அக்டோபர் 23, 2012


ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு


ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின
 சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது 
என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் 
அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். 
முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் 
வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள்,

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். 
ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது 
இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை 
கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களின் 
எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து 
அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. 
ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் 
இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு 
பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான 
காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை 
விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது கட்டுரைக்கு வலு 
சேர்ப்பதாய் அமையுமென நம்புகின்றேன்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு 
உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக 
ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் 
ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த 
நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான 
தகவல்களை நமக்கு தருகின்றது.

டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே 
இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு 
முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் 
இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 
1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே 
அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். 
ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு 
இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் 
உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் 
சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் 
காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய 
சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய 
செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் 
உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி 
ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், 
பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் 
பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் 
நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   
முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் 
பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி 
செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான 
பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் 
பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய 
பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை 
எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது 
இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை 
என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

அப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின்
மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக 
எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, 
இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக 
நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும்
 இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு 
விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் 
மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற 
வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை 
ஏற்றுக்கொள்கின்றது.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் 
குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை 
புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை 
வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்? அவருடைய 
பாதிப்பு இங்கே தெரிகின்றதா?

நான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள்,
 மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.
 அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் 
கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை 
மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும்
 வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே 
அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள்,
 வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் 
எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். 

ஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள 
ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை 
ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் 
வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக 
தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் 
கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.

ஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, 
அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.

இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும்,
 தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் 
கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை 
காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா?

ஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான 
விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் 
மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை 
கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் 
பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான 
காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் 
உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று 
குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, 
மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் 
மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய 
குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய 
உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். 
ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை 
சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் 
மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் 
பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.

--- End of Interview ---

ம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே 
கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை 
நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. 
இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் 
உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் 
அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின 
முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து 
ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் 
அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான 
மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக 
அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது 
மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு 
மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக 
யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் 
முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு 
எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே 
மாற்றுகின்றன" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது 
குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான 
டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை 
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).

அதிரடியா சொன்னீங்க சார் :-)

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.


References:
1. Q&A: Indigenous and Muslim 'a growing trend' - ABS. 20th July 2012. 
2. A new faith for Kooris - The Sydney morning herald. 4th May 2007. 
3. Koori - wikipedia.
4. Number of Muslims in the U.S. doubles since 9/11 - New York Daily News, 3rd May 2012. 
5. Anthony Mundine - Wikipedia.
வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக