மேற்குலகின் ஆதிக்கம் இலங்கையில் தளம்பல் நிலையை அடைவது ஏன்?? – கிருஷ்ணமூர்த்தி
ஒரு காலத்தில் ஐரோப்பியப் பொருட்களே இலங்கையில் அதிக புழக்கத்தில் இருந்தன. கெஸலி, பி.எஸ். ஏ, ஹம்பர், றலி போன்ற சைக்கிள்கள், ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், மொறிஸ், பேர்ஜோ, பென்ஸ் போன்ற வகையான கார்கள், மேர்ஸி பெர்குஸன், டேவிட் பிறவுண் ட்றக்ரர்கள், வெஸ்பா, பி. எஸ். ஏ, ட்ராம் போன்ற மோட்டார் சைக்கிள்கள், மொறிஸ், லெலண்ட் போன்ற லொறிகள், பிலிப்ஸ், குறுண்டிக் ரக வானொலிகள், றோமர், றேடோ போன்ற மணிக்கூடுகள் என்று இலங் கையின் சந்தைகளிலும் மக்களின் புழக்கத்தி லும் இருந்த பொருட்கள் இவை.
ஐரோப்பியப் பொருட்கள் மட்டுமல்ல, ஐரோப்பியக் கல்வி, ஐரோப்பிய மொழி, ஐரோப்பியப் பண்பாடு என்று ஐரோப்பிய மயப்பட்ட சூழல் இலங்கையில் இருந்தது. ஐரோப்பியத் தலைவர்கள், அறிஞர்களின் பெயர்களே மக்களுக்கு அதிகம் அறிமுகமாகியும் இருந்தன மேற்கின் ஆதிக்கம் இலங்கையில் கோலோச்சிய காலம் அது. எங்கும் மேற்கு, எதிலும் மேற்கு.
குறிப்பிட்டுச் சொன்னால், ஐரோப்பிய (பிரித்தானிய) மூளையால் கவரப்பட்டும் கட்டுப் பட்டும் இலங்கையர்கள் இருந்தனர் அல்லது இலங்கை இருந்தது. இந்த நிலைமையலிருந்து இன்னும் முழுதாக இலங்கை மீளவில்லை என்று சொன்னாலும் அப்போது இந்தத் தாக்கம் அல்லது ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
இது ஒரு புறமிருக்க, பின்னர் இந்த நிலைமை சற்றுத் தளர்ந்து, ஜப்பானியப் பொருட்கள் இலங்கையில் நுழைந்து சடுதியாக ஆதிக்கத்தைச் செலுத்தின. ‘எங்கும் ஜப்பான் எதிலும் ஜப்பான்’ என்ற வகையில் ஜப்பானியப் பொருட்கள் நிறைந்திருந்தன. இது ஜே.ஆரின் காலத்தில்தான் அதிகரித்தது. ஜப்பானுக்கும் ஜே.ஆருக்கும் இருந்த உறவு நிலையால், அப்போது ஜப்பான், இலங்கைக்கு இன்னும் அதிகமாக உதவிகளைச் செய்தது. ஆனால், அரசியல் ரீதியாக ஜப்பான் எந்தச் செல்வாக்கையும் இலங்கையில் செலுத்தவில்லை.
ஜப்பானின் தந்திரோபாயங்களில் இது முக்கியமானது. அது எப்போதும் தன்னுடைய சந்தையின் விரிவாக்கத்தையே முதலில் சிந்திக்கும். (இந்தப் பண்புதான் இப்போதைய சீனா வின் அணுகுறையாகவும் இருக்கிறது). ஆகவே ஜப்பான் அரசியலை விடவும் சந்தயைப் பிடித்துக்கொண்டது.
இப்பொழுது கொழும்பு ஜெயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி தொடக்கம், நாட்டில் உள்ள சில முக்கியமான பாலங்கள், மருத்துவமனைகள், சில தொழிற் சாலைகள் போன்றவற்றை ‘அபிவிருத்தி’ என்ற பெயரால் ஜப்பான் இலங்கைக்குக் கட்டிக் கொடுத்தது.
‘அபிவிருத்தி நடவடிக்கைகள்’ என்ற பெயரில் செய்த சிறு உதவிக்காக ஆண்டுக்கணக்காக ஜப்பான் இலங்கையில் பல்லாயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றது. இன்னும் அது அப்படி லாபங்களைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. ‘இறால் போட்டுச் சுறாப்பிடிக்கும்’ காரியம் இதுதான்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் சந்தையை இந்தியாவும் அடுத்த படியாக சீனாவும் கைப்பற்றியுள்ளன. இப்போது எங்களின் வீடுகள் இந்தியப் பொருட்களாலேயே பெருமளவுக்கும் நிரம்பியிருக்கின்றன. தெருவில் இறங்கினாலே இந்திய ஆதிக்கத்தைப் பார்க்கலாம். அவ்வளவு தொகையாக இந்திய வாகனங்கள் ஓடுகின்றன.
இதை ‘எங்கும் இந்திய மயம்; எதிலும் இந்திய மயம்’ எனலாம். இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட காலம் வடக்குக் கிழக்கில் இந்திய அமைதிப்படைகள் எங்கும் நிறைந்திருந்ததையும் இங்கே பொருத்தம் கருதி, நினைவு கூரலாம். ஆக இந்திய ஆதிக்கம் என்பது வளர்ந்தது, வாணிபம் மட்டுமல்ல, இலங்கை அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அப்படியே நடைபெற்ற போலும் இந்தியா செல்வாக்குச் செலுத்தும் சக்தியாகத் தன்னை ஸ்தா பித்துக்கொண்டது.
இப்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசும்போதும் இந்தியாவை மையப்படுத்தியே பேசப்படுகிறது. அப்படியொரு தவிர்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதற்குப் பிராந்திய அமைவிடம் ஒரு முக்கிய காரணம் எனறு சொல்லப்பட்டாலும் அதற்கப்பால் அது கொண்டிருக்கும் வாணிபப் போட்டியே காரணம்.
இலங்கை – இந்திய உடன்படிக்கையை எல்லோரும் இனப்பிரச்சினைக்கான உடன்படிக்கையாக மட்டுமே பார்க்கும் போக்கு இன்னும் பலரிடம் உண்டு. அது ஓர் உண்மையான போதும் அதற்கப்பால், அது இந்தியாவின் வணிக நலன்களைப் பற்றியும் இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பைப் பற்றியும் அதிகம் பேசுவதையும் அவற்றிலேயே அந்த உடன்படிக்கை அதிக கவனத்தைக் கொண்டிருப்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த உடன்படிக்கையின் நோக்கமே அது தான்.
இந்தியாவுக்குப் போட்டியாகவும் அதேவேளை தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் சீனாவும் பல உதவித்திட்டங்களின் மூலமாக இலங்கையில் முயற்சிக்கிறது. ஜப்பான் செய்ததைப் போல அது இப்போது ‘இறால் போட்டு இலங்கையிலுள்ள சுறாக்களைப் பிடிக்க’ முயற்சிக்கிறது .
தனது சந்தைக்கான தந்திரோபாயங்களையும் அரசியல் நலன்களையும் பெறுவதற்காக (பிராந்தியத்தின் வழியான கடல்வழி ஆதிக்கத்துக்காக) அது புதிய தந்திரோபாயங்களைக் கையாள்கிறது. ஆபிரிக்கா வரை விரியும் சீனாவின் பொருளாதாரக் கை தடைப்படாமல் இருப்பதற்கு இலங்கையில் ஒரு சுமூக நிலை அதற்கு அவசியம். தனக்கிசைவான சூழல் அதற்குத் தேவை.
ஆகவே மேற்கின் ஆதிக்கம் அல்லது பிடிமானம் என்பது இந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் மெல்ல மெல்லத் தளர்வடைந்தே விட்டது, அரசியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும்.
இதற்கு உதாரணமாக, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே தெருக்களில் நிறைந்திருந்தன ஐரோப்பாவின் வாகனங்கள். இப்போது இந்திய, ஜப்பானிய, சீன வாகனங்களே அதிகமாக ஓடுகின்றன. அதேமாதிரி, சீன, ஜப்பானிய, இந்திய அதிகாகளும் தொழில்நுட்ப வியலாளர்களும் இராஜதந்திரிகளுமே இப்போது இலங்கையில் அதிகம் நடமாடுகிறார்கள்.
இது மேற்குக்கு ஒரு சவாலான காரியமே. விரிவாக்கமடைந்து வரும் ஆசியச் செல்வாக்கு மண்டலத்தை மேற்கு அதிகம் விரும்பவில்லை. ஆனால், அதனால் அதை விரும்பிய மாதிரித் தடுக்கவும் முடியவில்லை. வளர்ச்சியடைந்து வரும் தொழில் நுட்ப அறிவின் விரிவாக்கம் வல்லரசுப் போட்டிகளும் பிராந்திய நாடுகளின் எழுச்சியும் இந்தப் புதிய நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றன. அதிலும் ஆசிய நாடுகளின் எழுச்சி என்பது உள்ளுர மேற்குலகை அச்சுறுத்தியபடியே இருக்கிறது.
எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரமங்களிருக்கின்ற போதும், அவற்றைக் கடந்து, மேற்குலகம் இந்தியாவோடும் ஜப்பானுடனும் ‘நட்புறவு’ உபாயத்தைக் கையாள்கிறது. அதே வேளை, இலங்கையை தன்னுடன் நெருக்கமாக்கிக் கொள்ளவும் அது விரும்புகின்றது. அதற்காகவே அது ரணிலை அதிகமதிகம் விரும்பியது. ரணில் எப்போதும் மேற்கின் செல்லப்பிள்ளையே.
ஆனால், ரணில் மேற்கின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய ஆளுமையுள்ளவராக இல்லை. 2002 ஆம் ஆண்டு ரணில் அதிகாரத்துக்கு வந்தபோது மகிழ்ந்த மேற்கு, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்காக அமை திப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தியது.
பேச்சுவார்த்தையின் மூலம் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, இலங்கைத்தீவில் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள அது விரும்பியது. இந்த நோக்கத்தில் அது யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் கொழும்பிலும் பொதுமக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள் போன்ற தரப்பினர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்தது.
இந்தச் சந்திப்புகளின் மூலம் தான் உருவாக்கியிருக்கும் வேலைத்திட்டத்துக்கான ஒரு அங்கீகார நிலையை இந்தச் சமூகங்களிடையே உருவாக்குவதும் மக்களுக்கும் மேற்குக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்புவதுமே இதன் நோக்கமாகும். அதாவது இலங்கைச் சமூகங்களில் ஒரு வகையான ஊடு ருவலை மேற்கு செய்யமுயன்றது.
அத்துடன் ‘புலிகளையும் அது இந்தக் கண்ணோட்டத்தில்தான் அணுகியது. கையாண்டது. புலிகளுக்கு இந்தியாவுடனிருந்த பகைமையைப் பயன்படுத்திய அதேவேளை, அது ஐரோப்பிய நாடுகளில் புலிகள் பயணஞ்செய்வதற்கான இலகு நடைறைகளை மேற்கொண்டிருந்தது. பிராந்திய நாடான இந்தியாவைவிடப் புலிகள் ஐரோப்பாவில் அதிகம் செல்வாக்கோடு இருப்பதாகக் காட்டப்பட் டது’.
ஒரு கட்டத்தில் ரணில் அரசாங்கம் புலிகளும் (தமிழர்களும்- சிங்களவர்களும்) மேற்குடனேயே அதிக நேரத்தைச் செலவிட்டனர். இதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்த தமிழர்களின் இருப்பு இன்னும் அதிக வசதியைக் கொடுத்தது. (இப்போதுள்ள நாடுகடந்த தமிழீழம் என்பது கூட இந்த நோக்கத்தின் பாற்பட் டதே).
போரினால் களைப்படைந்த நாடு அமைதிக்குத் திரும்புவதை அதிகம் விரும்பும் என மேற்குலகு கணிப்பிட்டது. ஆனால், அமைதிப் பேச்சுகளை ஒரு எல்லைக்கு மேல் சந்திரிகா குமாரதுங்க அனுமதிக்கவில்லை. சந்திரிகாவைக் கொண்டு ரணிலின் நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தினார் மகிந்த ராஜபக்ஸ. இறுதியில் ரணிலின் அரசாங்கம் கவிழ்ந்தது.
அடுத்த தேர்தலில் புலிகள் ரணிலை வீட்டுக்கு அனுப்பினார்கள். மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையும் முற்றாக நெருக்கடிக்கள்ளாகியது. மேற்கின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஆனாலும் மேற்கு சும்மா இருக்கவில்லை. அதனால் அப்படி இருக்கவும் முடியாது.
எனவே யுத்தத்துக்கு ஆதரவளித்து தன்னுடைய நெருக்கத்தை அது இலங்கைக்குக் காண்பித்தது. இதேவேளை ‘ரணிலை வீட்டுக்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கை புலிகளின் மீதான கோபத்தை மேற்குக்கு ஏற்படுத்தியமைக்கான பழியையும் தீர்த்துக் கொண்டது’ . ஆனால், போர் முடிந்த பின்னர் போரில் வெற்றியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கை விட்டு விலகி, ஆசியப்பிராந்தியத் தோடு நெருக்கமாகினார். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், யப்பான் என்று அவருடைய தொடர்பாடல் சுற்று அமைந்தது.
இது இன்னும் அதிக ஏமாற்றத்தையும் சீற்றத்தையும் மேற்குக்கு ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக அது இலங்கையைப் போர்க்குற்ற வாளியாக்க முயற்சிக்கிறது. இலங்கையைப் பழிவாங்கத் துடிக்கிறது. அந்த வகையில் இலங்கைக்கு வழங்கி வந்த ஆடை ஏற்றுமதிக் கான வரிச்சலுகையை நீக்கவுள்ளதாகவும் பயறுத்தி வருகிறது.
இதேவேளை இன்னும் ஒரு விடயத்தையும் இங்கே நாம் பார்க்கலாம். ரணிலின் ஆளுமைக் குறைபாட்டை விளங்கிக் கொண்ட மேற்கு, இலங்கையில் பதிலாக இன்னொரு ஆளுமையைத் தேடியது. அப்போதுதான் சரத் பொன்சேகா அரசியலில் இறங்க யோசித்தார். இது மேற்குலகுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. சரத்தை அதிகம் மேற்கு எதிர்பார்த்தது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அதை முறியடித்து விட்டார். மகிந்தவின் வெற்றியை அது இப்படி எதிர்பார்க்கவேயில்லை.
மேற்கின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் தன்னுடைய அரசியல் எதிராளியைப் பலவீனப்படுத்துவதற்காகவும் சரத்தை இப்போது மஹிந்த அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது.
உண்மையில் 1977 இல் ஜே.ஆர் மேற்கை விட்டு யப்பானின் பக்கம் சாயத் தொடங்கி விட்டார். இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால், மேற்கு எப்போதும் தன்னை எஜமானாகவே வைத்திருக்கும். ஆனால், ஜப்பான, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்தினாலும் நேரடியாகத் தம்மை எஜமானாக திணித்துக் கொள்வதில்லை. இது ஜே.ஆரை ஜப்பானை நோக்கிச் சாயவைத்த காரணங்களில் ஒன்று. ஜே. ஆரை மட்டுமல்ல சிங்களவர்கள் அனைவரையும்.
1977 இல் தளர்ந்த மேற்கின் பிடிமானம் 1994 இல் சந்திரிகா அரசாங்கத்தின் வரவோடு மேலும் நெருக்கடியைச் சந்தித்தது. இப்போது மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகளால், இன்னும் அது பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
ஆனால், வேதாளம் முருங்கையிலிருந்து விலகாது. அது மீண்டும் மீண்டும் ஏறவே விரும்புகின்றது. அதற்காக அது இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிற்பதாகக் காட்ட முயற்சிக்கிறது. ‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?
நாம் எல்லோரும் இந்த மாதிரியான ஆதிக்க உலகத்தின் போட்டிகள் நிறைந்த வலையமைப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் தலைக்கு மேலே சூரியன் வருவதும் மறைவதும் எங்களுக்கு இரவு வருவதும் விடுவதும் எங்களின் கால்கள் நடப்பதும் விடுவதும் எல்லாமே இந்த வலையமைப்புகளின் பொறிகள்தான் தீர்மானிக்கின்றன.
இந்த அபாய நிலையை நீக்குவதற்கு சுதேசியத் தன்மை மிக்க ஒரு சிந்தனை முறை, மக்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை போன்றவையே தேவை. இனப்பிரச்சினை, அதற்கான தீர்வு, அபிவிருத்தி, மீள் கட்டுமானம், பொருளாதார நடவடிக்கைகள், கல்வி போன்ற அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதை இந்த நிலைமைகளின் ஊடாகவே நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த நிலைமைகளின் வழியாகத்தான் நாம் அவற்றைச் செய்து முடிக்கவும் இயலும்.
- கிருஷ்ணமூர்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக