டிசம்பர் 01, 2011

முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

                  பிரிட்டனின் பிரபல ஊடகமான "Mail Online", அதிரடியான 
செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது (28th Nov 2011). 

பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 
பரிணாம பாடத்தை புறக்கணிக்கின்றனர்/வெளிநடப்பு செய்கின்றனர் என்ற 
செய்தி தான் அது. இதற்கு காரணம், குர்ஆனின் போதனைகளுக்கு எதிராக 
பரிணாம கோட்பாடு இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்களாம்.


பாரம்பரியமிக்க இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் (University College London) 
பேராசிரியர்கள் இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய செய்தியையும் கூறுகின்றார்கள். 
அதாவது, முக்கிய பாடமான(??) டார்வீனிய கோட்பாட்டை, மத காரணங்களை 
கூறி புறக்கணிக்கும் உயிரியல் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 
அதிகரித்து வருகின்றதாம். இது அவர்களுக்கு கவலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம் மாணவர்களின் இத்தகைய எதிர்ப்புக்கு பின்னால் துருக்கியின் 
ஹாருன் யஹ்யா போன்றவர்களின் பரிணாம எதிர்ப்பு புத்தகங்கள் 
ஒரு காரணமாக இருக்கலாமென்று கூறப்பட்டுள்ளது. ஹாருன் 
யஹ்யாவின் குழுக்கள் பிரிட்டனில் தொடர்ந்து பரிணாம எதிர்ப்பு உரைகளை 
நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2008-ஆம் ஆண்டு, இலண்டன் பல்கலைகழக 
கல்லூரியில் பரிணாம எதிர்ப்பு உரையை ஹாருன் யஹ்யாவின் குழு நிகழ்த்தியது. 
இந்த ஆண்டு பிரிட்டனின் பல்வேறு இடங்களில் அவர்கள் பரிணாம எதிர்ப்பு 
பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். 

பரிணாம கோட்பாட்டின் தூதர்களில் ஒருவரான ரிச்சர்ட் டாகின்ஸ்சை நேரடி 
விவாதத்திற்கு அழைத்து பிரிட்டனின் பிரபல நாளிதழ்களில் ஹாருன் யஹ்யா 
விளம்பரம் கொடுத்திருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆக, இதுப்போன்ற தீவிர பிரச்சாரங்கள் மாணவர்களின் புறக்கணிப்பிற்கு 
பின்னணியில் இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். 

முஸ்லிம் மாணவர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டீவ் 
ஜோன்ஸ். இவர் இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் ஓய்வுப்பெற்ற 
மனித மரபியல் பேராசிரியராவார். தங்கள் நம்பிக்கைக்கு எதிராக 
உயிரியல் இருப்பதாக நினைத்தால் எதற்காக அந்த துறையை முஸ்லிம் 
மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் 
ஸ்டீவ் ஜோன்ஸ். 

ஸ்டீவ் ஜோன்ஸின் இத்தகைய கருத்தை தங்களுக்கே உரித்தான நகைச்சுவை 
பாணியில் விமர்சித்திருக்கின்றது பரிணாம எதிர்ப்பு முன்னணி தளமான 
'uncommon descent'. மருத்துவ பாடத்தில் டார்வினிசத்துக்கு என்ன வேலை என்று 
கேட்டிருக்கின்றது அந்த தளம். மருத்துவ பாடத்தில் டார்வினிசத்தை 
உள்ளே புகுத்தி மாணவர்களின் நேரத்தை வீணாக்குவது ஒரு அவதூறுச் 
செயலாக கருதப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றது அந்த தளம். 

பரிணாம பாடத்தை புறக்கணிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே 
முஸ்லிம்கள் என்று குறிப்பிடும் 'Mail online', இதுக்குறித்த தன்னுடைய கவலையை 
டாகின்ஸ் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றது. 

அது சரி, பரிணாம கோட்பாட்டை ஏற்காததற்காக உயிரியல் பயிலும் 
மாணவர்களை விமர்சிக்கின்றார்களே (சில) பேராசிரியர்கள், இந்த ஆண்டு 
துவக்கத்தில், Science ஆய்விதழில், அமெரிக்காவின் பெரும்பாலான உயிரியல் 
பாட ஆசிரியர்கள் பரிணாமத்தை ஆதரிக்க தயங்குவதாக செய்தி வெளிவந்ததே.....

ஆசிரியர்களுக்கே இந்த நிலை என்றால் மாணவர்களை சொல்லி என்ன செய்வது??

மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் நம்மை காப்பானாக..ஆமீன். 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Muslim medical students boycotting lectures on evolution... because it 'clashes with the Koran' - 
Mail Online, 28th November 2011
2. British Muslim med students refuse to attend Darwin propaganda lectures - Uncommon descent.
3. High School Biology Teachers in U.S. Reluctant to Endorse Evolution in Class, Study Finds - 
Science daily, 28th January 2011.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக