மே 03, 2011

கொழும்பு வந்தவுடன் பிளேக் நேற்றிரவு ஒன்றரை மணிநேரம் கூட்டமைப்பினருடன் முக்கிய ஆலோசனை

நான்கு நாள் பயணமாக நேற்று மாலை கொழும்பு வந்து சேர்ந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்றிரவு சுமார் ஒன்றரை மணிநேரம் வரை இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 8 மணி தொடக்கம் 9.30 மணிவரை கொழும்பிலுள்ள
அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காண்பது, சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுக்களின் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்குடன், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ், அமெரிக்கத் தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி போல் காட்டரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள பிளேக் கொழும்பு திரும்பிய பின்னர், நாளை மறுநாள் மற்றொரு முறை அவருடனான சந்திப்பு இடம்பெறும் என்று நம்புவதாகவும் சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, இது ஒரு வழக்கத்துக்கு மாறான சந்திப்பு என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வழக்கமாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்பு வரும்போது, சிறிலங்கா அரசதரப்பினரை சந்தித்த பின்னரே ஏனைய தரப்பினரை சந்திப்பது வழக்கமாகும்.

சில சமயங்களில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்காமல் கூட சென்றுள்ளனர். ஆனால், இம்முறை கொழும்பு வந்தவுடன் பிளேக், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவசரமாக அழைத்து ஒன்றரை மணிநேரம் பேசியிருப்பது முக்கியமான விடயம் என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

நேற்றிரவு நடத்தப்பட்ட சந்திப்பின் போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக