ஏப்ரல் 25, 2012


ஆப்கான் ஆக்கிரமிப்பு: மாயத்தோற்றம் அம்பலம் .


2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்காவினதும் நேச நாடுகளினதும் படைகள் பிரவேசித்த பிறகு பல மாதங்களாக தலைநகர் காபூலில் தலிபான்களின் தாக்குதல்கள் இடம்பெறவில்லை.
ஆனால், இப்பொழுது அடிக்கடி தலிபான்கள் தலைநகருக்குள் தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். கடந்த வார இறுதியில் துப்பாக்கிகள், ரொக்கட்டுகள் மற்றும் தற்கொலைப் படையினரைப் பயன்படுத்தி அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் படுமோசமானதாக இருந்தது. படையெடுப்புக்குப் பிறகு பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்த நிலையில் போரின் ‘முன்னேற்றத்திற்கு’  இது ஒரு எடுத்துக்காட்டு.
மேலும் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுதந்திரமாக அலைந்து திரிகிறார்கள். அமெரிக்காவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் போர் நிலைவரங்கள் பற்றி தந்திருக்கும் விளக்கங்களின் மூலம் இதை அறிந்துகொள்ளக்கூடியதாக    இருக்கிறது.   கடுமையான பாதுகாப்புகளுடன் கூடிய தங்களது    தளங்களில் இருந்து பார்க்கக்கூடிய   பிராந்தியங்களில் பெரும் பகுதியை அமெரிக்கப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை.
ஆப்கான் அரசாங்கத்தைப் போன்றே அந்த நாட்டு இராணுவமும்  தகுதிவாய்ந்ததாகவோ  நம்பக்கூடியதாகவோ இல்லையென்று லெப்டினன்ட் கேணல் டானியல் டேவிஸ் கூறுகிறார்.
நேச நாட்டுப் படைகளின் தாக்குதல்களினால் போதுமான அளவுக்கு தலிபான்கள் தரந்தாழ்த்தப்பட்ட பிறகு கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டு பேச்சுவார்த்தை வருவார்கள் என்றே முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. அத்தகைய ஒரு முடிவே இந்தப் போருக்கு ஏற்படுமென்று நம்பப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு தலைகீழாகப் போய்விட்டது.
தலிபான்கள் பலவீனப்படுத்தப்பட்டு அடிபணியும் பட்சத்தில் தங்களுக்கு ‘வெற்றி’கிடைத்துவிட்டதாகக் கூறிக்கொண்டு    நேச நாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கௌரவமாக வெளியேற முடியுமென்றே எம்மவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த வாரத்தைய தாக்குதல்கள் தலிபான்கள் பேச்சுவார்த்தைகளில் அக்கறை கொண்டிருக்கவில்லையென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
தவறு எங்கே நிகழ்ந்தது? நான் முன்னர் இந்தப் போரின் ஒரு உற்சாகமான ஆதரவாளன். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினதும் நேச நாடுகளினதும் படைகள் நடைவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாகவே அவர்களின் தந்திரோபாயம் படுமோசமான தவறாகப் போய்விட்டது என்பதை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கையில் தவிர்க்க முடியாத வகையில் தங்களுக்கு வெற்றி கிடைக்குமென்று நம்பிய மேற்குலக நாடுகள் அந்த வெற்றிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கென அரசியல் தந்திரோபாயத்தை வகுக்கும் நோக்குடன்  ஜேர்மனியின் பொன் நகரில் சர்வதேச மாநாடொன்றைக் கூட்டின.
சகல பிரிவினரையும் இனக் குழுமங்களையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றுக்கு மிதவாத சிந்தனைகொண்ட ஒரு பஸ்தூன் இனத்தவர் தலைமை  தாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்ய முடியுமென்று மேற்குலகம் நம்பியது. ‘ஆப்கான் பாணி ஜனநாயகம்’ என்று   வர்ணிக்கப்படுகின்ற    லோஜா ஜிர்கா என்ற பாரம்பரிய பெருஞ்சபை இந்த உத்தேச அரசாங்கத்தை அங்கிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது சரியானதென்று  தோன்றியதால்  சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த சகலரும் அந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.
ஆனால், புதிய ஆப்கானிஸ்தான் ஒரு கனவுப்   புனைவுருவாக மாறிவிட்டது. பொன் மாநாட்டிற்கு    சில வாரங்கள்   கழித்து நேச நாட்டுப் படைகள் தலிபான்களை குறைந்த பட்சம் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளிலிருந்து   விரைவாகவே விரட்டியடித்தன. கார்சாய் அரசாங்கம் பதவியில் அமர்த்தப்பட்டது.

அதைப் பற்றிய மாயையும் மருட்சியும் தொடரவே செய்கிறது. 2002 ஆம் ஆண்டிலேயே இந்த கனவுப் புனைவுருவில் இருக்கக்கூடிய படுமோசமான தவறுகள் தென்படத் தொடங்கின. அந்தத் தவறுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று அக்கறைப்பட்டவர்கள் நிலைவரத்தை விளங்கிக்கொண்டார்கள். உண்மையிலேயே பொன் மாநாட்டிலேயே ஆப்கான் நிலைவரம் எவ்வாறு படுமோசமானதாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
புதிய அரசாங்கத்தை அமைத்த போது அழைக்கப்படாத ஒரேயொரு பிரிவினராக தலிபான்களே இருந்தனர். அவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று மிக எளிதாகக் கருதப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு சிறிது காலத்திற்குப் பிறகு காபூலில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் குறுகிய காலம்    நான் பணியாற்றிய போது ஆப்கானிஸ்தானின்    தென்பிராந்தியத்தின் பெருமளவு பகுதிகளில் ஏன் நேசப்படைகளின் பிரசன்னம் இருக்கவில்லையென்று ஒருவருமே என்னைக் கேட்டதில்லை.
மோதல்களில் மிகவும் பலவீனமடைந்து சின்னாபின்னப்பட்டுப்போன  தலிபான்கள்   மலைப் பிராந்தியத்திற்குள் சென்று  உதிரிகளாக இயங்குகிறார்கள் என்றும் அவர்களைத் துடைத்தெறிவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன  என்ற   ஒரு  ‘படமே’ இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி பாக்ரானிலுள்ள பிரதான விமானத் தளத்தில் காட்டப்பட்டது. ஆனால், அதை பிரிட்டிஷ் படைகளின் விசேட விமானப் படைப் பிரிவினரின் தளபதியொருவர் அறவே நம்பவில்லையென்பது இன்னமும் எனக்கு நினைவிருக்கின்றது. நிலைவரங்கள் படுமோசமாகத் திரும்பும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்படத் தொடங்கின.
ஆப்கானின் வட பகுதியிலும்  மேற்குப் பகுதியிலும்  இருந்த புதிய நேசப் படைகளைப் பார்வையிடச் சென்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவருடன் நான் கூடச் சென்றேன். அப்போது சகலருமே லோஜா ஜிர்கா  நாம் விரும்புகின்ற ஜனநாயக உறுதிப்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று எம்மிடம் கூறினார்கள்.
ஆனால், இந்தத் திட்டத்தில் எமது பங்காளிகளாக இருப்பவர்கள் ஜனநாயகவாதிகளாக அன்றி பெருமளவுக்கு கொடுங்கோன்மைக்காரர்களாகவே நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி எவரும் கூறவில்லை. இரண்டு இராணுவ டாங்கிகளில் ஒவ்வொரு கால்களைக் கட்டி வெவ்வேறு திசைகளில் அவற்றை செலுத்தி எதிராளிகளின் உடல்களைக் கிழித்தார்கள். இத்தகைய கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.
U.S. Army Gen. Martin E. Dempsey, chairman of the Joint Chiefs of Staff, talks with an Afghan special forces commando on Camp Moorehead, Afghanistan, April 23, 2012.
நேச நாட்டுப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும் பணமும் இருந்தது. நாம் சந்தித்த எந்தவொரு ஆப்கானியருமே நாம் கேட்க விரும்பியதைக் கூறவில்லையென்பது அதிசயத்தைத் தரவில்லையே? நன்கு ஆயுதங்கள் தரித்த படைப்  பிரிவினரின்  பாதுகாப்புடனேயே நாம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்றோம். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் எமக்கு ஆதரவாக இருந்த போர்ப் பிரபுக்களுக்கும் பணம் நிரப்பப்பட்ட பிறீவ் கேஷ்கள் கிரமமாக வழங்கப்பட்டன என்பது எமது காபூல் தூதரகத்தில் கீழ்க் குரலிலேயே பேசப்பட்டது. இன்று கார்சாய் அரசாங்கத்தில் தலைவிரித்தாடுகின்ற ஊழலைப் பார்க்கும் போது பெரும் திகைப்பாய் இருக்கிறது. ஆனால், நாமும் அல்லவா அந்த ஊழல்தனத்துக்கு உதவி செய்திருக்கிறோம்.
நேச சக்திகள் புதிய ஜனநாயக ஆப்கானிஸ்தான் ஒன்றை உருவாக்கவில்லையென்பதே உண்மையாகும். பதிலாக தசாப்தங்களாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் ஒரு பக்கத்தினருடன் நாம் இணைந்துகொண்டோம். நேச நாட்டுப் படைகளின் பிரசன்னம் கூட உள்நாட்டுப் போரைத் தணிக்கவில்லை. மேற்குலகப் படைகள் வெளியேறும் போது உள்நாட்டுப் போர் முழு வீச்சில் மீண்டும் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை. உண்மை நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தும் நாங்கள் இவ்வளவு தூரத்திற்கு முட்டாள்களாக செயற்படுகிறோமே என்பது பெரும் திகைப்பைத் தருகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே இருக்கக்கூடிய சிக்கலான யதார்த்த நிலைவரங்களைப் பற்றி அறியாதவர்களாக அந்த நாட்டிற்குள் பிரவேசித்து நாம் எமது கற்பனைவாதப் போக்குகளுக்கு அவர்களை இணங்க வைக்க முயற்சித்தோம்.
நாம் அந்த நாட்டின் ஒரு சிறிய பகுதியை மாத்திரமே ஆக்கிரமித்தோம். ஆனால், சகலதையும் வெற்றி கொண்டுவிட்டோம் என்று பிரகடனஞ் செய்தோம். நாம் புதிய “ஜனநாயக’ ஒழுங்கு ஒன்றைக் கட்டமைத்திருக்கிறோம். ஆனால், அதை பெரும்பாலும் எதிர்க்கக்கூடியவர்களைப்  புறந்தள்ளிக்கொண்டு   மிருகத் தனமானவர்களையும்,  ஊழல்தனமானவர்களையும் அந்த ஒழுங்கில் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்த முரண்பாடுகள் எல்லாம் நாம் எவ்வளவு தூரத்திற்கு முட்டாள்களாக இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக