த.தே. கூட்டமைப்பு தயாரித்து வைத்துள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனையை அரசிடம் கையளிக்க முடிவு!
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அடுத்த மாதம் அதிகாரப் பகிர்வு உள்ளடங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது.
அடுத்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசு – கூட்டமைப்பு சந்திப்பின் போது இந்தத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு
சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் சில அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளன.
ஏப்ரல் 7ஆம் திகதியும் ஏப்ரல் 27 ஆம் திகதியும் பேச்சுவார்த்தைகளுக்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார். புனர்வாழ்வு முகாமில் இருக்கும் சுமார் 11 ஆயிரம் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாகவும் புலிச் சந்தேக நபர்கள் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் நாம் அரசுடன் நடாத்திய பேச்சுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மீண்டும் அரசை வலியுறுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை தீர்வுத் திட்டம் எந்த நேரத்திலும் சமர்ப்பிக்கப்படக் கூடிய வகையில் அது தயார் நிலையில் உள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கத்துக்கு பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்களே தென்னிலங்கையில் அது தொடர்பான சந்தேக உணர்வுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர் பத்திரிகைகளும் பொறுப்புணர்வுடன் தமது பணிகளை மேற்கொள்வதே நிரந்தர சமாதானத்துக்கு வழி எனவும் கூறினார்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முடியுமென்று நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அமரர் அமிர்தலிங்கத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் சார்பில் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் முதலாவது தீர்வுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக