மார்ச் 28, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக பேசுவது யார்? என்பது தொடர்பாக மேற்குலகு விரைவில் தீர்மானிக்கவேண்டும்: ரவிநாத் ஆரியசிங்க


இலங்கைத்  தமிழர்களுக்காக யார் பேசுவது   என்பது தொடர்பாக  மேற்குலக நாடுகள் தீர்மானத்துக்கு வர வேண்டுமென்று இலங்கை கூறியுள்ளது.
சுதந்திர தமிழீழத்தைத் தொடர்ந்து நாடுகின்ற புலம்பெயர்ந்த சமூகத்திலுள்ளவர்களா? அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும் தமிழர்களா? என்பது பற்றி அதாவது யார்? இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசுவது என்பது குறித்து மேற்குநாடுகளின் அரசாங்கங்கள் முடிவுக்கு  வரவேண்டுமென்று  இலங்கை தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம்,  லக்ஷம்பேர்கிற்கான
இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க பிரசல்ஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே  இதனைத் தெரிவித்திருக்கிறார்.
நீதி, பொலிஸ், புலனாய்வு, இராணுவ மற்றும் பாதுகாப்புச் சமூகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் உரையாற்றிய ரவிநாத் ஆரியசிங்க, ‘இலங்கைத் தமிழர்களுக்காக யார் பேசுவது என்பது குறித்து மேற்குலக அரசாங்கங்களும் விரைவில் தீர்மானத்துக்குவர வேண்டியுள்ளது. தொடர்ந்து தமிழீழத்தை நாடும் போராளிகளாகவும் பச்சாதாபப்படாதவர்களாகவும் உள்ள புலம்பெயர்ந்த சமூகத்திலுள்ளவர்களா? அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற சமாதானத்தை விரும்பும் தமிழர்களா என்பது பற்றித் துரிதமாகத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வதற்குத்   தயாராகவுள்ளனர் என்று ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.
ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்புச் சங்கத்தின் மாநாட்டில் ஐரோப்பாவில் புலிகளின் திட்டங்களை தடுத்து நிறுத்ததல் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற  நிகழ்வின்போதே  அவர்  இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

2009 மே இல் இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து புலிகளின் நடவடிக்கைகளுக்கான கவனத்தை ஒருமுகப்படுத்தும் இடமாக   ஐரோப்பா உருவாகியுள்ளது.   சொத்துகள்,  ஆட்கள் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இடமாக ஐரோப்பா தோற்றம் பெற்றுள்ளது.
ஐரோப்பாவின் தலைநகரங்கள் பலவற்றில் புலிகளின் முன்னணி அமைப்புகள் செயற்படுகின்றன. 32 புலி உறுப்பினர்ள் ஜேர்மனி,   நெதர்லாந்து, நோர்வே, சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலும் 21 பேர் பிரான்ஸிலும் கடந்த பதினைந்து மாதங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.    புலிகளின் சொத்துகளுக்கும் முன்னணி அமைப்புகளின் கட்டமைப்புகளுக்கும்   பொறுப்பாக  நெடியவன் உள்ளார்.
அவர் புலிகளின் மிகச் சிரேஷ்ட புலனாய்வுத் தலைவரான விநாயகம் ஆகும். பிரசாரத்துக்கு ஜெயச்சந்திரன் தலைமை வகிக்கிறார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் போன்றோரும்    ஐரோப்பாவில் உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு மையமாக ஐரோப்பா உள்ளது.        நாடு கடந்த தமிழீழ    அரசாங்கத்தின் (ஜனநாயகவாதிகள்) குழு அண்மையில் பிளவுபட்டு தனியாக   அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்   மையமாக ஐரோப்பா உள்ளது.
நல்லிணக்கம்,   அபிவிருத்தி என்பது தொடர்பான இலங்கை கொண்டிருக்கும் தாகத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு உதவியளித்தல் வேண்டும். இந்த விடயத்தின் அடிப்படையில் வெளிநாட்டு அரசாங்கங்கள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.புலிகள் சார்பு சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பாக அக்கறையுடன் கண்காணிப்பை மேற்கொள்ளுதல்   அவசியமாகும்.
அரசியல் அல்லது அடையாள ரீதியான ஆதரவை ஐரோப்பிய நாடுகளும் நிறுவனங்களும் வழங்கக்கூடாதென்பது முக்கியமானதாகும். அத்துடன், இலங்கையில் தனியான இன பிரிவினைவாதத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவாகச் செயற்படுவதாக பாசாங்கு காட்டுவோரின் தவறான நடவடிக்கைகளையிட்டு ஐரோப்பிய நாடுகள் முட்டாளாகக் கூடாது.
அதாவது சமாதான வழியில் தனி இனப் பிரிவினைவாதத்துக்காகத் தொடர்ந்தும்     நியாயப்படுத்துவோரின் பாசாங்கினால் மடைமைத்தனமானவர்களாக இருக்கக்கூடாது.   புலிகளில் உயிர்வாழும் இராணுவத் தலைவர்களினால் பணத்தைப் பயன்படுத்தி புலிகளின் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டிருப்போர்      சமாதான வழியில்     இதனை மேற்கொள்வதாகப் பாசாங்கு காட்டுகின்றனர் என்றும் ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக