இனவாதத்தினை முன்னெடுத்த ஜே.வி.பி.யினர் சமஷ்டித்தீர்வினை ஆதரிக்க ஏன் முன்வந்தார்கள்?? முத்துக்குமார்
தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்துவந்த ஜே.வி.பி.யினர் தற்போது பிரிவினையில்லாத சமஷ்டியினை ஆதரிக்கத்தயார் என தமது மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அறிவித்துள்ளார்.
குமார் ரூபசிங்கா போன்ற அரசசாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முன்னர் சமஷ்டி தொடர்பாக மயிர் பிளக்கும் ஆய்வுகளையெல்லாம் செய்துள்ளனர். தற்போது அடங்கிவிட்டனர். யதார்த்த நிலைக்கு ஏற்ப தமிழ் மக்கள் அரசியலை செய்யவேண்டும் என புத்திகூறும் நிலைக்கு வந்துள்ளனர். ஒருசிலர் மட்டும் ஒன்றுமே இல்லாத 13 வது திருத்தத்தினை தமது பிழைப்புக்காக காவித்திரிகின்றனர்.
இங்கே எழுகின்ற கேள்வி பச்சை இனவாதத்தினை முன்னெடுத்த ஜே.வி.பி.யினர் சமஷ்டித்தீர்வினை ஆதரிக்க ஏன் முன்வந்தார்கள் என்பதாகும்.
இதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது பேரினவாத அரசியலை அவர்களால் முன்னெடுக்க முடியாமையாகும். பேரினவாத அரசியல் தற்போது முழுமையாக மகிந்தரின் கைகளுக்கு சென்றுவிட்டது. ஜே.வி.பி.யின் கைகளில் இருந்த இவ் அரசியலை மகிந்தர் பலவந்தமாக பறித்தெடுத்துள்ளார்.
இம்மாநாட்டில் ஏழு தீர்மானங்களை முக்கியமாக
எடுத்திருந்தது. அத்தீர்மானங்களில் சமஷ்டித் தீர்மானமும் ஒன்றா? என்பது தெரியவில்லை. தீர்மானங்கள் இன்னமும் முழுமையாக தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. சிலவேளைகளில் அதன் தலைவர் தமது உரையின் போது கூறியவிடயமாகவும் இது இருக்கலாம். தமிழ் ஊடகங்கள் இவ்வறிவிப்பினை எச்சரிக்கையுடன் வரவேற்று கருத்துகளைத் தெரிவித்துள்ளன. சிங்கள அரசியற்கட்சிகள் பேரினவாதத்தின் கைதிகளாக இருப்பதால் இந்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என்பதில் தமிழ் மக்கள் பெரியளவிற்கு நம்பிக்கைகொள்ளவில்லை. பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகள் முன்னர் இவ்வாறான தீர்மானங்களை எடுத்திருந்தன. ஆனாலும் சிங்கள மக்களின் ஆதரவினை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அதனை பெரியளவிற்கு பேசுபொருளாக்கவில்லை.
காலப்போக்கில் அவை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கூடாரத்தில் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து இவைபற்றி பேசுவதையே நிறுத்திவிட்டன. இனவாத அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பினை வழங்கிவந்தன. விக்கிரமபாகு தலைமையிலான நவசமசமாஜக் கட்சி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. அது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்ததினால் சிறிய தளம்கூட சிங்கள மக்கள் மத்தியில் அதற்குக் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சி சமாதானகாலத்தில் சமஷ்டித்தீர்வை தூக்கிப்பிடித்தது. சிங்கள மக்களின் பிரதேசங்கள் தவிர்ந்த உலகமெல்லாம் அதனைப் பிரசாரம் செய்தது. தற்போது அதனைக் கைவிட்டுவிட்டதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு வரத்துடித்துக் கொண்டிருக்கின்ற சஜித் பிரேமதாச பகிரங்கமாகவே இனவாத அரசியலை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.
இவர்களெல்லாம் புலிகள் பலமாக இருந்தபோதுதான் சமஷ்டி பற்றி கூக்குரலிட்டனர். தற்போது புலிகள் அழிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே தேவையில்லை என்றவகையில் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றிய அபிப்பிராயமாகவும் இதுவே உள்ளது.
ஜே.வி.பி.யினர் சமஷ்டிபற்றிக் கருத்துத் தெரிவித்தாலும் சிங்கள ஊடகங்களில் அது பெரிதாக வரவில்லை. ஊடகங்கள் அதுபற்றி கருத்துக்கேட்டபோது கூட தற்போது அதுபற்றி பதில் அளிக்கவிரும்பவில்லை என்றே அவர்கள் கூறியிருந்தனர். சிங்கள மக்கள்மத்தியில் தமது செல்வாக்கினை இழந்துவிடுவோம் என அவர்கள் அச்சப்படுவது போலவே தெரிகின்றது. நடைமுறை உண்மையும் அதுவேயாகும்.
போர் பெற்றி பெருமிதத்தில் சிங்கள மக்கள் திளைத்து இருக்கும்போது சமஷ்டிபற்றி கருத்துத் தெரிவித்தால் சிங்கள மக்கள் மத்தியில் தமது தளத்தினை இழப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால் ஜே.வி.பி.யினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்னெடுப்பார்கள் என சிறிதுகூட எதிர்பார்க்கமுடியாது.
இங்கே எழுகின்ற கேள்வி பச்சை இனவாதத்தினை முன்னெடுத்த ஜே.வி.பி.யினர் சமஷ்டித்தீர்வினை ஆதரிக்க ஏன் முன்வந்தார்கள் என்பதாகும்.
இதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது பேரினவாத அரசியலை அவர்களால் முன்னெடுக்க முடியாமையாகும். பேரினவாத அரசியல் தற்போது முழுமையாக மகிந்தரின் கைகளுக்கு சென்றுவிட்டது. ஜே.வி.பி.யின் கைகளில் இருந்த இவ் அரசியலை மகிந்தர் பலவந்தமாக பறித்தெடுத்துள்ளார்.
சிங்கள மக்களும் இரு பிரதான கட்சிகளில் ஒன்று பேரினவாதத்தினை முன்னெடுக்கத் தயாராக இருந்தால் மூன்றாவது கட்சியினை அவர்கள் கைவிடுவதே மரபாக உள்ளது. அந்த அடிப்படையிலேயே மகிந்த இதனை கையிலெடுத்த பின் இதற்காக ஜே.வி.பி.யினரை ஆதரிக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.
சர்வதேச, பிராந்திய அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக மகிந்தர் பேரினவாத அரசியலைக் கைவிட்டால் ஜே.வி.பி.க்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். ஆனால், இன்றைய சூழலில் சஜித்பிரேமதாச அதனைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதனால் ஜே.வி.பி.யினருக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்றே கூறவேண்டும்.
இரண்டாவது…, ஜே.வி.பி.யினர் இன்று முன்னெடுப்பதற்கு வேறு முக்கியமான அரசியல் விடயங்கள் எதுவும் இல்லாமையாகும். சிங்கள மக்கள் மத்தியில் விலைவாசிப் பிரச்சினை, ஜனநாயகமின்மை பிரச்சினை, சரத் பொன்சேகா விவகாரம் என்பன இருந்தாலும் போர்வெற்றிப் பெருமிதத்தை மேவி ஊடறுக்கக்கூடியதாக அவையில்லை. சிங்கள மக்களுக்கு புலிகளுடனான போர் ஒன்றினையே பாரிய பிரச்சினையாக காட்டிவந்ததால் அப்பிரச்சினை ஒழிந்தவுடன் பிரச்சினைகளே இல்லை என நினைக்கும் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
இன்று சர்வதேச பிராந்திய கவனங்களைத் திருப்பி அரசிற்கு சிறிதாவது அழுத்தங்கொடுக்கக் கூடிய விடயமாக இருப்பது தமிழ் மக்களின் பிரச்சினையே, அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசாமல் தமிழ் மக்களின் விவகாரத்திற்குள் நுழைய முடியாது. இதனால் ஜே.வி.பி. இதனைக் கையிலெடுத்துள்ளது.
சமஷ்டிப் பிரச்சினையைத் தொடர்ந்து பேசுபொருளாக்கும் எண்ணம் ஜே.வி.பி.க்கு இருக்கும் எனக்கூற முடியாது. ஆனால், பிரச்சினைக்குள் நுழைவதற்கு அனுமதிப்பத்திரமாக சமஷ்டி விவகாரம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த பின் அதனைப் பேசாது விட்டுவிடலாம். மாறாக ஜனநாயகமின்மைப் பிரச்சினையை பேசுபொருளாக்க முற்படலாம். தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஜே.வி.பி.யினரின் குரல்களை சிங்கள மக்கள் எதிர்க்கப்போவதில்லை.
அண்மைக் காலமாக ஜே.வி.பி.தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்காக தமிழ்க் கட்சிகளைக் காட்டிலும் ஓங்கிக் குரல்கொடுத்து வருகின்றது. ஆனாலும் அதிகாரப் பகிர்விற்கு ஜே.வி.பி. எதிரானது என்ற கருத்து நிலவுகின்றதால் இக்குரல்கள் பெரியளவிற்கு தமிழ் மக்கள் மத்தியிலோ, சர்வதேச, பிராந்திய மட்டத்திலோ எடுபடவில்லை.
மூன்றாவது .., தமிழ் மக்களின் மத்தியிலும் அரசியலைச் செய்ய ஜே.வி.பி. தற்போது விரும்புகின்றது. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒரு தீர்க்கமான கருத்தினை முன்வைக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் நுழைய முடியாது. அண்மைக்காலமாக ஜே.வி.பி. யினர் ஜனநாயகமின்மை, மீள்குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் நுழையப்பார்த்தனர். அது பெரியளவிற்கு வெற்றியைத் தரவில்லை. இறுதியில் அரசுசார்பு குண்டர்களிடம் அடியும் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டிய நிலை ஜே.வி.பி.க்கு ஏற்பட்டது.
தமிழ் மக்கள் இன்னமும் ஜே.வி.பி. யினரைப் பழைய ஜே.வி.பி. யினராகவே பார்க்கின்றனர். மகிந்தர் யுத்தத்தினை மேற்கொண்டிருந்தாலும் ஜே.வி.பி. யினரே அதற்குப் பிரதான காரண கர்த்தாக்களாக இருந்தனர் என்ற வலுவான கருத்து தமிழ் மக்களிடம் உள்ளது. அதுவும் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களாக இருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம், சுனாமி பொதுக்கட்டமைப்பு விவகாரம் என்பவற்றினை ஜே.வி.பி. இல்லாமல் செய்ததினால் ஜே.வி.பி. மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் தன்னை ஒரு புதுமனிதனாகத் தமிழ் மக்களிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இருக்கின்றது.
நான்காவது…, சர்வதேச சக்தியாக செயற்படுகின்ற இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து தொடர்ச்சியாக வரும் அழுத்தங்களாகும். குறிப்பாக இந்திய இடதுசாரிக் கட்சிகள் நீண்டகாலமாகவே இவ்வழுத்தங்களைக் கொடுத்துவந்தன. மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது விடயத்தில் அதிக அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. முன்னர் தமது மாநாடுகளுக்கு ஜே.வி.பி. யினரை அழைத்த அக்கட்சி பின்னர் ஜே.வி.பி. யினரின் இனவாத நிலைப்பாடு காரணமாக அதனைக் கைவிட்டிருந்தது.
ஒரு இடதுசாரிக் கட்சி தேசிய இனங்களுக்கிடையே அதிகாரஙகளைப் பகிர்வதற்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்பதே அவர்களது வாதமாக இருந்தது. அதேநேரம், ஒரு இடதுசாரிக் கட்சி இனவாதக் கட்சியாகவும் இருக்கக் கூடாது என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைத்திருந்தனர்.
ஜே.வி.பி. யினர் உள்நாட்டில் ஒரு இனவாதக் கட்சி என்ற முகத்தினைக் காட்டியிருந்தாலும் சர்வதேச ரீதியாக தாம் ஒரு இடதுசாரிக் கட்சி என்ற முகத்தையே அதிகம் காட்ட முற்பட்டனர். தமிழ் மக்கள் தொடர்பாக இடதுசாரிக்களுக்கேயுரிய நிலைப்பாட்டை எடுக்காமல் இடதுசாரி முகத்தை தொடர்ந்து காட்டுவதில் அவர்களுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டன.
ஐந்தாவது…., தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக வளர்ந்துவருகின்ற முரண்பாடுகளாகும். ஜே.வி.பி. யின் ஆரம்பகாலம் தொட்டே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் பிரச்சினை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் அவர்களிடையே இடம்பெற்றன. கட்சிக்குள் தமிழ் மக்களுக்கு சார்பானவர்கள் குறைவாக இருந்தாலும் இடது கண்ணோட்டத்தில் நின்று அவர்கள் வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆரம்பகாலத்தில் ஜே.வி.பி.யின் செயலாளராக இருந்த லயனல் போபகே இது விடயத்தில் முக்கியமானவராக இருந்தார். இது தொடர்பாக « மாக்ஸியக் கண்ணோட்டத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கோர் விளக்கம்’ என்ற நூலையும் எழுதியிருந்தார். பிரிவினையை அவர் அங்கீகரிக்கவில்லை. ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமையினை அவர் வற்புறுத்தியிருந்தார். அவர்கட்சியிலிருந்து விலகுவதற்கும் தேசிய இனப்பிரச்சினையே பிரதான காரணமாக இருந்தது.
இந்திய இராணுவம் தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் நந்தன மாரசிங்க போன்றவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை கட்சிக்குள் உயர்த்திப் பிடித்தனர். அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. இறுதியில் அவர் ஜே.வி.பி. யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் ஹிரு பத்திரிகைக் குழுவைச் சேர்ந்த அஜீத்பராக்கிரம, வாசன போன்றவர். ஜே.வி.பி.க்குள் இருந்தபோது சுயநிர்ணய பிரச்சினையை முன்னெடுத்தனர். கட்சிக்குள் அது முடியாதபோது வெளியேறி ஹிரு பத்திரிகையினை நடத்தினர்.புலிகள் சிங்களத்தில் « தேதுன்ன’ என்ற பத்திரிகையினை வெளியிடுவதற்கும் இவர்களே காரணகர்த்தாக்களாக இருந்தனர்.
இவ்வாறு காலத்திற்கு காலம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.க்குள் உட்கட்சிப் போராட்டம் இடம்பெற்றது. புலிகள் வலிமையாக இருந்த காலத்தில் கட்சிக்குள் விவாதம் எழுந்தபோதெல்லாம் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தால் நாடு பிரிந்து போய்விடும் என்ற அச்சத்தினை ஊட்டிக்கொண்டிருந்தனர். இன்று புலிகள் இல்லாத நிலையில் வாதங்களை தட்டிக்கழிக்கமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
தமிழ் மக்களில் ஒரு சாரார் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி யின் கருத்துகளை ஒரு பரிமாண வளர்ச்சியாகவே பார்க்கின்றனர்.பச்சை இனவாத அரசியலைப் பின்பற்றிய ஜே.வி.பி புலிகளின் அழிவினைத் தொடர்ந்து தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்காக குரல் கொடுத்தது. குறிப்பாக ஜே.வி.பி. தலைவர்கள் வன்னிக்கு நேரடியாகவே விஜயம் செய்து தமிழ் மக்கள் படும் அவலங்களை உள்ளபடியாகவே வெளியில் கொண்டுவந்தனர்.
புலிப் பேராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கந்த முகாமிற்கும் மாறுவேடத்தில் சென்று அங்குள்ள பிரச்சினைகளையும் வெளியில் கொண்டுவந்தனர். இதன் உச்சநிலையாக காணாமல் போனோர் தொடர்பாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தி முன்னர் கூறியதுபோல் அடியும் வாங்கியிருந்தனர்.
இப்போக்கின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி அதிகாரப் பங்கீடாகவே இருக்கும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சமஷ்டிக்கருத்துகளை தெரிவித்துள்ளனர். எனவே இந்த வளர்ச்சியை தமிழ் மக்கள் சாதகமாக பார்க்க வேண்டுமே தவிர சந்தேகங்கொண்டு பார்க்கூடாது எனக் கூறுகின்றனர்.
இப்போக்கின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி அதிகாரப் பங்கீடாகவே இருக்கும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சமஷ்டிக்கருத்துகளை தெரிவித்துள்ளனர். எனவே இந்த வளர்ச்சியை தமிழ் மக்கள் சாதகமாக பார்க்க வேண்டுமே தவிர சந்தேகங்கொண்டு பார்க்கூடாது எனக் கூறுகின்றனர்.
தென்னிலங்கையில் கொள்கை வழிநின்று அரசியல் நடத்தும் ஒரேயொரு கட்சி ஜே.வி.பி. தான். கொள்கை வழி நிற்கும் ஊழியர் பலமும் இக்கட்சிக்கு மட்டுமே இருக்கின்றது. வேறு கட்சிகளுக்கு அவைகிடையாது. இதை விட தென்னிலங்ககையின் அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களேயாவர். இவ்வாறு கொள்கை பலமும், ஊழியர் பலமும் கொண்ட கட்சியின் கருத்துகளை உதாசீனம் செய்வது தமிழ் மக்களுக்கு நல்லதல்ல என்பதும் இவர்களது கருத்தாக உள்ளது.
ஜே.வி.பி யினரின் கடந்த கால கொள்கைகளை மறக்கலாமா? என்ற வினாவிற்கு அரசியலில் நீண்டகால எதிரியும் இல்லை. நீண்ட கால நண்பனும் இல்லை நீண்டகால நலன்களே உண்டு என்ற வசனங்களையே பதிலாகக் கூறுகின்றனர்.
இன்னோர் சாரார் முன்னர் கூறிய காரணங்களின் அடிப்படையிலான அரசியல் நிர்ப்பந்தங்களே ஜே.வி.பி.யின் சமஷ்டி பற்றிய கருத்துகளுக்கு காரணம். இந்தக்கருத்துகள் நிலையானதல்ல. இன்னோர் தடவை அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் குத்துக்கரணம் அடித்து பழைய இனவாத நிலைக்கு செல்லலாம் எனக்கூறுகின்றனர்.
எனவே ஜே.வி.பி.தொடர்பாக எப்போதும் தமிழ் மக்கள் விழிப்பான சந்தேக நிலையில் இருக்க வேண்டும். தேவையானபோது தமிழ் மக்களின் அரசியலுக்காக பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழ்ப்பிரதேசங்களில் அவர்கள் செயற்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறுகின்றனர். தென்னிலங்கை மட்டத்தில் அவர்களை வைத்துக்கொண்டு பயன்படுத்துவதைப்பற்றி யோசிப்பது நல்லது எனக்கூறுகின்றனர். தமிழ் மக்களில் வாழும் முன்னேறிய பெரும்பான்மையோரின் கருத்து இதுவாகவே உள்ளது.
மேலும் ஒரு சாரார் கடும் தீவிரவாத நிலையப்பாட்டில் ஜே.வி.பி.ஒரு பச்சை இனவாதக்கட்சி. அவர்கள் எதைத்தான் கூறினாலும் அவர்களுடன் ஒட்டுறவு எதுவும் தமிழ் மக்கள் வைத்திருக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். தமிழ் சாதாரண மக்களின் பெரும்பான்மைக் கருத்து இதுவாகவே உள்ளது. அவர்கள் ஏனைய சிங்களக் கட்சிகளை விட கடுமையான இனவாதக்கட்சியாக ஜே.வி.பி.யினரை பார்க்கின்றனர்.
இவ்வாறு ஜே.ளக்வி.பி.யின் அண்மைக்கால போக்குபற்றி அபிப்பிராயங்கள் நிலவினாலும் தர்க்கரீதியாக விடயங்களைப் பார்க்கும்போது சில உண்மைகளைக் கண்டுகொள்கூடியதாக இருக்கும். இதில் மூன்று விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது விடயம், : பேரினவாத அரசியல் தளம் தற்போது ஜே.வி.பி யின் கைகளில் இல்லை. அது மகிந்தரின் கைகளிலேயே உள்ளது.பேரினவாத நிறுவனங்களும் மகிந்தருக்கு பின்னாலேயே உள்ளன.இந்நிறுவனங்கள் சிங்கள குடியேற்றங்கள் உட்பட பல இனவாத வேலைத்திட்டங்களை அரசாங்தத்தின் உதவியோடு மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.
எனவே சிலவருடங்களுக்கு பேரினவாத அரசியலை கையிலெடுப்பது பற்றி ஜே.வி.பி.யினால் நினைத்துப்பார்க்கவே முடியாது. இதனால் ஜே.வி.பி.யினர் இனவாத அரசியலை முன்னெடுப்பர் என சில வருடங்களுக்குத் தமிழ் மக்கள் சந்தேகப்படத் தேவையில்லை.
இரண்டாவது விடயம் : சிங்கள சமூகத்திலிருந்து தமிழ் மக்களை ஆதரிக்கின்ற கட்சிகளாக இருந்தாலும் அவை பேரினவாதத்தின் கைதிகள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த கைதிநிலை இருக்கும்வரை எந்தச் சிங்களக் கட்சியாலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி நடைமுறைச் செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. அதை மீறிச் செயற்பட்டால் சிங்கள மக்கள் மத்தியில் எந்தத் தளத்தையும் அவர்களால் உருவாக்க முடியாது. நவசமசமாஜக் கட்சிக்கும் இதுவே நடந்தது.
பாராளுமன்ற அரசியலில் வாக்குகள் மிக முக்கியம். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வாக்குகளை இழக்க எந்தச் சிங்களக் கட்சியும் தயாராக இருக்கப் போவதில்லை. கடந்தகால இடதுசாரிக் கட்சிகளின் வரலாறு இந்த உண்மைகளையே வெளிக்காட்டுகின்றது. ஜே.வி.பி. தற்போது பாராளுமன்ற அரசியலையே பின்பற்றுகின்றது. இந்நிலையில் சிங்கள மக்களின் தளத்தைப் பலவீனப்படுத்தக்கூடிய அரசியலை அது நடைமுறையில் செய்யப்போவதில்லை. அவ்வாறு செய்வது கட்சியின் தற்கொலைக்குச் சமமானது.
எனவே, தமிழ் மக்கள் சிங்கள தேசியத்தின் யதார்த்த நிலையை மீறி சிங்களக் கட்சிகளிடம் பெரிதாக எதிர்பார்க்கக்கூடாது. தனது அரசியலை தானே முன்னெடுப்பதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும். வலி நிறைந்ததாயினும் பிள்ளையை தாய்தான் பெற்றெடுக்க வேண்டும்.
மூன்றாவது விடயம் : தமிழர் தாயகத்தில் ஜனநாயக சூழலை உருவாக்குதலாகும். தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில் அரசியல் போராட்டம் மூலமே தமிழ் மக்களினால் முன்னேறிச் செல்ல முடியும். இந்த அரசியல் போராட்டத்திற்கு ஜனநாயக சூழல் நிலவுவது மிகவும் இன்றியமையாதது.
ஆனால், தமிழர் தாயகத்தில் ஜனநாயக சூழல் நிலவுவது மிகவும் இன்றியமையாதது. சூழல் என்பது அறவே கிடையாது. இராணுவ நிர்வாகம் நடைமுறையில் இருப்பதால் இராணுவ இறுக்கமே அதிகமாகவுள்ளது. 5 பேர் ஓரிடத்தில் கூடிக் கதைப்பது கூட இயலாததாகவுள்ளது. இந்த இறுக்கம் காரணமாகத் தமிழ் மக்கள் அனைவரும் திறந்தவெளிச் சிறையில் இருக்கும் கைதிகளாகவே உள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக மக்கள் அரசியல்பற்றிப் பேசவே அஞ்சுகின்றனர். இளைஞர்கள் அரசியலுக்கு வரப் பின்னடிக்கின்றனர். ஊடகங்கள் சரியான கருத்துகளைக் கூறத் தயக்கம் காட்டுகின்றன. ஒருவாறான சுயதணிக்கையை அவை மேற்கொள்கின்றன. இந்தக் கைதிநிலையிலிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக அரசியலைச் செய்யக்கூடிய வகையில் ஜனநாயக சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ்க் கட்சிகளினால் தனித்து ஜனநாயகச்சூழலை உருவாக்கிவிட முடியாது. அவையும் கைதிநிலையில் உள்ளதால் ஒரு எல்லைக்குமேல் குரல் எழுப்ப முடியாது. பலபக்க அழுத்தங்கள் மூலமே ஜனநாயக சூழலை உருவாக்க முடியும். இது விடயத்தில் தென்னிலங்கையிலிருந்து வரும் அழுத்தம் அதிக பயனுடையதாக இருக்கும். பிராந்திய சர்வதேச சக்திகளையும் தமிழ் மக்களை நோக்கிக் கவனத்தைத் திருப்பக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும்.
சிங்களக் கட்சிகளில் ஜே.வி.பி. ஜனநாயக சூழலை உருவாக்குவதற்காகக் காத்திரமான வகையில் குரல் கொடுத்து வருகின்றது. ஜனநாயக துஷ்பிரயோகத்திற்கான தெளிவான சான்றுகளை முன்வைக்கின்றது. இந்தப் போக்கினைத் தமிழ் மக்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குதல் வேண்டும். ஜனநாயக சூழலுக்காகப் போராடுவது சிங்கள மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கினைக் குறைக்காது. இதைவிட தென்னிலங்கையில் ஜனநாயக சூழலை உருவாக்குவதற்கு அவை முன்னோடியாக அமையும். இதனால் சிங்கள மக்களும் இதனை ஆதரிப்பார்களே தவிர,பெரிதாக எதிர்க்கமாட்டார்கள்.
ஜே.வி.பி.யினர் தமிழ் மக்கள் மத்தியில் நுழைந்துவிடுவர் எனப் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. இலங்கைத்தீவு சமூகமளவில் இரண்டாகப் பிரிந்தே இருக்கின்றது. இதனால் எந்தச் சிங்களக் கட்சியினாலும் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியலை முன்னெடுக்க முடியாது. அவ்வாறு முன்னெடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியிலும் தளங்களை உருவாக்க முடியாது. டக்ளசினையும் பிள்ளையானையும் கைவிட்டால் தமிழ்ப்பிரதேசத்தில் 100 வாக்குகளைக்கூட பெறுவது மகிந்தருக்கு கடினமாக இருக்கும். சலுகைகள், உதவிகள் சிறிய ஆதரவினை பெற்றுக்கொள்ள உதவக்கூடும். ஆனால் அவை தமிழ் அரசியலை ஊடுருவதற்கு போதுமானதாக இருக்கமாட்டாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்ப் பிரதேசத்தில் தனியான தளம் என்று எதுவும் இல்லை. விஜயகலா மகேஸ்வரனுக்குக் கிடைத்த வாக்குகள் எல்லாம் அவருக்குத் தனிப்பட்ட வகையில் கிடைத்த வாக்குகளே.
இந்தப் போக்கு யாழ்.மாநகரசபைத் தேர்தலில் தெளிவாகவே தெரிந்தது. நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தெரியக்கூடும்.
எனவே, எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் ஜே.வி.பி யினரை பயன்படுத்தக்கூடிய மார்க்கங்களைக் கண்டறிவது தமிழ் அரசியலின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியத்தைத் தருவதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக