சிரியாவில் மக்கள் போராட்டம், தாக்குதல் போராட்டமாக பரிணாமம் பெறுகிறது
பாதுகாப்பு படையினர்மீது தாக்குதல் நடாத்தும் பொதுமக்கள்.
ராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் வெளியேறி அரசுக்கு எதிரான கலகக்காரர்களுடன் சேர்ந்த குழுவினர் பாதுகாப்பு படையினரை தாக்கியதில், குறைந்தது எட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்தத் தாக்குதல், ராணுவத்திடமிருந்து மக்களைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று கலகக் குழுவினரால் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களால் தொடங்கப்பட்ட போராட்டங்கள், ராணுவத்தில் இருந்து விலகி வந்து இவர்களுடன் இணைந்தவர்களின் தயவால், முழுமையான ஆயுதப் போராட்டமாக மாறி வருகின்றது.
சில மாதங்களுக்குமுன் லிபியாவில் இப்படித் தொடங்கிய ஆயுதப் போராட்டம்தான் முழுமையான யுத்தமாக மாறி, கடாபியையே ஆட்சியில் இருந்து வெளியேற்றியது. சிரியாவிலும் அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்படலாம் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் மத்திய சிரியாவிலுள்ள ஹமா நகருக்கு அருகே நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் தற்போது இந்தப் பகுதியிலேயே அதிகளவில் நடைபெறுகின்றன.
இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன், ஹமா நகருக்கு அருகேயுள்ள கட்டாப் கிராமத்தில், நேற்று காலை பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை ராணுவ வாகனம் ஒன்று மோதியதில், ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம்தான், ஆரம்பம்.
ஏற்கனவே ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே பதட்டம் நிலவிவந்த இந்தப் பகுதியில், ராணுவ வாகனத்தால் மோதப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ராணுவத்துக்கு எதிராக வீதிக்கு வந்து கோஷமிடத் தொடங்கினார்கள். பொதுமக்களோடு பொதுமக்களாக இருந்த (முன்னாள் ராணுவ) கலகக் குழுவினர், ராணுவத்தைத் தாக்குவதற்கு கிளம்பினர்.
ஹமா நகருக்கு வெளியேயுள்ள அல்-அஷார்னே கிராமத்துக்கு அருகேயுள்ள வீதியில் சென்று கொண்டிருந்த நான்கு ராணுவ வாகனங்கள் இவர்களது கண்களில் பட்டன. உடனடியாக அவற்றில் இருந்த தமது முன்னாள் சகாக்களை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டார்கள் இந்த முன்னாள் ராணுவத்தினர். ராணுவ வாகனங்களில் சென்றுகொண்டிருந்த ராணுவத்தினரில் குறைந்தது எட்டு பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இந்த வாரத்தில் ராணுவத்தினர் மீது முன்னாள் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது. பொதுமக்களை ராணுவத்தினர் கொல்வதைத் தடுப்பதற்கே தாம் ராணுவத்தைத் தாக்குவதாக இந்தக் குழுவினர் பேட்டியளித்துள்ளனர்.
இதற்குமுன் நடைபெற்ற தாக்குதலில் இடிப் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த ராணுவ ட்ரக் தாக்கப்பட்டதில், ஏழு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்படுவதற்குமுன், அந்த ட்ரக்கில் சென்றுகொண்டிருந்த ராணுவத்தினர் பொதுமக்கள்மீது தாக்குதல் நடாத்தியதில், 11 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படியான பழிக்குப்பழி ஸ்டைல் தாக்குதல்களால், ‘முன்னாள் ராணுவ – இன்னாள் கலகக்காரர்கள்’, மக்கள் மத்தியில் ஹீரோ அந்தஸ்தைப் பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக