மார்ச் 20, 2011

ஜப்பானில் அதிகரிக்கும் அணுகதிர்வீச்சு அபாயம்!!


ஜப்பானில் எங்குமே சோகம் நிரம்பி வழிகின்றது.    சுனாமி தாக்கியழித்த நகரங்கள் ஒரு புறமிருக்க அங்கு தோன்றியுள்ள அணுக்கதிர்வீச்சு எங்கே பேராபத்துக்குள் கொண்டு சென்று விடுமோ என்ற ஏக்கத்தையே மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
ஜப்பானைப் பொறுத்தமட்டில் நில நடுக்கங்கள் அவர்களுக்கு புதிய விடயமாக இல்லாத போதிலும் ஜப்பான் வரலாற்றில் இதுவரை நிகழாத அளவு ஏற்பட்ட நில நடுக்கம் அதனைத் தொடர்ந்து உருவான சுனாமி பேரலையும்     மக்களை ஒரு கணம் அதிர்ச்சியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது.     அதேவேளை,   பூகம்பத்தில் தப்பிப்பிழைத்தாலும் அதனைத்தொடர்ந்து   ஏற்பட்டுள்ள   அணுக்கசிவும்  கதிர்வீச்சும் 
    மனிதப் பேரவலங்களுக்கு வழி வகுத்துவிடுமோ என்பதே   இன்று ஜப்பானில் மட்டுமல்ல  உலகளாவிய  ரீதியில் எழுந்துள்ள அச்சமாகும்.
இதேவேளை ஜப்பானில் கிழக்குக்கரை  நகரான ஷண்டாய் சுனாமிப் பேரலையால்  முற்றாக துவம்சம் செய்யப்பட்டுள்ளது.   கிழக்குக்கரை நகரான புகுஷிமாவிலுள்ள (Fukushima) அணு ஆலைகள் அணு கதிர் வீச்சை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.    தலைநகர் டோக்கியோவில் இருந்து     250 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ள புகுஷிமா டாய்ச்சி  (Fukushima Daiichi)  அணுமின் நிலையத்தில் ஆறு அணுமின் உலைகள் செயல்படுகின்றன.
இவற்றில் முதலாம் எண் உலை கடந்த 12 ஆம் திகதியும் மூன்றாம் எண் உலை 14 ஆம் திகதியும் வெடித்தன.
2 ஆம் உலை வெடிப்பு : கடந்த 14 ஆம் திகதி இரவு,    இரண்டாம் எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து ‘கோர்’ எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகியதாக செய்திகள் வெளியாகின.   இத்தகவலை ஜப்பானிய அதிகாரிகள் மறுக்கவில்லை.    இந்நிலையில் ஜப்பான் நேரப்படி, நேற்று  முன்தினம் (15.03.2001)  காலை 6.10 மணிக்கு இரண்டாம் எண் உலை வெடித்துச் சிதறியது.     இதில் உலையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள   முதல் நிலைச் சுற்றுச் சுவர் சேதம் அடைந்தது.

4 ஆம் உலையில் திடீர் தீ :
இதற்கிடையில்  15.03.2001  காலை    ஜப்பான்   நேரப்படி 9.40 மணியளவில், நான்காம் எண் உலையில் திடீரென தீப்பிடித்தது.  பல மாதங்களுக்கு முன்பே, பராமரிப்புக்காக அந்த உலை மூடப்பட்டிருந்தது.       ஆனால் உலையில் இருந்த   ‘கோர்’ கம்பிகள்,    அங்கிருந்து அகற்றப்படாமல், நீரில் மூழ்கியிருக் கும்படி வைக்கப்பட்டிருந்தன.      தீ விபத்து குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் கூறுகையில்,   ‘கோர் கம்பிகளைச் சுற்றியிருந்த    நீர் வற்றியிருக்கக் கூடும். அதனால் உலைக்குள் வெப்பம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்.    இச்சம்பவம் ஏனைய மூன்றில் நடந்திருப்பதை விட பேராபத்தை விளை விக்கக் கூடியது என்று கூறினர்.
இதையடுத்து, டாய்ச்சியைச் சுற்றி 30 கி. மீ. வட்டாரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படியும் அந்த வட்டாரத்தில் வெளியேறாமல் உள்ள 1,40,000 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல்,    ஜன்னல் மற்றும் கதவுகளை  மூடிக் கொள்ளும்படியும்   ‘ஏசி’ பயன்படுத்த வேண்டாம் என வும் அரசு அறிவித்தது.   டாய்ச்சி நிலையத்தில் பணியாற்றும்   800 ஊழியர்களும் ஏற்கனவே அந்த வட்டாரத்தில்  இருந்து அகற்றப் பட்டு விட்டனர்.
அடுத்தடுத்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து ஜப்பானில் அணுக் கதிர்வீச்சு பீதி பரவியது.      இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் நவோட்டோ கான்,       ‘கதிர்வீச்சு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்.       அதேநேரம், டாய்ச்சியில் (Daiichi) இருந்து கதிர் வீச்சு வெளிப்பட்டு பரவி வருகிறது.   இந்தக் கசிவு மேலும் அதிகக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.
டோக்கியோவில் அபாயம் :
புகுஷிமாவில் இருந்து 250 கி. மீ. தென் மேற்கில் அமைந்துள்ள டோக்கியோவில் கதிர்வீச்சின் அளவு, இயல்பை விட 20 மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.     இதை அந்நகர அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.   அதேபோல் புகுஷிமாவுக்கும் டோக்கியோவுக்கும் இடையில் உள்ள இபாராக்கி மாகாணத்தில் இயல்பை விட நூறு மடங்கு அதிகமாகவும், டோக்கி யோவுக்குத் தென்மேற்கில் உள்ள கனகாவா மாகாணத்தில் 9 மடங்கு அதிகமாகவும் டோக்கியோவில் இருந்து 100 கி. மீ. வடக் கில் உள்ள மாபாஷி நகல் 10 மடங்கு அதிகமாகவும் கதிர்வீச்சின் அளவு கணக்கிடப் பட்டுள்ளது.
பரவுமா கதிர் விச்சு?

முதலாம் எண் உலை வெடித்த போது,  அறிக்கை வெளியிட்ட ஜப்பான் அணுசக்தி ஏஜன்சி,    ‘இன்னும்  மூன்று நாட்களுக்கு காற்று கடலை நோக்கி வீச உள்ளதால், கதிர் வீச்சு அபாயம் இருக்காது » என்று கூறியிருந்தது.     ஆனால் அதைப் பொய்யாக்கும் விதத்தில் டோக்கியோ மற்றும் அதன் தென்பகுதி வரை கதிர்வீச்சுக் கசிவு பரவியுள்ளது.    அதனால், மேலும் ஜப்பானில் கதிர்வீச்சுக் கசிவு மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளுக்குப் பரவுமா அல்லது கடலை நோக்கி பரவுமா என்பது  காற்று வீசும் திசையைப் பொறுத்து அமையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த அணுக் கதிர்வீச்சு அடுத்த சில நாட்களில் முடிந்து விடும் விஷயம் அல்ல.     இதன் பாதிப்பு இனி அடுத்து வரும் நாட்களில் தெரியும். புற்று நோய் பாதிப்பு உட்பட பல அபாயங்களை மக்களுக்கு ஏற்படுத்தும்.   மிகவும் வளர்ந்த     நாடு ஜப்பான் என்பதால் மற்ற அரசுகளின் உதவியைக் கேட் காமல் தானே சமாளிப்பதில் ஈடுபட்டிருக்கிறது.
உலக நாடுகள் உஷார் :
ஜப்பானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால்,  ‘ஏர் சீனா’ ‘ விமான நிறுவனம் டோக்கியோவுக்கான விமான சேவையை ரத்து செய்து விட்டது.       ஜப்பானில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறும்படி உலக நா டுகள் அறிவுறுத்தியுள்ளன.
குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும்?

ஜப்பான் தற்போது சந்தித்து வரும் அவலங்கள் எளிதில் தீர்க்க  முடியாதது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* அணு உலைகள் வெடிப்பு குறித்து போதுமான தகவல்களை        பிரதமரும் டாய்ச்சியை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியும் தெரிவிக்கவில்லை என ஜப்பானிய பத்திரிகைகள் குற்றம் சாட்டி வருகின்றன.
* மோசமான இந்த அணு உலை வெடி விபத்தால், தைராய்டு, எலும்புகளுக்கிடையில் உள்ள மஜ்சை ஆகியவற்றில் புற்று நோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
* அணுக்கதிர் வீச்சு மனித    உடலில் மரபணு    மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும்.      பாதிப்பில் இருந்து தப்பும் அளவுக்கு இயல்பாகவே உடலில் செல் சிதைவு ஏற்படாமல் இருந்தால் தப்பலாம்.
ஆனால் குழந்தைகள் கருவில் உள்ள சிசுக்கள் பாதிக்கப்படும். குறிப்பாக பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின்  மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும்   பசு அல்லது   எருமை   அதன் பாலில் அப்படியே அதை திருப்பித் தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது.
* இந்தப் பூகம்பத்தால் கட்டடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு சேதம் 1 இலட்சத்து 22 ஆயிரம் கோடி டொலர் . இன்னமும் சேதாரங்கள்  முழுவதும் மதிப்பீடு செய்யப்படவில்லை. பொருளாதார பின்னடைவை சந்திக்கிறது ஜப்பான்.
* உலகளவிலான கார் மற்றும்    கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள்,   தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜப்பானில் இருந்து தங்கள் உதிரிப்பாகங்களுக்கான விநியோகம் கிடைக்காமல் தவித்து வருகின்றன.   ஜப்பானில் இயங்கி வரும் பல உற்பத்தி நிறுவனங்கள்  மூடப்பட்டு விட்டன.
* ஜெர்மனியில் ஏழு அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
* கதிர்வீச்சு பற்றிய உண்மையான தகவல்களை அரசு வெளியிடவில்லை என மக்கள் கோபத்தில் உள்ளனர்.
* ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் கடுங்குளிர் வாட்டி வரும் நிலையில்   எட்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

* புகுஷிமாவை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேறவே ஆசைப்படுகின்றனர். ஆனால் போதுமான பெற்றோல் கிடைக்காததால் வழியிலேயே தவிக்கவேண்டி வருமோ என்று அஞ்சுகின்றனர்.
* போத்தலில் அடைத்த உணவுகள் பெற்றரிகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
* கார்களில் எரிவாயுவை நிரப்புவதற்காக எரிவாயு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
* ஆனால் உலக சுகாதார அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  ‘இன்று ஜப்பானில் ஏற்பட்ட பேரிடரை விஞ்ஞான அடிப்படையில் எல்லா வழிகளிலும் அந்த அரசு முறையாக சந்திக்கிறது » என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஜப்பானும் புவியதிர்வும்
ஜப்பான் நாட்டினை எடுத்துக்கொண்டால் இது பசுபிக் நிலப்பலகைத்தட்டும், பிலிப்பைன்ஸ் நிலப்பலகை தட்டும், மற்றும் ரஷ்சியன் நிலப்பலகை தட்டும் ஒருங்கிணைகின்ற பகுதியில் வழியே அமைந்திருக்கின் றது.
பசுபிக் தட்டானது     ரஷ்சியன் தட்டினை நோக்கி ஒரு வருடத்தில் 8.10 சென் மீற்றர் இற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த   இரு தட்டுக்களும் இணைந்திருக்கின்ற ஜப்பானின்     கிழக்கு கரையை அண்டிய பகுதியில் கடுமையான புவியதிர்வுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.  பொதுவாகவே பசுபிக் பிராந்தியத்தினை நெருப்பு வளையம் என அழைப்பார்கள்.
இங்குதான் மிகப்பெரிய அளவிலானதும்      கூடுதலானதுமான  புவியதிர்வுகளும்   எரிமலைக்குறல்களும்   ஏற்படுவதுண்டு.   இந்த நெருப்பு வளையத்தில் முக்கியமாக விளங்கும் பகுதிகளில் ஒன்றுதான் ஜப்பானின் கிழக்கு பகுதி.            வருடத்திற்கு 81 மில்லி மீற்றர் தூரத்திற்கு      ரஷ்சியன் தட்டினை அழுத்திக்கொண்டு உள்நுழையப்பார்க்கும் பசுபிக் தட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வுதான் 1900 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஜப்பானின் கிழக்கு கரையில் அறியப்பட்ட புவியதிர்வுகளில் மிகப்பெரிய அதிர்வினை கடந்த 11 ஆம் திகதி அன்று 8.9 ரிச்டர் அளவில் புவியின் 24.4கிலோ மீற்றர் ஆழத்தில் ஜப்பானின் கிழக்கு கரையில் ஏற்படுத்திய புவியதிர்வுக்கு காரணமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக