மார்ச் 20, 2011

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு!


ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் பழுதடைந்துள்ள உலைகள் மூடப்பட்டு விடும் என்று, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலியானோர் மற்றும் மாயமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டு விட்டது.
புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் தற்போது,
1 மற்றும் 2ம் உலைகளில், மின்சார கேபிள்கள் இணைப்புப் பணி முடிந்து, 2ம் உலையில், மின்சாரம் மூலம் நீரை உலைக்குள் செலுத்தும் பணி துவங்கி விட்டது.
பிற உலைகளுக்கு விரைவில் மின் இணைப்புப் பெறப்பட்டு விடும். அதே நேரம், புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் என்ற இரு எரிபொருட்களும் உள்ள 3ம் உலையில், நேற்று 14 மணி நேரம் தொடர்ந்து 2,400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4ம் உலையில் நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் குளிரூட்டும் முறைகள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து வருகிறது.
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, »குளிரூட்டும் முறைகள் வெற்றியடைந்த பின், பாதிக்கப்பட்ட உலைகள் கான்கிரீட் கலவையால் ஒரேயடியாக மூடப்படும்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 8,133 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,272 பேர் காணாமல் போய்விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தில் மட்டும் 4,882 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒரு லட்சம் சிறுவர் சிறுமியர் இடம் மாறியுள்ளதாக, அந்நாட்டு சிறுவர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
உணவுகளில் கதிரியக்கத் தாக்கம்
இதேவேளை, பால் மற்றும் பசளிக் கீரைகளில் கதிரியக்க கலப்பு ஏற்பட்டுள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து புகுஷிமா நிர்வாக எல்லைக்குள் உணவுப் பொருட்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தடை பரிசீலிக்கப்படும் என அரசு பின்னர் அறிவித்தது.
உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள இந்த கதிரியக்க கலப்பை ஜப்பானிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதுடன் இந்த கதிரியக்கத்தின் அளவு மனிதர்களின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஜப்பான் அணு தொடர்பான நெருக்கடி நிலையை எதிர்கொண்டது முதல் உணவில் கதிரியக்கம் கலந்திருப்பதாக முதற் தடவையாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இதேவேளை, ஜப்பானின் பல ஆசிய வர்த்தக வைத்திருக்கும் சீனா, தாய்வான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இப்போது ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களில் கதிரியக்க கலப்பேதும் இருந்துவிடலாம் என்ற அச்சத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றன.
அத்துடன் தாய்வானில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கதிரியக்க கலப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து 240 கிலோமீற்றர் அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோவில் குழாய் நீரில் கதிரியக்கம் கலந்த அயடின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அணு உலை அருகே மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானில் ஏற்கனவே நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்துக்குத் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இந்த நில நடுக்கம் டோக்கியோ வரை உணரப்பட்டதாகவும், அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்ததில் மக்கள் பீதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக டோக்கியோவின் நரீதா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக