போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்கும்
நெருக்கடியான நிலையில் இலங்கை
ரொபேர்ட் பிளேக் கூறுகிறார்
03.03.2010 யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது ஏற்பட்ட பொதுமக்கள்
இழப்புகள் தொடர்பாக போர்க்குற்ற
நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்நோக்கும் நெருக்கடி இலங்கைக்கு
இருப்பதாக தெற்கு,மத்திய
ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி
வெளிவிவகார அமைச்சர்
ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.
2009 மே இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இப்போது இந்தக் கடுமையான
எச்சரிக்கை வெளிவந்திருக்கிறது. சர்வதேச விசாரணைக்கான நிர்ப்பந்தத்தை
எதிர்நோக்கும் நெருக்கடி இலங்கைக்குக் காணப்படுவதாக
ரொபேர்ட் பிளேக்கிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் ரொபேர்ட் பிளேக் இந்தக்
கருத்தைத் தெரிவித்திருக்கிறார். சீனா,ரஷ்யா உட்பட பலம் பொருந்திய
நேச அணிகளின் ஆதரவினால் கண்டனங்களிலிருந்தும் இலங்கை முன்னர்
தவிர்க்கப்பட்டிருந்தது.
வெளிமட்ட விசாரணைக்கு முகங்கொடுப்பதிலும் பார்க்க சர்வதேச
தரத்திலான மனித உரிமை விடயங்களை அடியொற்றி தனது சொந்த
விசாரணையை இலங்கை மேற்கொள்வது முன்னுரிமை அளிக்கும் விடயமாக
இருந்தது என்று பிளேக் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச தரத்தை
எதிர்கொள்வதற்கு இலங்கை விருப்பமின்றியிருந்தால் அவற்றை
ஆராய்வதற்கு சர்வதேசஆணைக்குழுவைநியமிக்குமாறு அழுத்தங்கள்
ஏற்படும் என்று ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு
பிளேக் கூறியுள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கை
மறுத்திருக்கிறது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துக்கும்
விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 இல் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த
உடன்படிக்கை ஏன் முறிவடைந்தது? என்பது தொடர்பாக விசாரணை
செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை
அமைத்திருந்தார். அரசாங்கம் நியமித்திருந்த இந்த ஆணைக்குழுவை
கண்துடைப்பு என சர்வதேச உரிமைகள் குழுக்கள் நிராகரித்திருந்தன. 37 வருட
மோதலின்போது இருதரப்பும் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக
விசாரணை செய்வதற்கு தவறிவிட்டதாக சர்வதேச உரிமைகள் அமைப்புகள்
கூறியுள்ளன.
2009 இல் மனித உரிமைகள் தொடர்பாக வாஷிங்டன் கவலை தெரிவித்ததைத்
தொடர்ந்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளில்
நெருடல்கள் ஏற்பட்டன. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நெருக்குதல்கள்
வெளிவந்ததையடுத்து கணிசமானளவு அமெரிக்க அரசியல்வாதிகள் இலங்கை
தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஜனாதிபதி
பராக் ஒபாமாவின் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
நல்லிணக்கம்,பதிலளிக்கும் கடப்பாடு,மனித உரிமைகள் போன்ற விடயங்களே
இலங்கையுடன் உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்காக
அமெரிக்கா விரும்பும் முக்கியமான அம்சங்கள் என்று வாஷிங்டனிலிருந்து
திங்கட்கிழமை ஒளிநாடாப் பேட்டியொன்றில் ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.
யுத்தத்தின் இறுதியான சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்
கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பீடு செய்துள்ளதென பிளேக்
தெரிவித்திருக்கிறார்.
மோதலின்போது குறைந்தது 7 ஆயிரம் பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா.
தெரிவித்திருந்தது. அதேசமயம், இத்தொகை மேலும் அதிகமென சர்வதேச
உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.
இதேவேளை, கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு லிபியாவின்
விடயத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை கொண்டு சென்றமை மனித உரிமைகள்
தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைக்கான சமிக்ஞை என்று ரொபேர்ட் பிளேக்
சுட்டிக்காட்டியுள்ளார். லிபியாவுடன் இலங்கையை தான் ஒப்பிட்டிருக்க
வில்லை எனவும் ஆனால், லிபியாவுக்கு எதிராக பாதுகாப்புச்சபை
மேற்கொண்ட ஏகமனதான தீர்மானமானது மனிதத்துவத்திற்கு எதிரான
குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் தீர்க்கமான தன்மையுடன் இருப்பதை
கோடிட்டுக் காட்டுவதாக பிளேக் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக