அமிர் ஹெக்மாத்தி - சீ.ஐ.ஏ.யின் ஈரானிய உளவாளி
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட அமிர் ஹெக்மாத்தியின் போட்டோ.
ஈரானிய கோர்ட் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) சி.ஐ.ஏ. உளவாளி என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. ஈரானின் வரலாற்றில் 33 ஆண்டுகளின்பின் அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் முறுகலை மேலும் அதிகமாக்கி விட்டுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளவரின் பெயர் அமிர் ஹெக்மாத்தி என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 28 வயதான ஹெக்மாத்தி ஒரு ஈரானிய-அமெரிக்கர் என்ற போதிலும், ஈரானில் பிறந்தவரல்ல. அமெரிக்காவின் அரிசோனாவில் பிறந்தவர். பெற்றோர்கள் ஈரானில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள். ஹெக்மாத்தி அமெரிக்க கடற்படையில் முன்பு சிறிது காலம் பணிபுரிந்திருக்கிறார்.
ஹெக்மாத்தி மீதான உளவு பார்த்தல் குற்றச்சாட்டு தொடர்பான விபரங்களை ஈரான் மிக ரகசியமாகவே கையாள்கிறது. கடந்த ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டபின், ‘சி.ஐ.ஏ. உளவாளி’ என்பதைத் தவிர வேறு எந்த விபரத்தையும் ஈரானிய அரசு வெளியிடவில்லை.
அமெரிக்க உட்துறை அமைச்சு, ஹெக்மாத்தி உளவாளி என்பதை மறுத்திருக்கிறது. சி.ஐ.ஏ. கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவில் வசிக்கும் அவரது பெற்றோர்கள், ஹெக்மாத்தி ஈரான் சென்றது உளவு பார்க்க அல்ல என்றும், வயதான தாத்தா பாட்டியைப் பார்த்துவரச் சென்றார் என்றும் கூறுகிறார்கள்.
சர்வதேச மனித உரிமைகள் சங்கத்தின் ஈரானியத் தலைவர் ஹாதி கேமி, “இந்த குற்றச்சாட்டும் தண்டனையும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டவை. ஹெக்மாத்தி உளவாளி என்பதற்கு ஈரானியர்களிடம் ஆதாரம் ஏதுமில்லை. அதுதான் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது. சிறிய ஆதாரம் இருந்தால்கூட அதை வெளிப்படையாக அறிவிக்கும் வழக்கமுடைய நாடு ஈரான்” என்கிறார்.
ஈரானின் அணு ஆலைகள் தொடர்பான சிக்கலே இதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணம் என்று ஊகிக்கப்படுகிறது. ஈரானிய அணு ஆலைகளில் அணு ஆயுதத் தயாரிப்பு நடைபெறுவதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்காக ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் அழுத்தம் கொடுக்கின்றன. இந்த நிலையில் ஹெக்மாத்திக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதே தினத்தில், ஈரானிய அரசு மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டிருப்பது, இதில் அரசியல் இருப்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்துகிறது.
நேற்று ஈரானிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு- அணுசக்திக்கு தேவையான யூரேனியத் தயாரிப்புக்கான இரண்டாவது ஆலை ஒன்றை ஈரான் அமைத்துள்ளது!
இந்த இரண்டாவது ஆலை தொடர்பாக அரசியல் சர்ச்சைகள் எழும் என்பது ஈரானுக்கு தெரியும். இதை வைத்தே ஈரானிய எண்ணை விற்பனையை மேற்கு நாடுகள் முடக்க முயல்வார்கள் என்பதையும் ஈரான் ஊகித்திருக்கும். அந்த விவகாரத்தின் சூட்டை குளிரச் செய்வதற்கே அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ஊகிக்க இடமுள்ளது.
ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம் இலக்கம்-15 ஹெக்மாத்திக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. மரண தண்டனைக்கான உத்தரவு ஆவணத்தில், “சி.ஐ.ஏ.-யால் அனுப்பப்பட்டே ஹெக்மாத்தி ஈரானுக்கு வந்தார். ஈரானிய உளவுத்துறை அமைச்சுக்குள் ஊடுருவவே அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்டு 20 நாட்களுக்குள் அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது ஈரானியச் சட்டம். ஆனால் இந்தச் சட்டம் அரசியல் ரீதியான தண்டனைகளுக்கு பெரிதாக கை கொடுக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக