உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூட்டமைப்புக்கு சாதகமானதா? -ஹரிகரன்
உள்ளூராட்சித் தேர்தலில் தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தத் தேர்தலில் 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
அத்துடன் தாம் இந்தத் தேர்தலில் சமஷ்டித் தீர்வை வலியுறுத்திப் பிரசாரம் மேற்கொண்டதாகவும், அதற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இது சமஷ்டித் தீர்வுக்கான அங்கீகாரமாகக் கருதப்படக் கூடியதா, இந்த வெற்றியை
அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமா என்பதெல்லாம் வேறொரு பக்கம் இருக்கட்டும்.இந்தத் தருணத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதா என்பது குறித்து தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி ஒரு ஆய்வு செய்வது அவசியமாகிறது.
வடக்கு, கிழக்கில் பிற்போடப்பட்ட மற்றும் தேர்தல் அறிவிக்கப்படாத உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த 17 சபைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்தன.
கிழக்கில் தமிழரசுக் கட்சியும், வவுனியா, மன்னாரில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தன.
கிழக்கில் .., மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்கும், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரசபை, வெருகல் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, கிண்ணியா நகர சபை என நான்கு பிரதேச சபைகளிலும், அம்பாறை மாவட்டத்தில் ஆலையடி வேம்பு, நாவிதன்வெளி, பொத்துவில் என மூன்று பிரதேச சபைகள் என மொத்தம் 8 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது.
வடமாகாணத்தில் …, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி என ஐந்து சபைகளிலும், வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிக்குளம், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு (தமிழ்) என்று மூன்று சபைகளிலுமாக மொத்தம் 17 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தது.
இவற்றில் ஐந்து சபைகளைக் கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 2006இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, காரைதீவு, திருக்கோவில் என்று நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றியது. அதுதவிர கல்முனை மாநகர சபையில் 6 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி நிலையையும், பொத்துவில் பிரதேச சபையில் ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.
இம்முறை காரைதீவு, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், கல்முனை மாநகர சபைக்கும் தேர்தல் நடைபெறவில்லை. ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொத்துவில் பிரதேச சபையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் கடந்தமுறை 7,081 வாக்குகளுடன் ஒன்பது ஆசனங்களை சுவீகரித்த இந்தக் கட்சிக்கு இந்தமுறை 4,700 வாக்குகளுடன் 5 ஆசனங்கள் தான் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 49.65 வீத வாக்குகள் இம்முறை குறைந்துள்ளன. நாவிதன்வெளி பிரதேச சபையிலும் முன்னர் 5,799 வாக்குகளுடன் 5 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்றை 3186 வாக்குகளுடன் 4 ஆசனங்களையே கைப்பற்ற மு டிந்துள்ளது.
இங்கு 24.48 வீத வாக்குகள் குறைந்துள்ளன.
அதுபோல பொத்துவில் பிரதேச சபையில் 2,427 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை 1,162 வாக்குகளையே பெற்ற போதும் ஒரு ஆசனத்தையே கைப்பற்றியுள்ளது. இங்கும் 10.28 வீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சராசரியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 28.13 வீதமான வாக்குகள் குறைந்துள்ளன. கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் கடந்தமுறை 156 வாக்குகள் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்றை 329 வாக்குகள் கிடைத்துள்ள போதும் அங்கு ஒரு ஆசனத்தைக் கூடப் பெறடியவில்லை.
ஆனால் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இங்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபையில் கடந்தமுறை 1,393 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்றை 704 வாக்குகளைப் பெற்று இருந்த ஆசனத்தையும் பறிகொடுத்துள்ளது. இங்கு 4.28 வீதமான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
திருகோணமலை நகர சபையில் கடந்தமுறை 16,368 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்கள் கிடைத்தன. இம்முறை அதற்கு 11,601 வாக்குகளுடன் 8 ஆசனங்களே கிடைத்துள்ளன. இங்கு 15.63 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.
மூதூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தமுறை 12,049 வாக்குகளுடன் 7 ஆசனங்களைப் பெற்றது. ஆனால் இம்முறை 6918 வாக்குகளுடன் அது 3 ஆசனங்களையே பிடிக்க முடிந்துள்ளது. இங்கும் 11.24 வீதமான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறிகொடுத்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சராசரியாக 10.71 வீத வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது .
அதுபோலவே வடக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை.
வடக்கில் தேர்தல் நடைபெற்ற 10 உள்ளூராட்சி சபைகளில் ஒன்றில் மட்டும் அது போட்டியிடவில்லை. ஏனைய 9 சபைகளில் போட்டியிட்ட கூட்டமைப்பு ஒன்றை மட்டுமே இழந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முசலி பிரதேச சபையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது.
வடக்கில் கடந்த 2006இல் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்பதால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பட்ட சரிவை, இரண்டு தேர்தல்களுடனும் ஒப்பிட்டு மதிப்பிட முடியாது. ஆனாலும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அங்கு கூட்டமைப்புக்கு 55.54 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவுத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 53.74 வீத வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு சராசரியாக 1.80 வீத வாக்குகள் கூட்டமைப்புக்கு அதிகமாகக் கிடைத்துள்ளன.
கடந்த வருட நாடாளுமன்றத் தேர்தலில் மன்னார் தொகுதியில் 15,026 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தலில் 20,433 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் 53.30 வீத வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்புக்கு இம்முறை 42.99 வீத வாக்குகளே கிடைத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் 35.58 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர். ஆனால் இம்முறை மன்னார்த் தொகுதி முழுவதையும் உள்ளடக்கிய 5 உள்ளூராட்சிச் சபைகளிலும் 55.90 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்த போதும், அவர்களுக்குக் கிடைத்த வாக்குகளின் வீதம் அதிகரிக்கவில்லை.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை வவுனியா நகர சபைக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிட முடியாது. அங்கு 46.44 வீத வாக்குகளை இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. கடந்த வருட நாடாளுமன்றத் தேர்தலில் 39.33 வீத வாக்குகளே வவுனியா தொகுதியில் கூட்டமைப்புக்குக் கிடைத்தன.
அப்போது 17,392 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு, இம்முறை வவுனியா நகரசபை நீங்கலாகவே 17,718 வாக்குகளைப் பெற்றுள்ளது. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகமாகவே வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்குகளின் சதவீதம் மன்னாரில் குறைந்தும் வவுனியா, முல்லைத்தீவில் உயர்ந்தும் உள்ளன.
இந்தளவுக்கும் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வவுனியா, மன்னார், முல்லைதீவில் போட்டியிட்ட புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் இவையனைத்தும் ஒருங்கிணைந்த போதும் பெரும் பலத்தைக் காட்டத் தவறியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி போல காணப்பட்டாலும் அதன் வாக்கு வங்கி சரிந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலம் குறைந்ததற்கான காரணத்தைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் அதன் தலைமை கள் உள்ளன.
உட்கட்சிப் போர், பூசல்கள், ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்புகள், முரண்பாடுகள் அனைத்தையும் களைந்து விட்டு கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் தலைவர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்துவது அவர்களால் சாத்தியமாகும். அத்துடன் இலங்கை அரசுடன் தமிழர்களின் உரிமைக்காகப் பேரம் பேசும் சக்தியாகவும் தொடர முடியும்.
அடுத்தகட்டமாக நடைபெறப் போகும் உள்ளூராட்சித் தேர்தலிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இன்னமும் கூடுதல் கவனத்தையும் அக்கறையையும் செலுத்த வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது.
அப்படிக் கவனம் செலுத்தத் தவறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்து வரப்போகும் தேர்தல்கள் மோசமான பாடத்தையே கற்பிக்கும்.
-ஹரிகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக