“உங்கள் ஆயுதத்தை எடுத்தே, உங்கள் தலையில் போடுவோம்”
டமாஸ்கஸ், சிரியா: மத்திய மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) ராணுவத்தினர் மீது நடைபெற்ற அதிரடித் தாக்குதலை யார் செய்தது என்ற விபரம் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற அந்தத் தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரியும், எட்டு சிப்பாய்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விஷயம், ராணுவத்தில் இருந்து வெளியேறிய ஒரு குழுவினர், இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர். சிரியா அரசின் நடவடிக்கைகள் பிடிக்காமல், ராணுவத்தில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள இந்த குழுவினர், “எமது முன்னாள் சகாக்களைக் கொல்வது எமக்கும் மன வேதனையாகத்தான் உள்ளது. ஆனால், நாட்டுக்காக அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது சிரிய அரசு” என்று கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல், இரு பெரிய அபாயங்களை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. தமது உத்தரவை நிறைவேற்ற வேண்டிய ராணுவத்தில் இருந்து, எத்தனை பேர் எந்த நேரத்தில் பிரிந்து, ராணுவத்துக்கு எதிராகவே திரும்புவார்கள் என்று ஊகிக்க முடியாத அபாயம் முதலாவது.
இரண்டாவது, அதைவிட பெரிய ஆபத்து. ராணுவத்திலிருந்து திடீரென விலகி அரசுக்கு எதிராக திரும்பும் ஆட்கள், ராணுவத்தின் ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் செல்லக்கூடிய சாத்தியம் அது.
ராணுவத்திடம் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற பெறுமதி மிக்க ஆயுதங்கள் இப்படி வெளியே சென்று விடலாம். அதையடுத்து அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், லிபியாவில் கடாபி ராணுவத்துக்கு எதிராகப் போராடியதுபோல ஆயுதப் போராட்டத்தில் குதிக்கலாம்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மிகவும் இக்கட்டான நிலையில்தான் உள்ளார். எப்போது ராணுவத்தில் இருந்து ஆட்கள் பிரிந்து சென்று ராணுவத்தையே தாக்க தொடங்குகிறார்களோ, அப்போதே அந்த அரசின் ஆயுள் எண்ணப்படுகின்றது என்று அர்த்தம்.
சந்தேகமே இல்லை, கடாபிக்கு அடுத்தபடியாக ஹிட்-லிஸ்ட்டில் உள்ளவர் இவர்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக