அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஐந்து கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக பிரபல சிங்கள நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.பிரபல சிங்கள சினிமா நடிகையும்,
கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பபா என்றழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி அண்மையில் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தன் கணவனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிரந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமே அவர் அரசாங்கத்தால் தனக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விடயத்தைப் போட்டுடைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தனது ஆதரவை ஆளுங்கட்சிக்குப் பெற்றுக் கொள்வதற்காக தனது கணவனுக்கு ஐந்து கோடி பணமும், விலைமதிப்புள்ள காரொன்றும் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், தனது கணவனின் நெருக்குதல் காரணமாகவே தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உபேக்ஷா சுவர்ணமாலி பிரஸ்தாப சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தை வழங்கிய போது அதனை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அது குறித்து உடனடியாக நுகேகொடைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு மொபைல் போன் மூலமாக அறிவித்துள்ளார்.
அதனையடுத்து உபேக்ஷாவின் வாக்குமூலத்தை குறிப்பெடுப்பதை இடைநிறுத்துமாறு அறிவித்த பொலிஸ் அத்தியட்சகர், சற்று நேரத்துக்குப் பின் திரும்பவும் மொபைல் போனில் பிரஸ்தாப பெண் பொலிஸ் உத்தியோகத்தரைத் தொடர்பு கொண்டு உபேக்ஷா சுவர்ணமாலியிடம் தற்போதைக்கு எதுவிதமான வாக்குமூலமும் பெற வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.
அதனையடுத்து சிறிது நேரத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷாவைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய நிலையில் அரசாங்கத்தைச் சர்ச்சைக்குள் மாட்டிவிடும் வகையான எதுவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்றும், அவரின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துத் தருவது தனது பொறுப்பு என்றும் வாக்குறுதியளித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வற்புறுத்தல் காரணமாக உபேக்ஷா தன் கணவருக்கு எதிராக செய்திருக்கும் முறைப்பாட்டையும் மீளப்பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு இறங்கி வந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக