ஓமனில் போராட்டம் தொடர்வதால் பீதி!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர்.
இதனால், அரபு நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. டுனீசியா, எகிப்து, ஏமன், லிபியா, பக்ரைன், ஜோர்டான், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா என அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நாடுகளின் வரிசையில் தற்போது, எண்ணெய் வளம் மிக்க நாடான ஓமனும் சேர்ந்துள்ளது.
அந்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக கபூஸ் பின் சயீத் ஆண்டு வருகிறார். ஓமனில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 26ம் தேதி, அந்நாட்டின் தொழில் நகரமான சோகாரில்
நூற்றுக்கணக்கானோர் சம்பள உயர்வு, ஊழல் ஒழிப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
போலீசார் இப்போராட்டத்தை தடியடி உள்ளிட்ட வழக்கமான "கவனிப்புகள்' மூலம் கலைத்து விட்டனர். ஏற்கனவே அரபு பிராந்தியத்தில் போராட்டம் நெருப்பாக பரவி வருவதால், பீதியடைந்த மன்னர் சயீத், உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆறு அமைச்சர்களை நீக்கினார்.
ஆனால், நேற்று முன்தினமும் போராட்டம் தொடர்ந்தது. போலீசார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இச்சம்பவத்தில் ஆறு பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் அகமது பின் முகமது அல் சயீத், "துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை; ஒருவர் மட்டுமே பலியானார்' என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சோகாருக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. நேற்று, சோகாரில் உள்ள பிரதான சந்தைப் பகுதி கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அந்நகரைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.
எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முற்படவில்லை. எண்ணெய் ஏற்றுமதி பாதிக்குமா? "பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில்' (ஓபெக்) ஓமன் இல்லை என்றாலும், உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் 24வது இடத்தில் உள்ளது.
ஒரு நாளைக்கு 8,50,000 பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் குறிப்பிடத்தக்க நாடு அது.
அதன் முக்கியத் துறைமுகமான மினா அல் பஹல் வழியாக, எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது. ஓமன் துறைமுகங்களின் வழியாகத் தான் உலகின் 40 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து நடந்து வருகிறது.
சோகார் துறைமுகம் வழியாக ஒரு நாளைக்கு 1,60,000 சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பேரல்கள் கையாளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "சோகார் துறைமுகம் வழியாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடக்கிறது.
போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் தான் போராடுகின்றனர். எனினும் போராட்டங்கள் தொடர்ந்தால், துறைமுகப் பணிகளுக்குச் செல்வோர் தடுக்கப்பட்டால் ஏற்றுமதி நிச்சயம் பாதிக்கப்படும்' என்று சோகார் துறைமுக செய்தித் தொடர்பாளர் கவலை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக