மார்ச் 01, 2011

Army


இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன? – சுபத்ரா



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்  முடிவுக்கு வந்து  இன்னும் மூன்று மாதங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.  முப்படைகளையும் கொண்ட ஒரு மரபுவழிப்படையாக வளர்ச்சி பெற்றிருந்த உலகில் பலம் வாய்ந்ததும், யாராலும் தோற்கடிக்க   முடியாததுமாகக் கருதப்பட்டதுமான புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பெருமை இலங்கை இராணுவத்துக்கு உள்ளது.
புலிகள் இயக்கத்தையும், இரண்டு முறை ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சிகளையும் தோற்கடித்துள்ள போதும் இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் பெரியளவில் கிடைத்து விட்டதாகக் கருத முடியாது.  போர் முடிவுக்கு வந்த போது, இலங்கை இராணுவத்துக்கு மிகப்பெரிய தொழில்சார் அங்கீகாரம் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது.  ஆனால்,
அது பொய்யாகிப் போயுள்ளது.
சுமார் 220,000 படையினரைக் கொண்டுள்ள இலங்கை இராணுவத்தை கட்டிக் காப்பது இப்போது அரசாங்கத்துக்குச் சுமையாக மாறியுள்ளது.  இதனால், இராணுவத்தின் ஆட்பலத்தைக் குறைப்பதற்கும், அதன் கவனத்தை வேறு நடவடிக்கைகளின் பக்கம் திருப்புவதற்கும் திட்டமிடுகின்றது.   இல்லையேல், அரசியல் பக்கம்   இராணுவம் திரும்பி விடலாம்   என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உள்ளது.
போருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட படைப்பலத்தை இலகுவாகக் குறைத்து விட முடியாது.  திடீரென படைக்குறைப்புச் செய்வதும் ஆபத்தானது.  எனவேதான், தப்பியோடிய படையினரை விலக்கும் முயற்சியில்  முதற்கட்ட   நடவடிக்கையில் அரசாங்கம்     இறங்கியுள்ளது.   அடுத்த கட்டமாக, 1990இற்கு முன்னர் சேர்த்துக் கொள்ளப்பட்ட   படையினருக்கு   விருப்ப ஓய்வு வழங்கும் திட்டம் அரசிடம் இருப்பதாகவும் தெரிகிறது. அதேவேளை,  இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் பெரு முயற்சி செய்து வருகிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர்,   இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது அரசாங்கம்.  ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இலங்கை இராணுவத்துக்கு அத்தகைய சர்வதேச அங்கீகாரத்தை வழங்கவில்லை.

இந்த அங்கீகாரம் கிடைத்திருந்தால் அதை வைத்துக் கொண்டு அரசாங்கம் வெளிநாடுகளில் படையினருக்குப் பயிற்சி வழங்குவதற்கும், அமைதி காப்புப் பணிகளுக்கும் இராணுவத்தினரை அனுப்பி வைத்திருக்க முடியும்.    ஆனால், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக பெரும்பாலான நாடுகள் தனிப்பட்ட ரீதியில் இலங்கைப் படைகளின் உதவிகளைப் பெற விரும்பவில்லை.   இதன்காரணமாகவே,   பாதுகாப்பு அமைச்சு புதியதொரு திட்டத்தை வகுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்     என்பது குறித்த ஒரு கருத்தரங்குக்கு   இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.   எதிர்வரும் மே 31ஆம் திகதி தொடக்கம்       ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.      இதில் புலிகளுக்கு எதிரான போரில் களமுனையிலும், கட்டளை நிலையிலும் பணியாற்றிய படை   அதிகாரிகள் நடந்த சம்பவங்களை விபரிக்கவுள்ளனர்.        தமக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும்   இதன்போது எல்லாவற்றையும்   வெளிப்படையாகப் பேசுவோம் என்றும் கூறியிருக்கிறார்   இலங்கை   இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய.
இந்தக் கருத்தரங்கிற்கு இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைக்குமாறு 54 நாடுகளுக்கு அரசாங்கம் அழைப்பு அனுப்பியுள்ளது.  எப்படியும் 100 வரையிலான வெளிநாட்டு படை அதிகாரிகள்       இதில் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.     இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை   முறியடிக்கும் ஒரு ஆயுதமாகவே இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.    அண்மையில்  ‘சண்டே ஒப்சேவர்’  பத்திரிகைக்கு இராணுவத் தளபதி வழங்கியிருந்த பேட்டி ஒன்றில் இதை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை, போலியானவை என்று கூறி சர்வதேச அளவில் மதிப்பை உயர்த்தும்  முயற்சி தான் இது.  அரசாங்கம் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு இன்னொரு ஒரு காரணம் உள்ளது.
புலிகளைத் தோற்கடித்த அனுபவங்களை வெளிநாடுகள் பணத்தைக் கொடுத்து வாங்க முன்வரும் என்று கருதியிருந்தது இலங்கை இராணுவம்.   அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் இப்போது அதை இலவசமாகவே வழங்க முடிவு செய்து விட்டது.
இதற்குக் காரணம், இலங்கை இராணுவத்தின் மதிப்பை உயர்த்த வேண்டியுள்ளது தான்.     இப்போது இலங்கை அரசுக்கும் சரி, இராணுவத்துக்கும் சரி இருக்கின்ற முக்கியமான குறிக்கோள் ஐ.நா அமைதிப்படைக்கு அதிகளவு படையினரை அனுப்புவது தான்.
இலங்கை அரசிடம் அதற்குப் போதிய படைப்பலம் உள்ளது.  பாரிய படைப்பலத்தை வைத்துப் பராமரிப்பதற்கு செலவுகள் அதிகம்.  அதைவிட ஐ.நா.வின் பராமரிப்புச் செலவில் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தால், நல்ல வருமானத்தையும் சம்பாதிக்கலாம்.
படையினரையும் பயிற்சித் தரத்தில் உயர்வாக வைத்திருக்கலாம்.  நாட்டுக்கும் பெருமளவு அந்நியச் செலவாணி வருவாய் கிடைக்கும்.  படையினருக்கும் திருப்திகரமான சம்பளம் கிடைக்கும்.   வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைப் படையினர் மாதாந்தம் சுமார் 1000 டொலர்கள் வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.
இது இலங்கை இராணுவம் கொடுக்கின்ற ஊதியத்தை விட, கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும். எனவே தான், அதிகளவு படையினரை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டது.
போரில் வெற்றி பெற்றதால் கிடைக்கும் நன்மதிப்பு அதற்குப் பெதும் உதவும் என்று கருதியிருந்தது அரசாங்கம்.   இதன் காரணமாகவே தற்கட்டமாக குறைந்தது 5000 படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இராணுவத் தளபதியிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.
ஆனால், ஜனாதிபதியோ, இராணுவத் தளபதியோ எதிர்பார்த்தது போன்று ஐ.நா.  அமைதிப்படையில் அந்தளவுக்கு வாய்ப்புகள் குவியவில்லை.  இப்போது ஐ.நா. அமைதிப்படையில் 1215 படையினர்   மட்டுமே ஏழு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
ஹெய்டியில் 900 படையினரும், லெபனானில் 140 படையினரும் பணியாற்றுகின்றனர்.    இதைவிட, மேற்கு சகாராவில் வரும், கொங்கோவில் 4 பேரும்,   சூடானில் 6 பேரும் ஐ.நா அமைதிப்படையில் இலங்கையின் சார்பில் பணியாற்றுகின்றனர்.
1960 இல் முதல்றையாக 16 பேர் கொண்ட அணியை ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற கொங்கோவுக்கு இலங்கை இராணுவம் அனுப்பியது.  அங்கு இந்த அணி இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்றியது.  அதற்குப் பின்னர் 2004 இல் தான் ஐ.நா.  அமைதிப்படைக்கு படையினரை அனுப்பும் பணியை ஆரம்பித்தது இராணுவம்.
இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு குகுலே கங்கவில் பயிற்சி நிலையம் ஒன்றும் அமெரிக்காவின் துணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.  2004ஆம் ஆண்டுக்குப் பின்னர்   இதுவரை 8749 படையினருக்கு  ஐ.நா. அமைதிப்படை யில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹெய்டியிலேயே பணியாற்றியுள்ளனர்.
இப்போது ஐ.நா அமைதிப்படைக்கு படையினரை அனுப்பும் 115 நாடுகளின் பட்டியலில் 20 ஆவது இடத்தில் உள்ளது இலங்கை.   இந்த எண்ணிகையை அதிகரிப்பதற்கு ஐ.நாவுடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும் மு யற்சியில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டப்படி இந்த எண்ணிக்கை 5000 ஆக உயர்த்தினால் பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளை அடுத்து ஆறாவது இடத்துக்கு இலங்கை முன்னேறும்.
ஆனால், அது தான் மிகவும் கடினமான பணியாக உள்ளது.   ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் படையினருக்கு சர்வதேச நியமப்படியான வசதிகளும் தேவை. குறிப்பாக ஐ.நா. சமாதானப்படையில் கவசப்படைப் பிரிவுகளுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.     இதனைக் கருத்திற் கொண்டே இலங்கை இராணுவம் கவசப்படையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கென ரஷ்யாவிடம் இருந்து புதிய காலாற்படை சண்டை வாகனங்களையும், துருப்புக்காவிகளையும் வாங்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது.  மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.    இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ரஷ்யா இணங்கியிருந்தது.
அந்தக் கடனுதவியை படைத் தளபாடங்களாக வாங்க வேண்டும் என்று ரஷ்யா நிர்ப்பந்திப்பதாகவும் தகவல்.     லெபனானுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுப்பப்பட்ட 140 கவசப்படையினருடன் சண்டையிடும் எட்டு கவசவாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.  இவை ரஷ்ய மற்றும் சீனத் தயாரிப்புகள்.  மேலும், பெருமளவு கவசவாகனங்கள் இலங்கை இராணுவத்துக்குத் தேவைப்படுகின்றன.
எப்படியாவது இந்த வருடத்துக்குள் ஐ.நா.  அமைதிப்படையில் பணியாற்ற 5000 படையினரை அனுப்பும் திட்டத்தை முன்வைத்தே இப்போது காய்கள் நகர்த்தப்படுகின்றன.   ஆனால் அதற்குத் தடையாக போர்க்குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன.   அதிலிருந்து விலகி அந்த இலக்கை அடைவதற்கான பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது அரசாங்கம்.
இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.
என்னதான் பிரசாரங்களை மேற்கொண்டாலும் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றிலும் விடுபடாமல் அரசாங்கம் நினைப்பது போன்று ஐ.நாவின் அமைதிப்படையில் இலங்கைப் படைகளால் முக்கிய இடத்தைப் பெறுவது சிரமமானதே.
- சுபத்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக