சிரியா:
புரட்சி நீடிப்பதேன்?
லிபியாவிலும் தூனிஸியாவிலும் எகிப்திலும் அறபு வசந்தம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரிய மக்கள் அந்த வெற்றிக்காகக் காத்திருக்கின்றனர்.
கடந்த 10 மாதங்களாக சிரியாவில் பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் வன்கொடுமைகள் கட்டவிழ்க்கப்படும் நிலையிலும், மக்கள் தமது நிலைப்பாட்டிலிருந்து தளரவில்லை. அரச பயங்கரவாதத்தினால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் மக்களிடையே இன்னும் வெற்றிக்கான ஏக்கமும் பெருமூச்சும் நின்றுவிடவில்லை.
சிரியாவில் வன்முறைகளை நிறுத்தி படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அறப் லீக் மேற்கொண்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை முழுத் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அறப் லீக் அதிகாரிகள் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துவதற்குப் பதிலாக இறந்துகொண்டிருக்கின்றவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாக சிரிய எதிர்க்கட்சிகளின் ஒன்றியமான சிரிய தேசிய சபை (Syrian National Council) வன்மையாகக் கண்டித்துள்ளது.
அஸதின் அரசாங்கத்தை நோக்கி அறப் லீக் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. பிரதான நகரங்களிலிருந்து இராணுவத் தளபாடங்களைப் பின்வாங்குதல்,தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோரை விடுதலை செய்தல், ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரங்களை நீக்குதல், துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தல் ஆகிய எந்தவொரு கோரிக்கையும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அறப் லீக்கின் கண்காணிப்புக் குழு வெறும் கண்துடைப்பு என தேசிய சபை விமர்சித்துள்ளது. தனது சொந்த மக்களை கொடூரமாகக் கொலை செய்யும்போது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை இயந்திரத் துப்பாக்கிகளால் பலிகொள்ளும்போது எந்தவொரு மனச்சாட்சியுள்ள மனிதனும் அலட்சியமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.
அறப் லீக்கின் அங்கத்துவ நாடுகள் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சிரிய விவகாரத்தில் காத்துவரும் மௌனம் மிகவும் ஆபத்தானது. சிரியாவின் இன்றைய கொதி நிலையில் மீண்டும் ஒருமுறை தொலைக்காட்சியில் தோன்றி, அஸத் ஆற்றியுள்ள உரை மக்களின் கோபத்தை கிளறியிருக்கின்றது. இரண்டு மணிநேர உரை அஸதின் முதிர்ச்சியற்ற அரசியலையும் வெகுளித்தனத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆளும் அலவிய்யா வர்க்கத்தின் உள்மனவோட்டத்தை ஒப்பு விக்கின்ற அஸதின் உரை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படக் கூடியது. “நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவோம். ஆனால், பயங்கரவாதத்தை சட்ட பூர்வமான வழிமுறைகள் மூலம் அடக்குவோம்” என அஸத் குறிப்பிட்டிருப்பது மிகுந்த வேடிக்கையானது.
சீர்திருத்தம் கொண்டு வருவோம் என்று கடந்த 60 ஆண்டுகளாக கதை அளக்கும் பாத் கட்சியினர், நடைமுறையில் அதற்கான அறிகுறி எதனையும் வெளிக்காட்டியதில்லை. சிரியாவில் அரசியல் சீர்திருத்தம் என்பது அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் போன்று இலகுவில் செய்ய முடியுமான ஒன்றல்ல. சிரியாவில் தேவையானது கட்டமைப்பு மாற்றம். அடிப்படைகளையே பெயர்த்து, ஒரு புதிய அரசியலமைப்பின் கீழ் நாட்டைக் கொண்டு வருவதே மக்களின் எதிர்பார்ப்பு.
பாத் கட்சியே எப்போதும் ஆட்சிக்குத் தகுதியானது எனவும், 50 வீத ஆசனங்கள் ஏற்கனவே ஆளும் பாத் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது எனவும் குறிப்பிடும் ஓர் அரசியலமைப்பின் கீழ் ஆறு தசாப்தங்கள் அதிகாரத்தில் நீடித்திருக்கும் ஷீஆ, அலவிய்யா வர்க்கம் சிரியாவில் அரசியல் சீர்திருத்தம் குறித்துப் பேசுவது மிகுந்த எதிரிடையானது. அதுவும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து வீதத்தையும் தாண்டாத ஷீஆக்கள்; ஸுன்னிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் என்ன சீர்திருத்தம் கொண்டுவரப் போகின்றனர்? இதற்கு முன்பும் இதுபோன்ற வாய்வீச்சுகள் இவர்களிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. அவை காலப்போக்கில் காற்றோடு காற்றாய் கரைந்து போயிருக்கிறன.
அலவிய்யா வர்க்கத்தின் மிகுந்த கபடத்தனத்தை அஸத் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இன்னொரு முறை இதை நம்பி ஏமாறும் நிலையில் சிரிய மக்கள் இல்லை.
சிரியாவின் தற்போதைய நிலைகளை நுணுக்கமாக நோக்கும்போது லிபியாவின் கடாபியை விட படுமோசமான சர்வாதிகாரியாக அஸத் தன்னை வெளிப்படுத்தியுள்ளதை விளங்கிக் கொள்ளலாம். 10 மாதங்களைக் கடந்தும் பெரியளவிலான மாற்றங்கள் அரச தரப்பில் ஏற்படாமைக்கும் சிரிய வசந்தம் தனது இலக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கும் காரணங்கள் உள்ளன.
கொமைனியின் அநீதிக்கு எதிரான கோஷங்களையும் நீதிக் கதைகளையும் பேசிக் கொண்டிருக்கும் தெஹ்ரானிலுள்ள ஷீஆ மதப் போதகர்களும் நஜாதியும் டமஸ்கஸுடன் கொண்டுள்ள ரகசிய ஒப்பந்தங்களும் இராணுவ ஆதரவும், சிரியாவில் அலவி ஷீஆக்களின் அதிகாரத்தை நீடிப்பதற்கு உதவி வருகின்றன. இன்னொரு புறம் லெபனானில் நிலைகொண்டுள்ள ஈரானின் இராணுவப் பலப்பரீட்சைக் கருவியான ஹிஸ்புல்லாஹ், அஸதுக்கு இராணுவ ரீதியில் ஆதரவு வழங்கி வருகின்றது. இவ்விரு சக்திகளினதும் ஆதரவுதான் அஸதின் திமிருக்குக் காரணமாக உள்ளது.
தெஹ்ரானில் நஜாதியின் அரசாங்கம் நடத்திய எழுச்சி மாநாட்டில், பஹ்ரைனில் அரச பயங்கர வாதத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் குரலெழுப்பப்பட்டது. ஆனால், அஸதின் அரசாங்கம் சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்திவரும் கீழ்த்தரமானவன் முறைகள், படுகொலைகள் குறித்து தெஹ்ரான் நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலும் டமஸ்கஸை ஆதரித்து வருவது ஈரானின் தார்மீக நிலைப்பாடு குறித்த ஐயத்தை எழுப்புகிறது.
அஸதின் இரண்டு மணித்தியால உரையில், அவர் அறப் லீக்கை சாடியுள்ளார். “அறப் லீக்கில் இடம்பெறும் நாடுகளின் அரசாங்கங்கள் மன்னராட்சியை பிரதிபலிக்கும் நிலையில், சிரியாவுக்கு அவர்கள் ஜனநாயகத்தைப் போதிப்பதற்கு முயல்கிறார்கள். புகைப் பழக்கமுள்ள வைத்தியர்,நோயாளிக்கு புகைப்பழக்கத்தைக் கைவிடுமாறு கோருவது போன்றதே இது” என்கிறார் அஸத்.
அதன் மூலம் சிரியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். சிரியாவில் இன்று முன்னுரிமைக்குரிய விவகாரம் அதன் பாதுகாப்பே எனக் கூறியுள்ள அஸத், பொது மக்களைக் கொல்வதற்கு இராணுவத்திற்குத் தாம் கட்டளையிடவில்லை எனவும் தெரிவிக்கின்றார். சிரியாவின் பாதுகாப்பு என்று அவர் குறிப்பிடுவது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அற்ற நிலையைத்தான் என்பதை மிகச் சாதாரணமான ஒருவராலும் விளங்கிக் கொள்ளலாம்.
மீண்டும் மீண்டும் அஸத், அவரது அதிகார பீடத்தை அசைக்கின்ற எல்லா சக்திகளையும் பயங்கரவாதிகளாகவும் வெளிச்சக்திகளாகவும் காட்ட முயல்வது ஆளும் அலவி வர்க்கத்தின் மோசமான உள்நோக்கத்தையே புலப்படுத்துகின்றது.
இந்நிலையில் வாயளவில் அவர் பேசிவரும் அரசியல் சீர்திருத்தம் குறித்து நம்பிக்கை கொள்வதற்கு சிரிய மக்கள் தயாரில்லை என்பதையே களநிலவரம் உறுதி செய்கின்றது. அஸதின் அரசாங்கத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி கண்டுள்ள நிலையில்,குறைந்தபட்சம் பொதுமக்கள் மீதான கொடூரங்களை நிறுத்தாத நிலையில் அஸதுக்கெதிரான மக்கள் போராட்டம் ஓயப் போவதில்லை.
அந்நாட்டின் அனைத்து எதிர்க் கட்சிகளும் உருவாக்கியுள்ள சிரிய தேசிய சபை, அறப் லீக்கின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. சிரியாவின் உள்விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை நேரடியாகக் கையாள்வதற்கான நிலை உருவாகிவிட்டது என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிரிய நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிராகத் திரளும் மக்களின் எண்ணிக்கை அலைபோல் அதிகரித்து வருகின்றது. லெபனான் ஹிஸ்புல்லாஹ்வையும் தெஹ்ரான் அரசாங்கத்தையும் நம்பியிருக்கும் அஸத் வெகுவிரைவில் தூக்கி வீசப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்படுகின்றன.
லிபியாவின் முன்னாள் இரும்புச் சர்வாதிகாரி கடாபியே அறபு முஸ்லிம் உலகின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்டவர். அவர், லிபியர்களுக்கு எதிராக இயந்திரத் துப்பாக்கிகளைத் தூக்கியபோது லிபியப் புரட்சி தோற்றுவிடும் என்றே இஸ்லாமிய உலகம் எண்ணியது. ஆனால், கடாபியின் கதையே முடிந்து விட்டது. அஸதும் இந்த ஆபத்தான முடிவை எதிர்கொள்ளும் நாள் நெருங்கி விட்டதை அவரது உரையும் வாய்ச்சவாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.
வரலாறு எப்போதும் அதிகாரத்திற்கு ஆதரவாக நகர்வதில்லை. இந்த உண்மை சிரியாவிலும் நிச்சயம் பலிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக