ஜனவரி 09, 2012

அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது


 
 அமெரிக்க யுத்தக் கப்பல் யு.எஸ்.எஸ்.கிட்
 
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
அமெரிக்க கடற்படை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.
கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது.
அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)

அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.
அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.

ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்
அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் 
காப்பற்றியபோது..
 
 கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.

சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக