மே 11, 2012



இஸ்ரேலைக் கண்டிக்கும் எகிப்திய 

நாடாளுமன்றம்




கெய்ரோ: பலஸ்தீன் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் எதிராக இஸ்ரேல் அரங்கேற்றிவரும் தொடர்ச்சியான வன்கொடுமைகள் ஆழ்ந்த கண்டனத்துக்கு உரியவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08.05.2012) எகிப்திய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளுக்கான மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிராந்தியங்களில் வாழும் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஸியோனிஸ அரசாங்கம் செய்துவரும் வன்கொடுமைகள் எல்லைகடந்து வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், "ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் எந்தவித நியாயமான காரணமும் இன்றிக் கைதுசெய்யப்பட்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்துவந்தனர். தமக்கு எதிரான மனிதாபிமானமற்ற வன்கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வெற்று வயிறுகளோடு அவர்கள் ஒரு சாத்வீகமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அந்த உண்ணாவிரதப் போராளிகளுக்கு நாம் நம்முடைய முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வதேச சட்டங்களுக்கும் மானுட விழுமியங்களுக்கும் எதிராய்ச் செயற்பட்டு, நிராயுதபாணிகளான பலஸ்தீன் பொதுமக்களைத் துன்புறுத்தியும், அவர்களில் ஆயிரக்கணக்கானோரைக் கடத்திச் சென்று வதைமுகாம்களில் அடைத்துவைத்துச் சித்திரவதை செய்தும் வருகின்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் அந்தப் பலஸ்தீனர்களின் உயிர்களுக்கு ஆபத்து நேருமாயின், அது தொடர்பில் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

"பல தசாப்த காலமாகத் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் வன்கொடுமைகளை பகிரங்கப்படுத்தி, அவற்றுக்கு முடிவுகட்டும் வகையில் வீரியத்தோடு செயற்பட எகிப்திய, அரபு நாட்டு மக்கள் மட்டுமின்றி மனிதநேயத்தையும், மானிட விழுமியங்களையும் நேசிக்கும் சர்வதேச சமூக நிறுவனங்களும் அணிதிரண்டு வரவேண்டும்" என அந்த அமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாய் உள்ளது. சிலர் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளனர். ஆனால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தன் கடும்போக்கை இதுவரை தளர்த்தவோ, பலஸ்தீன் கைதிகளை விடுவிக்கவோ இல்லை.

இந்நிலையில், "சர்வதேச சட்டங்களை மதித்து, அவற்றுக்கு அமைவாகச் செயற்பட இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க, ஐ.நா.வும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் முன்வரவேண்டும்" என்றும் மேற்படி அமைப்பு கோரியுள்ளது.

இதேவேளை, மேற்படி அமைப்பின் அங்கத்தவரான கலாநிதி அமீர் ஹம்ஸாவி குறிப்பிடும்போது, "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் அல்லலுறும் பலஸ்தீன் கைதிகளின் நிலைகுறித்து ஆராய்வதற்கு ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு சர்வதேச நாடாளுமன்றம் பணிப்புரை வழங்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக