மார்ச் 03, 2011

.

சிங்க கொடிக்கு ஆதரவளிக்காதவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்: பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை   நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் போது கொழும்பு    தெமடகொட  அரச வீடமைப்புத் திட்டத்தில்     வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை  பட்டாசு கொளுத்திக் கொண்டாடியமையானது   தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு
  வேறு   ஒரு நாட்டுக்கு ஆதரவாக செயற்படும் இவ்வாறானவர்கள் தாம் ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்குச் சென்று வாழ்வதே சிறந்தது எனக் குறிப்பிட்ட அவர்,   சிங்கக் கொடிக்கு மதிப்பளிப்பவர்கள்  மட்டுமே    இந்த நாட்டில் வாழத் தகுதியானவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் பொரளையில் வனாத்தமுல்லை சகஹஸ்புர வீடமைப்புத் திட்டத்தில் சிங்கபுர வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்   உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் , இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினர் சகல உரிமைகளையும் பெற்று சந்தோசமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் இலங்கைக்கும் இலங்கைக் கொடிக்கும் ஆதரவளிப்பதில்லை.   இது குறித்து  முஸ்லிம் தலைவர்கள் பலரிடமும் எடுத்துக் கூறியுள்ளேன்.
இந்த நாட்டுக்கும் சிங்கக் கொடிக்கும் ஆதரவளிக்காதவர்கள் இங்கு வாழாமல் அவர்கள் ஆதரவு வழங்குகின்ற நாடுகளுக்குச் சென்று வாழ்வதே சிறந்ததாகும்.  இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டும்   சகல உரிமைகளையும் பெற்றுக் கொண்டும்   இவ்வாறு நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பொரளைப் பகுதியில் 60 வீதம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால்   தற்பொழுது 50 வீதமானவர்களே வாழ்கின்றனர்.  எனவே வீடமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்படும் புதிய வீடமைப்புத் திட்டங்களில் முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே இடம் வழங்கப்பட வேண்டும்.
நாம் யாழ்ப்பாணத்தில் வீடு வாங்க முடியாது. அங்கு நாம் வாழவும் முடியாது. ஆனால் சிறுபான்மையினர் மிக வேகமாக கொழும்பில் வீடுகளை வாங்கி வாழுகின்றனர் எனவும் சுமதிபால எம்.பி. தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின்போது இலங்கை முஸ்லிம்கள் தமது தேசப்பற்றை வெளிக்காட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு பகிரங்கமாக ஆதரவளிக்கக் கூடாது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக