல் யெமனிலில் இஸ்லாஹ் (யெமன் இஹ்வானுல் முஸ்லிமூன்) பெரு வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வழ்ழஹ் அல் கான்பர் (அல் ஜஸ்ராவின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி) 28.11.2001 இல் கார்டியன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சிரியா, லிபியா, லெபனான் மற்றும் பல நாடுகளில் இஸ்லாமியவாதிகள் ஆட்சிபீட மேறும் சாத்தியங்களே அதிகம் உள்ளன.
எனவே, ஜனநாயகம் (Democracy) மேற்குலகில் தோன்றினாலும் அதன் பல அம்சங்கள் இஸ்லாத்தின் விழுமியங்களுடன் ஒத்துப் போகின்றன.
ஷெய்க் யூஸுப் அல்-கர்ளாவி, “ஜனநாயகத்தின் பெறுமானங்களான சுதந்திரம், மனித உரிமைகள் இஸ்லாத்தின் அடிப்படை கோற்பாடுகளாகும். மேற்குலகு இதனை உரிமைகள் என்கின்றது. நாம் இதனை கடமைகள் என்கின்றோம். உரிமைகள் சிலபோது தளர்த்தப்படலாம். ஆனால் கடமைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்கிறார்.
எனவேதான், இஸ்லாமியவாதிகள் ஜனநாயகத்தை முன்னிறுத்தி தேர்தலில் குதித்தபோது வெற்றி பெற முடியுமாக இருந்தது. இன்னும் பல நாடுகளில் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
மக்கி மன்ஸூர்
இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக