ஜூன் 29, 2012


சிவ்சங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்?.


இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்தவாரம் கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணம் முன்னெப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் பிரதான ஆங்கில ஊடகங்களிலும்  பலநாட்களாக இதுவே பேச்சாக இருந்து வருகிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான செய்திகள் வருவது இயல்பு தான்.
ஆனால் போர் முடிந்த பின்னர் இந்தியத் தரப்பில் இருந்து, இவ்வாறான ஒருவரின் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது.
சிவ்சங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி ஏற்க முன்னர், கொழும்பில் இந்தியத் தூதுவராக பணியாற்றியிருந்தார். அந்தவகையில் இலங்கை அரசுடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர்.  அவரையே புதுடெல்லி ஒரு சிறப்புத் தூதுவராக கொழும்புக்கு அனுப்பவுள்ளது. வெள்ளிக்கிழமை அவர் கொழும்பில் நடத்தப் போகும் இரண்டு சந்திப்புகள் மிக முக்கியமானவை என்று கூறப்படுகிறது.
முதலாவது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப் போகும் சந்திப்பு. இரண்டாவது – பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நடத்தவுள்ள சந்திப்பு.  இந்த இரண்டு சந்திப்புகளுமே தனித்தனியான சந்திப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுவும் போர் முடிவுக்கு வந்த பின்னர்- கடந்த மூன்று ஆண்டுகளில்  ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவையோ, கோட்டாபய ராஜபக்ஷவையோ தனியாக சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா அனுப்பும் முதல் தூதுவர் இவர் தான் என்று தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் அதிகாரம் மிக்கவர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபய ராஜபக்ஷவையோ  இந்த முதலிரு இடங்களை வகிப்போருடன் சிவ்சங்கர் மேனன் தனியாகச் சந்திக்கவுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
வெளிநாட்டு உறவுகளில், தனியான சந்திப்புகள் என்பது பொதுவாக இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்வதுண்டு. ஒன்று- அதிகம் நெருக்கமான சூழலில். இரண்டு- மிகவும் சிக்கலான நேரத்தில். சிக்கலான நேரத்தில் நடக்கின்ற இத்தகைய சந்திப்புகள்- வெளிப்படையாக பேச முடியாத விடயங்களைப் பேசுவதற்கு, மறைமுகமாகவோ நேரடியாகவோ எச்சரிக்கை விடுப்பதற்கு உதவும்.
அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் கூட விவகாரங்கள் கசிந்து போகாதபடி இருப்பதற்காக நடத்தப்படுவதுண்டு.
இந்தியாவும் இலங்கையும் இப்போது அதிகம் நெருக்கமான சூழலில் இல்லை என்பதால், இந்தத் தனியான சந்திப்பை வேறு விதமாகவே அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது.

அண்மையில் பிரேஸிலில் நடந்த றியோ+ 20 மாநாட்டுக்கு சென்றிருந்த போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தார்.  இதன்போது கூட முதலில் சிறிது நேரம் இருவரும் தனியாகவே சந்தித்துப் பேசினர். அதையடுத்தே இருநாட்டுக் குழுவினரும் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பிலும் கூட சிவ்சங்கர் மேனன் உடனிருந்தார்.
மன்மோகன்சிங் தனியான சந்திப்பை நடத்திய பின்னர் தான் சிவ்சங்கர் மேனன் தனியான சந்திப்புக்காக கொழும்புக்கு அனுப்பப்படுகிறார்.
ஆக, புதுடெல்லி ஒரு இறுக்கமான போக்கில்தான், இருக்கிறது என்பதும்இ எச்சரிக்கை செய்யும் செய்தியுடன் தான் சிவ்சங்கர் மேனனை புதுடெல்லி அனுப்புகிறது என்பதுமே ஊடகங்களின் பொதுவான எதிர்வு கூறலாக இருக்கிறது.
இதற்குக் காரணம், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒருவித இடைவெளி தான். இதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுப் பிளவு அல்லது விரிசல் என்று சொல்வது பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த உறவுகளில் சுமுகநிலை இல்லை என்பதும், நெருடலான ஒரு நிலையே உள்ளதும் உண்மை.
இந்த நெருடல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் போட்டு வரும் முட்டுக்கட்டைகளில் ஆகப் பிந்தியதாக, பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இருந்து இந்தியா கழற்றி விடப்பட்டதை குறிப்பிடலாம்.
ஏற்கனவே, சம்பூரில் கூட்டு முயற்சியாக அனல் மின்நிலையத் திட்டத்தை அமைக்கும் பணி இன்னமும் தொடங்கப்படாமல் இழுபறியில் உள்ளது. நீண்டகாலமாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இந்தத் திட்டத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வரப் போகிறார் என்றதும் அவசரஅவசரமாக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
திருகோணமலையில் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீளப்பெறும் முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இப்போது பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளையும் இந்தியாவிடம் இருந்து பிடுங்கிக் கொண்டுள்ளது அரசாங்கம்.
இதற்கான உடன்பாடு கையெழுத்திடப்படாது போனாலும், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இந்தியா உதவும் என்று புதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஷவும் மன்மோகன்சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது, பலாலி விமான நிலைய ஓடுபாதையைப் புனரமைக்க இந்தியா உதவியிருந்தது.
ஆனால், போர் முடிந்த பின்னர் இந்தியாவை அரசாங்கம் மெல்ல மெல்ல வெட்டி விட்டு வருகிறது.
பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகாத போதும் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதைவிட, அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கருத்தை இலங்கை மதிக்காதது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் உதாசீனம் செய்து வருவது போன்ற எல்லாமே இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெறுப்புக் கொள்வதற்கான காரணங்களாக காட்டப்படுகின்றன.
இவைபற்றி கொழும்புடன் கண்டிப்பாகப் பேசுவதே, சிவ்சங்கர் மேனனின் பயண நோக்கம் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் சிவ்சங்கர் மேனனின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது.
உண்மையில் சிவ்சங்கர் மேனனின் பயணம் குறித்து இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஊடகங்கள் முதலில் செய்திகளை வெளியிட்ட போது, இலங்கை வெளிவிவகார அமைச்சோ அதுபற்றித் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தது.
எவ்வாறாயினும் மேனனின் கொழும்பு வருகை என்பது சுமுகமானதொரு சூழலில் இடம்பெறவில்லை. அதுபோலவே அவரது சந்திப்புகளும் சுமுகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
விரைவில் இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குள் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் காங்கிரசுக்கு முக்கியமானவை. அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு உள்ளது.
இந்திய அரச, போரை நிறுத்தத் தவறியதுடன், தமிழ்மக்களின் அழிவுகளை வேடிக்கை பார்த்தது என்ற கருத்து தமிழ்நாட்டில் ஆழமாக பதிக்கப்பட்டு விட்டது.
இந்தநிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை மீண்டும் பெறுவதற்கு இழந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. இலங்கை அரசுடன் கடும் போக்கை வெளிப்படுத்தினால் தான் அதனால் காரியம் சாதிக்க முடியும்.
இந்தநிலையில் மேனனின் கொழும்பு வருகை இலங்கை மீதான இந்தியாவின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக